‘அது ஒரு தொண்டு’ 1

You are currently viewing ‘அது ஒரு தொண்டு’ 1

2025 மார்ச் மாதம் லண்டன் போயிருந்தேன். பெங்களூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம். இருக்கைக்கு எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னென்ன மொழிப் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தேன். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய மொழிப் படங்கள் சிலவும் இருந்தன. தமிழ்ப் படங்கள் குறைவுதான். ஆறு. அதில் ஒன்று அசோக் செல்வன் நடித்து 2023இல் வெளியான ‘சபாநாயகன்.’ படத்தைப் பற்றிக் கேள்விப்படவில்லை. எனினும் கொஞ்சம் பார்த்தேன்.

விமானத்திலும் தமிழ்ப்படம்தான் பார்க்க வேண்டுமா என்று கேட்க வேண்டாம். பிறமொழிப் படங்களும் பார்த்தேன். பீத்தோவன் சிம்பொனி உள்ளிட்ட வெவ்வேறு வகை இசைத்தொகுப்புகளும் இருந்தன. பார்த்தும் கேட்டும் உறங்கியும் உண்டும் நேரம் போக்கினேன். பத்து மணி நேரம் உட்கார்ந்தே செல்ல வேண்டிய பயணத்தை எப்படித்தான் கழிப்பது? எங்கும் தமிழ் இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் எப்படியோ வந்துவிட்டது. இந்திக்கு எதிராகக் களமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இன்னும் கொஞ்சம் தீவிரமாகத் தமிழைத் தேடுகிறது மனம்.

‘சபாநாயகன்’ சொல்லும்படியான படமாகத் தோன்றவில்லை. காதலும் நகைச்சுவையும் கலந்த படமாக எடுக்க முயன்றிருக்கிறார்கள். சரியாக வரவில்லை. நிலக்காட்சியும் அன்றாடம் சார்ந்த பின்னணியும் வலுவாக அமையவில்லை. மொழியிலும் குழப்பம். அவற்றுக்கு மெனக்கெடவில்லை போல. அசோக் செல்வன் இன்று அறியப்பட்ட நடிகர்தான். ஓரளவு சந்தை மதிப்பும் உள்ளவர். கதையைக்கூடச் சகித்துக்கொள்ளலாம். நம்பகத்தன்மையைத் தரும் பின்னணி வேலைகள் பொருத்தமாக இல்லை.

கோவையைச் சேர்ந்த நக்கலைட்ஸ் குழு அருண்குமாரும் இன்னும் சிலரும் நடித்திருந்தனர். இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் கோவையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். அவருக்கு இது முதல் படம். படத்தில் கொங்கு மொழியும் அதன் தொனியும் அங்கங்கே தென்படுகின்றன. பொதுமொழியும் கொங்கு வட்டார மொழியும் கலந்து வருகின்றன. அது காட்சிக்குள் நம்மைப் பொருத்திக்கொள்ளத் தடையாக இருக்கிறது. மொழித் தனித்தன்மையைப் பேணியிருந்தால்கூட இடம் சார்ந்த அடையாளத்தைத் தெளிவாகக்கியிருக்கலாம்.

‘அது ஒரு தொண்டு’ 1

படத்தின் தொடக்கத்தில் வரும் ஒரு காட்சி. குடித்துவிட்டுச் சாலையில் ரகளை செய்ததற்காகக் கதாநாயகனைக் காவலர்கள் ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர். அந்த அகால நேரத்தில் கண்ணுக்குத் தென்படுபவர்களைக் காவலர்கள் விசாரிக்கின்றனர். அப்போது ஒருகாட்சி. ஒரு வீட்டின் முன் இருசக்கர வாகனத்தோடு நிற்கும் இளைஞன் ஒருவனும் அவ்வீட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அகாலத்தில் ஒருபெண் வெளியே நின்று பேசுவதை ஆரோக்கியமாகக் காணும் மனநிலையை இன்னும் நாம் பெறவில்லை.

