அப்போது எழுத்துக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய்க் கிட்டத்தட்டப் பத்து மாதம் ஆகியிருந்தது. சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஆசிரியனாக மட்டும் என்னை இருத்திக்கொள்ள முயன்ற காலம் அது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக ஓர் அழைப்பு. ஆராய்ச்சி மாணவர்கள் ‘RAWCON’ என்னும் அமைப்பாக இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் மூன்று நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு. பங்கேற்பதில் பெரிதாக எனக்கு ஆர்வம் வரவில்லை. அப்பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் மாணவர்கள் சிலர் வழியாகவும் என்னிடம் பேசினார்கள்.
பொதுநிகழ்வுகள் எதிலும் பங்கேற்க மட்டுமல்லாமல் பார்வையாளனாகச் செல்லவும்கூட ஆர்வமின்றிக் கல்லூரி, வகுப்பறை, வீடு என வட்டத்தைச் சுருக்கிக்கொண்டிருந்தேன். இந்நிலையில் இந்த அழைப்பைப் பற்றி நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டேன். என்னை எவ்விதமாவது பொதுவெளிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவர்கள் இந்த மாநாட்டில் என்னைப் பங்கேற்கச் சொல்லி ஆலோசனை கூறினர். எழுத்தாளனாகச் செயல்படா விட்டாலும் கல்வியாளனாகச் செயல்படலாமே என்பது அவர்கள் வாதம். என் மூச்சுக்காற்றையே திரும்பத் திரும்பச் சுவாசித்து அலுத்திருந்த காரணத்தால் கொஞ்சம் வெளியுலகக் காற்று எனக்கும் தேவைப்பட்டது. அந்த அழைப்புக்குச் சில நிபந்தனைகளின் பேரில் ஒப்புதல் கொடுத்தேன்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் ஆகியவை தவிரப் பிற மாநிலப் பல்கலைக்கழகம் எதற்கும் நான் சென்றதில்லை. தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் சென்றிருக்கிறேன். கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறேன். அரசு கல்லூரி ஒன்றிற்கும் பல்கலைக்கழகத்திற்குமான வேறுபாட்டைப் பெரிதாக உணர்ந்ததில்லை. ஆகவே என் மனதில் இருந்த தமிழகப் பல்கலைக்கழகம் பற்றிய சித்திரத்தோடே ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன்.
2015, செப்டம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் அம்மாநாடு நடைபெற்றது. மூன்று நாட்களுமே அங்கே தங்கியிருந்தேன். என் மனதில் இருந்த பல்கலைக்கழகம் அல்ல அது என்பதை முதல்நாளே உணர்ந்தேன். அப்பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி, தலித், வலதுசாரி எனப் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பதாகைகள், போராட்டங்கள் ஆகியவற்றைக் கண்டேன். ஐந்து மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அதை எதிர்த்துப் போராட்டமும் பேச்சு வார்த்தைகளும் நடைபெறுவதாகவும் அறிந்தேன். விடுதி மாணவர்களின் கூட்டம், ஆலோசனைகள், துணைவேந்தருடன் பேச்சு வார்த்தை எனப் பல செய்திகளைப் பரவலாகப் பேசிக்கொண்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே இருந்த ஆசிரியர் குடியிருப்பில் ஒரு பிரச்சினை. பேராசிரியர் ஒருவரது வீட்டுக்குள் அத்துமீறிக் காவல்துறை நுழைந்திருக்கிறது. அதை எதிர்த்து ஆசிரியர் அமைப்புகள் ஒருபுறம் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தன.
நான் நினைத்திருந்தமைக்கு மாறாக அங்கே நான் பரவலாக அறியப்பட்டிருந்தேன். என் வருகை குறித்த பரபரப்பும் நிலவியது. பல தரப்பினர் என்னைச் சந்திக்க வந்தனர். வெவ்வேறு மாநில மாணவர்களும் ஆவலாக வந்து பேசினர். என் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பலர் வாசித்திருந்தனர். ஒருநாள் இரவில் உணவுக்குப் பிறகு தமிழ் மாணவர் சந்திப்பு ஒன்றுக்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்தார். அதில் பங்கேற்றேன். பல்கலைக்கழகத் தேர்வாணையராக இருந்தவர் ஆவணப் பதிவு ஒன்றிற்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்கி நான் பேச வேண்டும் என்றார். அதற்கும் ஒத்துழைத்தேன். பல்கலைக்கழகத்திற்கு வெளியிலிருந்து என்னைச் சந்திக்க வந்தோர் பலர். மேலும் மாணவர், ஆசிரியர் அமைப்புகளின் போராட்டக் களங்களில் சிற்றுரை வழங்க வேண்டும் என அழைப்புகள் வந்தன. அதற்கு மட்டும் நான் இணங்கவில்லை. மாநாட்டில் என் சிறப்புரையின்போது அரங்கு கொள்ளாத கூட்டம். பலர் நின்றுகொண்டு கேட்டனர். உரையின் முடிவில் உரையாடல் நிகழ்வும் நடந்தது. சில வினாக்களை நான் தவிர்த்தேன். யாரும் என்னை வற்புறுத்தவில்லை. அனைவருமே என் மனநிலையை முழுமையாகப் புரிந்துகொண்டு என்னை அணுகினர்; நடத்தினர்.
