தமிழ்ப் புலமை மரபின் கடைசிக்கண்ணியாக விளங்கியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். உ.வே.சாமிநாதையர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் மூலம் நிலைபெற்றிருக்கும் இவர் தல புராணங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் பலவும் இவர் இயற்றியவை. கிட்டத்தட்ட நூறாயிரம் செய்யுள்களை இவர் இயற்றியிருக்கக் கூடும் என்று சொல்வர். கிடைப்பவை இருபத்திரண்டு புராணங்கள்; ஆறு காப்பியங்கள்; நாற்பத்தைந்து சிற்றிலக்கியங்கள் என உ.வே.சா. பட்டியல் தருகிறார். கிடைக்காத நூல்கள் பல என்றும் அளவற்ற தனிப்பாடல்களை இயற்றினார் என்றும் உ.வே.சா. கூறுகிறார்.
நான் இளங்கலைத் தமிழிலக்கிய மாணவனாகப் பயின்ற காலத்திலிருந்து புலமையுலகமும் நவீன இலக்கியவாணர்களும் மகாவித்துவானைப் பற்றிச் சொல்லும் பொதுக்கருத்து ஒன்றுண்டு. ‘மகாவித்துவான் புலவர்; படைப்பாளர் அல்ல. லட்சம் செய்யுள்கள் எழுதியிருந்தாலும் ஒன்றுகூடத் தேராது’ என்பதுதான் அது. இதே கருத்தை நானும் பொதுவாக வழிமொழிந்து வந்தேன். அதற்கேற்றாற் போல அவரது நூல் எதுவும் வாசிக்கக் கிடைத்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ‘சேக்கிழார் பிள்ளைத்தமிழ்’ பாடத்தில் இருந்திருக்கிறது. நான் பயின்ற காலத்தில் அது இல்லை. குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அவ்விடத்திற்கு வந்துவிட்டது. மாற்றம் வேண்டுமானால் அவரே இயற்றிய ‘முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்’ இடம்பெறும்.
‘சேக்கிழார் பிள்ளைத்தமிழ்’ நூலிலிருந்து ‘பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று அவரைப் புகழும் அடியை எடுத்துக்காட்டிச் சில இலக்கிய வரலாறுகளில் எழுதியிருப்பர். தேவராஜ முதலியார் பெயரில் வழங்கும் ‘குசேலோபாக்கியானம்’ நூலில் சில பாடல்கள் பள்ளிப் பருவத்திலேயே பாடத்தில் இடம்பெற்றிருந்தன. அவை கிட்டத்தட்டப் பேச்சு வழக்கில் எழுதியது போலவே தோன்றும். இவையிரண்டுக்கும் சில உரைகள் உள்ளன. சேக்கிழார் பிள்ளைத்தமிழுக்கு விரிவான உரைகளே இருக்கின்றன. அவர் எழுதிய பிற நூல்களைக் கண்ணால் பார்க்கவும் முடியவில்லை. உ.வே.சாமிநாதையர் ‘ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு’ என்னும் தலைப்பில் கிட்டத்தட்ட நாற்பது நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். அவை கைக்கு அகப்படவேயில்லை. அவற்றுக்கு உரையில்லை. சந்தி பிரிக்காத செய்யுள் வடிவத்தை வாசித்துப் பழகியவர்களே அவற்றைப் படித்துப் பொருள் கொள்ள முடியும்.
சந்தி பிரித்த செய்யுள் வடிவம் இல்லை. உரையும் இல்லை. அவர் எழுதியவை அனைத்தும் தலபுராணங்களும் சிற்றிலக்கியங்களும்தான். தலபுராணங்களை அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வேண்டுமானால் போற்றலாம். பொதுவில் அவற்றுக்கு மதிப்பில்லை. சிற்றிலக்கிய வகை ஒவ்வொன்றிலும் ஓரிரு நூல்களே இலக்கிய மதிப்பைப் பெற்றுள்ளன. அதே முறையில் எழுதிய பிற நூல்கள் எண்ணிக்கைக்கு மட்டும் உதவுகின்றன. சிற்றிலக்கிய வகை மாறி நவீன இலக்கியம் உருப்பெறும் காலகட்டத்தில் வாழ்ந்தவர் மகாவித்துவான். ஆகவே இலக்கிய மதிப்பு அவர் நூல்களுக்கு உருவாகவில்லை. இச்சூழலில் ‘அவருடையவை எல்லாம் வெற்றுச் செய்யுட்கள்’ என்னும் கருத்துப் பரவிவிட்டது போல.
உ.வே.சாமிநாதையர் தாம் எழுதிய தன்வரலாற்றிலும் மகாவித்துவானின் வாழ்க்கை வரலாற்றிலும் அவரைக் கவிஞர் என்று உயர்த்திக் காட்டப் பெருமுயற்சி செய்திருக்கிறார். அவற்றை எழுதும் முன்னரே ‘வெற்றுச் செய்யுள்’ கருத்து உருவாகிவிட்டதால் உ.வே.சா.வின் முயற்சி பலிக்கவில்லை. குறைந்தபட்சக் கவியுள்ளம் இல்லாமலா இத்தனை பாடல்களை அவர் இயற்றியிருப்பார் என்னும் கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றும். கொஞ்சம் முயன்று அவர் நூல்களில் சிலவற்றைத் தேர்ந்து வாசித்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.
