சலபதி எழுதிய வரலாற்றுக் கதை

You are currently viewing சலபதி எழுதிய வரலாற்றுக் கதை

 

கலைக்களஞ்சியத்தைப் பயன்படுத்தும் வழக்கம் எனக்கு முதுகலை படிக்கும்போது தொடங்கியது. முறைசார் கல்வி முறையில் எங்குமே அகராதியையோ கலைக்களஞ்சியத்தையோ அறிமுகப்படுத்துவதும் இல்லை; பயன்படுத்தும் முறைகளைப் பயிற்றுவிப்பதும் இல்லை. பயன்படாதவற்றை விழுந்து விழுந்து படிக்க வேண்டியிருக்கிறது. பயன்பாடு கொண்டவை கற்றுக்கொள்ள எளியவை எனினும் அதற்கான வாயில்கள் திறப்பது இல்லை.

‘அகராதியியல்’ பாடமாகவே வைக்கப்பட்டாலும் ஒரு அகராதியைக்கூடக் கண்ணால் பார்க்காமல் படித்துத் தேர்வெழுதிவிடும் நிலைதான் இருக்கிறது. எனினும் சமூக வலைத்தளப் பெருக்கத்தால் இன்றைக்கு ஓரளவு முன்னேற்றம் தென்படுகிறது. இணையதளத்தில் ஒன்றைத் தேடும்போது முதலில் ‘விக்கிப்பீடியா’ வந்து நிற்பதால் பலருக்கும் இத்தகைய களஞ்சியம் பற்றி ஓரளவு தெரிந்திருக்கிறது. நான் கல்வி பயின்ற காலத்தில் ஒன்றுமே தெரியாது.

எதேச்சையாகக் கல்லூரி நூலகத்தில் அகராதி ஒன்றில் ஏதோ சொல்லுக்குப் பொருள் பார்க்க முயன்றபோது கலைக்களஞ்சிய அடுக்கைக் கண்டேன். கட்டுக் குலையாமல் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த அத்தொகுதிகளை எடுத்துப் பார்க்கலாமா கூடாதா என்னும் தயக்கம். நூலக உதவியாளர்கள் பக்கம் பார்த்துக்கொண்டே ஒரு தொகுதியை உருவி எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தேன். பக்கங்களைப் பிரித்தபோது அது பெரும்பிரபஞ்சம் என்று கண்டுகொண்டேன். பின்னர் ஒன்றைப் பற்றித் தேட வேண்டுமானால் எனக்கு முதலில் கலைக்களஞ்சியமே நினைவுக்கு வருவதாயிற்று.

முதலில் பல்கலைக்கழக மானியக் குழுத் தேர்வுக்குத் தயாரிக்க இலக்கிய வரலாற்றுத் தகவல்களுக்காக அதை விரிவாகப் பயன்படுத்தினேன். எந்த இலக்கிய வரலாற்று நூலையும்விட கலைக்களஞ்சியத் தகவல்கள் செறிவுடனும் சுருக்கமாகவும் இருந்தன. தகவல்களை முழுமையாகவும் சில தொடர்களிலும் தரும் அதன் அமைப்பு முறை என்னைக் கவர்ந்தது. எவ்வெவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் புரிதலைக் கலைக்களஞ்சியம் கொடுத்தது. வெற்று விவரிப்புகள் இல்லை; நேர விரயம் இல்லை. கலைக்களஞ்சியத்தின் தீவிர ரசிகனானேன்.

