குதிரை வீரன் பயணம் முதல் இதழைத் தொடர்ந்த இதழ்களில் பழையவர்கள், புதியவர்கள் எனப் பலரும் எழுதினர். குதிரைவீரனின் ஏழு இதழ்களும் யூமாவின் இலக்கியப் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை. ஆப்செட் அச்சு அப்போது அறிமுகமாகிவிட்ட போதும் அது மிகுதியாகச் செலவு பிடிப்பதாக இருந்ததால் கையால் அச்சுக் கோத்து டிரெடில் இயந்திரத்தில்தான் அனைத்து இதழ்களும் அச்சிடப்பட்டன. அதிலேயே விதவிதமான வடிவமைப்புச் சோதனைகளை யூமா செய்து பார்த்தார். கையிலெடுத்தால் அது பத்திரிகையாகத் தெரிய வேண்டும் என்பதால் டபுள் கிரௌன் அளவைத் தேர்வு செய்திருந்தார் என நினைக்கிறேன். ஓர் இதழின் அட்டை போல இன்னொன்று அமைந்திருக்காது. எழுத்து வடிவங்களிலும் வண்ணங்களிலும் அவர் கவனம் செலுத்தினார். குதிரைவீரனின் ஏழு இதழ்களையும் அப்படியே மறுபிரசுரம் செய்தால் யூமாவின் இதழ்ப் பங்களிப்பு வெளிச்சம் பெற்றுத் துலங்கும். இன்றைய தொழில்நுட்பத்தில் அது சாத்தியம்தான். யாரேனும் முன்வர வேண்டும்.
குதிரை வீரனில் நான் பலவற்றை எழுதியுள்ளேன். ‘கீற்று’, ‘அது’ ஆகிய இரு சிறுகதைகள், சில மதிப்புரைகள், கவிதைகள், கட்டுரைகள் எனக் கணிசமாக என் எழுத்துக்குக் குதிரைவீரன் இடம் கொடுத்தது. நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அவ்விதழ் நின்று போவதற்கு முக்கியக் காரணமாயின. சுற்றுச்சூழல் சார்ந்த ‘வலம்புரிச் சங்கம்’ என்னும் அறக்கட்டளையிடம் இருந்து ஒவ்வோர் இதழுக்கும் இரண்டாயிரம் ரூபாய் கிடைத்தது. கவிஞரும் எழுத்தாளருமான அமலன் ஸ்டான்லி அந்த அறக்கட்டளையோடு தொடர்புடையவராக இருந்தார். கமலஹாசனின் ‘மகாநதி’ திரைப்படம் குறித்து மிகையாகப் பாராட்டி ‘இந்திய அறவியலைக் கேள்விக்குள்ளாக்கும் மகாநதி’ என்னும் தலைப்பில் ‘கணையாழி’ இதழில் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். அப்படத்தின் மையக்கருத்து எனக்கு உவப்பாக இல்லை. நகர வாழ்க்கைக்கு எதிராகவும் கிராமத்து வாழ்வைப் போற்றுவதாகவும் இருந்தது. ஆகவே சாருவின் கட்டுரைக்கு எதிர்வினையாகவும் அப்படத்திற்கான விமர்சனமாகவும் ‘மகாநதியின் மூத்திர நாற்றம்’ என்னும் கட்டுரையை ‘மஞ்ஞையன்’ எனப் புனைபெயரில் எழுதினேன். குதிரை வீரனின் இரண்டாம் இதழில் இக்கட்டுரை வெளியாயிற்று.
‘கிராமம் அழகானது; நகரம் சீரழிவானது என்கிற பார்வை யாருடையது? கிராமத்தில் கிடைத்த ‘சாமி’ என்கிற மதிப்பு இல்லாமல் போய், தம் உயர்சாதி அடையாளம் சிதைந்து போனவர்கள் பார்வை; பார்ப்பனியப் பார்வை.’
‘தமிழ் சினிமாவின் அத்தனை தன்மைகளையும் கொண்டிருக்கும் மகாநதி, சமூக வளர்ச்சியில் கரைந்து போய் அடையாளம் சிதைந்து விடாமல் தம்மைத் தனித்துக் காப்பாற்றிக் கொண்டு, தன் உயர்வை நிலைநிறுத்திக் கொள்ள விழையும் பார்ப்பனிய முயற்சியின் வெளிப்பாடே’
என்றெல்லாம் அக்கட்டுரையில் எழுதியிருந்தேன். அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு அக்கட்டுரை பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட கட்டுரையை வெளியிட்டால் பணம் கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தார்கள். அவர்களின் நெருக்குதலுக்கு யூமா இணங்கவில்லை. இதழின் உள்ளடக்கத்தை நான் தான் தீர்மானிப்பேன், அதில் தலையீடு கூடாது என்று யூமா தெரிவித்துவிட்டார். இதழை நிறுத்தினாலும் பரவாயில்லை, இந்தத் தலையீட்டை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று என்னிடமும் சொன்னார். என்னால் இதழ் நின்று போய்விடக் கூடாது என்பதால் ‘இனிமேல் இது மாதிரி கட்டுரைகளைத் தவிர்த்துவிடலாம்’ என்று சொன்னேன். யூமா ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு அமலன் ஸ்டான்லி தலையிட்டு அப்பிரச்சினையைச் சரி செய்து தொடர்ந்து நிதி உதவி கிடைக்கும்படி செய்தார். அடுத்து நான்கு இதழ்கள் பிரச்சினை ஏதுமில்லாமல் வெளியாயின.
