தாமஸ் வந்தார்!

You are currently viewing தாமஸ் வந்தார்!

தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (செல்லமாக ‘டாம்’) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர். தாய்வழிப் பூர்விகம் ஜப்பான். தந்தை வழி நெதர்லாந்து. டாம் அமெரிக்கக் குடிமகன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவப் பருவத்தில் தமிழ் கற்கக் கிடைத்த நிதிநல்கை ஒன்றின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டாண்டுகள் தங்கினார். பிறகு அவ்வப்போது எனக் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் தங்கியுள்ளார். அவர் தேர்வு செய்தது மதுரை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வலையப்பட்டி என்னும் ஊர். அக்கிராமத்தில் தங்கி மக்களோடு பழகிப் பேச்சுத் தமிழைக் கற்றுக்கொண்டார். விவசாய வேலைகளையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

மதுரை சௌராஷ்டிரா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இராமகோடி அவர்களிடம் எழுத்துத் தமிழைக் கற்றுப் பழந்தமிழ் இலக்கியப் பாடம் முறையாகக் கேட்டுள்ளார். சங்க இலக்கியம் தொடங்கி பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல புலமையும் பயிற்சியும் பெற்றுள்ளார். பல செய்யுள்களை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் கொண்டவர். வலையப்பட்டியில் அவர் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டைச் சேர்ந்த குடும்பம் தங்கள் பிள்ளைகளில் ஒருவராகக் கருதும் அளவு அன்புப் பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்தால் அங்கேதான் தங்குகிறார். அது அவரது சொந்த ஊர் ஆகிவிட்டது. அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, பங்காளிகள், மாமன்கள் என்று ஊரே உறவு சொல்லி அழைக்கும்படி உறவினர் ஆகிவிட்டனர்.

மாதொருபாகன்  உள்ளிட்ட என் நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்பாளரும் அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான அனிருத்தன் வாசுதேவன் வழியாக எனக்கு அறிமுகம் ஆனார். 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தபோது என்னைச் சந்திக்க விரும்பி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  அப்போது குடும்ப வேலைகளில் முசுவாக இருந்ததால் அவரை நாமக்கல் வரவழைக்கத் தயங்கினேன். எனினும் ஒருமணி நேரம் உங்களோடு உரையாட நேரம் கிடைத்தால் போதும் என்று சொன்னார். நாமக்கல் வந்து ஒருவிடுதியில் தங்கினார். இருவரும் மதிய உணவு உண்டோம். வெகுநாள் பழகியவர் போல நட்பானார்.

தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை வழங்கினார். திருக்குறள், ஔவையார் உள்ளிட்டோர் பற்றியும் பழந்தமிழ் இலக்கியம் குறித்தும் உரையாடினோம். அமெரிக்கா சென்ற பிறகு ஒருமுறை தொடர்பு கொண்டார். தாம் நடத்தும் திருக்குறள் வகுப்பு ஒன்றின் இறுதிநாளில் மாணவர்களுக்காகச் சிற்றுரை வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். தனிப்பாடல்கள் குறித்து நான் எழுதிய ‘வான்குருவியின் கூடு’ நூலை வாசித்திருக்கிறார். என் வாழ்வனுபவத்தையும் தனிப்பாடலையும் இணைத்து எழுதியிருந்த விதம் அவருக்குப் பிடித்திருந்தது. அதேபோலச் சில குறள்களை எடுத்துக்கொண்டு அனுபவத்தோடு இயைத்துப் பேசும்படி கேட்டார். மூன்று குறள்களை எடுத்துப் பேசினேன். அதைக் கேட்டவர் ‘வான்குருவியின் கூடு போலத் திருக்குறளைக் கொண்டு ஒருநூல் எழுதுங்கள்’ என்றார். எழுதலாம், நேரம் அமையட்டும் என்று சொன்னேன். வான்குருவியின் கூடு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

இவ்வாண்டு சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்கு வரும்படி அரசு அழைத்ததால் ஒருமாதம் தங்கும்படி வந்திருக்கிறார். அந்நிகழ்வில் முதலமைச்சர் கையால் ‘பண்டைத் தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது’ பெற்றார். இப்போதும் என்னைச் சந்திக்க நாமக்கல் வருவதாகச் சொன்னார். ஓரிரவு தங்கும்படி ஏற்பாடு செய்து அழைத்தேன். பிப்ரவரி 4 அன்று வந்து 5 மாலை கிளம்பினார். ‘வெள்ளை மொழி’ ரேவதியும் டாமுக்கு அறிமுகம். ரேவதியின் வீட்டுக்குச் சென்று தேநீர் அருந்தியபடி கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஒருவாரம் தங்கினால் கொல்லிமலைக்குச் சென்று வரலாம் என்று ரேவதி அழைப்பு விடுத்தார். அடுத்தமுறை அப்படித் திட்டம் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். நடக்க வேண்டும்.

