தயக்கமின்றி நடந்த உரையாடல்

You are currently viewing தயக்கமின்றி நடந்த உரையாடல்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 6 அன்று ‘வாடிவாசல் – சித்திரக்கதை’ நூல் வெளியீடு முடிந்ததும் கண்ணன், சலபதி, அப்புபன் ஆகியோருடன் இரவு விருந்து உண்டு முடித்து அங்கிருந்து திருச்சி ரயிலைப் பிடித்தேன். ஜனவரி 7, 8 ஆகிய இருநாட்கள் திருச்சியில் தங்கல். தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து ‘பெருமாள்முருகன் படைப்புலகம்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தன. அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பர் க.காசிமாரியப்பன், அ. செல்வராசு ஆகியோர் ஏற்பாடு. கடந்த ஆண்டு இமையம் குறித்துக் கருத்தரங்கம் நடத்தினர். என் படைப்புகளுக்கு நடத்த வேண்டும் என்றும் நான் வந்து உடனிருக்க வேண்டும் என்றும் இரண்டு ஆண்டுகளாகக் காசிமாரியப்பன் கேட்டுக் கொண்டிருந்தார். பிற பயணங்களால் நேரம் ஒதுக்குவது கடினமாக இருந்தது. அவர் சொன்ன நாட்கள் எனக்கு ஒத்து வரவில்லை. ஆகவே தள்ளிப் போய் இந்த ஆண்டு நடந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் காசிமாரியப்பன் என் நண்பர். தமிழாசிரியராக இருந்தபோதும் நவீன இலக்கிய வாசிப்பு கொண்டவர். கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். என் படைப்புகளின் கரட்டு வடிவத்தை நம்பி அவரிடம் கொடுப்பதுண்டு. தம் கருத்துக்களை ஒளிவுமறைவு இல்லாமல் சொல்வார். அவரது அவதானம் ஊக்கம் தரும். அவரை நம்பி இரண்டு நாட்கள் செலவழிக்கலாம். கட்டுரை வாசிக்க இருந்தவர்களில் பெரும்பான்மை முனைவர் பட்ட ஆய்வாளர்கள். அதே கல்லூரியிலும் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், ஜமால் முகமது கல்லூரி, எஸ். ஆர்.எம். கல்லூரி முதலியவற்றில் பயில்பவர்கள். ஆசிரியராகப் பணியாற்றும் சிலரும் இருந்தனர்.

தயக்கமின்றி நடந்த உரையாடல்

தமிழில் முனைவர் பட்ட ஆய்வு செய்வோர் குறித்து எனக்கு அவ்வளவாக நல்லபிப்ராயம் இல்லை. என் வழிகாட்டுதலில் பதினெட்டுப் பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அவற்றில் இருபத்தைந்து விழுக்காடு மட்டுமே தரமான ஆய்வு என்று சொல்வேன். பாதியளவு புதிய தரவுகளைத் திரட்டிக் கொடுத்தவை என்னும் அளவில் ‘பரவாயில்லை’ ரகம். இன்னொரு இருபத்தைந்து விழுக்காடு ‘சுமார்.’ ஆய்வு செய்ய இவர் தகுதியானவர் என்று சில பரிசோதனைகள் மூலம் முடிவு செய்துதான் சேர்த்துக் கொள்வேன். எனினும் வாழ்க்கைச் சூழல் காரணமாக அவர்களால் தீவிரமாக ஆய்வில் ஈடுபட இயலாமல் போய்விடும். முதல் தலைமுறையாக உயர்கல்விக்கு வரும் மாணவர்கள் பொருளாதார ரீதியாக நிலை பெறுவது சிரமம். நிலைபெற்றதும் குடும்பப் பிரச்சினைகள் முன்வந்து நிற்கும். அறிவுத்துறையில் ஒருவர் ஆழ்ந்து செயல்படுவதற்கு எதிரி நம் குடும்ப அமைப்புத்தான். பிறகு ஆய்வில் மூழ்குவது எப்படி? எப்படியாயினும் என் மாணவர்கள் நல்லவர்கள் என்பதைச் சொல்லிவிட்டு மேலே தொடர்கிறேன்.

