24/82

You are currently viewing 24/82

 

 

கடந்த (2024) ஏப்ரல் மாதத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. கோழிக்கோட்டில் இருந்து சபில் கிருஷ்ணன். என் அம்மாவைப் பற்றி எழுதிய ‘தோன்றாத் துணை’ நூல் மலையாளத்தில்  ‘அதிருஷ்ய சாநித்யம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் மினிப்ரியா. ஆங்கிலத்தில் இந்நூல் Amma என வெளியாயிற்று. நந்தினியும் கவிதா முரளிதரனும் இணைந்து மொழிபெயர்த்தனர். புனைவல்லாத என் நூல்களில் பிறமொழிகளிலும் பெரிதும் கவனம் பெற்ற நூல் இது. என் அம்மாவைப் பற்றிய நினைவுகளை இருபத்திரண்டு கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன்.  அந்நூலின் மலையாள மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டுத்தான் சபில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

‘உங்களைப் போன்ற குழந்தைப் பருவம் இல்லாததால் பெரும்பாலான எழுத்தாளர்களால் விவசாயிகள், தொழிலாளிகளின் உணர்வுகளைச் சித்திரிக்க முடியவில்லை. நீங்கள்  விவசாய குடும்பத்தில் பிறந்து, சுற்றியுள்ள யதார்த்தமான வாழ்க்கையைப் பற்றி எழுதும் அதிர்ஷ்டம் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் அம்மா எவ்வளவு பெரிய ஆளுமை! அதிலிருந்து நீங்கள் எப்படி விலகியிருக்க முடியும்?’

என்றுதான் அம்மின்னஞ்சல் தொடங்கியது. அவர் மண்வளம் தொடர்பாகப் படித்தவர், ஆய்வு செய்து வருபவர் எனத் தெரிந்தது. வறட்சி பாதித்த தமிழ்நாட்டு கிராமங்கள் சிலவற்றின் மண்வளத்தை மீட்கத் தம் ஆராய்ச்சி மூலம் உதவியவர் என்றும் அறிந்தேன். அறிவியல் ஆராய்ச்சியாளரான அவருக்கு இலக்கிய ஆர்வம் கொஞ்சமல்ல, ஏராளம். தோன்றாத்துணை நூலில் கிராமம், மண், வேளாண்மை தொடர்பாக விரிவாக வருவதால் அவருக்குப் பிடித்திருக்கலாம். பிறகு என் நூல்கள் பலவற்றையும் வாசித்திருக்கிறார். எப்படியோ அவர் மனதில் பதிந்துவிட்டேன்.

எழுத்தாளர்களைச் சந்தித்து நேர்காணல் செய்வதும் ஏதாவது ஒரு மலையாள இதழில் அதை வெளியிடுவதும் அவரது இன்னொரு ஆர்வம். என்னைச் சந்தித்து நேர்காணல் செய்ய வேண்டும் எனவும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். ஞானபீட விருது பெற்ற கொங்கணி மொழி எழுத்தாளர் தாமோதர் மௌசோவை அவர் வீட்டுக்கே சென்று எடுத்த நேர்காணல் பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். தம் நேரத்தை இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்கவும் பேசவும் செலவிடுவதில் பெரிதும் இன்பம் காண்பவர். இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும் பெரிய நூலகம் ஒன்றை உருவாக்கும் கனவையும் தமக்குள் வைத்திருக்கிறார். அப்பேர்ப்பட்டவர் என் ஊருக்கு வந்து நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறார். பெரிய விஷயம் அல்லவா?

மே மாதம் 8ஆம் தேதி சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தேன். அவர் மட்டும் ரயிலிலோ பேருந்திலோ வருவார் என நினைத்திருந்தேன். அன்று விடிகாலை புறப்பட்டுப் பத்து மணிவாக்கில் நாமக்கல்லுக்குக் குடும்பத்தோடு காரில் வந்து இறங்கினார். கூடவே அவர் நண்பர் ஒருவரும் அவர் மகளும். அப்படி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எப்படி அவர்களைக் கவனிப்பது என்றே புரியவில்லை. அவர் மனைவியும் மகனும் வந்திருந்தனர். எல்லோரும் சாப்பிட்டார்களா இல்லையா, கழிப்பறை செல்வதற்காவது இடையில் நிறுத்தினார்களா என்றும் தெரியவில்லை. முகத்தில் தெரிந்த களைப்பை உணர்ந்து என் மனைவி அவர்களைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

