தமிழ்நாட்டிற்கு வந்து பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி தொடர்பாக இருசெய்திகளைப் பேசியிருக்கிறார். முதலாவது, தமிழ் வழிக் கல்வி பற்றியது. ‘ஏழை மாணவர்கள் எளிதாகப் படிக்க மருத்துவப் படிப்பைத் தமிழில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்’ என்பது. இந்த அக்கறை பற்றிப் பிறகு பேசுவோம்.
இரண்டாவதாக, ‘தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார்கள். அந்த கடிதத்தில் அவர்கள் கையொப்பம் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் கையொப்பத்தைக்கூட தமிழில் போடாமல் இருப்பது எனக்கு வியப்பை தருகிறது’ என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை இந்தியை ஆதரிக்கும் ஒருவர் வந்து நமக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் குஜராத்தியில் கையொப்பம் இடுகிறாரா, இந்தியிலா, ஆங்கிலத்திலா என்றெல்லாம் கேட்கிறார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும். அவர் எந்தத் தலைவரைக் குறித்துச் சொல்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இடுகிறார்கள். ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்கூட ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். இந்த மனோபாவத்தை மாற்றத் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் நானும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டு வந்தேன். அது தவறு என்று சொல்வார் இல்லை. என் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களில் சான்றாக ஆங்கிலக் கையொப்பம் இருக்கிறது. பிறகு தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்ந்த காலத்தில் என் ஆசிரியர்கள் அனைவரும் தமிழில் கையொப்பம் இடுவதைக் கண்டு மாற்றிக் கொண்டேன். வங்கி, அஞ்சலகம் போன்றவற்றிற்குச் செல்லும்போது படிவங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் அம்மொழியிலேயே கையொப்பம் போட்டுக் கொண்டிருந்தேன்.
கோவை, பூ.சா.கோ. (பிஎஸ்ஜி) கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை பயின்ற போது விடுதி மாணவர்களிடையே செயல்பட்டு வந்த ‘சிந்தனை மன்றம்’ அமைப்பின் பொறுப்பாளராக இருந்தேன். தமிழ் மொழி தெரியாத மாணவர்களும் இருந்தமையால் சில அறிவிப்புகளை இருமொழியிலும் வெளியிட வேண்டும். தமிழ் அறிவிப்பில் தமிழிலும் ஆங்கில அறிவிப்பில் ஆங்கிலத்திலும் கையொப்பம் போடுவது வழக்கமாக இருந்தது.
தமிழ்ப் பேராசிரியரும் மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன் எழுதிய கட்டுரை ஒன்றை (நூலாகவும் இருக்கலாம்) வாசித்தபோது அதில் ஒருசம்பவம் என்னை ஈர்த்தது. அவர் வெளிநாட்டுக்குச் சென்ற போது (அனேகமாகத் தென்னாப்பிரிக்கா என நினைவு) விமான நிலையத்தில் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டாராம். அங்கிருந்த அலுவலர் ‘தாய்மொழி என்ன?’ என்றாராம். ‘தமிழ்’ என்று இவர் சொன்னதும் ‘உங்கள் மொழி எழுத்துக்களுக்கு வரிவடிவம் கிடையாதா?’ என்று கேட்டாராம். உலகின் முதல் மொழி தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம், இரண்டாயிரம் ஆண்டு இலக்கியம் வளம் உடைய மொழி நமது, அதற்கு வரிவடிவம் இல்லையா என்று ஒருவர் கேட்கும்படி ஆகிவிட்டதே என்று வெதும்பி எங்கும் தம் கையொப்பத்தைத் தமிழில் இடுவதையே வழக்கமாகக் கொண்டாராம்.
