அறிவூட்டும் வகுப்பறை
அவரது உரைகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் உளவியல் பார்வையை ஊடாட விடுவதுதான். சமீபத்தில் அவர் பேசிய இரண்டு உரைகளில் உளவியல் பார்வை என்னை வசீகரித்தது. இருசாதி இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலித் சாதி இளைஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அது குடிபோதையில் நிகழ்ந்ததாகச் செய்திகள் சொல்கின்றன. அந்த விஷயத்தை விளக்கும் போது ‘குடிபோதையில் இருக்கும்போது தன் சாதியைச் சேர்ந்த ஒருவனை ஏன் கொல்லத் தோன்றவில்லை? மோதல் நடந்தால் இருதரப்பிலும் சேதம் இருக்க வேண்டுமல்லவா? ஏன் ஒரு தரப்பில் மட்டுமே சேதம்? போதையில்கூட யார் கொல்லப்படுவதற்கு உரியவர் என்பதை எப்படித் தேர்வு செய்ய முடிகிறது?’ (நினைவில் இருந்து எழுதியுள்ளேன்) என அவர் கேட்கும்போது சாதிய உளவியலை எளிதாக்கிச் சொல்வதை உணர முடிகிறது.
இன்னொரு உரை காதல் விவகாரத்தில் கொலையுண்ட பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து அவர் ஆற்றியது. சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட வேறுபாடுகளை எல்லாம் கடந்து பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பதே தம் நீதி என்பதை அவ்வுரையில் விரிவாக விளக்குவார். ஆணாதிக்கம் பற்றிப் பேசும்போது ‘எல்லாச் சாதி ஆண்களும் ஆணாதிக்கம் கொண்டவர்களே’ என்பதை உளவியல் நோக்கில் காட்டுவார். எந்தச் சாதி ஆண்களுக்கும் அவர் சலுகை தருவதில்லை. பாதிக்கப்பட்ட பெண் எந்தச் சாதியாக இருப்பினும் அவர் பக்கமே தம் சாய்வு என்பதை யாவரும் உளம் கொள்ளும் வகையில் விவரிப்பார். இவ்வாறு உளவியல் பார்வை ஊடாட அவர் ஆற்றும் உரைகளில் புதிய அறிதல்கள் கிடைக்கும்.
இந்தச் சமூகத்தில் வாழும் எவரும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களிலிருந்து முழுமையாக விடுபட முடியாது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் எச்சரிக்கை கொண்டு பேச முடியாது. சில சமயம் மாற்றுப் பார்வையில் சில விஷயங்களைப் பேசும்போது அதைத் தவறாக விளங்கிக் கொள்வதும் விளக்கி அரசியல் செய்வதும் நடக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் வருத்தம் தெரிவிக்கத் தோழர் தயங்குவதில்லை. பொதுத்தளத்தில் தம் பேச்சைக் கொண்டு பதற்றத்தை உருவாக்குவதை ஒருபோதும் அவர் அனுமதிப்பதில்லை. தன்னகங்காரம் இல்லாத தலைவர்களுக்கே இது சாத்தியம்.
அவர் உரையைத் திரித்துப் பரப்பும் செயல் நடக்கையில் அதைக் கொள்கை அடிப்படையில் வலுவாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவர். அத்தகைய உரைகள் கேட்கச் சலிக்காதவை. கடந்த ஆண்டு மனுதர்மம் பற்றிய அவர் உரை அவ்விதம் திரிபாக்கப்பட்டது. அப்போது சற்றும் பின்வாங்காமல் மனுதர்மம் பற்றி விளக்கிப் பேசுவதை ஓர் இயக்கமாக மேலெடுத்துச் சென்றார். அப்போது அவர் ஆற்றிய உரைகள் மிகுந்த முன்தயாரிப்பு கொண்டவை. எழுச்சியும் அறிவூட்டலும் இணைந்து விளங்கியவை. அவ்வுரைகளில் மனுதர்மத்தின் பல்வேறு மொழிபெயர்ப்புகளைப் பற்றியும் பதிப்புகளைக் குறித்தும் அவர் பேசினார். கைகளில் நூல் படிகளை எடுத்துக்காட்டி விளக்கினார். தம் உரையைக் கேட்பவர்கள் சாதாரண மக்கள் என்று கருதி அவர்களுக்கு இதெல்லாம் புரியாது, தேவையில்லை என்று எதையும் ஒதுக்கவில்லை. கல்விப்புலம் சார்ந்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகள் போல அவர் உரைகள் ஆழமாக இருந்தன. முடிந்தவரைக்கும் கருத்துக்களை எளிமைப்படுத்தினாரே தவிர சொல்ல வேண்டிய எதையும் புறக்கணிக்கவில்லை.
