பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் ‘Book with kitchen’ என்னும் ‘BRAC’ புத்தக உணவகம் அளித்த நிதியுதவியில் என் அமர்வு நடந்தது. மாலை ஆறரை மணி நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். இந்தத் திரைப்பட விழாவுக்கு இருபத்து நான்கு ஆண்டுகளாக செல்வாஜியா (Selvaggia) என்னும் ஒருவரே பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். அவர் எங்களை உற்சாகமாக வரவேற்றார். ‘பூக்குழி’ நாவலின் இத்தாலி மொழிபெயர்ப்பை மையமாகக் கொண்ட அமர்வு. கிட்டத்தட்ட நூறு பேர் அரங்கில் குழுமியிருந்தனர். இத்தாலியின் புகழ் பெற்ற பத்திரிகையாளர் மௌரோ டொன்செல்லி (Mauro Donzelli) என்னிடம் உரையாடினார்.
அவர் இத்தாலியும் ஆங்கிலமும் கலந்து பேசினார். என்னிடம் கேள்வி கேட்கும்போது ஆங்கிலம். நான் தமிழில் பதில் சொன்னேன். கண்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வந்திருப்போர் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது. அங்கே பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரைக்கும் இத்தாலி மொழி வழியாகவே நடைபெறுகிறது. ஆங்கிலத்திற்கும் இத்தாலிக்கும் வரிவடிவம் ஒரே மாதிரிதான் என்றாலும் மொழிகள் வேறுவேறு. கடைகளிலோ பிற இடங்களிலோ ஆங்கிலத்தில் பேசினால் புரியாமல் இன்னொருவரை அழைத்துக் கேட்கச் சொல்வதைக் கண்டோம்.
அமர்வில் நான் தமிழில் பேச அதைக் கண்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உள்ளிருந்து யாரோ ஒருவர் ஆங்கிலத்திலிருந்து இத்தாலியில் மொழிபெயர்த்தார். இத்தாலி மொழிபெயர்ப்பு அனைவருக்கும் கேட்காது. கேட்க விரும்பும் பார்வையாளர்கள் தம் இருக்கையில் இணைத்திருக்கும் செவிவாங்கியை எடுத்துக் காதில் பொருத்திக் கொண்டால் போதும். இன்று தொழில்நுட்பம் பெருகியிருப்பதால் மொழிபெயர்ப்பு இப்படி எளிதாகப் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
2018இல் ஜெர்மனி, பெர்லின் நகரில் நடைபெற்ற ‘இலக்கியத் திருவிழா’ ஒன்றிற்குச் சென்றேன். அங்கும் தமிழில் தான் பேசினேன். நடைமுறைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவு ஆங்கிலம் பேச முடியும். அதுவும் கண்ணன், ஆ.இரா.வேங்கடாசலபதி, கவிதா முரளிதரன் ஆகிய நண்பர்கள் உடனிருந்தால் அந்தத் தேவையும் இல்லை. அவர்களே அவற்றை எல்லாம் பார்த்துக் கொள்வார்கள். ‘ஒயின் ஒருகோப்பை உள்ளே போன பிறகு முருகன் ஆங்கிலம் பேசுவார்’ என்று கண்ணன் கேலி செய்வதுண்டு. ‘பேச்சுப் பேச்சென்னும் கிளி பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும்’ நிலைதான்.
தமிழில் தான் பேச முடியும் என்பதில் எனக்கு ஒருபோதும் சங்கடம் நேர்ந்ததில்லை. தென்கொரியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளில் அவர்கள் மொழிக்குத்தான் முன்னுரிமை. கல்வி மொழியாக எல்லா நிலையிலும் தாய்மொழிதான். தமக்கு ஆங்கிலம் தெரியாது என்பதில் அவர்களுக்கு எந்தத் தாழ்வுணர்ச்சியும் இல்லை. ஆங்கிலம் தேவைப்படுவோர் மட்டும் கற்றுக் கொள்வர். தென்கொரியாவுக்குப் போய்த் திரும்பிய போது நண்பர்களிடம் சொன்னேன், ‘கொரியர்களை விடவும் எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது.’ இன்னொரு சாதகமும் இருக்கிறது. இப்போது உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். அவர்களில் யாராவது உடனிருந்து உதவுவார்கள். தமிழ் கற்றுக்கொண்ட அயல்நாட்டவர்கள் என்னிடம் தமிழிலேயே பேசுவதற்கும் முயல்வார்கள்.