அதைப் பார்த்துக் காவல் அதிகாரி  கேட்கிறார்: யாருப்பா அது?

ஜீப்பில் விலங்குடன் உட்கார்ந்திருக்கும் கதாநாயகன் சொல்கிறார்: அது ஒரு தொண்டு சார்.

காவலர்: அப்படீன்னா?

கதாநாயகன் (கொஞ்சம் தடுமாறி யோசித்து): சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவங்க சார்.

காவலர்: என்னய்யா சொல்ற?

கதாநாயகன்: இப்பப் பாருங்க சார். இவனக் கட்டிப்புடிச்சு வழியனுப்பி விடறாளா… வீட்டுக்குள்ள போற மாதிரி ஒரு ஆக்ட உடுவா. அப்பறம் இன்னொருத்தன் வருவான்.  அவ்வளவுதான்.

அப்போது ஒருவன் காரில் வருகிறான். காரில் ஏறி அவனோடு அப்பெண் போகிறாள்.

காவலர்: ஓ… இதுதான் சேவையா?

காட்சி முடிகிறது.

இக்காட்சி இடம்பெற்ற நோக்கம் எதற்கென்று எனக்குப் புரியவில்லை. அப்பெண் அப்படிப்பட்டவள் என்று கதாநாயகனுக்கு எப்படித் தெரிந்தது என்றும் விளக்கமில்லை. காவல்துறைக்குத் தெரியாத ரகசியத்தைக் கதாநாயகன் எப்படிக் கண்டுபிடித்தான்? ஊகம் என்றால் ஊகிப்பதில் அனுபவம் பெற்றவர்கள் காவல்துறையினர்தானே? அந்நேரத்தில் காவல்துறையினர் காணும் ஆண்கள் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் பின்னர் கதையோடு தொடர்புபடுகின்றனர். இந்தப் பெண்ணைப் பற்றிய காட்சி மட்டும் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.

யாரோ ஒரு பெண்ணைத் திடுமென அப்படிச் சித்திரிப்பதற்குக் காரணம் இல்லை. இரவு ரோந்து என்பதால் பாலியல் தொழில் செய்யும் பெண்ணொருத்தியைக் காட்ட வேண்டும் என்று யோசித்திருப்பார்களோ? இன்றைய தலைமுறைப் பெண்கள் இப்படித்தான் என்று கதாநாயகனின் அனுபவ அறிவு சொல்கிறதோ? இல்லை, அதில் பயன்படுத்தும் கொங்கு வட்டாரச் சொல் ஒன்றுக்காகக் காட்சி அமைத்திருப்பார்களோ?

அச்சொல் ‘தொண்டு.’ அதைக் கதாநாயகன் சொன்னதும் காவலருக்குப் பொருள் புரியவில்லை. கதாநாயகன் ‘சேவை மனப்பான்மை சார்’ என்று விளக்க வேண்டியிருக்கிறது. காரணம் ‘தொண்டு’ பொதுவழக்கில் உள்ள சொல்லாக இருந்தாலும் வட்டார வழக்கில் தனிப்பொருளில் வழங்குகிறது. இச்சொல்லுக்குக் கொங்கு வட்டாரச் சொல்லகராதியில் இப்படிப் பொருள் கொடுத்திருக்கிறேன்:

‘ஒழுக்கமற்ற ஆண்/பெண்; பலரோடு உறவு கொள்ளும் ஆண்/பெண். ‘அவ சுத்தத் தொண்டு.’, ‘இந்தப் பையன் தொண்டாப் போயிட்டானே.’ (ப.102)

கொங்கு வட்டார வழக்கில் தொண்டு என்னும் சொல்லுக்கு இதுதான் பொருள். ஒருவரைத் திட்டுவதற்கும் இதைப் பயன்படுத்துவது உண்டு.

(தொடர்ச்சி நாளை)

—–

Latest comments (1)