தோல்வி முயற்சி

You are currently viewing தோல்வி முயற்சி

சில மாதங்களுக்கு முன் என்னை செல்பேசியில் அழைத்த நண்பர் தன்னைக் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்னும் படத்தின் இயக்குநர் தன்பால் பத்மநாபன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சந்தேகம் ஒன்றைக் கேட்டார். ‘கட்டித்தின்னி’ என்னும் வசைச்சொல்லைப் படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் அதை சென்சாரில் அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை என்றும் சொல்லி அவ்வசவுக்கு என்ன அர்த்தம் என்றும் கேட்டார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. படத்தில் பயன்படுத்தியுள்ள ஒரு சொல்லுக்காக இயக்குநர் இவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறாரே. அந்தப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எனக்குள் உருவாகியிருந்தது.

படம் பற்றிய செய்திகள் எங்காவது மூலையில் வந்திருந்தாலும் ஆர்வத்தோடு படித்தேன். வீரா தொலைக்காட்சியில் பட இயக்குநர், சண்முகராஜன், கதாநாயகன், கதாநாயகி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றையும் கொஞ்ச நேரம் பார்க்க முடிந்தது. நடிகர்களுக்கு சண்முகராஜன் பயிற்சி கொடுத்த செய்தியை அதில் விரிவாகப் பேசினார்கள். நவீன நாடகத்திலும் திரைப்பட நடிப்பிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருக்கும் சண்முகராஜனின் செயல்பாடுகள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆகவே அவர் பயிற்சி கொடுத்திருக்கிறார் என்பதும் படம் பற்றிய என் எதிர்பார்ப்புக்குக் காரணமாயிற்று. கடந்த மாதம் வெளியாகிப் பெரும் கவனம் பெற்ற ‘வழக்கு எண் 18/9’ படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டது. அதுபோலவே இப்படமும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் என்னும் செய்தியும் எனக்கு முக்கியமாகப் பட்டது. ஆகவே இப்படத்தை வெளியாகும் அன்றைக்கே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

ஜூன் 11 அன்று படம் வெளியாயிற்று. நாமக்கல் சாந்தித் தியேட்டரில் படம் வெளியாகியிருந்த்து. நகரின் மையப் பகுதியிலேயே உள்ள  பெரிய தியேட்டர். இப்போது பராமரிப்பின்றியும் நவீனமாக மாற்றாமலும் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் குறைந்த செலவினப் படத்திற்கு அந்தத் தியேட்டர் கிடைத்திருந்தது எனக்குச் சந்தோசமாக இருந்தது. அதில் ஒருவாரம் ஓடினால் படம் பெரும் வெற்றி என்று அர்த்தம்.  முதல் ஆட்டம் மாலை ஆறரையிலிருந்து ஏழுக்குள் தொடங்கும். கூட்டம் நிறைந்துவிட்டால் ஆறரைக்கே படம் போட்டுவிடுவார்கள். கூட்டம் இல்லை என்றால் ஏழுமணி வரை ரசிகர்களுக்காகப் படம் காத்திருக்கும். ரசிகர் மன்றங்களைக் கொண்ட கதாநாயகன் இதில் இல்லை என்றாலும் படம் வெளியான முதல்நாள் என்பதால் ஓரளவேனும் கூட்டம் இருக்கும் என்று கருதினேன். 

ஆறேகால் மணிக்குப் போய்ச் சேர்ந்தபோது தியேட்டரின் முன்பக்கம் வெறிச்சோடிக் கிடந்தது. படம் ஆரம்பித்துவிட்டார்களோ என்னும் பதற்றத்தோடு வண்டி நிறுத்தும் இடத்திற்குப் போனால் அங்கே என் வண்டிதான் முதல். தியேட்டர் ஊழியர்கள் நான்கைந்து பேர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வை என் மேல் விழுந்து விழுந்து மீண்டது. ஏதாவது பேசாமல் இருக்க என்னால்  முடியவில்லை.  ஆறரை மணிக்கு மேல்தான் டிக்கெட் கொடுப்பார்கள் என்றார்கள். படம் பற்றிக் கேட்டேன். ’எல்லாம் புதுமுகம். இப்படித்தான் இருக்கும்’ என்றார் ஓர் ஊழியர். தனியாக உட்கார்ந்திருக்க ஒருமாதிரி இருந்தது. எதிரில் இருந்த கடைக்குப் போய் தேநீர் அருந்திவிட்டு வந்தேன். அப்போதும் நான் மட்டும்தான். மணி ஆறரையைத் தாண்டியும் டிக்கெட் கொடுக்கவில்லை.

