வாழ்க்கையை உருமாற்றும் பாலித்தீன் பை?
பாலித்தீன் பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமானது 1970களிலாக இருக்கலாம். அக்காலத்து வாரச் சந்தையில் கிராமத்து அம்மாக்கள் வாங்கி வரும் முக்கியமான நொறுக்குத் தீனி பொரிகடலை. பொரி அளக்க ‘பக்கா’ என்றழைக்கப்படும் அளவுப் படி இருந்தது. பொரியை அளந்து பாலித்தீன் பையில் போட்டுவிட்டு அதன் மேல் பொட்டுக்கடலை, மிக்சர் ஆகியவற்றையும் குறைந்த அளவான உழக்கில் அளந்து போடுவார்கள். அதை வெண்ணிறப் பாலித்தீன் பை வாங்கிக்கொள்ளும். பொரிகடலை மூலமாகவே பாலித்தீன் பைகள் கிராமங்களுக்குள் நுழைந்தன. சந்தை நாளன்று இரவு ஒவ்வொரு வீட்டிலும் பொரிகடலைப் பிரிவினை நடைபெறும். பைக்குள் கைவிட்டு அதன் மேலே தங்கியிருக்கும் கடலை, மிக்சர் ஆகியவற்றைப் பொரியோடு பரவலாகக் கலக்குவது முக்கியமான வேலை. இல்லையென்றால் ஒருவருக்கு மிக்சர் அதிகம், கடலை அதிகம் என அடிதடி நடக்கும்.
அவ்விதம் கலந்து வீட்டில் இருப்போர் எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரித்துக் கொடுக்கும் பெரிய வேலையைச் சாதித்த பிறகு அம்மாக்களுக்கு இன்னொரு வேலை இருக்கும். பொரிகடலை இருந்த அந்தப் பாலித்தீன் பையைப் பத்திரமாக எடுத்துப் பாதுகாக்கும் வேலை. அப்பையைப் பானைக்குள் போட்டு வைப்பார்கள்; கூரை எறவாணத்தில் செருகி வைப்பார்கள். அன்றைக்கு அது கிடைத்தற்கரிய பொருள்.
பாலித்தீன் பைக்கு அப்போதைய மக்கள் வழக்கு ‘மழைக் காகிதப் பை.’ பயன்பாட்டை ஒட்டி மக்கள் உருவாக்கிய பெயர் அது. பாலித்தீன் பை மழைக்காலத்தில் பெரிதும் உதவும். அதைத் தொப்பியைப் போலப் போட்டுக்கொண்டால் ஒரு சொட்டு நீர்கூடத் தலையை நனைக்காமல் பாதுகாக்கலாம். சிணுங்குத் தூறல் போடும் நாட்களில் மழைக் காகிதப் பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் சிறுவர் கூட்டத்தைக் காணலாம். ஆடு மாடுகளைப் பிடித்துக் கட்டவும் தீனி கொண்டு வரவும் விறகு சேகரிக்கவும் என எந்த வேலைக்காக வெளியே சென்றாலும் ஒரு மழைக் காகிதப் பை இருந்தால் போதும்.
மழைக்காலத்தில் தலைக்குப் போட்டுக்கொள்வதுதான் பாலித்தீன் பையின் முதல் பிறபயன்பாடு. எந்தப் பொருளையாவது நனையாமல் கொண்டு போக வேண்டுமானால் அதைப் பாலித்தீன் பைக்குள் வைப்பது இரண்டாம் பிறபயன்பாடு. பள்ளிப் புத்தகங்களை மழைக் காகிதப் பைக்குள் வைத்து அதை மீண்டும் பள்ளிப் பைக்குள் போட்டுக்கொண்டு போவது எங்கள் வழக்கம். மழைக்காலத்தில் அப்பைகளுக்குப் பெருமதிப்பு உண்டாகிவிடும். அங்கங்கே வைத்தவற்றை எல்லாம் தேடி எடுப்பார்கள். அவற்றை இரவல் கேட்பார்கள்.
