கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியது. நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் அரசும் ஈடுபட்டது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வைப்பு நிதி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவர் கவிதைகளை ஒப்பிக்கும் போட்டியை ஆண்டுதோறும் நடத்திப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறது.
அதற்கெனத் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்ட ‘தமிழ் ஒளி கவிதைகள்’ நூலை அத்துறை வெளியிட்டுள்ளது. நாற்பத்து நான்கு கவிதைகள் உள்ள இந்நூல் அவரை அறிமுகம் கொள்ள பெரிதும் உதவும். பாரதிதாசன் மரபையும் சொல்முறையையும் பின்பற்றிய அவர் கவிதைகளில் மார்க்சியக் கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்றன. தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பாடியிருக்கிறார். மே தினத்தைப் பாடிய முதல் தமிழ்க்கவி என்னும் பெருமைக்கு உரியவர்.
உலகத் தொழிலாளர் ஒற்றுமையே நல்லுணர்வே
அன்பே இருட்கடலின் ஆழத்திருந்து வந்த
முத்தே முழுநிலவே மேதினமே வாராய்நீ
வாராய் உனக்கென்றன் வாழ்த்தை இசைக்கின்றேன்
என்று மே தின வாழ்த்துத் தெரிவிக்கின்றார். நிலை பெற்ற சிலை, வீராயி, கண்ணப்பன் கிளிகள், மாதவி காவியம் முதலியவை அவர் இயற்றிய சிறுகாப்பியங்கள். புத்தர் பற்றி எழுதிய முற்றுப் பெறாத காப்பியம் ஒன்றுமுண்டு. மரபுக் கவிதையில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்த அவர் தம் முதல் காப்பியமாகிய ‘நிலை பெற்ற சிலை’யை முழுவதுமாக எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதினார்.
செய்யுள் மரபில் எண்சீர் விருத்தம் எழுதியோர் மிகக் குறைவு. அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். பாரதிதாசனுக்கு அதன் மேல் மிகுந்த ஈடுபாடு உண்டு. ‘தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுன் டென்போன்’, ‘நீலவான் ஆடைக் குள்உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின் றாய்ஒளி முகத்தை’ ஆகிய அவரது புகழ் பெற்ற கவிதைகள் எண்சீர் விருத்தத்தால் ஆனவை. கவிஞர் சுரதாவும் எண்சீர் விருத்தம் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இவ்வரிசையில் தமிழ் ஒளியும் சேர்கிறார். பாரதிதாசனின் ‘புரட்சிக்கவி’ நூலின் பாதிப்பில் அதைப் போன்ற அமைப்பில் எழுதிய நூல் ‘நிலை பெற்ற சிலை.’ பெரியார் கருத்துக்களை உள்வாங்கித் தம் காப்பியத்தில் பாரதிதாசன் வெளிப்படுத்தினார். தமிழ் ஒளியின் காப்பியத்தில் தொழிலாளர் நலன்; மார்க்சியக் கருத்து. காப்பியத் தலைவன் மருதவாணன் கதையின் இறுதியில் தொழிலாளரிடையே உரையாற்றுகின்றான். அதில் ஒருபகுதி:
மாடிக்குச் சுண்ணாம்பு உங்கள் ரத்தம்;
மஞ்சந்தான் உம்உடலின் தோலி னாலே
மூடிவைத்து மெருகிட்ட மேற்பூச் சாகும்;
மதுவகைகள் அழகிய‘கார்’ எல்லாம் நீங்கள்
தேடியதோர் லாபத்தின் பகுதி; உங்கள்
தோள்வலுவால் முதலாளி வீட்டுத் தூண்கள்
ஆடாமல் இருப்பதைநீர் அறிய வில்லை;
அன்றாடம் உம்வியர்வைக் கடலின் மேலே.
இத்தகைய கவிதைகள் இன்று சாதாரணமாகத் தோன்றலாம். ஒருகாலத்தில் சமூகக் கருத்துருவாக்கத்திற்கும் போராட்ட எழுச்சிக்கும் பயன்பட்டன என்பது உண்மை. அவ்வகையில் வரலாற்று ஆவணத்தன்மை பெற்றவை இவை.