அவர் உரைகள் எல்லாத் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்துபவை. மனுதர்மம் பற்றி அவர் தொடர்ந்து உரையாற்றிய அச்சமயத்தில் இணையத்தில் அந்நூல் தேடல் மிகுந்தது. பிடிஎப், மின்னூல் வடிவங்கள் அதிக அளவு பதிவிறக்கம் செய்யப்பட்டன. மேடையில் அவர் எடுத்துக்காட்டிய பதிப்பைப் பலர் வாங்கினர். மனுதர்ம வாசகங்கள் வலைத்தளங்களில் எடுத்துப் பகிரப்பட்டன. சமூகத்தின் பல தரப்புக்கும் மனுதர்மம் விமர்சனத்தோடு அறிமுகம் ஆயிற்று. அதை ஆதரித்துப் பேசியோர் சமஸ்கிருதத்திற்குள் சென்று அடைக்கலம் புகுந்து ஒடுங்கினர். பொதுத்தளத்தில் மனுதர்ம எதிர்ப்பு மேலோங்கிற்று. மனுதர்மத்தை ஆதரிக்கும் தரப்பினர் வீட்டுப் பெண்களுக்கும் எதிரானது அது என்பது நிறுவப்பட்டது. உண்மையில் ஓர் அறிவுப் பரப்பலாகவே அப்போதைய அவரது உரைகள் விளங்கின.
பல்லாண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் நான். மாணவர்களின் வயது, அனுபவம், புரிதல் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வகுப்பெடுப்பது வழக்கம். கற்பித்தல் முறைகளைத் தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்துவதுண்டு. கற்பித்தல் என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல; பன்முகத்தன்மை கொண்டது. பொதுப்புத்தி சார்ந்த பார்வையை வலுப்படுத்துவதும் அல்ல; மாற்றுப் பார்வைகளை முன்வைத்துச் சிந்திக்க வைப்பது. தோழர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையைக் கேட்கும் போது நான் ஒரே சமயத்தில் மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறேன். மாணவனாக அவர் உரையிலிருந்து அறிவதற்கு ஏராளம் இருக்கின்றன. மனதைத் திறந்து வைத்துக் கேட்டால் போதும். அவை வந்து சேரும். ஆசிரியனாக நான் வகுப்பறையில் காணவும் கூறவும் தவறவிட்ட கோணங்களை, உத்திகளைப் பற்றி யோசிப்பேன்.
ஆழ்ந்த அறிவும் நுட்பமான பார்வையும் எடுத்துரைக்கும் திறனும் ஒருங்கே அமைந்த பேராசிரியர் ஒருவரின் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கேட்கையில் ஏற்படும் உணர்வே தோழரின் ஒவ்வொரு உரையைக் கேட்கும்போதும் ஏற்படுகிறது. நம் கல்விமுறை உருவாக்கியிருக்கும் ஏற்றதாழ்வுகளும் பல குறைபாடுகளும் கொண்ட வழக்கமான வகுப்பறை என்று கருதிவிடக் கூடாது. இது சாதிய உளவியலைப் புரிய வைக்கும் வகுப்பறை. சமூக நீதியை நிலைநாட்டும் வகுப்பறை. மாற்றுப் பார்வைகளை முன்வைக்கும் வகுப்பறை. அறிதலைத் தூண்டும் வகுப்பறை. அறிவூட்டும் வகுப்பறை. ஒருபோதும் சலிக்காத வகுப்பறை. எப்போது மீண்டும் வரும் என்று எதிர்பார்க்க வைக்கும் வகுப்பறை. அது புரட்சியாளர் அம்பேத்கார் வாசகமாகிய ‘கற்பி’ என்பதற்கான சான்றாதாரமாகத் திகழும் வகுப்பறை.
—– 11-03-25
( ‘பாசிசத்தால் வீழ்த்த முடியாத ஸ்பார்ட்டகஸ்’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் இறுதிப் பகுதி. தொகுப்பாசிரியர்: அமுதன் துரையரசன், அகழி பதிப்பகம், 2021.)
“தோழரின் ஒவ்வொரு உரையைக் கேட்கும்போதும் ஏற்படுகிறது. நம் கல்விமுறை உருவாக்கியிருக்கும் ஏற்றதாழ்வுகளும் பல குறைபாடுகளும் கொண்ட வழக்கமான வகுப்பறை என்று கருதிவிடக் கூடாது. இது சாதிய உளவியலைப் புரிய வைக்கும் வகுப்பறை. சமூக நீதியை நிலைநாட்டும் வகுப்பறை. மாற்றுப் பார்வைகளை முன்வைக்கும் வகுப்பறை. அறிதலைத் தூண்டும் வகுப்பறை. அறிவூட்டும் வகுப்பறை. ஒருபோதும் சலிக்காத வகுப்பறை”
இன்றைய அரசியல் தலைவர்களுள்
ஒருவரின் தனித்தன்மைக்கு
இக்கட்டுரை ஒரு மகுடம்.சிறப்புங்கய்யா