24/82

‘என்ன இப்படிக் குடும்பத்தோடு வந்துவிட்டீர்கள்?’ என்றேன். குடும்பமும் எழுத்தாளர்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அவர்களுக்கும் ஆர்வம் உண்டு என்றும் சொன்னார். எல்லோரும் என்னுடன் ஆவலாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினோம். என் நாவல்களின் களம் பற்றி நிறையக் கேட்டார். அவருக்கிருந்த மண் ஆர்வம் கேள்விகளில் வெளிப்பட்டது. ஒவ்வொருவரும் நாவலை வாசிக்கும்போது அவரவருக்கு ஏற்ற கோணம் கிடைப்பதைக் கவனித்திருக்கிறேன். இவர் மண்ணின் கோணத்தில் இருந்து அணுகுகிறார்.

குறிப்பாகக்  ‘கூளமாதாரி’யை அக்கோணத்தில் நோக்கிக் கேள்விகள் கேட்டார். ‘கூளமாதாரி’ நாவல் மலையாளத்தில்  ‘கீழாளன்’ என வெளியாகியுள்ளது. அதில் மேட்டுக்காட்டையே ஒரு பாத்திரமாக்கி இருக்கிறேன். ஆகவே நிலம் உயிர்ப்புடன் அதில் பதிவாகியிருக்கும். விவரணைகள் மூலமாகவும் பாத்திரங்களுக்கும் மண்ணுக்கும் இருக்கும் உறவை விவரித்தும் நிலத்தைக் கட்டியெழுப்ப முயன்றிருக்கிறேன்.  அதை எத்தனை பேர் உணர்வார்கள் என்று ஐயப்பட்டதுண்டு. விவரணைக்குள் நுழைந்து செல்ல முடியாமல் பின்வாங்கியவர்கள் பலர். நுழைந்து இண்டுஇடுக்குகளிலும் புகுந்து பயணம் செய்தோரும் பலர். சபில் இரண்டாம் ரகம். அவரிடமிருந்து வந்த கேள்விகள் அதை உணர்த்தி  உற்சாகம் கொள்ள வைத்தன.

எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டார். என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஓர் எழுத்தாளரைச் சந்திக்கக் கேரளத்தில் இருந்து இப்படி வந்தது ஆச்சரியமாக இருந்தது. எந்த நிறுவன உதவியும் இல்லை. தன் சொந்தப் பணத்தைச் செலவழித்துத்தான் வந்திருந்தார். குடும்பத்தோடு வந்ததால் சில வழிகாட்டுதல் கொடுத்தேன். நாமக்கல்லில் பார்ப்பதற்கு மூன்று கோவில்களும் ஒரு மலைக்கோட்டையும் உள்ளன. வரலாற்றுப் புகழ் பெற்றவை. அவற்றின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி ‘நானும் உடன் வருகிறேன்’ என்றேன். வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று விடைபெற்றனர். கோயில்களுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டுத் தான் திரும்பிச் சென்றனர்.

நேர்காணலை எழுதி முடித்து ஏதாவது இதழில் வெளியிடக் கேட்க வேண்டும். முக்கியமான இதழில் வெளியிட முடியும் என்னும் நம்பிக்கை அவருக்கு இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு ‘தேசாபிமானி’ வார இதழ் நேர்காணலை வெளியிட ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தார். எனக்கான சிறப்பிதழாக வெளியிட அவர்கள் முயல்வதாகவும் சிறுகதை ஒன்றை அனுப்பும்படியும் கேட்டார். ‘அகழ்’ மின்னிதழில் (31 ஜனவரி 2024) ‘உழைப்பு வேணுமில்ல தோழர்?’ என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். மார்க்சிய அமைப்பு ஒன்றில் முழுநேரமாகச் செயல்பட்ட தோழர் ஒருவரைப் பற்றிய கதை. அது வெளியான பிறகு சில திருத்தம் செய்து ‘சுடா’ எனப் பெயரிட்டு அடுத்த தொகுப்பில் சேர்ப்பதற்காக வைத்திருந்தேன். அக்கதையை அனுப்பி வைத்தேன்.

மினிப்ரியா அதை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் நன்றாகப் பேசவும் வாசிக்கவும் தெரிந்தவர் அவர். கதையில் வரும் வட்டாரச் சொற்கள் சிலவற்றைப் பற்றிக் கேட்டுத் தெளிந்து மொழிபெயர்த்தார். மார்க்சியர்கள் மீது உள்ளார்ந்து மென்மையான விமர்சனம் ஒன்று கதையில் இருக்கிறது. தேசாபிமானி கேரளத்து சிபிஎம் கட்சியுடைய வார இதழ். பல லட்சம் பேர் வாசிக்கும் இதழ். கதையை வெளியிடுவார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எந்தத் தடையும் இல்லை.  8 செப்டம்பர் 2024 நாளிட்ட ‘தேசாபிமானி’  இதழில் கதையும் நேர்காணல் கட்டுரையும் வெளியாயின.