ஜெர்மனி இலக்கிய விழாவில் அங்கு வசிக்கும் தமிழர், எழுத்தாளர் பிரசாந்தி சேகரம் என் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவருக்கு ஜெர்மன் மொழியும் தெரியும். தேவைப்படும்போது அதையும் பயன்படுத்தினார். வேறு சில அமர்வுகளுக்குச் சென்றபோது செவிவாங்கி வழி மொழிபெயர்ப்பை அங்கேதான் முதலில் கண்டேன். வேறு நாடுகளிலிருந்து வரும் கருத்தாளர்கள் தம் மொழியிலோ ஆங்கிலத்திலோ பேசுவர். செவிவாங்கியைக் காதில் வைத்துக்கொண்டால் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நம்மை வந்தடையும்.
பிரான்சில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் இன்னொரு அனுபவம் கிடைத்தது. அங்கு நடந்த அமர்வில் இந்தி எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்றவருமான கீதாஞ்சலிஸ்ரீ பங்கேற்றார். நானும் இன்னும் சிலரும் அதில் இருந்தோம். நான் தமிழில் பேசினேன். என் பேச்சை நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சில் மொழிபெயர்த்தார். கீதாஞ்சலி ஆங்கிலத்தில் பேசினார். அதை ஒருவர் பிரெஞ்சு மொழியில் பெயர்த்தார். தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலத்தில் பேசினாலும் பிரெஞ்சில் மொழிபெயர்த்தாக வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இத்தகைய மொழிபெயர்ப்புகள் சாத்தியமாகின்றன. மொழி சார்ந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இப்படி வழிமுறைகள் வந்துவிட்டன.
எனக்கான அமர்வு இத்தாலியில் மொழிபெயர்ப்பாகியுள்ள ‘பூக்குழி’ நாவலை முன்வைத்து நடைபெற்றது. அதை ஒருங்கிணைத்து என்னிடம் கேள்விகள் கேட்ட பத்திரிகையாளர் நூலை ஆழ்ந்து வாசித்து வந்திருந்தார். நூலைப் பற்றிச் சிறந்த அறிமுகம் கொடுத்தார். என்னிடம் கேட்ட கேள்விகளும் வழக்கமானவையாக இல்லாமல் வாசிப்பினூடாக அவதானித்தவற்றைக் கொண்டு உருவாக்கியவையாக இருந்தன. நிலம், பெண் பாத்திரங்கள், உணவு, மொழி ஆகியவை பற்றிய அவரது கவனம் நிறைவளித்தது. எழுத்தாளரை மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் மனதில் வைத்துத் தயாரிப்புடன் வந்திருந்தார்.
இத்தகைய விழாக்களில் போதுமான தயாரிப்பு இல்லாமல் பொதுவான கேள்விகளைக் கேட்டு ஏற்கனவே சொன்ன பதிலையே மீண்டும் மீண்டும் சொல்லும்படி எனக்கு நேர்ந்திருக்கிறது. அதாவது படைப்புக்குள் சிறிதும் நுழையாமலே கேள்வி கேட்கும் உத்திகளைத் தெரிந்து வைத்திருப்போர் பலர். அதிலும் பத்திரிகையாளர்கள் என்றால் அதில் தேர்ந்தவர்கள். நேர்காணல் என்றால் எல்லா எழுத்தாளர்களிடமும் கேட்பதற்கு ஏற்ற வகையில் பத்துக் கேள்விகள் வைத்திருப்பார்கள். அவற்றைச் சலிப்பே இல்லாமல் கேட்பார்கள். பதில் சொல்லும் நமக்குத்தான் சலிப்பு வரும்.
