அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

You are currently viewing அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

 

இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள் ஆயுள் விருத்தியடைந்து அறுபது வயது வாழ்வது சாதாரணம் என்னும் நிலையை இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எட்டியிருக்கிறோம். அறுபதாம் கல்யாணம் நடத்துதல், மணிவிழா கொண்டாடுதல் என அறுபதாண்டு வாழ்ந்ததைப் போற்றும் நிகழ்வுகளின் தொடர்ச்சி இன்றும் நடைபெறுகிறது. இந்தப் போற்றுதல் என்னையும் விடவில்லை. நண்பர்களும் மாணவர்களும் சில திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். அவற்றைக் கேட்கையில் கூச்சமாக இருக்கிறது; ஒருவகை வேட்கையும் உருவாகிறது. வேட்கையைத் தொலைத்துவிடும் பக்குவம் இன்னும் வாய்க்காத மனதை என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி, எதையாவது காரணமாகக் கொண்டு சில விஷயங்கள் நடந்தால் நல்லது எனச் சமாதானம் கொள்கிறேன்.

‘உயிர் எழுத்து’ ஆசிரியர் நண்பர் சுதீர் செந்தில் ஆகஸ்ட் மாதத்தில் அழைத்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகான அழைப்பு. உயிர் எழுத்து இதழின் தொடக்க ஆண்டுகளில் கவிதை, சிறுகதை, கட்டுரை எனக் கணிசமாக எழுதியிருக்கிறேன். ஏனோ இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எனினும் தலைநாள் போல அன்பும் வாஞ்சையும் ததும்பிய இயல்பான உரையாடலாக அது அமைந்தது. அவருடைய அருமை மகன் சுதீர்மணி என் படைப்புகளை ஆங்கிலத்தில் வாசித்திருக்கும் செய்தியையும் மகிழ்வோடு சொன்னார். என் கதைகள் வெளியான ‘உயிர் எழுத்து’ அனைத்தையும் மகனுக்கு அனுப்பிய தகவலையும் பகிர்ந்து கொண்டார்.  பேச்சினிடையே ‘உங்களுக்கு என்ன வயது?’ என்று கேட்டார்.  ‘வரும் அக்டோபர் 15 அன்று அறுபது பிறக்கிறது’ என்றேன். ‘என்னுடைய தம்பி நீங்கள்’ என்றவர் ‘அக்டோபர் மாத உயிர் எழுத்து  உங்களுக்கான சிறப்பிதழ்’ என்று சொன்னார். சரி, ஏதோ ஆர்வத்தில் சொல்கிறார் என்று சிரித்துக் கடந்தேன்.

அப்படியல்ல. ஒரே மாத இடைவெளியில் ‘பெருமாள்முருகன் 60’ சிறப்பிதழ் தயார் செய்துவிட்டார். வழக்கமாக எண்பது பக்கம் மட்டுமே வரும் இதழை நூறு பக்கம் ஆக்கினார். பெருமாள்முருகனுக்கு மட்டும் எண்பத்தைந்து பக்கம். ‘பக்கத்தை அதிகமாக்குவது உயிர் எழுத்து வரலாற்றில் இதுதான் முதல் முறை’ என்றார். வாட்ஸ் அப் மூலமாகவே நீண்ட நேர்காணல் செய்தார்.  அவரது தலையங்கம் உட்பட பதினொரு பேரின் கட்டுரைகள். சுகுமாரன், கண்ணன், அரவிந்தன், கண.குறிஞ்சி, க.மோகனரங்கன், கரிகாலன், கவிதா முரளிதரன், இசை, ஜார்ஜ் ஜோசப், க.திருமூர்த்தி ஆகியோர் எழுதிய விதவிதமான கட்டுரைகள். நெகிழ வைக்கும் அன்பில் தோய்த்த எழுத்துக்கள் அவை. இதழை வடிவமைத்தவர் நண்பர் பஷீர். ஏராளமான படங்களுடன் அழகாக உருவாக்கியுள்ளார்.

‘உயிர் எழுத்து’ என் கவிதைகள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளது. காலச்சுவடு, உயிர்மை ஆகிய இதழ்களிலும் இம்மாதம் என் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. 2016க்குப் பிறகு நான் எழுதிய கவிதைகள் பல. சிலவற்றை வலைத்தளத்திலும் முகநூலிலும் பதிவிட்டுள்ளேன். பெரும்பாலானவற்றை வெளியிடவில்லை. இப்போது எனக்காகத்தான் கவிதைகள் எழுதுகிறேன் என்று தோன்றுவதால் பிரசுரத்திற்குக் கொடுக்கும் ஆர்வம் தோன்றவில்லை. இருமாதத்திற்கு முன் சில கவிதைகளை எழுதிய போது பழையவற்றில் கண்ணோடியது. பொதுவெளிக்கு உகந்தவையும் இருக்கின்றன என்று தோன்றியதால் மூன்று இதழ்களுக்கும் கொடுத்தேன். பிறந்த நாள் பரிசு போல மூன்றிலும் வெளியாகியிருக்கின்றன.

அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்துப் ‘பேசத் துணிந்த எழுத்துக்கள்’ என்னும் தலைப்பில் நண்பர் க.சாசிமாரியப்பனும் பேராசிரியர் அ.செல்வராசும் நூலாக்கம் செய்துள்ளனர். இளம் ஆய்வாளர்கள் எழுதிய சுவையான கட்டுரைகளைக் கொண்ட அந்நூல் காலச்சுவடு வெளியீடு. கோவை, சிறுவாணி வாசகர் மையம் தம் மாதம் ஒருநூல் வெளியிடும் திட்டத்தில் இம்மாதம் என் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட ‘எருமைச் சீமாட்டி’ நூலை வெளியிட்டுள்ளது. கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு நல்ல முன்னுரையும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜார்ஜ் ஜோசப். பத்தாண்டுகளுக்கும் மேலாக அச்சில் இல்லாத ‘சகாயம் செய்த சகாயம்’ நூல் திருச்சி ‘அலர்’ பதிப்பக வெளியீடாக இம்மாதம் வரவுள்ளது. மாதொருபாகன் நாவல் தொடர்பான பதிவுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் சுப்பிரமணி ரமேஷ் முயன்று பலவற்றைச் சேகரித்தார். அவற்றை அச்சில் கொண்டு வர இயலவில்லை. இப்போது நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘மாதொருபாகன்’ என்னும் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளனர். அதில் நாவல் தொடர்பான அனைத்தையும் படிப்படியாகப் பதிவாக்க உள்ளனர். இன்று இரவு தொடங்கும் அவ்வலைத்தளம் சில நாட்களில் பொதுவெளியில் காணக் கிடைக்கும்.

அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

படைப்புகள் குறித்துக் கருத்தரங்கு நடத்த என் மாணவர்கள் திட்டமிட்டனர். அதை மறுத்து அவர்களைத் திசை மாற்றி விட்டிருக்கிறேன்.  ‘சாதியும் நானும்’ போல இன்னுமொரு நல்ல நூல் அவர்கள் வழியாக 2026இல் வெளியாகும் என நினைக்கிறேன். சென்னை, மாநிலக் கல்லூரி முதல்வரும் நண்பருமான கல்யாணராமன் கருத்தரங்கும் நூல் வெளியீடும் செய்யத் திட்டமிட்டுள்ளார். இவ்வாண்டு இறுதிக்குள் அவையும் சாத்தியமாகும். சடங்குகளில் சிறுநம்பிக்கையும் அற்றவன் நான்.  நூல்களே என்னை வளர்த்தன. நூல்களே என்னை வழிநடத்தின. நூல்களே என்னை உருவாக்கின. நூல்களால் கட்டமைக்கப்பட்டவன் நான். என் அறுபதாம் வயது நூல்களால் நிரம்புகிறது.  நூல்கள் தரும் மகிழ்ச்சிக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. மகிழ்கிறேன்.

அறுபது தொடங்கும் சமயத்தில் நல்ல படைப்பு மனநிலை வாய்க்கப் பெற்றிருக்கிறேன். எழுத்தாளராக இருப்பினும் சராசரி வாழ்வில் இருந்து விடுபடும் பொருளாதார வாய்ப்பும் இல்லை; நம் சமூகக் குடும்ப அமைப்பில் பெரிய அளவு சுதந்திரமும் இல்லை. அவற்றுக்கும் எழுத்துக்கும் இயைபு கண்டுதான் சில செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அன்றாடப் பணி நிர்ப்பந்தத்திலிருந்து வெளியே வந்துவிட்டாலும் ‘பொறுப்புகள்’ விட மறுக்கின்றன. விடுபட வேண்டும். பொறுப்புகளில் இருந்து காலம் என்னை விடுவிக்கும் என்று நம்புகிறேன். இப்போதிருக்கும் படைப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொண்டு புனைவு நூல்கள் சிலவற்றை எழுதிவிடத் திட்டமிடுகிறேன்.

இலக்கியத்தைக் கல்வித்துறையாக எடுத்துப் பயின்றிருக்கிறேன். முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றி உள்ளேன். பயிலும் போதும் பயிற்றும் போதும் மாணவனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன். இவற்றால் பழந்தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ‘புலமை’ பெற்றிருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு அறிவு பெற்றிருக்கிறேன் என்பதைத் தயக்கமில்லாமல் சொல்வேன். எழுத்தறிவற்ற வேளாண் குடும்பத்தில் பிறந்து ஆடுமாடு மேய்த்துத் திரிந்து கொண்டிருந்த எனக்கு இத்தகைய அறிவை வழங்கியது தமிழ்ச் சமூகம். நான் பெற்ற அறிவைச் சற்றேனும் மேம்படுத்தித் திருப்பி வழங்கும் நன்றி கடப்பாடு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். அவ்வகையில் பழந்தமி இலக்கியம் சார்ந்து சில திட்டங்களும் இருக்கின்றன. செய்ய வேண்டும்.

