அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன். வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள் சுருக்கொப்பம் இடுவார்கள். தமிழா ஆங்கிலமா என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் அது இருக்கும். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து ஆங்கில எழுத்து என்று தெளிவானால் மாற்றிக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன். புரியாமல் போடுபவர்களிடம் ‘என்ன மொழி எழுத்து?’ என்று கேட்டு ஆங்கிலம் என்று சொன்னால் தமிழுக்கு மாறும்படி வலியுறுத்தியிருக்கிறேன். பெரும்பாலானோர் தமிழில்தான் கையொப்பம் இடுவர். ஆங்கிலமோ அறிவியலோ படித்துவிட்டால் தங்களுக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்ப்பும் இல்லை என்று நினைக்கும் ‘அறிவாளிகள்’ சிலருண்டு. அவர்களை அசைப்பது அத்தனை எளிதல்ல.
தமிழில் கையொப்பமிடச் சொன்னபோது ஆங்கில ஆசிரியர் ஒருவர் ‘சார், நான் இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்’ என்றார். ‘அதனால் என்ன?’ என்றேன். ‘தமிழாசிரியர் தானே தமிழில் கையொப்பமிட வேண்டும்?’ என்று கேட்டார். இப்படி ஒரு தவறான அபிப்ராயம் எப்படியோ பரவியிருக்கிறது. தமிழாசிரியர்தான் தமிழில் கையொப்பம் இட வேண்டும், தமிழாசிரியர்தான் தம் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரிட வேண்டும், தமிழாசிரியர்தான் தமிழில் எழுத வேண்டும், பேச வேண்டும் என்றால் தமிழாசிரியர் மட்டுமே தமிழ்நாட்டில் வாழ வேண்டும் என்றும் சொல்லிவிடலாமே. ‘தமிழ்தானே உங்கள் தாய்மொழி? நீங்கள் தமிழர் இல்லையா? இங்கிலாந்திலா பிறந்தீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டு அவருக்கு விளக்கம் சொல்ல வேண்டியானது.
கௌரவ விரிவுரையாளர் ஒருவர் ‘நிரந்தர ஆசிரியர்களுக்குத் தானே விதிகள் பொருந்தும்?’ என்று கேட்டார். ‘அரசு ஊதியம் எந்த வகையில் பெறுபவராக இருந்தாலும் விதி பொருந்தும். நீங்கள் தற்காலிகம் என்றால் நாளை பணி அனுபவச் சான்றிதழ் கேட்க மாட்டீர்களா?’ என்று கொக்கி போட்டேன். வேண்டா வெறுப்பாகத் தமிழில் கையொப்பம் போடும் நடைமுறைக்கு வந்தார். வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் போட்டால் போதும், எல்லா இடத்திலும் எதற்கு என்று கேட்டவர்கள் உண்டு. ‘நீங்கள் பணியாற்றும் அரசு நிறுவனம் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும்; கையொப்பமும் தமிழில்தான் போட வேண்டும். தமிழ்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி’ என்று குரலுயர்த்திச் சொல்ல வேண்டியிருக்கும்.
தமிழாசிரியர் முதல்வராக இருப்பதால் தமிழில் கையொப்பமிடச் சொல்கிறார் என்றும் ஒருபேச்சு பரவிற்று. ‘இவருக்கு ஆங்கிலம் தெரியாது; அதனால் எல்லாவற்றையும் தமிழில் இருக்க வேண்டும் என்கிறார்’ என்றவர்களும் உண்டு. அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் ஆங்கில மொழி விற்பன்னர்கள் அல்ல. அவர்கள் எழுதும் நான்கு வரி ஆங்கிலத்தில் குறைந்தது இரண்டு பிழைகளை என்னால் கண்டுபிடிக்க முடியும். மொழி பற்றிய உணர்வு ஏதுமின்றி குறிப்பிட்ட துறையில் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அறிவியல் பாடங்களில் எல்லாம் மொழிப்பிழையைப் பார்க்க வேண்டியதில்லை என்னும் எழுதப்படாத விதி ஒன்று நிலவுகிறதல்லவா?
என்ன சொல்லியும் சிலர் மாற்றிக் கொள்ளவில்லை. சிலர் முன்னெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தனர். வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட்டுவிட்டு மற்ற இடங்களில் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இடுவேன் என்று பிடிவாதமாக இருந்தவர்களும் உண்டு. அத்தகையவர்களைத் தனித்தனியாக அழைத்து அரசாணை பற்றி விளக்கிச் சொன்னேன். அலுவலகத்தில் சொல்லி அரசாணை நகல் பெற்று வைத்திருந்தேன். அதைக் கொடுத்து வாசிக்கும்படி சொன்னேன். ‘அரசு ஊழியர் அலுவல் தொடர்பான அனைத்து இடங்களிலும் தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும் என்பது அரசாணை. முன்னெழுத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்கிறது ஆணை. தமிழில் போடவில்லை என்றால் ஊதியத்தை நிறுத்தி வைக்க முதல்வருக்கு அதிகாரம் இருக்கிறது’ என்று சிலருக்கு எச்சரிக்கை விட வேண்டியிருந்தது. உயிராதாரம் பற்றிய உணர்வு வந்த பிறகே அவர்கள் மாறினர்.
