பொதுவெளியாகக் கோயில்கள் 2

You are currently viewing பொதுவெளியாகக் கோயில்கள் 2

ஓர் ஊரில் நான்கு சாதியினர் வசிக்கின்றனர் என்று கொள்வோம். நான்குக்கும் குடியிருப்புகள் தனித்தனியாகத் தான் இருக்கும். நிலவுடைமை கொண்ட இரண்டு ஆதிக்க சாதியினர் இருப்பினும் அவர்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புத்தான். ஆனால் அவை ஒன்றையொன்று ஒட்டியிருக்கும். இருவருக்கும் தனித்தனிக் கோயில்கள் தான். தத்தமது குடியிருப்பை ஒட்டிக் கோயில் கட்டியிருப்பர். இரண்டுக்கும் நூறு, இருநூறு அடிதூரம்தான் இருக்கும். ஆனால் ஒருசாதியினர் கோயிலுக்கு இன்னொரு சாதியினர் செல்வதில்லை. சென்றாலும் வெளியில் நின்று கும்பிட்டு வரலாம். உள்ளே செல்ல அனுமதியில்லை.

ஆதிக்க சாதியினர் குடியிருப்பிலிருந்து வெகுதூரம் தள்ளித் தலித் மக்கள் குடியிருப்புகள் இருக்கின்றன. அதிலும் இரண்டு சாதிகள் என்றால் தனித்தனிக் குடியிருப்புகள்தான். அவை ஒட்டியோ கொஞ்சம் இடைவெளி விட்டோ அமைந்திருக்கும். அங்கும் இரண்டு தனித்தனிக் கோயில்கள் இருக்கும். ஒருசாதியின் கோயிலுக்கு இன்னொரு சாதியினர் செல்வதில்லை. சென்றாலும் உள்ளே நுழைய முடியாது. வெளியிலிருந்து கும்பிட அனுமதியுண்டு.  திருவிழாக்களும் தனித்தனியாகத்தான்.

ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் நடக்கும். ஆதிக்க சாதியினர் கோயில் திருவிழாக்கள் முதலில் நடைபெறும். இருசாதித் திருவிழாக்களுக்கும் ஒவ்வொரு வார இடைவெளி. இவ்விரண்டும் முடிந்து ஒருவாரமோ பதினைந்து நாட்களோ கழிந்துத்தான் தலித் மக்கள் கோயில் திருவிழா நடக்கும். ஆதிக்க சாதியினர் திருவிழா முடிந்ததும் அச்சாதிகளைச் சேர்ந்த ஊர்த்தலைவர்களிடம் தலித் மக்கள் வந்து நின்று தம் கோயிலில் திருவிழா நடத்த  அனுமதி கேட்கும் நடைமுறை முந்தைய காலத்தில் இருந்தது. ஆதிக்க சாதியினர் அனுமதி கொடுத்த பிறகே பூச்சாட்ட முடியும். இன்று அந்த நடைமுறை இல்லை என்றாலும் ஆதிக்க சாதியினர் திருவிழா முடிந்து ஓரிரு வாரத்திற்குப் பிறகே தலித் மக்கள் கோயில் திருவிழாக்கள் நடக்கின்றன.

ஒரே ஊரில் மூன்று அல்லது நான்கு மாரியம்மன் கோயில்கள் இருக்கின்றன. சில ஊர்களில் சாமிகளில் சில மாற்றங்களும் இருக்கும். ஆனால் சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோயில்களின் எண்ணிக்கையும் இருப்பதில் மாற்றமில்லை. இப்போது எல்லாக் கோயில்களும் நல்ல கட்டிட வசதிகளோடு காணப்படுகின்றன. தொழில் வளர்ச்சி மிகுந்து பணப்புழக்கம் கூடியிருப்பது ஒருகாரணம். இன்னொரு காரணம் உள்ளாட்சித் தேர்தல். வெற்றி பெற்றால் கோயில் கட்டிடத்திற்கு இவ்வளவு தொகை கொடுக்கிறேன் என்றோ முழுமையாகக் கட்டிக் கொடுக்கிறேன் என்றோ வாக்குறுதி கொடுத்து வெற்றி பெறும் ஊராட்சித் தலைவர்களின் கைங்கர்யம் அது.