பாலித்தீனால் மறைந்த வேலைகள்
இத்தகைய பிற பயன்பாடுகள் பெருகிப் பின்னர் ‘பிற’ போய்ப் ‘பயன்பாடு’ மட்டுமே நிலைபெறும்படி ஆயிற்று. அதனால் கலைநயம் மிக்க மரபான பல வேலைகள் மறைந்தன. ஆடு மாடுகளுக்கு என்று ஆண்டுக்கணக்கில் தீவனங்களைப் பாதுகாக்கத் தீவனப்போர் போடுவது மரபு. வட்டப்போர், சாணைப்போர் என்று அதில் வகைகள் உள்ளன. தீவனத்தின் தன்மைக்கேற்பப் போரின் வகைகளும் மாறும். எத்தனை மழை பெய்தாலும் தீவனத்திற்குள் துளியும் இறங்காமல் வழிந்து கீழோடிவிடும் வகையில் வேயப்படும் அப்போர்கள் அழகான தோற்றம் கொண்டிருக்கும். அக்கலையைப் பயின்றவர்களுக்குப் போர் போடும் காலத்தில் கிராக்கி இருக்கும். கணிசமான வருமானமும் கிடைக்கும். இன்றைக்கு அவ்வகைப் போர்கள் பெரிதும் மறைந்து வருகின்றன. தீவனத்தை ஏதோ ஒருவகையில் குவியலாக அடுக்கி அதன் மேல் பெரிய பாலித்தீன் பையைப் போர்த்திவிடுவது எளிதாக இருக்கிறது. கூரைகளைப் பாதுகாக்கப் பாலித்தீன் பைகளைப் போர்த்துகிறார்கள். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
இப்போது அரசு பாலித்தீன் பைகள், ஞெகிழிப் பொருட்களைத் தடை செய்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் அல்ல. பெருநிறுவனங்கள் தயாரிக்கும் சோப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பாலித்தீன் காகிதங்களில்தான் அடைக்கப்படுகின்றன. இதன் பின்னுள்ள அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட வேண்டியவை. எனினும் பாலித்தீனையோ, பிளாஸ்டிக்கையோ இனிமேல் தவிர்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். தவிர்க்க இயலாது என ஒன்றை அறிந்த பிறகு அதைப் பாதிப்பில்லாமல் பயன்படுத்துவது பற்றியே யோசித்தாக வேண்டும்.
பாலித்தீன் பற்றிக் கவிதைகள் உள்ளனவா?
‘சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக முகம் கொடுப்பது கவிதை’ என்று நம்புபவன் நான். மற்ற கலை இலக்கிய வடிவங்கள் எல்லாம் ஒரு பிரச்சினையைச் செரித்து வெளிப்படுத்தக் கால அவகாசம் எடுத்துக்கொள்வன. சிலசமயம் பல்லாண்டுகள்கூட ஆகும். வெளிப்படாமலும் போகக்கூடும். ஆனால், கவிதை அப்படியல்ல. அன்றாடத்தின் மீது தன் பார்வையை முன்வைத்துப் பேசும் கலை வடிவம் கவிதை. அந்த அடிப்படையில்தான் பாலித்தீன், பிளாஸ்டிக் பற்றிப் பொருட்படுத்தும் வகையில் எழுதப்பட்ட கவிதை ஏதும் உள்ளதா என என் தேடல் நிகழ்ந்தது. பெரிதாகச் சொல்லும் அளவுக்குக் கவிதைக்குள் இவை வரவில்லை என்பது வியப்பாக இருந்தது. தமிழ்க் கவிதையுலகம் அன்றாடத்தின் மீது தன் பார்வையைச் செலுத்தாமல் இன்னும் பழமை, மரபு ஆகியவற்றுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறதோ என்றும் தோன்றியது. ஆனால் நல்லவேளையாகக் கவிப்பார்வையுடன் கூடிய சிறந்த கவிதை ஒன்றைக் கண்டடைந்து ஆறுதல் கொண்டேன். அக்கவிதையை எழுதியவர் லாவண்யா சுந்தரராஜன். கவிதையின் தலைப்பு ‘தீதும் நன்றே.’