பட இயக்குநருக்குப் பேசலாம் என்று அவரைச் செல்பேசியில் அழைத்தேன். பேசினார். படத்திற்கான வரவேற்பு பற்றி இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றும் சில நாட்கள் ஆகலாம் என்றும் சொன்னார். சென்னையில் ஓரிரு தியேட்டர்களில் அரங்கு நிறைந்திருப்பதாகச் செய்தி வந்தது என்றும் சொன்னார். நாமக்கல் தியேட்டரில் நான் ஒருவன் மட்டும் காத்திருப்பதை அவரிடம் சொல்லவில்லை. படம் பார்க்க வந்திருப்பதை மட்டும் சொன்னேன். ஒருவழியாக ஏழு மணிக்கு டிக்கெட் கொடுத்தபோது பத்து பேர் வந்து சேர்ந்திருந்தார்கள். டிக்கெட் முப்பது ரூபாய்தான். ஆனால் வண்டி நிறுத்தப் பத்து ரூபாய்.  தியேட்டருக்குள் எங்கே வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து கொள்ளலாம். பெரும்பாலானோர் பின்பகுதியில் உட்கார்ந்திருக்க இரண்டு பேர் மட்டும் திரையருகே அமர்ந்திருந்தார்கள். பரவாயில்லை, இன்னும் தரை டிக்கெட்டுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.  எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. படம் வெளியாகும் முதல் நாள் என்னும் உணர்வுகூட ரசிகர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே. இந்தத் தலைப்புக்காகவேனும் ஒருமுறை பார்க்கலாம் என்று ரசிக மகாஜனங்கள் வந்திருக்கலாமே. இடைவேளையின்போது எண்ணிப் பார்த்தேன். மிகுபோதையில் கவிழ்ந்து கிடந்த  ஒன்றோடு சேர்த்து இருபத்திரண்டு தலைகள் இருந்தன. 

படம் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்தது. மையமும் தெளிவும் கொண்ட திரைக்கதை இல்லை என்பது பெருங்குறை. முதலாளியின் கோணத்திலான பஞ்சாலை வரலாறு, தொழிற்சங்க நடவடிக்கைகள், தொழிலாளர் நிலை, நவீனத் தொழிற்சாலையில் உருவாகும் காதல்கள், காதலைவிடச் சாதியே பெரிது எனக் கருதுவதால் நடக்கும் கௌரவக் கொலைகள் என ஒன்றுகூட விட்டுப் போகாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என இயக்குநர் முயன்றிருக்கிறார். இவற்றுள் எதை மையப்படுத்துவது, எவற்றைப் பின்னணியாக்குவது என்பதில் தெளிவில்லை. ஆகவே ரசிகர்களை முதலிலிருந்து கடைசிவரை ஈர்த்துச் செல்ல முடியவில்லை. முந்நூறு பேர் வேலை செய்யும் பஞ்சாலைக்கான பரபரப்புகள், கோஷங்கள், தொழிற்சங்கப் போட்டிகள் ஆகிய பின்னணி எதுவும் அமையவில்லை. குறைந்த செலவினம் என்பதற்காக பஞ்சாலைக்கு உள்ளும் வெளியிலும் கேண்டீனிலும் திரும்பத் திரும்ப நான்கைந்து முகங்களே வந்து போனால் பஞ்சாலை சார்ந்த படம் என்பதை எப்படி உணர்வது?

