சூறை! சூறைதான் அது! – 5

You are currently viewing சூறை! சூறைதான் அது! – 5

சிறு சமரசங்களுக்கும் உட்படாத இயல்பு காரணமாக யூமா இழந்த வாய்ப்புகள் பல. சிலவற்றில் அறிந்தோ அறியாமலோ நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன். இரண்டாவது சம்பவம் இது.  ‘தினமணி’ நாளிதழில் கொஞ்ச காலம் அவர் பணியாற்றினார். அது நல்ல வாய்ப்பு. தமிழ் நாளிதழ்களில் நல்ல ஊதியம் வழங்குவதும் தொழிலாளர்களின் சட்டரீதியான உரிமைகளைப் பேணுவதும்  ‘தினமணி’ நிர்வாகம் என்னும் பெயருண்டு. சிறுவர் மணியின் பொறுப்பாசிரியராக யூமா இருந்தார். சிறுவர்களை மையப்படுத்தி அவர் எழுதிய கவிதைகள் பல. மலையாளத்திலிருந்து சிறுவர் இலக்கியம் பலவற்றை மொழிபெயர்த்தும் இருக்கிறார். இப்போது அவரே சிறுவர்களுக்காகக் கதைகளும் எழுதுகிறார். அத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் சிறுவர் மணி வேலையை ஆத்மார்த்தமாகக் கருதிச் செய்தார். அவர் பார்வையில் வெளியான சிறுவர் மணி இதழ்கள் ‘யூமா முத்திரை’  விளங்குபவை. அவற்றின் தொகுப்பு இப்போதும் என்னிடம் இருக்கிறது. சிறுவர் இதழ் ஒன்று எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான சான்றாக அது திகழ்ந்தது. யூமா தான் அதன் பின்னணியில் இருக்கிறார் என்று தெரியாமலே இலக்கிய உலகிலும் அதற்கு வரவேற்பு கிடைத்தது.

என் குழந்தைகளுக்காக நான் எழுதிய சில பாடல்கள் சிறுவர் மணியில் ஏற்கனவே வெளிவந்திருந்தன. யூமா அதன் பொறுப்பாசிரியர் ஆன சில மாதங்களுக்குப் பிறகு ‘முருகன், நீங்க சிறுவர் மணிக்கு எழுதணும்’ என்று கேட்டார். என்ன எழுதலாம் என்பதை அவரே சொன்னார். மலையாளத்தில் வெளியாகும் சிறுவர் இதழ்களில் எழுத்தாளர்களையும் அவர்கள் நூல்களையும் அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் பரவலாக வெளியாகும். அதனால் சிறுவயதிலேயே மலையாளத்தின் முக்கிய எழுத்தாளுமைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்து கொள்வர். வைக்கம் முகமது பஷீர் என்றால் அவருடைய கதை எதையும் படிக்காத வயதிலேயே அவரைப் பற்றிய அறிமுகம் சிறுவர்களுக்குக் கிடைத்துவிடும். தாம் அறிந்த எழுத்தாளர்களைப் பிற்காலத்தில் அவர்கள் தேடிப் படிப்பர். மலையாளக் கலாச்சாரத்தில் எழுத்தாளர்களைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போக்கு இருக்கிறது. தமிழில் அப்படி இல்லை. எனவே தமிழ் எழுத்தாளுமைகளைப் பற்றி ஒருபக்க அளவுக்கு வரும்படி சிறுசிறு கட்டுரைகளைச் சிறுவர் மணியில் வெளியிட எண்ணம் என்று சொன்னார்.  என்னை எழுதித் தரும்படி கேட்டார். ஒத்துக்கொண்டு நானும் எழுதினேன். 

புதுமைப்பித்தன், ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோரைப் பற்றி எழுதிய கட்டுரைகள் வெளியாயின. பெ.தூரனைப் பற்றி எழுதிக் கொடுத்திருந்தேன். எனக்கும் அப்படி எழுதுவது பிடித்திருந்தது. இன்னும் பலரைப் பற்றி எழுதத் திட்டமிட்டு வைத்திருந்தேன். ஆனால் அது தொடரும் முன்னே பிரச்சினை வந்துவிட்டது. யூமாவை அழைத்த தினமணி ஆசிரியர்  ‘சிறுவர் மணியில் எதுக்கு எழுத்தாளர் அறிமுகம் போடுறீங்க? அத யாரு விரும்பிப் படிப்பா? அத நிறுத்தீருங்க’ என்று சொல்லிவிட்டார். யூமா எடுத்துச் சொன்ன தர்க்கங்கள் எதுவும் எடுபடவில்லை. எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி எழுதுவது பிடிக்கவில்லையா நான் எழுதுவது பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. வெகுஜனப் பத்திரிகையாளர்களுக்கு உவப்பான எழுத்தாளனாக என்னால் ஒருபோதும் இருக்க முடிந்ததில்லை. என்னிடம் கேட்டவர்களுக்குப் பெரும்பாலும் எழுதாமல் இருந்ததும் இல்லை. ஏனோ என் எழுத்து அப்பத்திரிகைகளுக்குப் பொருந்தவில்லை போல.