அவர் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. பலதுறை சார்ந்தும் எழுதியிருக்கிறார். சிறுகதைகள், சிறுவர் நூல்கள், ஓரங்க நாடகம், திறனாய்வு என ஏறத்தாழ இருபது நூல்கள் அவர் பங்களிப்பாகத் தெரிய வருகின்றன. ‘ஸ்டாலின்’ என்னும் தலைப்பில் வாழ்க்கை வரலாற்று நூல்; ‘சிலப்பதிகாரம் காவியமா, நாடகமா?’ என்றொரு ஆராய்ச்சி நூல்; திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம் ஆகிய கட்டுரை நூல்கள். இப்படி அவர் பங்களிப்பு கணிசமானது.
மொழி சார்ந்து ‘தமிழும் சமஸ்கிருதமும்’ என்றொரு நூல் எழுதியுள்ளார். என்னை ஈர்த்த மிகச் சிறுநூல். இப்படி ஒருதலைப்பில் அவர் நூல் எழுதியிருப்பது வியப்பைக் கொடுத்தது. அந்நூலின் முன்னுரையில் ‘…கால வழுவால் என் பெயர் சிறிது சிறிதாய் மறைந்து, அடியோடு மூழ்கும் நிலை வந்துற, நான் என் உயிர் ஆற்றலை ஒருமுகப்படுத்தி நின்றேன். தமிழன்னையின் அருள் கிட்டியது’ என்று எழுதுகிறார். தம் வாழ்நாளிலேயே தம் பெயர் மறைந்து மூழ்கும் நிலை வந்துற்றது என்று கவலைப்பட்ட அவர் மனவருத்தம் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தைக் கண்டிருந்தால் தீர்ந்திருக்கும்.
கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலின் வெளிச்சத்தில் ‘தமிழும் சமஸ்கிருதமும்’ நூலை எழுதியிருக்கிறார். மு.ச.சிவம் என்பார் தொடங்கிய ‘மக்கள் நூலகம்’ பதிப்பகத்தின் முதல் வெளியீடாக இந்நூல் வந்துள்ளது. இப்பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்ட நூல்கள் எத்தகையவை என்பதையும் காண வேண்டும். நூலின் விற்பனை உரிமை வள்ளுவர் பண்ணை.
கால்டுவெல் நினைவுக்குத் தம் நூலைக் காணிக்கை ஆக்கியுள்ளார். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் திப்பியப் புலமை சான்ற நூலை இயற்றித் தமிழ் மொழியின் பெருமையை உலகுக் குணர்த்திய மேற்புல அறிஞர் டாக்டர் கால்டுவெல் அவர்களின் நினைவுக்கு இந்நூலைக் காணிக்கை யாக்குகிறேன்’ என்பது அக்குறிப்பு.
நூலில் ‘செத்த மொழி’ என்று ஒரு கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறார். பேச்சு வழக்கில் இல்லாத மொழி செத்த மொழிதான் என்கிறார். சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு மொழியாக இல்லை; அது அறிஞர்க்காக உருவாக்கப்பட்ட மொழி என்பதை அவர் ஏற்கவில்லை. நன்னூலில் ‘வடமொழி ஆக்கம்’ என இலக்கணம் கூறியிருப்பதையும் ஏற்காமல் கண்டித்து எழுதுகிறார். பவணந்தி முனிவர் சைனர் என்பதால் அம்மதக் கருத்துக்களைத் தமிழில் எழுத இந்த ‘வடமொழி ஆக்கம்’ தேவைப்பட்டிருக்கலாம் என்கிறார். ‘பவணந்தியார் சைனராதலாலும் சைனம் சமஸ்கிருதத்தின் துணை கொண்டு வாழ முயன்றதாலும் வடமொழி ஆக்கம் வேண்டப்பட்டது’ என்கிறார்.