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான காலத்தை எடுத்துக் கொள்ளக் காரணம் பஞ்சாலையின் வரலாற்றைச் சொல்வது அதாவது அதன் முதலாளியைப் பற்றிச் சொல்வதுதான் என்று நினைக்கிறேன். பஞ்சாலை முதலாளிகளாக அப்பனும் மகனும் அநியாயத்திற்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆலைக்காகவே கொலையும் செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார் தந்தை. வெளிநாட்டுப் படிப்புடனும் வெள்ளைக்காரியுடனும் வரும் மகன் பஞ்சாலையில் வளர்க்கிறார். தொழிலாளர்களுக்காகக் கிருஷ்ணவேணி நகர் உருவாகிறது. மகளிர் கல்லூரியைத் தொடங்குகிறார். தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் தருகிறார். தொழிற்சங்கத் தலைவர்கள் இருபத்தைந்து சதம், முப்பத்தைந்து சதம் என போனஸ் கேட்டால் தாமாக முன்வந்து நாற்பத்தைந்து சதம் தருகிறார். பஞ்சாலையை நடத்த வங்கியில் கடன் பெற்றும் வேறு பல வகைகளிலும் முயற்சி செய்கிறார்.  ஆலை மூடப்பட்ட பின்னும் தொழிலாளர்களை வரவைத்து அவர்களுக்குரியதை வழங்கிச் செட்டில்மெண்ட் செய்கிறார். அப்பழுக்கற்ற முதலாளிதான் ஐம்பது ஆண்டுகாலப் பஞ்சாலையின் வரலாறாக இருக்கிறது.

பஞ்சாலைத் தொழிற்சங்கம் பற்றி சித்திரிப்புகள் மிகுந்த சார்புடையனவாக இருக்கின்றன. காங்கிரஸ் தொழிற்சங்கம், அதன் தலைவர்கள் ஆகியோர் முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் நல்ல இணைப்புப் பாலமாக விளங்கித் தொழிலாளர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும் உயர்ந்த குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மார்க்சியப் பின்னணி கொண்ட தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர்களைத் திசை திருப்பி நல்ல முதலாளிக்கு எதிராகப்  போராட வைத்துப் பஞ்சாலை மூடப்படுவதற்கே காரணமாகிறார்கள். தொழிலாளர்களுக்கு  எத்தனையோ உரிமைகளைப் பெற்றுத் தந்த மார்க்சியத் தொழிற்சங்கங்களின் உருவாக்கம் பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மிகுந்த எள்ளலோடும் எதிர்மறையாகவும் காட்சிகள் உள்ளன. பஞ்சாலை மூடப்படுவதற்குத் தொழிற்சங்கமே காரணம் என்னும் பார்வை மிக மேலோட்டமானது என்பதில் சந்தேகமில்லை.