தினமணி ஆசிரியரின் தலையீட்டால் அத்தொடரை நிறுத்த வேண்டியதாயிற்று. யூமாவுக்குப் பெருவருத்தம். அதுவும் அவர் கேட்டதால் நான் எழுதினேன், இப்போது நிறுத்தச் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வருந்தினார். இது பெரிய விஷயமில்லை, விட்டு விடுங்கள் என்று சொன்னேன். ஆனால் யூமாவின் காயம் ஆறவில்லை. அதில் தோன்றிய முரண்பாடு இன்னொரு சம்பவத்தால் பலப்பட்டுப் பெரிதாகி அப்பணியிலிருந்து அவர் விலகி வர நேர்ந்தது. சிறுவர் மணியில் சில பக்கங்களில் விளம்பரம் வெளியாகும். சிறுவர்களுக்கான புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பானவை அவை. விளம்பரப் பகுதியைப் பார்ப்பதற்குத் தனித்துறை இருந்தது. அதற்கும் யூமாவுக்கும் சம்பந்தமில்லை. குறிப்பிட்ட பக்கங்களுக்கான விளம்பரங்களை அவர்கள் வடிவமைப்புப் பிரிவுக்குக் கொடுத்துவிடுவார்கள். 

சூறை! சூறைதான் அது! - 5

ஓரிதழுக்கு ‘வாலிப வயோதிக அன்பர்களுக்கு’ என்னும் பாலியல் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அச்சுக்குப் போகும் கடைசி நேரத்தில் அதைக் கண்ட யூமா ‘சிறுவர் மணியில் பாலியில் விளம்பரமா?’ என்று கேட்டிருக்கிறார். உடன் பணியாற்றியவர்கள் ‘விளம்பரத்திற்கும் நமக்கும் பொறுப்பில்லை. விட்டுவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கடைசி நேரம் என்பதால் ஒன்றும் செய்ய இயலவில்லை.  தினமணி ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் இந்தப் பிரச்சினையை யூமா கொண்டு சென்றிருக்கிறார். விளம்பரப் பிரிவினர் செய்த தவறு எனக் கடுமையாக எடுத்துச் சொன்னதைப் பொறுக்காத ஆசிரியர் ‘நீங்கள்தான் அதைப் பார்த்திருக்க வேண்டும்’ என யூமாவின் மீதே திருப்பிவிட்டார். இருவருக்கும் தொலைபேசியிலேயே பெருத்த வாக்குவாதம். அடுத்த நாள் அலுவலகம் வந்த ஆசிரியர் ‘என்னிடம் அவர் எப்படிக் கடுமையாகப் பேசலாம்? மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வேலையில் தொடரச் சொல்லுங்கள்’ என்றிருக்கிறார். ‘மன்னிப்புக் கடிதம் தர மாட்டேன். ராஜினாமா கடிதம் கொடுக்கிறேன்’ என்று சொல்லி அப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு அலுவலகத்தில் வைத்திருந்த தம் புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.  

அவரது பொருளாதாரக் கஷ்டங்களை நான் அறிவேன். அதை விடவும் தன்மானம் முக்கியம் என்னும் அவரது பிடிவாதமே அப்படி வேலையை விட்டு வெளியேறச் செய்தது. அதற்கு நான் நேரடிக் காரணம் இல்லை என்றாலும் ஆசிரியரோடு முதல் முரண்பாடு தோன்றுவதற்கு என் எழுத்தே காரணம் என்பதால் சஞ்சலமாக இருந்தது. ‘பரவால்ல முருகன். வேற வேல பாத்துக்கலாம்’ என்று சொன்னார் யூமா. 

இதே போல இன்னொன்றும் உண்டு.

—– 18-02-25

Latest comments (1)

உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களுக்கு பணி செய்யும் இடங்களிலும் உயர்வாக நாம் மதிக்கும் ஒருவரிடத்திலும் இது போன்ற சூழல் நிகழ்வது இயல்புதான் தன்மானமும் விடாமுயற்சியும் ஒருவரை உயர்ந்த ஸ்தலத்தில் நிறுத்தும் என்பது நீங்கள் கற்றுத் தந்த பாடம் தான் ஐயா. யூமா சார் இதைவிட உயர்ந்த இடத்தில் இருப்பார் என்பதை எதிர்பார்க்கிறேன். சிறந்த பகிர்வு ஐயா