தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1

You are currently viewing தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1

சமீபமாகத் தமிழ் வழிக் கல்வி தொடர்பான அக்கறை ஒன்றிய அரசுக்குக் கூடியிருக்கிறது. பொறியியல் கல்வியைத் தமிழில் படிக்க ஏற்பாடு செய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் சொன்னார். ஏற்கனவே தமிழில் பொறியியல் படிப்புகள் இருக்கின்றன, விரும்பும் மாணவர்கள் அதைத் தேர்வு செய்து சேர வாய்ப்பிருக்கிறது என்று மாநில அரசிலிருந்து பதில் வந்தது. அதன் பிறகு பொறியியலை விட்டுவிட்டு மருத்துவத்தை மட்டும் பிரதமர் கையிலெடுத்துப் பேசினார்.

‘தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். அத்தகைய கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் எளிதில் மருத்துவம் படிக்க தமிழில் மருத்துவ பாடங்களை ஏற்படுத்த வேண்டும்’ என்று பாம்பன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் குரல் எழுப்பினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ‘உலகின் முதல் மொழியாகிய தமிழ்  இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்று உலகம் முழுக்கச் செல்லும் பிரதமர் பேசுகிறார்’ என்று விதந்து கொண்டாடினார். கூட்டணி அறிவிப்புக்காகச் சென்னை வந்த உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தாம் தமிழ் மீது கொண்டிருக்கும் அக்கறைக்குக் காசிச் சங்கமம், திருக்குறள் மொழிபெயர்ப்பு, செங்கோல் முதலியவற்றைப் பட்டியலிட்டார். அத்துடன் ‘கடந்த மூன்று ஆண்டுகளாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பொறியியல், மருத்துவப் படிப்பைத் தமிழில் வழங்குமாறு கூறி வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது தமிழுக்கு ஆதரவாக இவர்கள் எழுப்பும் குரல்கள் நம்பகத்தன்மை கொண்டவையல்ல. சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் இன்னும் ஓராண்டுக்குத் தமிழ்நாட்டு அரசியலில் மொழி முக்கியப் பங்கு வகிக்கும் போலத் தெரிகிறது. மீண்டும் மீண்டும் பொறியியல், மருத்துவப் படிப்புகளை ஏன் தமிழில் நடத்தவில்லை என்னும் கேள்வி எழுந்து கொண்டேயிருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு மக்களிடம் ஆதரவு இருக்குமா எனத் தெரியவில்லை.  இவற்றுக்குப் பின்னிருக்கும் அரசியல் கணக்குகள் எந்த அளவு பலிக்கும் என்பதும் தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.

அனைத்து உயர்கல்வியையும் தாய்மொழி வழியில் கற்பிக்க வேண்டும் என்னும் கருத்துடையவன் நான். உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. இருநூறு, முந்நூறாண்டு இலக்கிய வரலாறு கொண்ட மொழிகளில்கூட உயர்கல்வி கற்பிக்கிறார்கள். இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றவர் கொரிய மொழி எழுத்தாளர். தென்கொரியாவில் உயர்கல்வியும் கொரிய மொழியில்தான் நடக்கிறது. அம்மொழிக்கு நீண்ட வரலாறு கிடையாது. கல்வியாளர்கள் எப்போதும் தாய்மொழி வழிக் கல்வியையே வலியுறுத்தி வருகிறார்கள். அதுதான் பெரும்பான்மையான நாடுகளில் நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

நம் சூழல் சற்றே வித்தியாசமானது. பிரதமரின் பேச்சுக்கு அரசியல் ரீதியான எதிர்வினைகள் அவ்வளவாக வரவில்லை. அதற்குள் வேறுவேறு பிரச்சினைகள் வந்து இதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. ‘ஆங்கிலத்தில் கற்றதால்தான் தமிழர்கள் உலகம் முழுக்க நல்ல பதவிகளில் இருந்து பணியாற்றுகிறார்கள், அவ்வாய்ப்பை அழித்துத் தமிழர்களை முடக்கச் செய்யும் சதி இது’ என்னும் பொருள்படும் சில பதிவுகளைக் கண்டேன். ஆங்கில வழியில் படிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுவதும் இருமொழிக் கொள்கையால் பெற்ற பயன்களை எடுத்துப் பேசுவதும் அரசியல்ரீதியான பதிலடியாக அமையும். ஆனால் இச்சூழலைத் தாய்மொழி வழிக் கல்விக்கானதாக மாற்றவும் முயலலாம்.

அரசு கலைக்கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளிலும் தமிழ் வழியில் கலை அறிவியல் படிப்புகளை இளநிலையில் பயில்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான பாடநூல்கள் முறையாகத் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1960, 70களில் பல துறைகளுக்கும் மொழிபெயர்ப்பாகவும் நேரடியாக எழுதியும் வெளியிட்ட நூல்கள் இப்போதும் பயன்படுகின்றன. பழைய படிகளை வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் கற்பிப்பதைப் பார்த்திருக்கிறேன். சில நூலகங்களிலும் அவை இருக்கின்றன. நான் பணியாற்றிய அரசு கல்லூரி நூலகங்களில் அவற்றைக் கண்டிருக்கிறேன்.