ஒரு தேசிய இனத்தின் ஒருமித்த உளப்பண்பை உருவாக்குவது மொழி; தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் கலப்பதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த உளப்பண்பு கெடுகிறது என்றும் ஆகவே சமஸ்கிருதச் சொற்கள் கலப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறுகிறார். ‘இந்திரன் யார்?’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், ச.து.சு.யோகியார் ஆகியோர் அகலிகை பற்றி எழுதியதைக் கடுமையாக விமர்சிக்கிறார்.
இக்கட்டுரையில் புதுமைப்பித்தனைப் பெரிதும் போற்றித் தமிழ் ஒளி எழுதியுள்ள பகுதி மிகவும் முக்கியமானது:
‘இவ்விரு சாராருடனும் இணையாத ஓர் அபூர்வக் கருத்தையும் தமிழ் இலக்கியத்திற் காண்கிறோம். அக்கருத்திற்குரியவர் மோகன ஆற்றலைப் பெற்றுள்ள புதுமைப்பித்தன் என்பவர் ஆவார். யோகியின் கோதமனைப் போன்றே புதுமைப்பித்தன் கோதமனும் பலமற்றவன் தான். ஆனால், புதுமைப்பித்தன் இன்னும் ஒருபடி மேலே போய், பக்குவம் அடையாத ஒருவனின் சபலங்களைக் காட்டுவது போன்று அவ்வளவு தெளிவாகக் கோதமனைப் படம் பிடிக்கிறார். அவர் மட்டுமே தொல்லாசிரியன்மார் அறத்தின் வேலியெனக் காட்டிய இராமனைக் கேவலம், அவன் பாதத்தூளியால் உயிர்பெற்ற அகலிகையைக் கொண்டே தோற்கடித்தார். தர்க்க சாத்திரம் எதைக் கற்றுக் கொடுக்குமோ, எதைக் கற்றுக் கொடுத்தால் தர்க்க சாத்திரம் சரியென்று ஏற்றுக்கொள்ளப்படுமோ அதே ஆயுதத்தைக் கொண்டு இராம தத்துவத்தைத் தகர்த்தெறிந்தார் புதுமைப்பித்தன். அவர் மட்டுமே – ஒரு சரித்திரக் கதாநாயகனைப் போன்று துணிவுடன், பிறர் நெருங்கவே அஞ்சும் அத்தாணி மண்டபத்தை அடைந்து அங்கே குருடாய்க் கிடந்த கண்களைத் திறக்க முயன்றார்.’
மோகன ஆற்றலைப் பெற்றவர், ஒரு சரித்திரக் கதாநாயகனைப் போன்றவர் என்றெல்லாம் விதந்தோதும் இப்பகுதி அவர் புதுமைப்பித்தன் மேல் கொண்டிருந்த பெரும் ஈடுபாட்டைக் காட்டுகிறது. புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ கதை குறித்த அவர் கருத்தையும் இது தெளிவுபடுத்துகிறது. ‘வேந்தன் மேயத் தீம்புனல் உலகம்’ எனத் தொல்காப்பியம் காட்டிய கப்பத்திந்திரன் வைதிகக் கொள்கையின் எதிரி என்று கருத்துரைக்கும் இக்கட்டுரையில் புதுமைப்பித்தன் பற்றி இப்படி ஒருபகுதி இடம்பெற்றுள்ளது எதிர்பாராதது.
தமிழின் சிறப்பைப் போற்றும் சில கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் விவாதிக்கவும் விளங்கிக் கொள்ளவுமான கருத்துக்களை கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டாம் பகுதி எழுதத் திட்டம் இருப்பதாக அறிவிப்பு உள்ளது. எழுதியதாகத் தெரியவில்லை.
பயன்பட்ட நூல்கள்:
- கவிஞர் தமிழ் ஒளி கவிதைகள், 2024, தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை.
- தமிழ் ஒளி, நிலை பெற்ற சிலை, 1947, புதுயுக நிலையம், சென்னை.
- தமிழ் ஒளி, தமிழும் சமஸ்கிருதமும், 1960, மக்கள் நூலகம், சென்னை.
—– 15-11-24
இப்போதுதான் வாசித்தேன். அரிய தகவல்கள் ஐயா.