மேட்டுக்காடு என்று சொல்லும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருந்த வேளாண் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள். தங்களுக்கு இருந்த பதினொரு ஏக்கர் நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் எனப் பிரித்துக் கொடுத்திருந்தார்கள். மீதமிருந்த இரண்டு ஏக்கரை அவர்கள் வயிற்றுப்பாட்டிற்கு வைத்துக் கொண்டனர். மூன்று ஏக்கர் மேட்டுக்காட்டில் விவசாயம் செய்து குடும்பம் நடத்துவது கடினம். ஆடுமாடு எல்லாம் வளர்த்து முட்டி மோதிப் பார்த்தாலும் பற்றாக்குறைதான்.
அதனால் அப்பா சோடாக்கடை நடத்தினார். அம்மா விவசாயத்தைப் பார்த்துக் கொண்டார். ‘என் அம்மா விவசாயி; அப்பா சோடாக்காரர்’ என்று சொல்வேன். ஊரிலேயே அப்பாவுக்குச் ‘சோடாக்காரர்’ என்றும் பெயருண்டு. சிறுபிள்ளைகள் என் பெற்றோரைச் ‘சோடாப்பா, சோடாம்மா’ என்று அடையாளப்படுத்துவர்; அழைப்பர். சிறுவயதிலேயே சோடாக்கடை வேலைக்குப் போய் நன்றாகக் கற்றுக்கொண்டு திருமணத்திற்குப் பிறகு தனியாகக் கடை வைத்து நடத்தினார்.
திருச்செங்கோட்டின் சுற்று வட்டாரத்தில் எத்தனையோ இடங்களில் அவர் கடை இருந்தது. கடை என்றால் விற்பனை செய்யும் இடமல்ல. சோடா தயாரிக்கும் இடம். அதையும் அப்போதெல்லாம் ‘கடை’ என்றுதான் சொல்வார்கள். ஏதாவது ஒரு கிராமத்திலோ சிறுநகரத்திலோ மிதிவண்டி மட்டும் நுழையும் சந்தில் பழைய வீடாகப் பார்த்து ஒரே ஒரு அறையை வாடகைக்குப் பிடித்துவிடுவார். தண்ணீர் வசதி இருக்காது. வெளியே எங்காவது கிணற்றுக்குப் போய்க் கொண்டு வர வேண்டும். மின்னிணைப்பும் இருக்காது. இரவில் எந்த வேலையும் இல்லை என்பதால் மின்சாரத் தேவையில்லை. கழிப்பறையைப் பற்றி எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. 1970களில் அத்தகைய அறைக்கு மாதவாடகை ஐந்திலிருந்து பத்து ரூபாய்க்குள் இருக்கும்.
அங்கே சோடா தயாரித்துப் பெட்டிக்கடைகளுக்குக் கொண்டு போய்க் கொடுப்பார். அதற்குச் ‘சோடா போடுதல்’ என்று பெயர். ‘எத்தன கடைக்குச் சோடா போடற?’ எனக் கேட்பார்கள். இரண்டு அல்லது மூன்று வாரச் சந்தைகளுக்கு விற்பனை செய்யப் போவார். எங்கள் வீட்டிலேயே சிறுகொட்டகையில் சோடா மெஷினை வைத்துத் தயாரித்ததும் உண்டு. அவருக்கு உதவியாகப் பாட்டில் கழுவுவது, பாட்டில்களில் தண்ணீர் நிரப்பித் தருவது, கலர்களுக்கு ஜீரா காய்ச்சுவது, மெஷினில் வைத்துக் காற்றுப் பிடித்துச் சோடா கலர் தயாரிப்பது, கடைகளுக்குக் கொண்டு போய் விநியோகிப்பது என எல்லா வகை வேலைகளையும் சிறுவயதிலிருந்தே நானும் கற்றுக் கொண்டிருந்தேன். எனக்கெனச் சில பெட்டிக்கடைகள் வைத்து அவற்றுக்கு நானே விநியோகம் செய்ததும் உண்டு.
2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை ஒரே அரசாணையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்தார். அப்படிப்பட்ட நிலையை அரசு ஊழியர்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை. சங்கத் தலைவர்கள் ‘நிலைமை சரியாகிவிடும்’ என்று உறுதி கொடுத்த போதும் ஊழியர்கள் பலர் மனமொடிந்து போயினர். பணிநீக்க அதிர்ச்சியில் இறந்தோர் எண்ணிக்கை இரண்டிலக்கைத் தொட்டது. நானும் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். மீண்டும் பணியில் சேர முடியுமோ முடியாதோ என்னும் அச்சம் பொதுவில் நிலவியது. சோர்வாக இருந்தாலும் வாழ்க்கை பற்றிய அச்சம் எனக்கு இருக்கவில்லை. விவசாயம் செய்து பிழைக்கும் அளவு நிலம் இல்லை. ‘கைவசம் தொழில் இருக்கிறது. சோடாக்கடை வைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றிவிடுவேன்’ என்று நண்பர்களிடம் தைரியத்தோடு சொன்னேன்.
