கம்பராமாயணப் பாலகாண்டத்தின் முதலாவதாகிய ஆற்றுப் படலத்தைக் கலிவிருத்தத்தில் தொடங்கிப் பாடும் கம்பர் அதன் இறுதிப் பகுதியை அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் முடிக்கிறார். அடுத்த ‘நாட்டுப்படலம்’ ஆசிரிய விருத்தத்திலேயே தொடர்கிறது. இது அறுபது பாடல்களைக் கொண்ட பெரிய படலம். முதல் இருபத்திரண்டு பாடல்களை அறுசீர் விருத்தத்திலும் அடுத்து வருபவற்றைக் கலிவிருத்தத்திலும் பாடியிருக்கிறார். விரிவான வருணனைக்கு அறுசீர் விருத்தம், விதவிதமான உத்திகளுக்குக் கலிவிருத்தம் என்பது அவர் கணக்கீடு போலும்.
‘கோசல நாட்டு வளத்தை வடமொழியில் வான்மீகி தம் இன்கவிகளால் பாடியிருக்கிறார். அவற்றைத் தேவர்களும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். அவர் புகழ்ந்த நாட்டை ஆசைக்கள்ளை அருந்தி (அன்பெனும் நறவம் மாந்தி) ஊமையன் ஒருவன் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி நானும் பாடப் போகிறேன்’ என்று வான்மீகியைப் போற்றியும் அவையடக்கம் போலவும் சொல்லித்தான் தொடங்குகிறார்.
செய்யுள் உத்திகளில் ஒன்று ‘நுதலிப் புகுதல்.’ ‘வருபொருள் உரைத்தல்’ என்று சொல்லலாம். அதாவது ‘இதைப் பற்றிச் சொல்லப் போகிறேன்’ என்று அறிவித்துவிட்டுப் பிறகு விவரிப்பதுதான் அவ்வுத்தி. ‘கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்’ என்று சொல்லித்தான் ஆற்றுப்படலத்தைத் தொடங்கினார். நாட்டுப்படலத்தின் தொடக்கமும் அப்படித்தான். சிலசமயம் ஒருபடலத்தின் இறுதிப் பாடலில் அடுத்த படலத்தில் என்ன சொல்லப் போகிறேன் என்பதைக் குறிப்பார். நூல் மரபுக்கு இயைந்து கம்பர் பாடுகிறார்.
வான்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்புத்தான் கம்பராமாயணம் என்று சொல்வோர் உண்டு. அப்படியல்ல. அக்காப்பியத்தை ஆழ்ந்து கற்றவர் அல்லது பாடம் கேட்டவர் கம்பர் என்று கருத முடியும். ஆனால் அதன் நேரடி மொழிபெயர்ப்பைக் கம்பர் செய்யவில்லை. தழுவல்கூட அல்ல. தமிழ்நாட்டு மக்கள் வழக்கிலிருந்த கதையைத் தம் ஆதாரமாகக் கொண்டுள்ளார். தமிழ் இலக்கிய மரபுக்கு உட்பட்டே பலவற்றை எழுதும் அவரது இயல்பு அதை உணர்த்தும். ஆற்றுப் படலத்திலும் நாட்டுப்படலத்திலும் நானில வருணனை வருவது ஒருசான்று.
வான்மீகியின் கவி ஆற்றலைப் புகழ்ந்து சொல்லும் போதும் அதைப் பின்பற்றி நானும் பாடுகிறேன் என்று சொல்லவில்லை. அவன் புகழ்ந்த நாட்டை நானும் பாடப் போகிறேன் என்றுதான் சொல்கிறார். கவிச்சுவையைத்தான் ஒப்பீடு செய்கிறார். ‘செவிகள் ஆரத் தேவரும் பருகும் தீம்கவி’ அது. என் கவி அப்படி இருக்காது. ஆசைக்கள்ளை அருந்திய குடிகாரனின் உளறல் போல இருக்கலாம்; ஊமையன் பேசுவது போலப் பொருளற்றும் இருக்கலாம் என்கிறார்.
நாட்டுப்படலத்தின் பல பாடல்கள் எனக்கு விருப்பமானவை; மனனமாக நெஞ்சில் இருப்பவை. வருபொருள் உரைத்த பிறகு பாடும் முதல் பாடலே பிரமாதமானது. அதன் ஓசையே மயக்கும் தன்மை கொண்டது. பாடல்:
வரம்பெலாம் முத்தம் தத்தும்
மடையெலாம் பணிலம் மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக்
குழியெலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப்
பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரம்பெலாம் செந்தேன் சந்தக்
காவெலாம் களிவண்டு ஈட்டம்.
கொடுத்திருக்கும் வடிவத்தை மூன்று மூன்று சீருக்கு ஒருநிறுத்தம் கொடுத்து வாசித்துப் பார்க்கலாம். பொதுவாக அறுசீர் விருத்தத்தை அப்படி வாசிப்பதே வழக்கம். முதற்சீருக்கும் நான்காம் சீருக்கும் மோனை அமையும். அதைக் கணக்கில் கொண்டு முதல் மூன்று சீர்களுக்குப் பிறகு மடித்து நான்காம் சீரை எழுதும் வழக்கம் உண்டு. அனேகமாக அச்சு வசதி வந்த பிறகு மடித்து எழுதும் இந்த முறை வந்திருக்கலாம். பெரும்பாலும் ஆசிரிய விருத்தங்களை இப்படித்தான் எழுதுகின்றனர்.