பின்னர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் கலைக்களஞ்சியத் தொகுப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். அவை கிடைப்பது ஒருபோதும் கஷ்டமாக இல்லை. கல்லூரி நூலகங்களில் அவை புத்தம் புதிதாக இருந்தன. மாவட்ட நூலகங்கள், கிளை நூலகங்களில் அவை பார்வை நூல் பகுதிக் கண்ணாடி அலமாரிகளுக்குள் அழகுடன் விளங்கின. என் மனைவி வால்பாறைப் பகுதியின் மலையுச்சியான சின்கோனா என்னுமிடத்தின் அரசுப் பள்ளியில் பணியாற்றியபோது அங்கும் பூட்டிய அலமாரிக்குள் அவற்றைக் கண்டேன். சில இடங்களில் முன் தொகுதிகள் சில இருக்காது. அறுபது, எழுபதுகளில் தொடங்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சில தொகுதிகளாவது நிச்சயம் இருக்கும். பெரும்பாலும் அவை நல்ல நிலையிலேயே கிடைக்கும். காரணம், நல்ல தாளில் தரமான கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டிருந்தமை ஆகும். மேலும் அவ்வளவான பயன்பாடு இல்லை என்பதாலும்தான்.

கலைக்களஞ்சியத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தின் காரணமாக இரண்டு நூல்களைப் பதிப்பிக்கும் வாய்ப்புப் பெற்றேன். தமிழிசை பற்றிய ஆர்வத்தில் ‘முத்துத் தாண்டவர்’ பற்றிய தேடலின்போது அப்பகுதியில் இருந்த ‘முத்துச்சாமிக் கோனார்’ என்னும் பதிவைப் படிக்க நேர்ந்தது. இலக்கிய வரலாற்று நூல்கள் எதிலும் இடம்பெறாத புலவர் அவர். வட்டார இலக்கியங்களைப் பதிப்பித்த முன்னோடி தி.அ.முத்துசாமிக் கோனாராகிய அவர் எனது ஊரைச் சேர்ந்தவர் என்பதை அப்பதிவுக் குறிப்பின் மூலம் அறிந்த பிறகு அவரைப் பற்றிய தேடலில் ஈடுபட்டேன்.

அது அவர் எழுதிய ‘கொங்கு நாடு’ என்னும் நூல் வடிவம் பெறாத வரலாற்றைத் தேடிப் பதிப்பிக்கும் வேலையில் கொண்டு சென்று சேர்த்தது. அவரைக் குறித்தும் அவரது செயல்பாடுகள் பற்றியும் விரிவான கட்டுரைகள் சிலவற்றையும் எழுத முடிந்தது. அவர் பதிப்பித்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட  ‘திருச்செங்கோட்டு இலக்கியங்களை’ இன்று வரை தேடியபடியே இருக்கிறேன். திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை, திருச்செங்கோட்டுக் கலம்பகம் உள்ளிட்ட சிலவற்றைக் கண்டடைந்திருக்கிறேன். இன்னும் தேட வேண்டியவை பல. என் வாழ்நாள் தேடலைக் கலைக்களஞ்சியம் மூலம் அறிமுகமான முத்துசாமிக் கோனார் வசமாக்கிக் கொண்டார் என்பது விந்தைதான்.

அதே போலப் ‘பனங்காடை’யைத் தேடப் போய்ப் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ என்னும் நூலைத் தொகுக்கும் இனிய வேலையில் இறங்கும்படி ஆயிற்று. தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவரான அ.மாதவையாவின் மகனும் சூழலியல் ஆர்வலருமான மா.கிருஷ்ணன் எழுதிய பல கட்டுரைகள் கலைக்களஞ்சியத்தின் பக்கங்களில் இருந்தன. தியடோர் பாஸ்கரன் தொகுத்துக் கொடுத்த ‘மழைக்காலமும் குயிலோசையும்’ நூலில் இல்லாத பலவற்றைக் கண்டுபிடித்தேன். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதிய மா.கிருஷ்ணன் தமிழில் குறைவாகவே எழுதியிருக்கிறார். அதிலும் கலைக்களஞ்சியத்தில் எழுதியவையே கணிசம். இப்படிப் பயன்படுத்தும்போதுதான் கலைக்களஞ்சியத்தின் அருமை தெரிய வருகிறது.