அவற்றில் பயன்படுத்தியுள்ள சொற்கள் நெடி அடிக்கும் அளவு பழமையாகிவிட்டன. புதிய சொற்கள் பல புழக்கத்திற்கு வந்துள்ளன. எனினும் அவை துறை சார்ந்த அடிப்படை நூல்களாக இருப்பதால் பயனுண்டு. புதியவை எழுதும் வரைக்கும் அவற்றுக்குப் பயன் ம்திப்புண்டு. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அந்நிறுவனம் இப்போது மறுபதிப்பாக்கி உள்ளது. பொதுமக்களுக்கும் அவை விலைக்குக் கிடைக்கின்றன. நிறுவனக் கடையில் நேரடியாக வாங்கலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் விற்பனை நிலையம் அமைக்கிறார்கள். எனினும் அதைப் பற்றிய விழிப்புணர்வு கல்விப் புலத்தில் இல்லை. அதை ஏற்படுத்த அரசும் முயலவில்லை.

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1

 

பாடநூல்கள் முறையாக இல்லை எனினும் எப்படிக் கற்பித்தல் தொய்வில்லாமல் நடக்கிறது? பாடநூல் விற்பனைச் சந்தை மிகப் பெரிது. அதில் ஈடுபடும் பேராசிரியர்களும் பதிப்பகங்களும் மிகுதி. நான் பணியாற்றிய கல்லூரியில் பெண் பேராசிரியர் ஒருவர் முதல்வராக இருந்தார். சென்னையில் பணியாற்றிய அவர் பதவி உயர்வு பெற்று வந்திருந்தார். வணிகவியல் துறைப் பேராசிரியர் அவர். அத்துறை சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்பது நூல்கள் எழுதியிருந்தார். அவர் மகன் ஒருவர் சொந்தப் பதிப்பகம் வைத்து அந்நூல்களை வெளியிடுகிறார். அவருக்கு அதில் வரும் வருமானமே வாழ்வாதாரம். வணிகவியல் படிப்பு தமிழ் வழியில் இதுவரைக்கும் வரவில்லை. ஆங்கில வழியில் பயின்றாலும் தமிழில் தேர்வு எழுதலாம் என்னும் நிலை இருக்கிறது. பல மாணவர்கள் தமிழில்தான் தேர்வு எழுதுகின்றனர். இத்தகையோர் எழுதி வெளியிடும் நூல்களே மாணவர்களுக்குப் பயன்படுகின்றன.

இயற்பியல், வேதியியல், பயிரியல், விலங்கியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் துறைகளுக்கும் பொருளியல், வரலாறு, வணிகவியல், வணிக நிர்வாகவியல் முதலிய கலைத்துறைகளுக்கும் பேராசிரியர்களும் அல்லாதவர்களும் எழுதிய பல நூல்கள் புத்தகச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழ்த்துறைக்கான பாடநூல்களை எழுதிப் பல லட்சம் சம்பாதித்த பேராசிரியர்களையும் சக ஆசிரியர்களையும் அறிவேன். என் ஆசிரியரும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவருமான பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் தம் இருபத்தைந்தாம் வயதில் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூல் விற்பனையில் வந்த வருமானத்தைக் கொண்டுதான் சென்னை அமைந்தகரையில் பெரிய வீடு கட்டினார். அதை அவர் வகுப்பறையில் பெருமையாகப் பலமுறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

வேறொரு தொழில் செய்து பல லட்சம் கடன் பட்டுத் தடுமாறினார் பேராசிரியர் கா.கோ.வேங்கடராமன். அவர் நாமக்கல்லில் என்னுடன் பணியாற்றியவர். தமிழ் இலக்கணத்தில் நல்ல புலமை மிக்கவர். எழுத்தாற்றலும் கொண்டவர். கடனிலிருந்து மீள என்ன செய்வதென்று தவித்துக் கொண்டிருந்தார். யார் சொன்ன வழிமுறை என்று தெரியவில்லை. ‘தமிழ் இலக்கிய வரலாறு’, ‘இலக்கண வழிகாட்டி’ ஆகிய இரண்டு நூல்களை எழுதினார். சில ஆண்டுகளில் கடனிலிருந்து மீண்டதோடு சொந்த வீடும் கட்டிக் குடி போனார். இப்படிப் பலரை அறிவேன்.

தமிழ் வழிப் பாடநூல் சந்தை பற்றிப் பல செய்திகளைப் பேசலாம்.

(தொடர்ச்சி நாளை)

—– 12-04-25

Latest comments (2)

குணசேகரன் பெ

பொறியியல் படிப்புகளில் தமிழ் வழிக்கான இடங்கள் பெரும்பாலானவை நிரப்பப்படுவதில்லை ஐயா. தாய்மொழி வழிக் கல்வியே புதிய கண்டுபிடிப்புகளை புதிய சிந்தனையாற்றலை உருவாக்கும் என்பதால் உயர்கல்வி வரை அவரவர் தாய் மொழியில் அமைதலே சிறப்பு. வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிறரோடு நாம் உரையாட முடியும். அதற்குப் பல்வேறு செயலிகள் வந்து விட்டன ஐயா.

பேராசிரியர் மு பெ முத்துசாமி

ஆரம்பபள்ளிக் கல்வி‌ முற்றிலும் தாய்மொழிதமிழ், உயர்நிலை‌பள்ளிக்கல்வி தாய்மொழி தமிழ் உடன் அறிமுகம் ஆங்கிலம், மேல்நிலைப் பள்ளி கல்வி தமிழ் அல்லது ஆங்கிலம், உயர் கல்வி அனைத்தும் ஆங்கில மொழி தான் அனைத்து சமச்சீரான வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும்.