படத்தில் தொழிலாளர்களைப் பற்றி நல்லவிதமான சித்திரிப்பு ஏதுமில்லை என்றே சொல்லலாம். இரக்க குணமும் கருணையும் மிகுந்த முதலாளியை திடீரென்று எதிர்த்துப் போராட எந்தத் தொழிலாளியும் வரமாட்டேன் என்று மறுக்கவில்லை. போனஸ் பிரச்சினை வந்ததும் இத்தனை காலமாக முன்னின்று நடத்திய தொழிற்சங்கத் தலைவரைத் தூக்கி எறியவும் புதிய தலைவர் ஒருவரின் பின்னால் போகவும் எந்தத் தொழிலாளியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வெவ்வேறு கொள்கைகளை உடைய கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் இணையாகச் செயல்பட்டன என்னும் வரலாற்றையும் மார்க்சியத் தொழிற்சங்கங்கள் விடுதலைக்கு முன்னாலிருந்தே இயங்கி வருகின்றன என்பதையும் பற்றிய குறைந்தபட்சப் புரிதல்கூட இயக்குநருக்கு இல்லை. தொழிலாளர்களுக்கு என்று சுயசிந்தனை ஏதுமில்லை, ஆட்டு மந்தைகள் என்பதான புரிதலே காட்சிகளாக வெளிப்படுகின்றன. மார்க்சியத் தொழிற்சங்கம் உருவாக்கும் அஜயன்பாலா ஒரு காட்சியில் கார்க்கியின் நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறார். ‘அது என்ன?’ என்று கேட்கும் தொழிலாளத் தோழருக்கு ‘இது உங்களுக்கெல்லாம் புரியாது’ என்கிறார். அவர் மட்டும் எங்கிருந்து வந்தார்? அவருடைய பின்னணி என்ன? பஞ்சாலைக் கண்காணிப்பாளரிடம் விடுமுறைக்குக் கெஞ்சி நிற்கும் சாதாரணத் தொழிலாளிதானே அவர். போனஸ் பிரச்சினைக்கு முன் எதற்கும் எந்தச் சிறு எதிர்ப்பையும் தெரிவிக்காத, போராடாத அவர் திடுமெனத் தொழிலாளர் தலைவராவது எப்படி? அதைத் தொழிலாளர்கள் எந்தக் கேள்வியும் இல்லாமல் எப்படி ஏற்றுக் கொள்கின்றனர்? தொழிலாளர்கள் உட்பட எல்லாத் தரப்புக்கும் வாசிப்பையும் குறைந்தபட்ச அரசியல் அறிவையும் கொடுத்தது மார்க்சிய இயக்கம் என்னும் சாதாரண விஷயம்கூட இயக்குநரின் எண்ணத்தில் உதிக்கவில்லை.  பஞ்சாலை முந்நூறு நாட்களாக மூடப்பட்ட போதும் அதற்குத் தொழிற்சங்கமே காரணமாக இருந்தபோதும் தொழிலாளர் பக்கமிருந்து எந்த முணுமுணுப்பும் ஏற்படவில்லை. தங்கள் கஷ்டங்களை எல்லாம் சகித்துக் கொள்கிறார்கள். இப்படித் தர்க்கக் குறைபாடுகள் ஏராளம்.

பஞ்சாலைத் தொழிலாளர்கள் காதலிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதாகத் தெரியவில்லை.  ஒவ்வொருவரும் பேருக்குப் பஞ்சாலைக்குள் நிற்கிறார்கள். யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதைப் பற்றிக்கூடத் தெளிவில்லை.  ஆணும் பெண்ணும் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பஞ்சாலை போன்ற நவீனத் தொழில்கள் சாதி மீறிய காதல் திருமணங்கள் நடக்கக் காரணமாயின. தொடக்கத்தில் அவற்றிற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் போகப்போக சாதாரணமாகி விட்டன. இன்றைய திருப்பூரின் நிலையே அதற்கு உதாரணம். காதல் மட்டுமல்ல, சமூக மதிப்பீடுகளை மீறிய உறவுகளும் அப்படியே. நவீனத் தொழில் ஏற்படுத்திய உடைப்பைப் பற்றிய தெளிவு கொண்ட காதல் சித்திரிப்பு படத்தில் இல்லை. காதலை எதிர்த்து நிகழும் கௌரவக் கொலைகள் பற்றியும் அழுத்தமான சித்திரிப்புகள் இல்லை. காதலர்களை உயிரோடு குழி தோண்டிப் புதைக்கும் காட்சி ஒன்று தொடக்கத்தில் வருகிறது. அதற்குச் சாதிவெறி காரணம் என உரையாடல் அமைகிறது. அதன்பின் காதாநாயகியின் அம்மா சோற்றில் விஷம் வைத்து அத்தகைய கொலையைச் செய்கிறாள். கணவனை இழந்து இரண்டு பெண்களை வளர்க்கும் தாய்க்கு அப்படி ஒரு சாதிவெறி இருக்கக் காரணம் என்ன? பெண்களைப் பஞ்சாலை வேலைக்கு அனுப்பும் தாய் அவள். பெண்கள் மூலமாகப் பஞ்சாலை சார்ந்த வேறொரு உலகம் அவளுக்கு அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் அவளுக்குள் எங்கிருந்து சாதிவெறி வந்தது? அவளுக்குப் பாலூற்றும் பால்காரரிடம் ‘நீங்க என்ன ஆளுங்க?’ என்று கேட்கும் போது சாதியைச் சொல்லாமல் திட்டிவிட்டுப் போகிறார் அவர். அவருக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தில் துளிகூட அந்தத் தாய்க்குள் ஏற்படவில்லையா? அவள் மகள் திருமணம் செய்துகொள்ளும் காதலன் பொருளாதார ரீதியிலும் சாதியிலும் அவர்களுக்கு நிகரானவனாகவே காட்டப்படுகிறான். அப்படி இருக்கும்போது கொலை செய்யுமளவுக்குப் போவதன் தர்க்கம் விளங்கவில்லை. தன் மகள்களின் காதல் பற்றி எதுவும் தெரியாதவளாகவும் அவர்களுடன் வேலை செய்பவர்கள் பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவளாகவும் கிருஷ்ணவேணி நகர்வாசிகளுடன் உறவேதும் அற்றவளாகவும் அவள் இருக்க முடியுமா?