இத்தனை அருமையான கலைக்களஞ்சியம் உருவான வரலாறு பற்றி எனக்கு எதுவும் தெரியாமலே இருந்தது. அகராதி வரலாறுகளில் கலைக்களஞ்சியம் பற்றிய சிறுகுறிப்புகள் காணப்படும். தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரும் ம.ப.பெரியசாமித் தூரனும் கலைக்களஞ்சியத்தோடு தொடர்புடையவர்கள் என்பது தெரியும். அவ்வளவுதான். சுந்தர சண்முகனாரின் ‘தமிழ் அகராதிக் கலை’ நூலில் வரும் சிறுபகுதி இது:

‘சென்னை மாநிலத்தின் முன்னாள் கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரவர்களின் முயற்சியால் 1947ஆம் ஆண்டில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என ஒரு நிறுவனம் சென்னையில் தோன்றியது. அன்னாரது விடா முயற்சியாலும் பலரது பொருளுதவியாலும் 1947 அக்டோபர் விசயதசமியன்று தமிழ் வளர்ச்சிக் கழகம் கலைக்களஞ்சிய வேலையைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது… பல ஆண்டுகள் தொடர்ந்து வேலை நடந்தது.’ (ப.430, 431)

வ.ஜெயதேவன் எழுதிய ‘தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு’ என்னும் நூலில் ‘இது 10 தொகுதிகளாக 1954-1967ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. இதன் பதிப்பாசிரியர் பெ.தூரன் ஆவார். இதுவே முறையான முதல் கலைக்களஞ்சியம் ஆகும்’ (ப.29) என மிகச் சுருக்கமான குறிப்பு மட்டுமே உள்ளது.

இப்படிக் கலைக்களஞ்சியம் பற்றிச் சிறுசிறு பதிவுகளே கிடைக்கின்றன. ‘பல ஆண்டுகள் தொடர்ந்து வேலை நடந்தது’ என்றால் எப்படி நடந்தது என்பதை அறிய இத்தகு வரலாற்றுக் குறிப்பு நூல்கள் உதவுவதில்லை. காலம் வரலாற்றை விவரிக்கும் தேவையை உருவாக்குகின்றது. ‘புத்தக வரலாறு’ என்னும் துறை தமிழில் உருவாகவே இல்லை. சாதனை படைத்த நூல்களின் உருவாக்க வரலாறுகள் ஆவணப்படுத்த வேண்டியவை ஆகும். ஆய்வாளர்கள், வாசகர்கள் தம்மைப் பாதிக்கும் ஒரு நூல் எப்படி உருவாயிற்று என்பதை அறிந்துகொள்ள விரும்புவர். அவ்வாறு அறிவதன் மூலம் அந்நூலின் மீதான மதிப்பு மேலும் கூடும். பழந்தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு எத்தனை முக்கியமோ அதே போல நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் நூல்களின் உருவாக்க வரலாறும் முக்கியமானது. அவ்வகையில் தமிழில் எழுத வேண்டிய நூல் வரலாறுகள் பல உள்ளன.

1991இல் என் முதல் நாவல் ‘ஏறுவெயில்’ வெளியாயிற்று. அதுவே அச்சில் வந்த என் முதல் நூலும் ஆகும். அதன் உருவாக்கம் பற்றியே சில கட்டுரைகள் எழுதும் அளவு என்னிடம் செய்திகள் உள்ளன. அப்படி ஒவ்வொரு நூலுக்கும் சொல்லலாம். அது கருவாகத் தோன்றிய விதம், எழுதிய பின்னணி, நூல் உருவாக்கம் சார்ந்தவை, வாசக ஏற்பு என்று ஒருநூலைப் பற்றி எழுதப் பல செய்திகள் இருக்கின்றன. இப்போது நூல் வெளியீடு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகவும் எளிதாகிவிட்டது. பத்திருபது ஆண்டுகளுக்கு முன் அப்படியல்ல. தம் எழுத்தை அச்சில் காண்பதற்குப் பட வேண்டிய துன்பம் பெரிது. ஒவ்வொரு எழுத்தாளரின் முதல் நூல் வெளியீட்டுப் பின்னணியில் துயரம் தோய்ந்த சுவாரசியமான கதை ஒன்றிருக்கும்.