அப்படியும் நூறு விழுக்காட்டை எட்டினேன் என்று மார்தட்டிக்கொள்ள முடியாது. ஓரிரு நாள் முதல்வர் பார்ப்பார், கேட்பார், பிறகு விட்டுவிடுவார் என்று எண்ணிச் சிலநாள் தமிழில் கையொப்பம் போட்டுவிட்டுப் பின் ஆங்கிலத்திற்கு மாறிய பிரகிருதிகளும் இருந்தனர். அரசு நடவடிக்கைகள் அப்படித்தானே அமையும்? ஏதேனும் பிரச்சினை வந்தால் அப்போது ஆணைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது பற்றிப் பேசுவார்கள். சில நாட்களில் அது நீர்த்துப் போய்ப் பழைய நிலையை எய்திவிடும். நான் இந்த விஷயத்தில் விடாக்கண்டன். கையொப்பப் பகுதியில் என்னையறியாமல் கண்ணோடும். யாராவது மாற்றியிருந்தால் அவர்களை அழைத்துவிடுவேன். ‘பழக்கதோஷம் சார்’ என்று வழிவார்கள்.
மாணவர் பெயர்ப்பட்டியல், வருகைப் பதிவேடு ஆகியவற்றிலும் அனைத்துப் பெயர்களையும் தமிழ் முன்னெழுத்தோடு எழுதி வைக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. பல்கலைக்கழகம் ஆங்கில அகர வரிசையைப் பின்பற்றுகிறது. கல்லூரியில் தமிழில் எழுதி வைத்தால் குழப்பம் வந்துவிடும் என்றார்கள். அது நியாயமானதுதான். பல்கலைக்கழகத்தில் மாற்றம் வேண்டும். அது என் அதிகாரத்திற்குள் வரவில்லையே.
2021இல் திமுக அரசு பதவியேற்ற பிறகு தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் பேசிய பிறகு ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில் அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய மொழி சார் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் தமிழில் கையொப்பம் இடுவது கட்டாயம்’ என்கிறது அவ்வாணை. முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் எனவும் கூறுகிறது. முன்னெழுத்து ஆங்கிலத்தின் ஒலிபெயர்ப்பாக இருக்கக் கூடாது என்றும் அது தெளிவாகச் சொல்கிறது. எஸ்.முத்து என்று எழுதக் கூடாது, சு.முத்து என எழுத வேண்டும் எனச் சான்றும் காட்டுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பதிவேடுகளில் தமிழ் முன்னெழுத்தோடு பெயர்களை எழுத வேண்டும், மாற்றுச் சான்றிதழில் மாணவர், பெற்றோர் உட்பட அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்றெல்லாம் அது கூறுகிறது. பொதுமக்களுக்குச் சேவையாற்றும் பல துறைகளின் பெயர்களைப் பட்டியலிட்டு அவற்றை நாடி வரும் பொதுமக்களும் தம் பெயரைத் தமிழ் முன்னெழுத்தோடு எழுதும்படி கூற வேண்டும். ‘தமிழில் கையொப்பம் இட வேண்டும்’ என்று அரசு அலுவலகங்களில் சுவரொட்டி வைக்கவும் அவ்வாணை உத்தரவிடுகிறது.
தெளிவாகவும் விளக்கமாகவும் வெளியிட்ட அவ்வாணையைக் கடுமையாக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. நடைமுறைப்படுத்தினால் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவருமே தமிழில் கையொப்பம் இடும் வழக்கம் எளிதாக உருவாகிவிடும். பள்ளியில் மாணவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்து விட்டால் அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் தொடர்வார்கள். ஆகவே அரசாணை தீவிரமாக நடைமுறைக்கு வரட்டும். தமிழில் கையொப்பம் இடுதல் பற்றி இந்தியப் பிரதமர் கூறியதன் பின்னால் எந்த அரசியல் கணக்கு இருந்தாலும் சரி, அதை ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு, அவர் பேச்சைக் கேட்போமே.
—– 09-04-25
இவரின் கையெழுத்தில் இருக்கும் முன்னெழுத்து தமிழா ஆங்கிலமா?
தமிழ்தான். முன்னெழுத்து பெ