அந்தந்தச் சாதிகளின் கோயில்கள் அந்தந்தச் சாதிகளுக்கான பொதுவெளிகளாக இருக்கின்றன. கூடியிருந்து பேசுவதற்கு கோயில்தான் இடம். கோயில் வாசல்தான் சிறுவர்களுக்கு விளையாட்டுத் திடல். கோயிலே மதிய உறக்க ஸ்தலம். கோயில் சார்பில் மாதச் சீட்டுக்கள் நடத்துகின்றனர். சில கோயில்களுக்கு இலட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. திருமண மண்டபங்களைக் கொண்ட கோயில்கள் பல உள்ளன. அவற்றிலிருந்து வருமானம் வருகிறது. அப்படிக் கோயிலுக்கென்று சேர்ந்த தொகையை ஏலத்தில் வட்டிக்கு விடுவர். எடுத்தோர் அடுத்த மாதத்தில் கொண்டு வந்து கட்டிவிட வேண்டும். மீண்டும் ஏலத்தில் தொகையை எடுத்துக் கொள்ளலாம். கையில் பணமில்லை என்றாலும் மீண்டும் ஏலத்தில் எடுத்துத் தருகிறேன் என்று கைமாற்று வாங்கிக் கொண்டு வந்து கட்டிவிடுவர். சாமி காசு என்னும் பயம் இருக்கிறது. கோயில் சார்ந்து பணச்சுழற்சி நடைபெறுகிறது.

பொதுவெளியாகக் கோயில்கள் 2

கோயில் திருவிழா விமரிசையாக நடக்கிறது. வீட்டுக்கு இவ்வளவு ரூபாய் என்று ஆண்டாண்டு விதிக்கிறார்கள். திருமணத்தை அலகாகக் கொண்டு குடும்பத்தின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறார்கள். திருமணமான பிறகு மகன் தம் பெற்றோரோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தாலும் இருகுடும்பம் என்பதுதான் கணக்கு. குடும்பத்திற்குக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் கோயில் வரி விதிக்கிறார்கள். அவ்வாண்டுத் தேவையைப் பொறுத்துத் தொகை கூடும். கம்பம் நட்டு வெகுதூரத்திற்கு மின்விளக்குகள் போடுதல், சீரியல் விளக்குகள் போடுதல், ஒருவாரம் ஒலிபெருக்கி கத்துதல் எல்லாம் உண்டு. இப்போது திரைப்படம் போடுதல் இல்லை. கரகாட்டம், ஆடலுடன் பாடல், நாடகம் எல்லாம் நடக்கின்றன. பொங்கல், கிடாவெட்டு, உறவினர் வருகை அனைத்தும் உண்டு. உறவினர் வருகையில் சமீப காலத்தில் கொஞ்சம் சுணக்கம் இருக்கிறது. அதற்கு இன்றைய வேலையின் இயல்பு காரணம். கொண்டாட்டத்தில் குறை ஏதுமில்லை.

ஒவ்வொரு சாதியின் பொருளாதார நிலைக்கு ஏற்ப இவற்றில் கூடுதல் குறைச்சல் உண்டே தவிர நடைமுறை பொதுவானதே. இப்போது கோயில் சார்ந்து நடக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எல்லாம் மாற்றுக்களை உருவாக்க முடியுமா? நம் வாழ்முறையில் பெரிய மாற்றம் வர வேண்டும். கோயில் சார்ந்து பணச்சுழற்சி நடப்பதற்கு மாற்றாக என்ன இருக்கிறது? மக்களுக்குக் கொண்டாட்டம் தேவைப்படுகிறது. அதற்குக் கோயில்தான் வழியாக இருக்கிறது. மாற்றுக் கொண்டாட்டத்திற்கு வழி என்ன?

ஆனால் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கோயில் என்பது சாதிப் பிரிவினையை அப்படியே தக்க வைத்துக்கொள்ளும் ஏற்பாடுதான். இதில் மாற்றம் ஏற்பட்டு எந்தக் கோயிலுக்கும் யார் வேண்டுமானாலும் போகலாம் என்னும் நிலை எப்போது வரும்? வருமா? எல்லாக் கோயில்களையும் அரசே ஏற்று அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் அந்நிலை வரலாம். அதற்குச் சாத்தியமே இல்லை.

ஏற்கனவே அறநிலையத் துறை நிர்வாகத்தில் இருக்கும் கோயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்துத்துவக் குரல்கள் எழுந்து வருகின்றன. அதனாலோ என்னவோ நல்ல வருமானம் இருக்கும் கோயிலைக்கூட அரசு எடுத்துக்கொள்ளத் தயங்குகிறது. சமீப காலத்தில் எந்தக் கோயிலையும் புதிதாக அறநிலையத் துறை ஏற்றுக்கொண்டதாகத் தகவல் இல்லை.

வேறு என்னதான் வழி?  சாதி ஒழிந்தால் மாற்றம் வரலாம். சாதி ஒழிய வேண்டுமானால் கிராமங்கள் ஒழிய வேண்டும். கிராமங்கள் ஒழியுமா?

—–  20-04-25

Add your first comment to this post