சிலர்தான் நல்ல தயாரிப்போடு வருவார்கள். Mint இதழில் என்னைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுவதற்காக நேரில் வந்து ஒருநாள் முழுவதும் உடனிருந்து உரையாடிய எலிசபெத் குருவில்லா சட்டென்று நினைவுக்கு வருகிறார். ஆங்கிலத்தில் வெளியான என் நாவல்களை எல்லாம் ஊன்றி வாசித்து அவை பற்றிய குறிப்புகள் எடுத்து அவற்றிலிருந்து கேள்விகளை உருவாக்கிக் கொண்டு மிகுந்த தயாரிப்போடு வந்திருந்தார். அவரோடு உரையாடியது உற்சாகம் கொடுத்தது. அப்படி அரிதாகவே அமையும். இத்தாலிப் பத்திரிகையாளருடன் உரையாடியதும் அப்படித்தான் அமைந்தது. அமர்வு முடிவில் அவரது தயாரிப்பையும் கேள்விகளையும் பாராட்டிச் சில சொற்கள் கூறினேன்.
நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்கள் சிலரோடு உரையாட முடிந்தது. சட்டென்று ‘ஐயா வணக்கம்’ என்றொரு குரல் கேட்டது. தம்மை ‘மதன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் இளைஞர். கிறித்தவப் பின்னணி கொண்ட குடும்பம். இத்தாலியிலேயே பிறந்து வளர்ந்தவர். இத்தாலி மொழி வழியாகக் கற்றவர். இப்போது சோலார் தொடர்பான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். வீட்டில் தமிழ் பேசுவதால் அவராலும் பேச முடிகிறது. ‘இத்தாலியில் ஒரு தமிழ் எழுத்தாளர் பேசுகிறார் என்பதை அறிந்து வந்தேன்’ என்றார். ‘பூக்குழி’யின் இத்தாலி மொழிபெயர்ப்பு நூலை வாங்கிக் கையொப்பம் பெற்றுக் கொண்டார்.
உடோபியா பதிப்பக உரிமையாளர் ஜெரார்டோ மசுச்சியோ (Gerardo Masuccio), மிலான் நகரிலிருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவருடன் இரவு உணவுக்கு மீண்டும் ‘BRAC’ சென்றோம். பாஸ்தா வகை உணவுகள். உடன் ஒயின். இத்தாலியில் புகழ் பெற்ற ஒயின் வகை ஒன்றையே தேர்வு செய்தோம். பூனாச்சி இரண்டாம் பதிப்பு வெளியாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அதைக் கொண்டாடும் விருந்தாக அதை ஆக்கிக் கொண்டோம். பூனாச்சியை வாசித்த தாக்கத்தால் இத்தாலி எழுத்தாளர் ஒருவர் அணிலை மையமாக வைத்து நாவல் ஒன்று எழுதியிருக்கிறாராம். பூக்குழிக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார். தமிழிலிருந்து நேரடியாக இத்தாலிக்கு மொழிபெயர்ப்பான முதல் நூல் பூனாச்சி தான் போல. இன்னும் நான்கு நாவல்களை அடுத்தடுத்து வெளியிடுவதில் உற்சாகம் காட்டினார். அவரும் கண்ணனும் மொழிபெயர்ப்புகள் சார்ந்து விரிவாகப் பேசிக் கொண்டனர். அச்சந்திப்பு கண்ணனுக்கு நிறைவளித்தது.
உடோபியா பதிப்பகம் இருப்பதும் அவர் வசிப்பதும் மிலான் நகரம். ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்ததால் முதலில் கிளம்பிவிட்டார். நானும் கண்ணனும் மெதுவாக உண்டு முடித்துப் புறப்பட்டோம். பழமைச் சாயல் படிந்த புளோரன்ஸ் நகரத்துக் குறுகிய தெருக்களினூடாகக் கைவீசி நடந்தோம். வானில் நேராக நிறுத்தி வைத்தது போன்ற வடிவில் நிலாவைப் பார்க்க முடிந்தது.
—– 02-02-25
சிறப்பு ஐயா.
Book with kitchen அருமையான நிகழ்வு.
நம்ம ஊரில் kitchen பெண்களோடும் சீரியல் கதைகளோடும் நிரம்பி வழிகிறது.
எப்பவாவது கொஞ்சம் சினிமாப் பாடல்கள்..
இந்த கலந்துரையாடல்
தொழில்நுட்ப வளர்ச்சியை தங்கள் அனுபவத்தோடு பகிர்ந்தது எளிமை.
நன்றி