முனைவர் பட்ட ஆய்வாளர்கள் வாசிக்கும் கட்டுரைகள் அத்தனை தரமாக இருக்காது; நூலில் இது இருக்கிறது, அது இருக்கிறது என்று தொகுத்துப் பட்டியல் தருவார்கள். அதை உட்கார்ந்து கேட்பது நேர விரயம் என்பதுதான் என் அனுபவத்தில் விளைந்த எண்ணம். ஆனால் அனைவரையும் ஒருங்கிணைத்த காசிமாரியப்பனின் முயற்சி எனக்கு நம்பிக்கை தந்தது. ஆகவே இரண்டு நாட்களைச் செலவழிக்கத் தயாரானேன். என் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்து முனைவர் பட்ட ஆய்வாளர்களைப் பற்றிய என் மனப்பதிவைக் கருத்தரங்கம் மாற்றியது.

விமர்சனம் அல்லது ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என எனக்குச் சில கருத்துக்கள் உண்டு.  இலக்கிய நுட்பங்களை ஆய்வு வெளிக்கொண்டு வர வேண்டும், அதை மதிப்பிட்டுச் சில முடிவுகளை முன்வைக்க வேண்டும். அதற்குச் சில கோட்பாடுகளை ஆய்வாளர்கள் கைக்கொள்ளலாம். கோட்பாடுகளைச் சூத்திரமாக்கிச் செயற்கையாகப் பொருத்தும் கடிவாளப் பார்வை கூடாது. படைப்பு பல தளங்களில் ஊடாடக் கூடியது. அதற்கு ஏற்ற வகையில் கோட்பாடும் ஊடாடி எல்லாப் பரப்பையும் காண்பதாக அமைய வேண்டும். தாராளமாகக் குறைகளை எடுத்துச் சொல்லலாம்.

கருத்தரங்கில் பங்கேற்ற பெரும்பான்மையான ஆய்வாளர்கள் என் எண்ணத்தை நிறைவேற்றினர். நூல்களை ஆழ்ந்து வாசித்திருந்தனர். ஒருநூலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர் எனது பிற நூல்களையும் வாசித்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதோ ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்னும் முனைப்பு இருந்தது. கல்லூரிகளில் பேசப் போகும்போது ஆசிரியரோ மாணவரோ அறிமுக உரையாற்றுவார். பீக்கதைகள், கெட்ட வார்த்தை பேசுவோம் ஆகிய நூல்களின் பெயரைக்கூட உச்சரிக்க மாட்டார்கள். இப்போது ‘மயிர்தான் பிரச்சினையா?’ நூலைக் குறிப்பிட ‘மறந்து’ விடுகிறார்கள்.

ஆனால் முதல் கட்டுரையே ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ நூலைப் பற்றிப் பேசியது. பீக்கதைகளைப் பற்றியும் ஒருகட்டுரை. பொதுத்தளத்தில் வரவேற்பு பெறாத ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ நூல் பற்றி ஒருகட்டுரை. உடலரசியல், வெளி, பெண்ணியம் எனக் கோட்பாட்டுப் பார்வையைப் பயன்படுத்திப் படைப்பு நுட்பங்களைக் கட்டுரைகள் வெளிப்படுத்தின. என் மூன்று நாவல்களில் வரும் திருமணங்கள் ஒரே காலகட்டத்தில் நடப்பன என்று ஒரு அவதானிப்பு. நான் எழுதிய கீர்த்தனைகள் பற்றி ஒரு கட்டுரை. வெளிநாடுகளில் இருந்து நால்வர் உரை. தலைமை தாங்கிய பேராசிரியர்களும் என் படைப்புகளை வாசித்திருந்தனர் அல்லது தயாரித்து வந்திருந்தனர்.

