மீனாட்சிசுந்தர முகில் 2

You are currently viewing மீனாட்சிசுந்தர முகில் 2

பெருஞ்செல்வரான தேவராச பிள்ளைக்குத் தமிழ்க் கல்வியில் ஆர்வம் மிகுதி. செய்யுள் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் இருந்தது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சிறப்பைக் கேள்வியுற்று அவரைப் பெங்களூருக்கு வரவைத்துச் சில மாதங்கள் தங்க வைத்துக் கல்வி கற்றார். தம் மாணவர்களுடன் தேவராச பிள்ளை ஆதரவில் தங்கியிருந்தபோது மகாவித்துவானின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பல. அப்போது குசேலோபாக்கியானம், சூதசங்கிதை ஆகியவற்றைச் செய்யுள் நூலாக இயற்ற முயன்று இயலாமல் துன்பப்பட்ட தேவராச பிள்ளையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மகாவித்துவானே அவ்விரண்டையும் பாடி முடித்தார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பும் காலத்து மகாவித்துவானுக்கு ஐயாயிரம் ரூபாயைச் சன்மானமாகத் தேவராச பிள்ளை வழங்கினார். அது அக்காலத்தில் மிகப் பெருந்தொகை. இன்றைய மதிப்பில் பல லட்சத்தைத் தாண்டக்கூடும். அவ்வளவு பெருந்தொகையைத் தமக்கு வழங்கிய தேவராச பிள்ளையின் அன்பைப் போற்றும் வகையில் அவ்விரண்டு நூல்களும் அவர் பெயராலேயே வழங்கும்படி கொடுத்துவிட்டார். பின்னர் அவை அச்சில் வந்தன. இன்று வரைக்கும் தேவராச பிள்ளை பெயராலேயே வழங்கி வருகின்றன. அந்த நூல்களைத் தேவராச பிள்ளைக்குக் கொடுத்தபோது மகாவித்துவான் கூறியதாக உ.வே.சா. இப்படி எழுதுகிறார்:

‘தமிழ், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு முதலிய பாஷைகளிற் கவிகள் தாம் செய்த நூல்களை இவ்வாறு தங்களை ஆதரித்த பிரபுக்களின் பெயராலே வெளியிடுவது பழைய வழக்கந்தான்’ (மீ.வா.வ., பாகம் 1,  ப.129).

புலவர் தாம் எழுதிய நூலில் புரவலரைப் போற்றுவது மரபு. நூலுக்குத் தம் ஆசிரியரின் பெயரைச் சூட்டுதல், தம்மை ஆதரித்த புரவலரின் பெயரை வைத்தல் ஆகிய மரபும் உண்டு. வெண்பாப் பாட்டியல் அல்லது ‘வச்சணந்தி மாலை’ நூல் சட்டென்று நினைவுக்கு வருகிறது. அந்நூலை எழுதிய குணவீர பண்டிதர் தம் ஆசிரியர் வச்சணந்தி முனிவர் பெயரை நூலுக்குச் சூட்டியதாகச் சொல்வர்.  ஆனால் ஆதரித்த புரவலரே எழுதியதாகக் கொடுத்துவிடும் மரபு இருந்ததா எனத் தெரியவில்லை.

இருநூல்களை மகாவித்துவான் எழுதிய முறையையும் தேவராச பிள்ளைக்குக் கொடுத்ததையும் நாடகக் காட்சி போல உ.வே.சா. விவரித்துள்ளார். இருவரும் மீதும் எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வு அவர் எழுத்தில் தெரிகிறது. தேவராச பிள்ளை தாமே பாடுவதற்கு முயன்றாராம்; அந்த ஆற்றல் அவருக்கு இல்லாமையால் ஊக்கம் தளர்ந்து தேகமும் மெலிந்துவிட்டதாம். அந்தச் செய்தியை வேறு சிலரால் மகாவித்துவான் அறிந்தாராம்.  ‘உங்கள் எண்ணப்படி நான் பாடி முடித்து விடுகிறேன். நீங்கள் கவலையின்றி இருங்கள்’ என்றாராம். அதேபோலத் தேவராச பிள்ளை வியக்கும்படி பாடி முடித்தாராம். செய்யுள் இயற்றும் முறையை மகாவித்துவானிடம் கற்றுக்கொண்டிருந்த தேவராச பிள்ளை அடுத்துச் சூதசங்கிதையைச் செய்யுள் வடிவில் பாட முயன்றாராம். அதுவும் குசேலோபாக்கியானத்தின் கதையாகவே முடிந்ததாம். தாம் பாடிய பாடல்களைக் கிழித்தெறிந்துவிட்டாராம். அதைக் கேள்விப்பட்ட மகாவித்துவான் மீண்டும் அவரிடம் ‘நீங்கள் சிரமப்பட வேண்டாம். அதை நான் பாடி முடித்துவிட்டே ஊருக்குச் செல்வேன்’ என்று சொல்லிப் பாடினாராம்.