ஓரிரவும் ஒருபகலும் நாமக்கல்லில் எங்கள் வீட்டில் தங்கினார். உணவு, இருப்பிடம் எதுவும் தனக்கெனச் சிறப்பாகத் தேவையில்லை என்றும் உங்களுக்கு எதுவோ அதுவே எனக்கும் இருந்தால் போதும் என்றும் சொன்னார். வேட்டி நன்றாகக் கட்டுகிறார்; லுங்கியைத்தான் இரவுடையாகப் பயன்படுத்துகிறார். சோற்றுக்கு நன்றாகப் பழகியிருக்கிறார். அவருடன் கழிந்த அன்றைய இரவு எதிர்பாராத வகையில் ‘களிப்பு’ மிகுந்ததாக அமைந்தது. சில நண்பர்களும் வந்திருந்து சிறப்பித்தனர். ஔவையாரின் ‘சிறிய கள் பெறினே எமக்கீயு மன்னே’ பாடல் பற்றியும் திருக்குறளின் ‘கள்ளுண்ணாமை’ அதிகாரம் பற்றியும் பேசினோம். அவரது மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றிப் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

தாமஸ் வந்தார்!

மறுநாள் நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சிறப்புரை ஆற்றும் அழைப்பு வந்தது. என் மனைவி எழிலரசி மூலம் டாமின் வருகை தெரிந்ததும் கல்லூரி முதல்வர் இராஜா, தமிழ்த்துறைத் தலைவர் கந்தசாமி, நுண்கலை மன்றப் பொறுப்பாசிரியர் சந்திரசேகர் ஆகியோர் உடனடியாக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர்.வேட்டியும் கையில் மஞ்சள் பையுமாகச் சென்ற டாமுக்கு இசை முழங்க வரவேற்பளித்தனர். திருக்குறள் குறித்துப் பாடி உரையாற்றியும் மாணவர்களோடு உரையாடியும் மனம் கவர்ந்து திரும்பினார். நான் எதிர்பார்க்காத வகையில் அமைந்த நல்ல நிகழ்ச்சி.

நம் நாட்டைச் சேர்ந்த ஓராயிரம் பேர், ஒருலட்சம் பேர், கோடிப் பேர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினாலும் வியப்படைய நமக்கு ஒன்றுமில்லை; வெள்ளைக்காரர்களுக்கும் ஒன்றுமில்லை. ஆனால் வெளிநாட்டுக்காரர் ஒருவர் தமிழில் சரளமாகப் பேசினால் நமக்கெல்லாம் அதிசயமாகத்தான் இருக்கிறது. கல்லூரியில் ஆசிரியர்களும் மாணவர்களும் அப்படித்தான் பார்த்திருக்கிறார்கள். மொழிகளின் நிலை பற்றி யோசிக்கவும் பேசவும் இப்படி எவ்வளவோ இருக்கின்றன.

தமிழ் மொழியைத் தமிழ்நாட்டில் தங்கிச் சரளமாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்ட டாம், பழந்தமிழ் இலக்கியத்தில் பெற்றிருக்கும் புலமை வியக்கச் செய்கிறது. ஔவையார் பாடல்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இடைக்கால ஔவையார் பாடல்கள் முழுவதையும் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவற்றை வெளியிடும்போது ‘வான்குருவியின் கூடு’ நூலையும் மொழிபெயர்த்து வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுவதாகவும் அதற்கு முயல்வதாகவும் சொன்னார். முயற்சி திருவினை ஆகட்டும்.