என்னை இத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் என்பதும் என் நாவல் பிரச்சினை பற்றிய புரிதல் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஆச்சர்யம் தந்த விஷயங்கள். அப்போதே அப்பல்கலைக்கழகம் கொதிநிலையில்தான் இருந்திருக்கிறது. அரசியல் விழிப்புணர்வுடன் இயங்கும் மாணவர்களையும் பேராசிரியர்களையும் கண்டேனே தவிர அங்கிருந்த கொதிநிலையை நான் உணரவில்லை. நான் மட்டுமல்ல, அங்கே இருந்தவர்களே அதை உணர்ந்திருந்தார்களா என்பது சந்தேகம்தான். தொடர்ந்து அங்கிருந்து வந்த செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன். முடிவாக 2016 ஜனவரி மாதம் 17ஆம் நாள் ரோஹித் வெமுலாவின் தற்கொலைச் செய்தி. நான் அங்கே போயிருந்தபோது விடுதியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஐந்து மாணவர்களில் ரோஹித்தும் ஒருவர் என்பது தெரிந்தது.
கொதிநிலையை யாரும் தணிக்கவில்லை. கொதிப்பில் ஓர் உயிர் வெளியே வழிந்துவிட்டது. அதன்பின் கொதி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளடங்கி எல்லாம் வற்றிவிட்டது; அல்லது வற்றிவிடும். வாய்ப்பிருப்போர் கொதிநீரில் கொஞ்சம் மொண்டு தங்களை நனைத்துக்கொள்வார்கள். பருகி ஆசுவாசம் அடைவார்கள். ஆளுக்கொரு கோப்பை மொண்டால் சீக்கிரம் பாத்திரம் காலியாகிவிடும். நீருக்கு எப்போதும் இந்த நிலைதான். ஆனால் எரியும் விறகு மட்டும் அணையவே இல்லை. அது அணைவது போலத் தோன்றும். சிறுகாற்று ஊதலில் பற்றி எரியும். எல்லாவற்றையும் ஆவியாக்கிய பிறகு இந்த மடத்தீ என்ன செய்யும்? உயிரற்ற மயானத்தில் கனன்று எரிந்து யாருக்கு என்ன பயன் தரும்? ரோஹித் வெமுலாவின் முகத்தில் என் மகனைக் கண்டேன். அவன் எழுதி வைத்திருந்த கடித வாசகங்களில் வெளிப்பட்ட அறிவின் கூர்மை என்னைத் தீய்த்தது. அதைப் பயன்கொள்ளாத இவ்வுலகம் எனக்குப் பிடிக்கவில்லை. இது போன்ற பிடிக்காத மனநிலைதான் ரோஹித்தையும் செலுத்தியிருக்கக் கூடுமோ?
இழப்பு தரும் பெரும்சோர்வுக்கு ஆளானேன். அப்பல்கலைக்கழக நண்பர்கள் பலருடன் பின்னர் பேசியபோது அனைவரையுமே சோர்வும் சலிப்பும் ஆட்கொண்டிருப்பதை உணர முடிந்தது. ரோஹித் தற்கொலை விவகாரம் தேசிய அளவில் பெரிதாக உருவெடுத்தது, ஊடகங்களில் பேசப்பட்டது, பல்வேறு கதைகள், திரிபுகள் என எவ்வளவோ வந்தன. எல்லாம் இருக்கட்டும். என் ஆதங்கம் எல்லாம் ரோஹித் உயிருக்கு என்ன பதில் என்பதுதான். அந்த உயிருக்குரிய வாழ்வதற்கான உரிமையைப் பறித்தவர்கள் நாம் எல்லாரும்தானே? உயிரைப் பறிக்கும் அளவுக்கு அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சினை? எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சுமுகமாகப் பேசித் தீர்த்து, விட்டுக்கொடுத்து இணக்கமாக வாழ்வதைத் தடுக்கும் சக்தி எது? வாழ்க்கை பற்றி ஏராளமான கனவுகளோடும் ஆசைகளோடும் இருந்த உயிர் இந்த உலகைப் புறக்கணித்துப் போனதன் துயரை என்னால் தாங்க இயலவில்லை.
