காலச்சுவடை, காலச்சுவட்டை : எது சரி?

You are currently viewing காலச்சுவடை, காலச்சுவட்டை : எது சரி?

 

காலச்சுவடு பதிப்பகம் 30ஆம் ஆண்டு, காலச்சுவடு  300 இதழ்கள்  ஆகியவற்றை ஒட்டிய சிறப்புக் கருத்தரங்கம் கடந்த மாதம் (28-08-2026) கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர்களின் புகைப்படங்களைக் கொண்ட அழைப்பிதழ்களை முகநூலில் (27-08-26) பகிர்ந்திருந்தேன். நவீன இலக்கியச் சூழலில் காலச்சுவடின் தாக்கம், காலச்சுவடின் கிளாசிக் நாவல் வரிசை, காலச்சுவடின் மொழிபெயர்ப்புப் பங்களிப்பு ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருந்தன.

அப்பதிவில்  கவிஞர் மகுடேசுவரன் ’உயிர்த்தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொல்லான ‘சுவடு’ என்ற பெயர்ச்சொல் வேற்றுமை உருபினை ஏற்கையில் ஈற்று உயிர்மெய்யின் ஒற்று இரட்டித்து ‘சுவட்டை, சுவட்டால், சுவட்டுக்கு, சுவட்டின், சுவட்டினது, சுவட்டின்கண்’ என்றே ஆகும். குறிப்பாக டு, று என்னும் எழுத்துகளில் முடியும் சொற்களுக்கு இவ்வகை ஒற்று இரட்டிப்பு கட்டாயம்’ என்று பின்னூட்டம் இட்டிருந்தார்.

தமிழ் மொழித்திறத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆர்வத்தோடும் சுயகற்றலோடும் மகுடேசுவரன் தொடர்ந்து இயங்கி வருகிறார். தமிழாசிரியர்கள் பின்தங்கிய இடத்தை நிரப்பும் வகையிலான அவர் செயல்பாடு பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் அவரைப் பல்லாயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இன்றைய சூழலில் அவரைப் போன்றோர் பலர் தேவை. அவர் கருத்துக்களில் நான் உடன்படுபவையும் உண்டு; மாறுபடுபவையும் உண்டு. ’இவ்வகை ஒற்று இரட்டிப்பு கட்டாயம்’ என்று அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எதையும் ’கட்டாயம்’ என்று நம் இலக்கண மரபு கூறுவதில்லை.

ஆகவே காலச்சுவடை என்று எழுதுவதா, காலச்சுவட்டை என்று எழுதுவதா என்பதில் அவரோடு மென்மையாக மாறுபடுகிறேன். நெடில்தொடர் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரப் பெயர்ச்சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் டகர றகர ஒற்றுக்கள் இரட்டிக்கும் என்னும் விதி தொடர்பாகக் கிட்டத்தட்ட இருபதாண்டுக்கு முன்னரே காலச்சுவடு குழுவில் விவாதம் நடந்திருக்கிறது. முடிவில் ஒற்று இரட்டிக்காமல் சுவடை, சுவடால், சுவடுக்கு, சுவடின், சுவடது, சுவடில் என்றே எழுதலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. அது காலத்தை அனுசரித்த தீர்மானம். சிலர் ஒற்று இரட்டிக்காமல் எழுதுகின்றனர்; சிலர் ஒற்று இரட்டித்து எழுதுகின்றனர். ஒருமை பேண வேண்டும் என்னும் நிலையில்  இந்த முடிவைக் காலச்சுவடு பின்பற்றி வருகிறது.

காலச்சுவடை, காலச்சுவட்டை : எது சரி?

இக்கால உரைநடையில் இருபோக்குகளையும் காண முடிகிறது. கயிறு என்பதைக் கயிற்றை, கயிற்றுக்கு என எழுதுவதையும் பார்க்கலாம். கயிறை, கயிறுக்கு என்று எழுதும் போக்கையும் காணலாம். இரண்டையும் சரி என்று ஏற்கலாம் என்பது என் கருத்து.  இருவழக்கும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ளது என்பதால் மட்டுமல்ல. நம் இலக்கண மரபும் இருவழக்கையும் ஏற்கிறது என்பதும் காரணம்.

குற்றியலுகரப் புணர்ச்சி பற்றிப் பேசும் நன்னூல் நூற்பா இது:

நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள்

டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே.

இந்நூற்பாவின் ஈற்றுச் சொல்லான ’மிக’ என்பதை ’இரட்டும்’ என்பதோடு இணைக்கும் உரையாசிரியர் ’மிக இரட்டும் – பெரும்பாலும் இரட்டும்’ என்று பொருள் கூறுகிறார். இதன் விளக்கமாக ’இவ்விரண்டொற்றும் பெரும்பாலும் வேற்றுமையில் இரட்டும். எனவே சிறுபான்மை வேற்றுமையில் இரட்டாமையும் சிறுபான்மை அல்வழியில் இரட்டுதலும் சிறுபான்மை இருவழியும் பிறவொற்று இரட்டுதலும் கொள்க’ என்றும் கூறுகின்றார்.

ஒற்று இரட்டிக்காமல் வரும் என்பதற்குக் ’காவிரி புரக்கு நாடு கிழவோனே’, ’கறைமிட றணியது மணிந்தன் றக்கரை’ முதலியவற்றைச் சான்றாகத் தருகிறார். நாடு கிழவோன், மிடறணி ஆகியவை நாட்டுக் கிழவோன், மிடற்றணி என்று வந்திருக்கலாம். இரண்டுமே ஏற்புடையவை என்பது உரையாசிரியர் கருத்து.

டகர றகரம் அல்லாமல் கு,சு,து,பு ஆகிய எழுத்துக்கள் ஈற்றில் நிற்கும் சொற்களிலும் அரிதாக ஒற்று இரட்டித்தல் வரலாம் என்பதற்கு ’வெருக்குக்கண், எருத்துமாடு’ என்பவற்றைச் சான்றாகக் கொடுத்திருக்கிறார். வெருகு + கண் = வெருக்குக்கண், எருது + மாடு = எருத்துமாடு எனக் காட்டுகிறார். எருதில் ஒற்று இரட்டிப்பது இன்றும் வழக்கில் உண்டு. எருத்தப் புடிச்சுக் கட்டு, எருத்துக்குத் தீனி போடு என்றெல்லாம் வழங்குகிறது.

இலக்கண மரபு, விதிகளில் கடுமை காட்டுவதில்லை. வழக்கில் உள்ளவற்றைக் கருத்தில் கொண்டு விதிகள் வகுப்பது, விதிகளுக்கு விளக்கம் கொடுக்கும் போது வழக்கில் உள்ளவற்றைக் கவனத்தில் கொள்வது என நெகிழ்வு கொண்டிருக்கிறது. காலச்சுவட்டை என்று எழுத விரும்புவோர் அப்படியே எழுதலாம். தவறல்ல. காலச்சுவடை என்று எழுதத் தீர்மானித்து நடைமுறையில் பின்பற்றி வரும் நிலைப்பாடும் தவறல்ல.

காலச்சுவடை, காலச்சுவட்டை : எது சரி?

—–    09-09-26

Add your first comment to this post