சோடாக்கடை நடத்தும் ஆசை இப்போதும் எனக்குள் இருக்கிறது. பெருநிறுவனங்கள் அத்தொழிலில் இறங்கிவிட்ட இக்காலத்தில் கோலிசோடா தயாரித்து விற்பது கடினம். நாமக்கல் போன்ற நகரில் சிறுகடை கிடைத்தால் போதும். பல நிறுவனச் சோடாக்களையும் வாங்கி வைத்து விற்பனை செய்யலாம். குளிர்பானக் கடைகள் இருக்கின்றன. தனித்துச் ‘சோடாக்கடை’ என்று ஏதுமில்லை. கோலிசோடா, பன்னீர் சோடா, லெமன் சோடா ஆகியவற்றை விற்பனை செய்யலாம். விற்பனை ஆகும். உழைப்புக்குப் பாதகமில்லாமல் வருமானம் வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என் வாழ்வில் இனி அது சாத்தியமில்லை.
அந்த ஆசையைப் போக்கிக்கொள்ள என்ன செய்வது? அவ்வப்போது சோடா குடித்துத்தான் போக்கிக் கொள்கிறேன். எந்த ஊருக்குச் சென்றாலும் சோடாவைக் கண் தேடும். மதுரை திருமங்கலம்அரசு ஓமியோபதி கல்லூரியில் என் மகள் பயின்று கொண்டிருந்த போது அவ்வூரில் நல்ல சோடா கிடைப்பதை அறிந்தேன். திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் இரண்டு மூன்று கடைகளில் நல்ல கோலிசோடா கிடைக்கும். லெமன் சோடா கேட்டால் முழு எலுமிச்சம்பழம் ஒன்றைப் பிழிந்து ஊற்றித் தருவார்கள். பருக ஆனந்தமாக இருக்கும். அங்கு செல்லும் போதெல்லாம் சோடா குடிப்பதையும் ஒரு நோக்கமாக வைத்திருப்பேன்.
இப்போது கோலி சோடாவே பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனைக்கு வந்திருக்கிறது. சென்னையில் சில இடங்களில் ‘உடனடி சோடா’ கிடைக்கிறது. வடமாநிலப் ‘பையாக்கள்’ தள்ளுவண்டியில் சோடாக்கடை வைத்திருக்கிறார்கள். கேட்டால் உடனே பாட்டிலில் தண்ணீர் பிடித்து சிறுமெஷின் ஒன்றில் வைத்து ஒரே நிமிடத்தில் சோடா தயாரித்துக் கொடுக்கிறார்கள். சாதா சோடாவும் உண்டு; லெமன் சோடாவும் உண்டு. எலுமிச்சை வாசம் மட்டும் வரும் வகையில் கோலி சோடாக்கள் விற்பனையில் இருக்கின்றன.
நான் மட்டுமல்ல, என் குடும்பமே சோடா குடிப்பதற்குப் பழகியிருக்கிறது. அசைவம் சமைக்கும் நாளிலோ வெளியிலே போய் உண்ணும் நாளிலோ கடைசியில் சோடா குடிப்பதோடுதான் உணவு நிறைவுறும். சோடாக்காரர் குடும்பம் என்பதை ஆவலாகக் குடிப்பதில் நிலைநாட்டி வருகிறோம். சரி, இப்போது எதற்கு இந்தச் சோடாப் புராணம்? சமீபத்தில் பழைய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் வந்த காட்சிகளும் ஒருபாடலும் என்னுள் சோடா நினைவுகளைக் கிளறிவிட்டன.
(தொடர்ச்சி நாளை)
இதுபோல அனுபவங்களை நீங்கள் பகிரும் போது மிகவும் ஹேப்பி ஐயா.
i have a soda maker at home…. it is quite common here abroad… https://sodastream.dk/products/terra?variant=42061071089829 technology can completely disrupt traditional pop and mom store business… ex: netflix almost closed down all dvd rentals by streaming online. like tractors replaced beasts of burden… it is difficult for a country likes us where the use of traditional practices that need a lot of human hands are to be replaced by machines or technology… we would be hard hit… even Anna in one of his interviews way back said, he would be careful in modernizing since we are a lot of humans , when asked about industrialization and modernization.