ஊருக்குத் திரும்பும்போது தேவராச பிள்ளை ஐயாயிரம் ரூபாய் பணமும் உயர்ந்த ஆடைகளும் வழங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாராம். அதைக் கண்டு நெகிழ்ந்து போன மகாவித்துவான் பிரதியுபகாரமாக இவ்விரு நூல்களையும் கொடுத்து ‘உங்கள் பெயராலேயே இவற்றை அச்சிட்டு வெளியிட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம். அவற்றைப் பெற்றுக்கொள்வதில் தேவராச பிள்ளைக்கு விருப்பமில்லையாம்; அஞ்சினாராம். அருகில் இருந்தவர்கள் வற்புறுத்தியும் வாங்கிக் கொள்ளவில்லையாம். பின் அவர்களே வாங்கி வைத்துக் கொண்டனராம். பிறகு தேவராச பிள்ளையைச் சார்ந்தவர்கள் அவற்றை அச்சிட்டு வெளியிட்டனராம்.

தாம் எழுதிய நூல்கள் மீதுகூடப் பெரிய பற்று ஏதும் அற்றவர் மகாவித்துவான். பேரிலக்கியங்களை எல்லாம் நுணுகிக் கற்றதாலும் அவற்றின் நுட்பங்களை அறிந்ததாலும் இத்தகைய பற்றற்ற தன்மை அவருக்கு வந்திருக்கலாம். தாம் எழுதியவை எனப் பெயர் பொறித்துக்கொள்ளும் ஆசையும் அற்ற மகாமனிதர் அவர்.

மீனாட்சிசுந்தர முகில் 2

தேவராச பிள்ளையிடம் பெற்ற ஐயாயிரம் ரூபாயை மகாவித்துவான் என்ன செய்தார்? உ.வே.சா. சொல்கிறார்:

‘திருசிராமலை, திருவானைக்கா முதலிய ஸ்தலங்களிலுள்ள மூர்த்திகளுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்வித்தும் முன்னமே தாம் வாங்கியிருந்த கடன்களைத் தீர்த்தும் மாணாக்கர்களில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு நன்கொடை யளித்தும் விவாகம் ஆகாதவர்களுக்கு விவாகம் செய்வித்தும் தம்மிடம் இல்லாத ஏட்டுச்சுவடிகளை விலைக்கு வாங்கியும் பங்களூரிலிருந்து தாம் கொணர்ந்த திரவியத்தை மெல்ல மெல்லச் செலவு செய்து விட்டனர்’ (மேற்படி, ப.131).

அபிஷேகம், அர்ச்சனை, நன்கொடை, விவாகம் செய்வித்தல், சுவடிகளை விலைக்கு வாங்குதல் ஆகியவை முன்னும் பின்னும் அமையத் ‘தாம் வாங்கியிருந்த கடன்களைத் தீர்த்தல்’ நடுவில் வரும்படி பார்த்துக் கொண்டுள்ளார். மகாவித்துவான் வருமானம் ஏதுமற்ற ஆசிரியர். அவரிடம் கற்றவர்கள் ஏதும் தட்சிணை கொடுத்தார்களா என்று தெரியவில்லை. ‘கைம்மாறு கருதாமல் கற்பிப்பவர்’ என்றுதான் உ.வே.சா. சொல்கிறார். புரவலர்களையும் திருவாவடுதுறை மடத்தை நம்பியுமே அவர் வாழ்க்கை இருந்துள்ளது. தனி வீடு, தவசிப்பிள்ளை, ஏவலாளர்கள், மாணவர்கள் என ஆட்படையோடுதான் அவர் வாழ்ந்திருக்கிறார். சமயத்தில் செலவைச் சமாளிக்க முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவர் இறந்தபோது மூவாயிரம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது. அத்தொகையைப் பலரிடம் பத்திரம் எழுதிக் கொடுத்து வட்டிக்கு வாங்கியிருந்தார். திருவாவடுதுறை மடத்து வித்துவானாக விளங்கிய அவர் கடன்களைத் தீர்க்காமல் போனார் என்பது மடத்துக்குத்தான் அபவாதமாக முடியும் என்பதால் அவற்றை ஆதினகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் தீர்த்தார். வட்டிக்குக் கொடுத்தவர்களிடம் ‘இவை பிள்ளையவர்களுக்காகக் கொடுக்கப்படுவன. அவர்களிடம் அன்பு வைத்து வட்டியிற் சிறிதாவது முற்றுமாவது முதல் தொகையிற் சில பாகமாவது முற்றுமாவது தள்ளிப் பெற்றுக்கொள்ளலாம். முற்றும் வேண்டுபவர்கள் அவ்வாறே பெற்றுக் கொள்ளலாம்’ என்று தேசிகர் சொன்னார். அவ்விதமே கடனைத் தீர்த்தார். மடத்திலிருந்து கொடுத்த பெருந்தொகைக்கு ஈடாக மகாவித்துவான் சேர்த்து வைத்திருந்த ஏட்டுச்சுவடிகள், புத்தகங்களை மடத்திற்குக் கொடுத்துவிடும்படி செய்தார். இவ்வாறுதான் கடன் தீர்ந்தது.