அச்சுப் புத்தகத்தின் பக்க அளவுக்குள் ஓரடியின் சீர் அடங்காத காரணத்தால் மோனையைக் கருத்தில் கொண்டும் ஓசையைக் கருதியும் மடித்து எழுதும் முறையைப் பின்பற்றியிருக்க வேண்டும். அறுசீர், எண்சீர், பன்னிருசீர் விருத்தங்களை இப்படி மடித்து எழுதுவதைப் பரக்கக் காணலாம். எப்போது இது வழக்கிற்கு வந்தது, யார் முதலில் தொடங்கியவர் என்பதைக் கண்டறிய வேண்டும். ஓலைச்சுவடியில் அடி வரையறை, சீர் வரையறை செய்து எழுதுவதில்லை. ஒருசெய்யுளுக்கும் இன்னொரு செய்யுளுக்கும் இடைவெளி இல்லாதும் எழுதுவர். எனவே இம்மடிப்பு முறை அச்சு கொடுத்த வசதி என்று கருதுகிறேன்.
இந்தப் பாடலையும் மடித்து அச்சிட்டு முறைக்கேற்ப ‘வரம்பெலாம் முத்தம் தத்தும்’ என்று நிறுத்திப் பின் ‘மடையெலாம் பணிலம் மாநீர்க்’ என்று வாசிக்க வேண்டும். மூன்று சீருக்கு ஒருநிறுத்தம். அதில் ஒருசுகமான ஓசை கிடைக்கும். இப்பாடலைக் கம்பர் எழுதியிருக்கும் உத்தி காரணமாக இன்னொரு வகையிலும் வாசிக்கலாம். பொருள் கொள்ள வசதியாகப் பாடலைக் கீழ்வருமாறு எழுதலாம்.
வரம்பெலாம் முத்தம்;
தத்தும் மடையெலாம் பணிலம்;
மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்;
மேதிக் குழியெலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பெலாம் பவளம்;
சாலிப் பரப்பெலாம் அன்னம்;
பாங்கர்க் கரம்பெலாம் செந்தேன்;
சந்தக் காவெலாம் களிவண்டு ஈட்டம்.
இந்த எழுதுமுறையிலும் ஒருவகைச் சந்தம் அமைகிறது. முதலடியும் மூன்றாம் அடியும் இருசீர், நாற்சீர் எனப் பிரிந்து நின்று பொருள் தருகின்றன. இரண்டாம் அடியும் நான்காம் அடியும் முச்சீர், முச்சீராகப் பிரிந்து நின்று பொருள் தருகின்றன. பொருள் அடிப்படையில் சீர்களைப் பிரிக்கும்போது பெரும்பாலான பாடல்களின் சந்தம் சிதைந்துவிடும். இப்பாடல் அப்படியல்ல. பொருளுக்கேற்பச் சீர்களைப் பின்னால் கொண்டு சேர்த்துப் பிரித்தாலும் நல்ல சந்தம் அமையும் வகையில் கம்பர் எழுதியிருக்கிறார். இரண்டுமே வாசிக்கச் சுகம் தருபவை.
இப்பாடல் பொருளும் சுவையானது. குரம்பு, பரம்பு, கரம்பு ஆகியவற்றுக்கு ஏற்ப வரம்பு வருகிறது. வரப்பு என்பதுதான் சொல். பிற சொற்களுக்கு ஏற்ப எதுகை ஓசை கருதி வல்லின எழுத்து மெல்லினமாகிறது. இப்படி மாறுவதை ‘மெலித்தல் விகாரம்’ என்று இலக்கணம் கூறும். ‘எல்லாம்’ என்னும் சொல் இடைக்குறைந்து ‘எலாம்’ என வருகிறது. இவையிரண்டு தவிர வேறு இலக்கணச் சிக்கல் ஏதும் இப்பாடலில் இல்லை.
மருத நிலை வருணனை. நீர்வளம் மிகுந்திருப்பதால் வளம் கொழிக்கும் மருதம். வரப்புகளில் எல்லாம் முத்துக்கள். நீர் ததும்பும் மடைகளில் எல்லாம் சங்குகள். பெருநீர் தேக்கி நிற்கும் வாய்க்கால் கரைகளில் எல்லாம் பொன்னிறச் சங்குகள். எருமைகள் விழுந்து புரளும் குழிகளில் எல்லாம் செங்கழுநீர்ப் பூக்கூட்டம். பரம்படித்த வயல்கள் எல்லாம் பவளநிறம். நெல்வயல் பரப்பெல்லாம் அன்னப் பறவைகள். அருகில் பயிரிடப்படாத நிலங்களில் எல்லாம் சிவந்த தேன்கூடுகள். அழகான சோலைகளில் எல்லாம் தேனுண்டு களிக்கும் வண்டுக் கூட்டம்.
பொருள் கொள்வதில் உரையாசிரியர்களிடம் சிறுசிறு வேறுபாடுகள் உள்ளன. அதைப் பிறகு பார்க்கலாம்.
—– 15-01-25
மிகச் சிறப்புங்க ஐயா.👌🎉❤️🙏
தொலைநிலைக் கல்வியில் படித்த எனக்கு உங்கள் விளக்கத்தைப் படிக்கப் படிக்க என் முன் நின்று தாங்கள் நடத்துவது போலவே உணர்கிறேன். இப்படிஎல்லாம் ஒரு பேராசிரியரிடம் பாடம் கேட்டு இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக தமிழ் தேன் அருந்தி இருப்போம் என்ற ஏக்கம் எழுவதைத்
தவிர்க்க இயலவில்லை.😢🙏
ஒரு சுகமான ஓசையும், ஒரு வகை சந்தமும் அருமை கம்பருக்கு நிகர் கம்பரே…சிறப்பு.