படத்தில் பல பாத்திரங்கள் மிக மேலோட்டமாக இருக்கின்றன. சண்முகராஜனின் பாத்திரத்திற்கு வயது பொருந்தவில்லை. இளைஞர் ஒருவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் கொஞ்சமாவது எடுபட்டிருக்கும். சண்முகராஜன் தோற்றத்திற்காக எவ்வளவோ மெனக்கெட்டும் பயனில்லை. பாலாசிங்கை ‘டிப்டாப்’ என்னும் பட்டப்பெயரில் அறிமுகப்படுத்துகிறார்கள். அது எதற்கு என்பது விளங்கவேயில்லை. அவருக்கும் அவர் மகனாகிய கதாநாயகனுக்குமான உரையாடல்கள்கூட அமையவில்லை. முதலாளியைப் பார்த்து இரண்டு முறை ‘நல்லாயிருக்கீங்களா?’ என்று கேட்பதுதான் அவர் வேலை. அஜயன்பாலா பாத்திரத்தில் தொழிற்சங்கத் தலைவருக்குரிய ஈர்க்கும் ஆற்றலோ ஆக்ரோஷமோ துளியும் இல்லை. மேலும் அவருக்குப் பாவனைகள் அற்ற முகம். பஞ்சாலை வேலையையே நம்பிப் பைத்தியமாகிவிடும் பெண் பாத்திரமும் வெகுசாதாரணமாக இருக்கிறது. முந்நூறு பேருக்கு மாற்றுவழி இருந்தபோது அந்தப் பெண்ணுக்கு எப்படி இல்லாமல் போயிற்று? பாத்திரங்களுக்கான தனித்தன்மைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. எல்லாம் அறிமுக நிலையிலேயே முடிந்து போகின்றன. சுவாரசியத்திற்கான களம் இருந்தும் அப்படி அமையாமல் போனதற்கு இதுவே காரணம்.

குறைந்த செலவினத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அதைத் தீர்மானிப்பது இயக்குநரின் பார்வையும் தெளிவும்தான். தர்க்கக் குறைபாடு அற்றதாகவும் படத்திற்கான மையம் பற்றிய தெளிவு கொண்டதாகவும் திரைக்கதையை உருவாக்க இயக்குநர் இன்னும் எவ்வளவோ கவனம் எடுத்திருக்க வேண்டும். அது இல்லாததால் இது தோல்வி முயற்சியாக முடிந்துவிட்டது. ‘படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’ என்று இயக்குநர் செல்பேசியில் என்னிடம் கேட்டிருந்தார். ஆனால் படம் முடிந்தவுடன் அவருடன் பேச எனக்கு ஒன்றும் இருக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அவரே என்னை அழைத்தார். எடுத்துப் பேசத் தயக்கமாக இருந்தது. ’உங்களுடையது தோல்வி முயற்சி’ என்று அவரிடம் சொல்ல நினைத்திருந்ததைக் காரணங்களோடு இதில் விளக்க முயன்றிருக்கிறேன்.