ஓரிதழைக் கவிதைச் சிறப்பிதழாகக் கொண்டு வரலாம் என்று யூமா தீர்மானித்து ‘அடுத்த இதழ் கவிதைச் சிறப்பிதழ்’ என மூன்றாம் இதழில் அறிவித்தார். அது சாத்தியமாகவில்லை. வந்திருந்த கவிதைகள் மட்டுமல்லாமல் சிறப்பிதழுக்கெனச் சிலரிடம் கேட்டும் கவிதைகள் வாங்க வேண்டியிருந்தது. ஆகவே ஏழாம் இதழ்தான் கவிதைச் சிறப்பிதழ் ஆனது. இதழ் அச்சகத்தில் தயாராகிக் கொண்டிருந்தது. மெய்ப்புப் பார்க்க நான் சென்ற போதுதான் இரண்டு பக்கங்களுக்கு விஷயம் போதவில்லை என்பது தெரிந்தது. குதிரை வீரனை அச்சிட்டுக் கொடுத்துவிட்டு இன்னொரு வேலையை எடுக்கும் மும்முரத்தில் அச்சகத்தார் இருந்தனர். நாம் தாமதித்தால் அவ்வேலையை எடுத்து முடித்த பிறகே குதிரை வீரனை எடுப்பார்கள் என்னும் நிலை. கிடப்பில் விழுந்தால் இதழ் வெளியாக மேலும் ஒருமாதம் தாமதமாகும்.
அப்போது கணையாழி இதழின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா எழுதி வந்தார். அப்பத்தியில் தமக்குப் பிடித்த கவிதைகளை அறிமுகப்படுத்தினார். அதன் மூலமாகக் கவிஞர்கள் பலருக்குக் கவனம் கிடைத்தது. சுஜாதா கவனப்படுத்தியதில் மயங்கிய சில கவிஞர்கள் இன்றுவரைக்கும் அக்கிறக்கத்தில் இருந்து விடுபட்டு மேலெழ இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கவனம் கிடைத்த சிலர் அதைப் பற்றிக்கொண்டு தம் திறமையாலும் தொடர் இயக்கத்தாலும் தம்மை மேலேற்றிக் கொண்டார்கள். அதற்கு மனுஷ்யபுத்திரன், நா.முத்துக்குமார் ஆகியோர் நல்ல உதாரணம். சுஜாதாவின் பார்வை பட்டுவிடாதா என்னும் ஏக்கம் பல கவிஞர்களுக்கும் அப்போதிருந்தது. தொகுப்பு வெளியிட்டால் நேரில் கொண்டு போயோ அஞ்சலிலோ சுஜாதாவுக்கு அனுப்பி வைப்பதைக் கடமை போலச் செய்தார்கள். அவரைப் ‘பிரும்ம ரிஷி’ என்றெல்லாம் விதந்தோதினார்கள். சுஜாதாவின் கடைக்கண் பார்வைக்குக் கவிஞர்கள் ஏங்கி நிற்கும் அந்தச் சூழல் பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். இரண்டு பக்கத்தை நிரப்ப அது தோதாக இருக்கும் எனத் தோன்றியது.
அச்சகத்திலேயே அமர்ந்து ‘பிரும்ம ரிஷியின் கவிதை ரசனை’ என்றொரு கட்டுரை எழுதி அச்சுக் கோக்கக் கொடுத்தேன். இதழ்ப் பக்கங்கள் நிரம்பின. கட்டுரையின் மெய்ப்புப் பிரதியைக் கொண்டு வந்து யூமாவிடம் கொடுத்தேன். அச்சாகும் முன் அவரும் பார்த்து விட வேண்டும் அல்லவா? ஐந்தாம் இதழ் தொடங்கி ஆசிரியர் குழு என்று எம்.கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜன் ஆகியோரோடு என் பெயரையும் சேர்த்திருந்தார். எனினும் ஆசிரியர் ஒப்புதல் இல்லாமல் ஒன்றை வெளியிடக் கூடாதே. வாசித்து விட்டு ‘நல்ல கட்டுரை’ என்று அவரும் ஒப்புதல் கொடுத்தார். ஆனால் இந்தக் கட்டுரை பற்றியும் அறக்கட்டளை பிரச்சினை எழுப்பினார்கள். கமலஹாசன், சுஜாதா ஆகிய பிரபலங்களை விமர்சித்து எழுதுவதை அவர்கள் விரும்பவில்லை. அதற்குள் சாதிப் பிரச்சினையும் மறைமுகமாக அல்ல, வெளிப்படையாகவே இருந்தது.
இம்முறையும் யூமா உறுதியாக இருந்தார். அறக்கட்டளையும் உறுதியாக இருந்தது. சமாதானம் ஆகவில்லை. பள்ளிச் சிறுவர்கள் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போடும் பிரவுன் நிறத் தாளை அட்டையாகக் கொண்டு வந்த ஏழாம் இதழோடு குதிரை வீரன் பயணம் நின்று போயிற்று. அது எனக்குத் தீராத வருத்தம். யூமாவின் முயற்சியில் இன்னும் சில இதழ்கள் வந்திருக்கலாம். அவருடைய உறுதிப்பாடு காரணமாக உள்ளடக்கம் தொடர்பான சமரசத்திற்கு இணங்கவில்லை. அவர் எத்தனையோ சமாதானங்களைச் சொன்ன போதும் என்னால் இதழ் நின்று போயிற்று என்னும் குற்றவுணர்ச்சி இன்று வரை தீரவில்லை.
—– 17-02-25
யூமா சாருடைய குதிரை வீரனைத்தான் சூறை ஆடிட்டீங்களா? அருமை… இக் கட்டுரை வாசகர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உள்ளதுங்க ஐயா