பொதுவெளியாகக் கோயில்கள் 1

You are currently viewing பொதுவெளியாகக் கோயில்கள் 1

விழுப்புரம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலைத் தலித் மக்களும் வழிபாடு செய்யும் வகையில் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (17-04-25) சில மணிநேரம் மட்டும் திறந்துவிட்டு உடனே பூட்டியுள்ளனர். அதற்கே அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்ததையும் ‘நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடும்’ என்று காவல் அதிகாரிகள் எச்சரித்ததையும் காணொலி மூலம் பார்க்க முடிந்தது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊரில் உள்ள காளியம்மன் கோயிலில் அங்கு வசிக்கும் தலித் மக்கள் வழிபட்டனர் என்பதால் கடந்த ஆண்டு அக்கோயிலையே ஆதிக்க சாதியினர் இடித்துள்ளனர். பூசாரியின் கனவில் வந்து ‘தலித் மக்கள் வழிபடக் கூடாது’ என்று கடவுளே சொன்னதாகக் கதை கட்டியுள்ளனர். கோயிலுக்குள் நுழையக் கூடாது, திருவிழாவில் கலந்துகொள்ளக் கூடாது, தேர்வடம் பிடிக்கக் கூடாது, குறிப்பிட்ட தெருவுக்குச் சாமி ஊர்வலம் வராது, யாருக்கு முதல் மரியாதை என்பது போன்ற பிரச்சினைகள் தமிழ்நாடு முழுவதும் பல கோயில்களில் நிலவுகின்றன.

இவற்றை எல்லாம் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் அரசு கருதுகின்றது.  எந்தக் கட்சி அரசாக இருப்பினும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது. அதுதான் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கான தீவிர விஷயமாக இருக்கும் என்பது முக்கியக் காரணம். தம் கொள்கையாகத் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் அக்கோணத்தில் பார்ப்பதில்லை. சாதி ஒழிப்புக்கு ஒருவழி பொதுவெளிகளை உருவாக்குவது. நம் கிராமங்களில் பொதுவெளிகளே இல்லை. புறம்போக்கு இடங்கள் இருந்தாலும் அவை ஏதேனும் ஒருசாதியினர் புழக்கத்தில் மட்டும் இருக்கும். கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து ஆகியவற்றைப் பொதுவானதாக உருவாக்க முடிந்த அரசால் வழிபாட்டு இடங்கள் அனைத்தையும் பொதுவாக மாற்ற முடியவில்லை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் பொதுவானவை எனினும் அங்கும்  பிரச்சினைகள் உள்ளன.

அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரும் இந்துத்துவ அமைப்புகள் கோயில் சார்ந்து நிலவும் சாதிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதேயில்லை. கோயில்களில் அனைத்து மக்களும் வழிபடும் உரிமை வேண்டும் என்று குரல் எழுப்புவதும் இல்லை. அவற்றின் கொள்கையே சனாதனத்தைப் பாதுகாப்பது என்பதால் சாதிப் பிரச்சினைகளில் ஒதுங்கியே நிற்பவை அவை. பிற ஜனநாயகக் கட்சிகளும் இதில் கருத்துத் தெரிவிப்பதில்லை. தெரிவித்தாலும் சட்டம் ஒழுங்கையே முன்னிறுத்துவார்கள். சாதி சார்ந்தே வாக்கு வங்கியைக் கணக்கிடுவதால் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் பெரும்பான்மைச் சாதிகளை அனுசரித்துச் செல்வதையே தம் தேர்தல் தந்திர உத்தியாக அனைத்து அரசியல் கட்சிகளும் வைத்திருக்கின்றன.

கோயில்கள் சார்ந்து விவாதிக்க எத்தனையோ விஷயங்களும் கோணங்களும் இருக்கின்றன. பழைய கோயில்கள், பெருந்தெய்வக் கோயில்கள், சிறுதெய்வக் கோயில்கள், குலதெய்வக் கோயில்கள், தனியார் கோயில்கள், அறநிலையத் துறைக் கோயில்கள், அறக்கட்டளைக் கோயில்கள், புதிது புதிதாகத் திடுமென உருவாகி நிலத்தை அபகரிக்கும் கோயில்கள் எனப் பலவகைக் கோயில்கள் பற்றியும் பேசவும் விவாதிக்கவும் தேவையிருக்கிறது. கோயில் கருவறை, பூசை மொழி, பூசை செய்யும் உரிமை குறித்தெல்லாம் பேச வேண்டும். கோயில் நிர்வாகம், சொத்துக்கள், திருவிழாக்கள், சாதிகளுக்கான உரிமைகள் பற்றியெல்லாம் வரலாற்று ரீதியாகவும் சமூகவியல் அடிப்படையிலும் இன்றைய எதார்த்த நிலையையும் பேச வேண்டும்.