அதை வாசித்த பிறகு எங்கும் தமிழ்க் கையொப்பம் ஒன்றுதான் என மாறிவிட்டேன். முடிந்தவரைக்கும் என் மாணவர்களுக்கும் அதைப் பழக்கினேன். முன்னெழுத்தையும் தமிழில் போட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வேன். தமிழில் முன்னெழுத்துப் போட்டுப் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி இருக்கும் என்று கேட்பேன். மாணவர்கள் இளவயதினர் என்பதால் தர்க்கத்தோடு சொன்னால் ஏற்றுக்கொண்டு மாறிவிடுவார்கள். ஆசிரியர்கள் அப்படி அல்ல. கெட்டிதட்டிப் போன மூளையைச் சற்றே அசைத்து வேறொன்றுக்கு மாற்றுவது எளிதல்ல.
அரசு ஊழியர்கள் தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும், முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. அது முதலில் எப்போது வந்தது எனத் தெரியவில்லை. அதை நினைவூட்டும் ஆணைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும் தமிழ் வளர்ச்சித் துறையின் முக்கியமான வேலை அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தமிழில் ஆணை பிறப்பிக்கப்படுகிறதா, அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பம் இடுகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டியதாகும். அது அத்தனை சரியாகச் செயல்படுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை எப்போதாவது வருவார்கள். எதையும் பார்க்காமல் ‘எல்லாம் சரி’ என்று எழுதிக் கையொப்பம் இட்டுச் செல்வார்கள். பெயரளவுக்குச் சில ஆலோசனைகளை எழுதி வைத்துப் போவதும் நடக்கும்.
அத்துறைக்கு இணை இயக்குநர் என்று ஒரு பதவி உண்டு. அது பெரும்பாலும் காலியாக இருக்கும். இரண்டு மூன்று மாவட்டத்தைச் சேர்த்து ஒருவர் பார்ப்பார். வேறு துறை சார்ந்தவர் ஒருவர் பொறுப்பில் இருப்பார். ஆண்டுக்குச் சில பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்துவதோடு அதன் வேலை முடிந்துவிடும். ஆனால் இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது; அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கவும் அதிகாரம் இருக்கிறது என்பது முக்கியம். இருந்தாலும் தங்களுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பது போலத்தான் ஆசிரியர்கள் இருப்பார்கள். என் சொல் அரங்கேறும் இடத்தில் எல்லாம் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவது தவறு, தாய்மொழியில் போடுங்கள் எனச் சொல்லிக் க.ப.அறவாணன் அவர்களின் வாழ்க்கைச் சம்பவத்தையும் எடுத்துச் சொல்வேன்.
(தொடர்ச்சி நாளை)
—– 08-04-25
பல மொழிகளைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில மொழிகளில்தான் அரசு ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் என்றால், பிற மாநிலங்களிலிருந்து வரும் அரசு ஆணைகளையும் ஒரு மாநிலத்தில் நடைமுறைப்படுத்த ஏதுவாக ஆங்கிலத்திலும் அந்த ஆணைகள் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் பணியாற்றியவர் ஓய்வுக்குப் பின்பு கேரளா சென்று தனது ஓய்வூதியத்தைக் கேரள அரசு மூலம் (Other Govt. ) OG pension ஆகப் பெறுபவருக்குத் தமிழில் மட்டும் அரசு ஆணையை அனுப்பினால் நடைமுறைச் சிக்கல் ஏற்படும். எனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் அரசு ஆணைகள் இருக்க வேண்டும் என்பது நமது நாட்டுச் சூழலின் கட்டாயம்.
கையெழுத்து என்பது ஒருவரின் அடையாளம். ஒருவரின் கையெழுத்து என்பது மற்றவர் அதைப் படித்துப் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இடப்படுவது அன்று. எனவே, தமிழில் கையெழுத்து, இந்தியில் கையெழுத்து என்பதெல்லாம் அர்த்தமற்ற பேச்சு.
சிறப்பான கட்டுரை. தங்களின் வழியிலும் வழிக்காட்டலிலும் நாங்கள் தமிழில்தான் கையெழுத்து இடுகிறோம். இப்பழக்கத்தை நண்பர்களுக்கு மட்டுமின்றி என் மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன்.