24/82

கதைக்குச் ‘சுடா’ என்றே மலையாளத்திலும் தலைப்பு. இதழில் பத்துப் பக்கத்தை எடுத்துக் கொண்டிருந்தது. மிகப் பொருத்தமான ஓவியங்கள். நாய், வெள்ளாடு ஆகியவையும் தோழர் பி.எம்.மும் அற்புதமாகச் சித்திரமாகியிருந்தனர். அவற்றைப் படைத்தவர் ‘ஷினோஜ் சோரன்’ என்னும் ஓவியர். வண்ணத்தில் வந்திருந்த ஓவியங்கள் பலமுறை பார்க்கத் தூண்டின. இதழில் கதை வெளியாவதில் இதுதான் லாபம். பிரமாதமான ஓவியத்தோடு கதையைப் பார்க்கும் போது மகுடம் வைத்தது போன்ற உணர்வு வந்துசேரும்.

கதையை அடுத்து நேர்காணல் கட்டுரை பதினான்கு பக்கம். அதில் ஏராளமான புகைப்படங்கள். தோன்றாத்துணை பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் என்பதால் நானும் அம்மாவும் இருக்கும் புகைப்படத்தைக் கேட்டு வாங்கிப் போட்டிருந்தனர். நூலின் முன்னுரைக்கு ‘அம்மாவின் இதயத்தால் சுவாசிக்கிறேன்’ என்று தலைப்பு. அதையே நேர்காணலுக்கும் தலைப்பாக்கியிருந்தார் சபில். என்னிடம் வாங்கியவை, இணையத்தில் எடுத்தவை எனப் பல புகைப்படங்கள்.

பெரியார், அம்பேத்கார், காந்தி ஆகியோரைப் பற்றி என்ன சொன்னேன் என்று எனக்கு நினைவில்லை. அவர்கள் படங்கள் இருந்தன. கேசவதேவ், ஓ.வி.விஜயன், கே.ஆர்.மீரா, பென்யாமின் என மலையாள எழுத்தாளர்களின் படங்கள். சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். அனோஜன் பாலகிருஷ்ணனையும் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பேன் போல. அவர் படமும் இருந்தது. என் புத்தகங்களின் படங்கள் சிலவும் இடம்பெற்றிருந்தன. ஈர்க்கும் வடிவமைப்பு.

எண்பத்திரண்டு பக்கம் கொண்ட இதழில் எனக்குக் கொடுத்த இடம் இருபத்து நான்கு. கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு. கதைக்கும் நேர்காணலுக்கும் வாசகரிடமிருந்து நல்ல எதிர்வினைகள் வந்தன என்று அறிந்தேன். கதைக்குச் சில மதிப்புரைகளும் வெளியாயினவாம். மினிப்ரியாவுக்கும் சபிலுக்கும் மிகுந்த சந்தோசம். சபிலின் குடும்பத்தோடு எடுத்திருந்த புகைப்படத்தைக் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஒரு நூலை வாசித்து அதன் ஈர்ப்பால் இப்படி ஒரு சிறப்பிதழை வரச் செய்தவர் அவரல்லவா? அவரிடம் கேட்டேன். அந்தப் புகைப்படத்தைக் கொடுக்க அவருக்குக் கூச்சமாக இருந்திருக்கிறது. நற்செயல் புரிவோர் பலர் இப்படித்தான் தங்களை மறைத்துக் கொள்கிறார்கள்.

சபில் வாழ்க!

—–   05-11-24.

Latest comments (4)

Ponmanai Valsakumar

வணக்கம்.
அருமையான தேசாபிமானி பதிவு.மலையாளம் வாசகர்கள் மதிக்கும் எழுத்தாளராக தாங்கள் உயர்ந்த நிலையில் உள்ளீர்கள்.
நன்றி.
அன்புடன்,
பொன்மனை வல்சகுமார்

சபில் சார் உண்மையான தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள். எந்த எழுத்தாளரும் உங்களைப் போல் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்ததில்லை. படைப்பாளிக்கு அனைத்து குணநலன்களையும் பெற்றவர். சிறப்பான பதிவு ஐயா.