இன்றைய வாசகர்களில் நூல் வரலாற்றை வாசிக்கும் ஆர்வமுள்ளோர் பலர் இருப்பதைக் கண்டிருக்கிறேன். நூலை வாசித்து முடித்த பிறகு அது தம் மனம் கவர்ந்த நூலாக இருப்பின் அதன் வரலாற்றை ஆர்வத்தோடு கேட்கின்றனர். நானே பலருக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறேன். ‘கூளமாதாரி’  இப்போது ‘கிளாசிக் நாவல்’ வரிசையில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. அதைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்த போது சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாவல் பதிப்பு ஒன்றின் அட்டையை எடுத்துக் காட்டிய நண்பர் ஒருவர் ‘இந்த அட்டைப் படம் தனி அழகு’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

சலபதி எழுதிய வரலாற்றுக் கதை

இதுவரைக்குமான பத்தொன்பது பதிப்புகளில் ஐந்தாறு வித அட்டைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவற்றை நினைவில் இருத்தி ஓர் அட்டையைத் தனித்துச் சுட்ட முடிகிறது என்றால் நூல் விசயத்தில் மட்டுமல்ல, அதன் அமைப்பிலும் வாசகர் கவனம் எப்படியிருக்கிறது என்று வியந்தேன். ஒருநூல் உருவாக்கம் பற்றித் துருவித் துருவிக் கேட்கும் வாசகருக்கு நூல் வரலாற்று ஆர்வம் எவ்வளவோ இருக்கும். அதை நிறைவு செய்யும் வகையில் நாம் வரலாறு எழுதவில்லை. தனிமனிதர் ஒருவர் எழுதும் புனைவிலக்கிய நூலுக்கே இத்தகைய வரலாறு சொல்ல முடியும் என்றால் சமூகம் முழுவதும் பயன்படுத்தும் கருவி நூல்களின் வரலாற்றை எத்தனையோ விரிவாக எழுத வேண்டியிருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் தாம் எழுதிய ‘தமிழ்க் கலைக்களஞ்சிய வரலாறு’ பற்றிய கட்டுரையை எனக்கு அனுப்பி வாசித்துப் பார்க்கும்படி நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி கூறினார். எனக்கு அகராதித் துறையும் பிடித்தமானது என்பதால் வாசிக்க ஆவலாகவே இருந்தேன். எனினும் அவரது ஆங்கிலத்திற்குள் முயன்றும் என்னால் போக முடியவில்லை. ‘தமிழில் எழுதுங்கள், வாசிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன். பல ஆண்டுகள் கழித்து அவர் தமிழில் எழுதினார். அந்தச் சிறுநூலின் தலைப்பு ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை.’ இது ஓர் ஆய்வு நூல். ஆய்வின் தலைப்பு ‘கதை’ என்றமைவது சுவாரசியமானதுதான். பொதுவாசகர்களின் வாசிப்பிலிருந்து எப்போதும் விலகியே இருக்கும் ஆய்வுப் பரப்பை அவர்களுக்கு நெருக்கமாக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர் சலபதி. இந்தக் ‘கதை’யைப் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

(அடுத்த பகுதி நாளை)

—–   20-12-24

Latest comments (1)

வீ.பெருமாள்

“பொதுவாசகர்களின் வாசிப்பிலிருந்து எப்போதும் விலகியே இருக்கும் ஆய்வுப் பரப்பை அவர்களுக்கு நெருக்கமாக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர் சலபதி.”

சிறப்பு.