என் இயல்பில் இருக்க விடாமல் ஏதேனும் தொந்தரவு வந்து கொண்டேயிருக்கிறது. கடந்த ஒருமாதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டில் தனிநபர்கள் பலருக்கும் நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மூலமாகக் கொலை மிரட்டல், வெடிகுண்டு மிரட்டல் வரும் செய்திகளை அறிவோம். அனைத்தும் பொய்யானவை என்பதால் செய்திகளில் இடம்பெறுவதில்லை. மிரட்டல் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிய முடியாமல் சைபர் கிரைம் போலிசார் தடுமாறுகின்றனர். சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்துவதும் சமுகச் செயல்பாட்டாளர்களைப் பயமுறுத்தி முடக்குவதும் இம்மிரட்டலின் நோக்கமாக இருக்கலாம். இந்த வாரம் அப்படி ஒரு மிரட்டல் எனக்கும் வந்தது.

கடந்த வார இறுதியின் மூன்று நாட்கள் நான் ஊரில் இல்லை. ஒரு வேலையாகக் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தேன். நாமக்கல் திரும்ப 12-10-25  ஞாயிறு அன்று பிற்பகல் ரயிலில் பதிவு செய்திருந்தேன். ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது பத்திரிகையாள நண்பர் ஒருவர் கைப்பேசியில் அழைத்தார். ‘உங்களைப் பற்றிய விவரங்களை உளவுத்துறையில் இருந்து கேட்கிறார்கள். ஏதாவது செய்தி உண்டா?’ என்று கேட்டார். என்னைப் பற்றிய தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ள ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ  உளவுத்துறை இப்படி யாரிடமாவது கேட்பதுண்டு. என் முழு வாழ்க்கைக் குறிப்பு என்னிடம் இல்லை. தேவையென்றால் உளவுத்துறையிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். ‘என்னிடமே கேட்டிருக்கலாமே?’ என்றும் சொல்வேன். ஏனோ நேரடியாக விசாரிப்பதைத் தவிர்த்து எங்கெங்கோ போய்விட்டுக் கடைசியில் நம்மிடம் வந்து நிற்பார்கள். என்னிடம் மறைத்து வைக்க வேண்டிய எந்த ரகசியமும் இல்லை. எல்லாத் தகவல்களும் பொதுவெளியில் கிடக்கின்றன. என்னிடம் கேட்டாலும் சொல்வேன்.

சில நிமிடங்களிலேயே நாமக்கல் நகரக் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. எனக்கு மிரட்டல் வந்திருப்பதாகத் தகவல். எங்கிருந்து, யார், என்ன வகை மிரட்டல் என்னும் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. எனினும் நாய், டிடெக்டர் சகிதமாக என் வீட்டுக்குச் சென்று சோதனை செய்திருக்கின்றனர்.  ‘ஏதாவது பார்சல் வந்ததா?’ என்று கேட்டனர். ஒரு பார்சல் வந்த தகவலையும் அதை முற்றத்தில் போடும்படி கூரியர்காரரிடம் சொன்னதையும் தெரிவித்தேன். ‘எழுத்தாளருக்குப் புத்தகம்தான் வரும். வேண்டுமானால் பிரித்துப் பாருங்கள்’ என்றேன். பிரித்துப் பார்த்து அதைப் படமும் எடுத்து அனுப்பினர். ஆங்கில நூல்.  ‘Thumb Printed: Champaran Indigo Peasants Speak to Gandhi, Vol.IV’ என்னும் நூல். அதன் தொகுப்பாசிரியர் ‘Tridip Suhrud’ தான் அகமதாபாத்திலிருந்து நூலை அனுப்பியிருந்தார். இலக்கிய விழா ஒன்றில் அவரைச் சந்தித்த போது  இந்த நூல் வரிசை பற்றிச் சொல்லியிருந்தார். முக்கியமான முயற்சி என்பதால் ஆர்வத்துடன் அதைப் பற்றிக் கேட்டேன். இப்போது நூலை அனுப்பியுள்ளார்.

அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

நூலைப் பத்திரமாக வைத்துவிட்டுக் காவலர்கள் சென்றுவிட்டனர். இரவு வீட்டுக்குத் திரும்பியதும் கைப்பேசியில் அழைத்து ‘இயல்பான வாழ்க்கையில் இருக்கலாமா?’ என்று கேட்டேன். ஒன்றும் பிரச்சினையில்லை, இயல்பாக இருக்கலாம் என்று கூறினர். எனினும் குடும்பத்தார் கொஞ்சம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அவற்றுக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. சராசரி வாழ்விலிருந்து  என்னை விலக்கி விஐபியாகவே வைத்திருப்பதில் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. பொதுவாகச் சூழலில் அச்சத்தை விதைத்து அதிகாரத்தை அறுவடை செய்யத் துடிக்கும் வெறி என்ன வேண்டுமானாலும் செய்யும். அதன் துளி வெளிப்பாடுதான் இந்த மிரட்டல். இனி எதனாலும் முடங்கப் போவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே.

நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பல வழிகளிலும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இத்தனை பேருடைய அன்பைப் பெற்றிருக்கிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன். தலைக்கு மேல் கை குவித்து எல்லோருக்கும் நன்றி கூறுகிறேன். நன்றி. நன்றி.

—–   15-10-25

Add your first comment to this post