இப்போது அவ்வெண்ணம் வலுப் பெற்றிருக்கிறது. உ.வே.சா.வின் எழுத்துக்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஏதேனும் புதிய சிந்தனை தோன்றுவதுண்டு. சமீபத்தில் ‘ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்’ நூலின் இரண்டாம் பாகத்தை முழுமையாக வாசித்தேன். அதன் இறுதியில் ‘இயல்புகளும் புலமைத் திறனும்’ என்றொரு இயலை எழுதியுள்ளார். அதில் வரும் ஒருபகுதி இது:
‘நல்ல புல்தரைகளையும் சோலைகளையும் ஆற்றின் கரைகளையும் பார்ப்பதில் இவருக்கு மனமகிழ்ச்சி உண்டு. கோடைக்காலத்தில் பிற்பகலிற் சென்று ஆறுகளில் ஊற்றுத் தோண்டி இறைப்பித்துச் சுத்தமான அந்த ஊற்றைப் பார்த்தலிலும் அதில் ஆடையைத் துவைக்கச் செய்தலிலும் துவைத்த ஆடைகளைக் கொய்து ஊற்றின் குறுக்கே போடுவித்து ஊற வைத்தலிலும் இவருக்கு விருப்பம் அதிகம். அந்த ஊற்றுக்களைப் பார்த்துக்கொண்டே வழக்கமாகச் செய்யும் செய்யுட்களை இயற்றுவதுமுண்டு. ஒருமுறை நான்கு ஊற்றுக்களைப் போடுவித்து அவற்றைப் பற்றி நான்கு செய்யுட்கள் இயற்றினர்.
‘வண்டியிற் போவதைவிட நடப்பதில் இவருக்கு விருப்பம் அதிகம். வண்டியிற் பிரயாணம் செய்யும்போது சில சமயங்களில் சில மாணாக்கர்களை வண்டியிலேயே இருக்கச் செய்து தாம் இறங்கிச் சிலருடன் நடந்து வருவார். அப்போது அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவார்’ (ப.266, 267).
‘கவித்திறன்’ என்னும் தலைப்பில் சிறுபகுதி ஒன்றையும் உ.வே.சா. எழுதியுள்ளார். அதில் வரும் முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.
‘பிறப்பிலேயே கவித்துவ சக்தியுடன் பிறந்தவர்.’
‘சொற்களை வருந்தித் தேடி அகராதியையும் நிகண்டுகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு கவி பாடுவதென்பது இவர்பால் ஒருபொழுதும் இல்லை. சுவையற்ற பாடல்களை உண்டாக்கும் உலைக்கூடமாக இவர் மனம் இராமல், வளம்பெற்ற செய்யுட்களின் விளைநிலமாகவே இருந்தது.’
‘ஆயிரக்கணக்கான செய்யுட்களை இயற்றினாலும் இவருக்கு முழுத்திருப்தி உண்டாகவில்லை. இவருடைய நாத்தினவு முற்றும் தீரவேயில்லை.’
‘இவர் பெரும்பாலும் யோசித்துக்கொண்டேயிருக்கும் இயல்புடையவர். பாட வேண்டிய விஷயங்களை ஒருவகையாக மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பு பாட ஆரம்பித்தால் ஒரே மூச்சில் நூற்றுக்கணக்காகப் பாடுவார்.’ (ப.278, 279).
இவ்வாறு மகாவித்துவானின் இயல்புகளையும் கவியாற்றலையும் உ.வே.சா. பலபட விவரித்துள்ளார். அவற்றை வாசிக்கும்போது மகாவித்துவானின் நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் பேரார்வம் தோன்றுகிறது. இப்போது மின்னணுத் தொழில்நுட்பத்தால் புத்தகங்கள் கிடைப்பது எளிதாகி இருக்கிறது. ‘தமிழ் இணையக் கல்விக் கழகம்’ இணையத்தளத்தில் மகாவித்துவானின் முப்பத்தைந்து நூல்கள் பிடிஎப் வடிவில் கிடைக்கின்றன. அவற்றில் ஒரே நூலின் வெவ்வேறு பதிப்புகளும் இருக்கின்றன. எப்படியும் இருபத்தைந்திலிருந்து முப்பது நூல்கள் வரை கிடைக்கின்றன. அவற்றுள் ‘பிரபந்தத் திரட்டும்’ இருக்கிறது. ஆர்வமும் பொறுமையும் இருந்தால் வாசித்துப் பார்க்கலாம். சேக்கிழார் பிள்ளைத்தமிழ், குசேலோபாக்கியானம் ஆகிய நூல்களை முதலில் வாசிக்கத் தொடங்கலாம் என்றிருக்கிறேன்.
(1876, பிப்ரவரி 1 அன்று மகாவித்துவான் சிவபதம் அடைந்தார். இன்று அவரது 149ஆவது நினைவு நாள்.)
—– 01-02-25
மிகவும் அருமை
தினவு என்ற சொல்லைத் திட்டுவதற்காகப் பயன்படுத்திதான் கேட்டிருக்கிறேன். “இவருடைய நாத்தினவு முற்றும் தீரவேயில்லை” என பாராட்டுவதற்கும் பயன்படுத்தலாம் என அறிந்தேன்.
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பெரியார் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அந்நூல் அப்போது கிடைக்காமல் அல்லோலப்பட்டோம். பிறகு உங்களிடமிருத்து எங்கள் துறைத்தலைவர் மகாலட்சுமி, பெற்று வந்தார். அந்நூலை நீங்கள் எவ்வாறு பாதுகாத்து வைத்திருந்தீர்கள் என்றும் கூறினார்.