மகாவித்துவானின் வாழ்வில் கடன் பற்றிப் பல இடங்களில் உ.வே.சா. எழுதியுள்ளார். இந்நிலையில்  ‘பணம் பெற்றுக்கொண்டு தாம் செய்த இருநூல்களைத் தேவராச பிள்ளைக்கு மகாவித்துவான் விற்றுவிட்டார்’ என்று வாசிப்போர் புரிந்துகொள்ளக் கூடும், குறைத்து மதிப்பிட நேரும் என்றஞ்சிப் பெங்களூர் காட்சியை மிக நுட்பமாக, யார் மீதும் குறை நேர்ந்துவிடாத வகையில், மரபான முறையில் சொன்னால் ‘கத்தி மேல் நடப்பது போல்’  உ.வே.சா எழுதியிருக்கிறார்.

மகாவித்துவானின் வாழ்க்கை வரலாற்றின் தொடக்கப் பகுதியில் அவர் பெயரைக் குறிப்பிட்டு எழுத நேர்ந்த ஓரிடத்தில் அடிக்குறிப்பாகப் ‘பிள்ளையவர்களை இவ்வாறு பெயர் குறித்தெழுதுவதற்கு அஞ்சுகின்றேன்’ (ப.9) என்று கூறுகின்றார். நூலில் பெரும்பாலும் பிள்ளையவர்கள் என்றும் அவர், இவர் என்றுமே எழுதிச் செல்வதைக் காணலாம். ஆசிரியர் பெயரைச் சொல்லவும் எழுதவும் அஞ்சிய உ.வே.சா. அவருக்கு அபவாதம் தருவது போன்ற செய்தி ஒன்றை எழுதும்போது எத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் இருந்திருக்கிறார் என்பதற்குப் பெங்களூரு சம்பவம் சான்றாகும்.

பயன்பட்ட நூல்கள்:

  1. உ.வே.சாமிநாதையர், ஸ்ரீமீனாட்சுசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் முதல் பாகம், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1933.
  2. உ.வே.சாமிநாதையர், ஸ்ரீமீனாட்சுசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் இரண்டாம் பாகம், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1934.
  3. உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1950.
  4. க.வ.திருவேங்கடன் (உ.ஆ.), வல்லூர் தேவராச பிள்ளை, குசேலோபாக்கியானம், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903.

—– 07-04-25

Latest comments (3)

Arunachalam Ramasami

தமிழ் இலக்கிய வரலாறு கூறும் இப்பதிவு மிக முக்கியமானது. படிப்பதற்குச் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.

பேராசிரியர் முபெ முத்துசாமி

தனது குருவின் தனக்கு உதவியாய் இருந்தவர்கள் பெயரில் நூல் வெளியிடலாம் என்பது பழைய மரபு என்பது ஒரு புதிய படிப்பினை ஆகும். மிகவும் சிறப்பாக தொகுத்த அய்யா பெ.மு. அவர்களுக்கு நமோ புத்தாயா நமோ தம்மாயா நமோ சங்காயா நல் வாழ்த்துகள் பாராட்டுகள்.

T. LAKSHMAN

உ.வே.சா, மகாவித்வான், தேவராசப்பிள்ளை குறித்த அரிதான தகவல். சிறப்பு.