தமிழ்நாடு அரசு அவருக்கு மதிப்பளித்திருக்கக் காரணம் திருக்குறள் மொழிபெயர்ப்பு. எத்தனையோ மொழிபெயர்ப்புகள் திருக்குறளுக்கு வந்திருக்கின்றன. டாமின் மொழிபெயர்ப்புக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. குறள் வெண்பாவுக்கு நெருக்கமான ஒரு வடிவத்தை ஆங்கிலத்தில் முயன்றிருக்கிறார். மொழிபெயர்ப்பும் இரண்டடிதான். முதலடியில் கூடுதல் சொற்கள். அடுத்த அடியில் அதைவிடக் குறைந்த சொற்கள். எதுகை, மோனை, இயைபு ஆகிய தொடை நயங்களையும் ஆங்காங்கே கொண்டு வரப் பார்த்திருக்கிறார். குறளுக்குச் செப்பலோசைச் சந்தம் அமைந்திருப்பது போல ஆங்கிலத்திலும் சந்தம் அமைந்திருக்கிறது.

மொழிபெயர்ப்பை மதிப்பிடும் அளவு நான் ஆங்கிலப் புலமை கொண்டவன் அல்ல. திருக்குறளோடு நெருக்கம் இருப்பதால் மொழிபெயர்ப்பைச் சுவைக்க முடிகிறது. காமத்துப் பாலின் முதற்குறள் காட்சி, ஐயம், தெளிவு என்னும் அகத்திணைக் கூறுகள் மூன்றையும் கொண்டது.  மூன்று வினாக்களும் வரும். அதை இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்:

Is she a siren a rare peacock a woman in jewels –

My heart quakes.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

குறள் வடிவத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். மூன்று கேள்விகளும் வந்திருக்கின்றன. மாலும் என்பதை quake என்று சொல்லலாம். பொருத்தம்தான். இதுபோலச் செறிவான வடிவம் கொண்ட மொழிபெயர்ப்பு. எளிய ஆங்கிலச் சொற்கள். தமிழ் சார்ந்து அவருக்கு நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. பொருளீட்டுதல் பற்றி அக்கறை இல்லாதவர். சுதந்திரம், மகிழ்ச்சி இரண்டையும் பெற்றிருந்தால் போதும் என்னும் மனோபாவம் கொண்டவர். குறைவான வருமானத்தில் வாழும் வகை தெரிந்திருக்கிறார். தம் வாழ்நாளைத் தமிழுக்குத் தந்திருக்கும் டாம் வாழ்க!

தாமஸ் வந்தார்!

—–  09-02-25

Latest comments (3)

சி வடிவேல்

தாமஸ் ஹிட்டோஷி அவர்கள் மதுரையில் தங்கிப் படித்தது குறித்து எப்போதோ நான் படித்த செய்தி தங்கள்மூலம் நினைவுக்கு வருகிறது.
அவரது தமிழ்ப்பற்றை அறியும்போது உள்ளபடியே பெருமகிழ்ச்சி. இருபத்தைந்து ஆண்டுகளாகக் அவர் கொண்டுள்ள தமிழ்ப்பற்றுக்கும் பணிக்கும் தமிழ்நாடு அரசின் விருதும் பாராட்டும் மிகப்பொருத்தம். வாழ்த்துகள் ‘டாம்’ ஐயா. ஓங்குக தமிழ்ப்புகழ்.

தாமஸ் வந்தார் என்றவுடன் க.நா.சு வின் நாவல் குறித்து எழுதியிருப்பதாக நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது தமிழ் எழுத்துகள் மீதும், தமிழ் எழுத்தாளர்கள் மீதும் இவ்வளவு பற்றுடைய வெளிநாட்டவரென்று அருமை. மொழிபெயர்ப்பின் மூலம் நம் தமிழை உலகறியச் செய்ய நினைக்கும் இவர் தாமஸ்தான் என்பது. தாமஸ் வந்தார் நாவலில் ஊருக்கு நன்மை செய்ய இயேசுவை போல ஒருவர் வந்து நன்மை செய்தார் என்று வரும். இங்கு பேசப்பட்டிருக்கும் டாம் எனப்படும் தாமஸ் அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து எனும் பல நாடுகளுக்கு உரியவராக இருப்பினும் பழந்தமிழ் இலக்கியம், திருக்குறள், ஔவையார் பாடல்கள், ஐயாவின் வான்குருவியின் கூடு மீது ஆர்வத்துடன் இருந்து மொழிபெயர்க்க முயற்சித்து இருப்பது வரவேற்க தக்கது. அருமை வாழ்க டாம்…