மக்கள் தொகை மிகுந்திருக்கும் நம் சமூகத்தில் கூடுவதற்கான பொதுவெளியாகக் கோயில்கள் விளங்குகின்றன. அவை பக்தி, வழிபாடு ஆகியவற்றுக்கான இடம் மட்டுமல்ல. கோயில் கோயிலாகச் சுற்றி வழிபட்டு வருவதற்குப் பழைய காலத்தில் ‘ஸ்தல யாத்திரை’ என்று பெயர். அது இன்று சுற்றுலாவாக வடிவம் மாறியிருக்கிறது. ஐயப்பன், ஆதி பராசக்தி, முருகன் ஆகியவற்றுக்கு மாலை போட்டுச் செல்வோர் வழியில் பல கோயில்களைக் கண்டு வழிபட்டு வருகின்றனர். கோயில்களைப் பட்டியலிட்டு அழைத்துச் செல்லும் சுற்றுலாக் குழுக்களும் இருக்கின்றன. அதற்கென ஆண்டு முழுவதும் சீட்டுக் கட்டுபவர்கள் பலர். ஒருபுறம் பொதுவிடமாக விளங்கும் கோயில்கள் இருக்க, இன்னொரு புறம் ஒருசாதியைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்க மறுக்கும் கோயில்களும் நிறைந்திருக்கின்றன. பொதுவெளியாகவும் கோயில் இருக்கிறது; ஆதிக்கத்தின் அடையாளமாகவும் கோயில் இருக்கிறது.

பொதுவெளியாகக் கோயில்கள் 1

பெரும் வரலாறு கொண்ட கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு இன்னும் முடிவு வரவில்லை. எல்லாக் கோயில்களும் எல்லாருக்கும் என்னும் நிலை ஏற்பட இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. பெருங்கோயில்களில் நடந்த நுழைவுப் போராட்டங்களைப் பற்றி ஓரளவாவது பேசுகிறோம். சிறுகோயில்களில் வழிபாட்டு உரிமைக்காக வட்டார அளவில் நடக்கும் போராட்டங்கள் பற்றிப் பெரிதாகப் பதிவுகள் இல்லை. இன்று குறைந்தபட்சம் செய்தி அளவிலாவது தகவல்கள் வருகின்றன என்பது ஓர் ஆறுதல்தான். கோயில் வரலாறு பற்றிக் கல்விப் புலங்களில் நடக்கும் ஆய்வுகள் புராணக் கதைகளையும் சாதியப் பெருமைகளையும் பதிவு செய்வதாக நின்றுவிடுகின்றன.

சரி, நம் கிராம அமைப்பில் கோயில்கள் எப்படி இருக்கின்றன? சாதிக்கொரு கோயில் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது.  நாமக்கல் மாவட்ட கிராமங்கள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். என் கிராமத்திலும் சரி, நான் பார்த்த கிராமங்களிலும் சரி பெரும்பான்மையாக எத்தனை சாதியினர் வசிக்கின்றனரோ அத்தனை கோயில்கள் இருக்கும். மாரியம்மன் கோயில்களுக்கு அளவேயில்லை. ‘தொழிலாளிகள்’ எனப்படும் வண்ணார், நாவிதர் உள்ளிட்ட சாதியினர் ஓரிரு குடிகள் மட்டுமே இருப்பர். ஆகவே அவர்களுக்குத் தனிக்கோயில் இல்லை. ஆதிக்க சாதியினர் கோயிலிலேயே அவர்களும் வழிபாடு செய்துகொள்வர்.

(தொடர்ச்சி நாளை)

—–   19-04-25

Latest comments (5)

பாரத் தமிழ்

ரொம்ப நன்றிங்க ஐயா. எங்கள் ஊர்க் கோயில் குறித்தும் எழுதியமைக்கும் சேர்த்து.

Kamala Krishnamoorthy

ஆமாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.பொது இடம் என்று பிரித்து எழுதுவது சரியாக இருக்குமோ?