தயக்கமின்றி நடந்த உரையாடல்

காசிமாரியப்பன் இலக்கியத்தில் மட்டுமல்ல, மரம் வளர்ப்பிலும் ஈடுபாடு மிக்கவர். முதல் நாள் மாலை மரங்களுக்கிடையே போய் வட்டமாக அமர்ந்து ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்த்துறைத் தலைவரும் கல்லூரி முதல்வருமான பேராசிரியர் வாசுதேவன் பகல் நேர விருந்தளித்துப் பெருமை பெற்றார். ஆய்வாளர்கள் கலைச்செல்வன், விக்னேஷ், திருமூர்த்தி ஆகியோருடன் இரவு விருந்து கொண்டாட்டமாக அமைந்தது. எங்கள் உடனிருந்து உரையாடலில் பங்கேற்ற நண்பர் திருச்சி கேசவன் பிறந்த நாளை இரவு பன்னிரண்டு மணிக்குக் கேக் வெட்டிக் கொண்டாடினோம்.

தயக்கமின்றி நடந்த உரையாடல்

மறுநாள் கருத்தரங்கும் சிறப்புற அமைந்தது. இருநாட்களில் பதினெட்டுக் கட்டுரைகள். சிலருக்கு நேரம் போதவில்லை. சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. கிடைத்த நேரத்தில் சிலரால் சுருக்கிச் சொல்ல முடியவில்லை. சிலசமயம் அமர்வுத் தலைவர்கள் நேரத்தை எடுத்துக் கொண்டனர். எல்லாம் இருப்பதுதான். கட்டுரைகளின் சாரத்தை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இறுதியாக ஏற்புரை, உரையாடல் என எனக்கு ஒருமணி நேரம் வழங்கினர். பேசியதைத் தனிக் கட்டுரையாக எழுத வேண்டும். மாணவர்கள் பல கேள்விகள் கேட்டனர். ஒரு கல்வி நிறுவனத்திற்குள் தயக்கமின்றி மாணவர்கள் உரையாட வெளி அமைவது பெரிது. எல்லாவற்றிலும் அதுதான் எனக்குப் பெருமகிழ்ச்சி கொடுத்த விஷயம்.

கருத்தரங்கு தொடர்பான செய்திகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு புலனக் குழுவைக் காசிமாரியப்பன் உருவாக்கியிருந்தார். கருத்தரங்கு முடிந்த பின்னும் அது தொடர்கிறது. வாசித்த கட்டுரைகளை அதில் வெளியிட்டு அனைவரது கருத்துக்களையும் கேட்டுச் செழுமை செய்து நூலாக்கும் எண்ணம். உழைத்துக் கட்டுரை எழுதிய இளைஞர்கள் இந்த உரையாடலிலும் அருமையாகப் பங்களிப்பு செய்கிறார்கள். இன்னும் சில மாதத்தில் நூல் உருவாகிவிடும். பலரது உழைப்பை உள்வாங்கிய கருத்தரங்கம் காற்றோடு போய்விடாமல் பதிவாவது முக்கியமானது.

—–   22-01-25

Latest comments (3)

பல வருடங்களாக முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மீது உங்களுக்கிருந்த மனோநிலையை உடைக்க ‘பெருமாள்முருகன் படைப்புலகம்’ என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்த காசிமாரியப்பன் ஐயாவுக்கு நன்றிகள் கூற கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் தங்களின் படைப்புலகம் குறித்த ஆய்வு விரிவடைய வேண்டும். இன்னும் பல ஆய்வாளர்கள் தங்களின் படைப்பின் தரத்தை வெளிப்படுத்த வேண்டும்

வீ.பெருமாள்

“கோட்பாடுகளைச் சூத்திரமாக்கிச் செயற்கையாகப் பொருத்தும் கடிவாளப் பார்வை கூடாது. படைப்பு பல தளங்களில் ஊடாடக் கூடியது. அதற்கு ஏற்ற வகையில் கோட்பாடும் ஊடாடி எல்லாப் பரப்பையும் காண்பதாக அமைய வேண்டும்”. நன்றிங்கய்யா.