இரண்டு கவிதைகள் எழுதி என் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொண்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்? கவிதைகள்:
சரியான வழி
தற்கொலைதான்
நமக்குச் சரியான வழி
உங்கள் அதிகாரத்தை
உங்கள் அகம்பாவத்தை
உங்கள் வெறியை
உங்கள் அன்பை
உங்கள் கரிசனத்தை
உங்கள் இரக்கத்தை
உங்கள் ஆதிக்கத்தை
உங்கள் கீழ்மையை
உங்கள் திமிரை
உங்கள் கருணையை
உங்கள் தயவை
உங்கள் பிச்சையை
புறக்கணிக்கிறோம்
உதாசீனப்படுத்துகிறோம்
எதிர்க்கிறோம்
என்பதை உணர்த்த
நமக்குச் சரியான வழி
தற்கொலைதான்.
பெருந்தன்மை
அவன் எழுதியிருந்த கடைசி வாசகங்கள்:
‘யார்மீதும் புகாரில்லை
ஒருவரையும் குற்றம் கூறவில்லை
என் சாவுக்கு எவரும் காரணமல்ல’
எல்லாவற்றையும்
ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை
நமக்குத்தான் இல்லை.
இயற்கையில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இங்கே வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. அதை யார் பறித்தாலும் எது பறித்தாலும் குற்றம்தான். வாழ்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதும் ஏற்படும் பிரச்சினைகளைப் போக்குவதும்தான் உயரிய உயிராகிய மனிதரின் கடமை. ஆனால் ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்? மதம், சாதி, இனம், மொழி, நிறம் என எத்தனையோ பெயர்களால் மற்றவர்களை ஆக்கிரமிப்பதும் பிறர் மீது அதிகாரம் செலுத்துவதும் எதனால்? ஓர் உயிருக்குப் பிறப்பின் வழி சுமத்தப்படும் அடையாளங்களை ஒருபோதும் துறக்கவே இயலாதா? அடையாளம் சுமத்துவதை நிறுத்தவே மாட்டார்களா? உயிரைவிட அடையாளம் முக்கியமா? அடையாளத்தைச் சொல்லி இழிவுபடுத்தும் காலம் முடியவே முடியாதா? ஆக்கிரமிப்பாளர்களும் அதிகார வெறியர்களும் இவ்வுலகில் சாசுவதமாக வாழப் போகிறவர்களா? எல்லாவற்றையும் பகிர்ந்து, சக மனிதரோடு இணங்கி வாழும் மகிழ்ச்சியை ஏன் அனுபவிக்க மறுக்கிறார்கள்? சக உயிரைத் துன்பத்தில் ஆழ்த்துவதன் வழியாக எதைச் சாதிக்க நினைக்கிறார்கள்? கிடைத்தற்கரிய தேவலோகப் பதவியையா பெற்றுவிடப் போகிறார்கள்? இப்படி எத்தனையோ கேள்விகள் எனக்குள்.
ரோஹித் ஏன் இப்படி முடிவெடுத்தார்? அவருக்குச் சோர்வைக் கொடுத்தது எது? உலகியல் தேவைகளுக்கு அவரால் முகம் கொடுக்க முடியவில்லையா? எதிராளிகளின் வியூகங்களை உடைக்கும் வல்லமை நமக்கு இல்லையே என்னும் கழிவிரக்கமா? ஆதரவு சக்திகளின் போதாமை குறித்த துயரமா? தொடர் போராட்டமும் அலைக்கழிப்பும் ஏற்படுத்திய நிம்மதியின்மையா? இந்த மனிதர்களோடு வாழ்ந்து என்ன கிழிக்கப் போகிறோம் என்னும் வெறுப்பா? இல்லை, தன்னையே தரும் போராட்ட உத்திமுறையா? எதுவானாலும் உயிரிழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து தம் உயிரை விட்ட திலீபனின் நினைவு தோன்றும்போதெல்லாம் எனக்குள் பெரும் அதிர்வு உருவாகும். அவர் உயிர்விடக் காரணமான இருதரப்பையும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒருவர் வாழ வழி சொல்லாமல் சாக வழி சொல்வோரின் பின்னணிக் காரணம் ஏதானாலும் என் மனம் ஒப்புவதில்லை. அதே அதிர்வும் எண்ணங்களும் ரோஹித் விஷயத்திலும் எனக்கேற்பட்டன.
எப்போதோ ஒருகாலத்தில் போர்க்கள உயிரிழப்பு இயல்பானதாகக் கருதப்பட்டிருக்கலாம். இன்றைக்கும் உயிரிழப்பு இயல்பானதுதானா? அப்படியானால் என்ன வகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறோம்? எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம் நாம்? ரோஹித் எதன் அடையாளம் அல்லது குறியீடு? இழப்பின் குறியீடு எனச் சொல்லலாமா? இழப்பினால் நாம் பெற்ற அல்லது பெறப் போகும் உரிமைகளின் குறியீடா? இன்னும் எத்தனை காலம் குறியீடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கப் போகிறோம்?
எல்லாவற்றையும்விட என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அடிப்படையான கேள்வி ஒன்றே ஒன்றுதான். அது: இழப்பதற்கு உயிர் இருக்கிறது; உயிரை இழந்த பிறகு பெறுவதற்கு என்ன இருக்கிறது?
Add your first comment to this post