லாவண்யா சுந்தரராஜன் (1971) திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். பல்வேறு இலக்கிய இதழ்களில் கவிதைகளை வெளியிட்டுள்ள இவரது கவிதைத் தொகுப்புகள் மூன்று வெளியாகியுள்ளன. ‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ (2010, அகநாழிகைப் பதிப்பகம்), ‘இரவைப் பருகும் பறவை’ (2011, காலச்சுவடு பதிப்பகம்), ‘அறிதலின் தீ’ (2015, பாதரசம் வெளியீடு) ஆகியவை அவை. சமீபகாலமாகச் சிறுகதை எழுதுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். லாவண்யாவின் கவிதைகள் பெரும்பாலும் மென்மையான தொனியில் உரையாடுபவை. இவரது ‘கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கைதான்’ என்கிறார் சுகுமாரன். ‘அறிதலின் தீ’ தொகுப்புக் கவிதைகளில் சற்றே வன்மை கூடியிருப்பதைக் காண முடிகிறது. ‘கருப்பையைக் கிழித்தெறிந்து உரக்கச் சொல்ல விழைகிறேன், பெண்ணிற்கான அடையாளமெதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்னிடமென்று’ எனக் கொஞ்சம் உரக்கப் பேசுகின்ற குரல் கேட்கிறது.
பொதுவாகச் சற்றே இயல்பு பிறழ்ந்த விஷயங்களில் கண்ணோட்டும் குணம் கொண்டவை இவர் கவிதைகள். அவற்றின் வசீகரத்தில் ஈடுபட்டுத் திளைப்பவை. அவை பொருட்படுத்திப் பதிவாக்கும் காட்சிகளும் நிகழ்வுகளும்கூடச் சிறிது இயல்பு பிறழ்ந்த தன்மை உடையவையே. ‘சலனம்’ என்றொரு கவிதை. ‘விட்டு விட்டுச் சொட்டிக் கொண்டிருந்த குழாயை இறுக மூடிய பின்னர் நிலவும் நிசப்தம் என்னவோ செய்கிறது’ என்கிறது அது. ‘தற்கொலை செய்துகொண்டவள் ரயில் மோதும் நொடிக்கு முன் என்ன நினைத்திருப்பாள்’ என யோசிக்கிறது இன்னொரு கவிதை. இப்படிப் பல.
இயல்பு பிறழ்ந்தவற்றில் கவனக் குவிவு கொண்டவர் என்பதாலோ என்னவோ பாலித்தீன் விஷயமும் இவர் பார்வையில் பட்டிருக்கிறது போலும். ஒரு கவிதையில் ‘விரிந்த தோகையென வானுலா வருகிறது காகத்தின் காலில் சிக்கிய பாலித்தீன் பை’ என்று அதிர்வூட்டும் காட்சியொன்றைக் காட்டுகின்றார். ‘காற்றின் எடையேயாயினும் கால் பிடித்திழுக்கத் தத்தித் தடுமாறுகிறது பறத்தலின் காகம்’ என விரிகிறது அது. உதறியெறிய முடியாத வகையில் காலில் சிக்கிக்கொண்ட பாலித்தீன் பை தரும் தொந்தரவோடு பறந்து திரியும் காக்கையைப் பற்றிய சித்திரம் மனத்தில் தோன்றி வருத்துகிறது. இதே போன்ற நான்கு காட்சிகளை அடுக்கி எழுதப்பட்ட கவிதை ‘தீதும் நன்றே.’ கவிதை:
தீதும் நன்றே
வாயிறுக்கி முடிக்கப்பட்ட
பிளாஸ்டிக் பை
மீனெனக் காவிரியில்
நீந்திக் கொண்டிருந்தது
மேலும் அதே போலொன்று
மின்சாரக் கம்பியில்
இரட்டை வால் குருவியாக அமர்ந்திருந்தது
தரையோடு
வண்டிச் சக்கரம் இழுத்துப் போன பையோ
பாம்பின் சட்டையை ஒத்திருந்தது
எல்லா உருவம் கொள்ளும்
பிளாஸ்டிக் பைகள்
பசும் பயிரிடை நட்ட
கோலில் கொடியாகி
தானியத்தைக்
காக்கும் வீரனுமாகின்றன சிலசமயம்.
இதன் தலைப்பு ‘தீதும் நன்றே.’ கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலின் அடுத்த அடி ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதாகும். இக்கவிதையின் தலைப்பு அதிலிருந்து எடுக்கப்பட்டது. ஆனால் பின்னொட்டு ஒன்றை மாற்றுவதன் மூலம் பொருளை மாற்றுகிற மொழி நுட்பத்தைக் கொண்டது. இக்கவிதை பாலித்தீன் பைகளைப் பற்றியது. பாலித்தீன் தீது என்பது புரிகிறது. அந்தத் தீதும்கூடச் சிலசமயம் நன்றாகும் என்கிறது கவிதை. அது எப்படி? பொரிகடலை கட்டி வாங்கி வந்த பை மழைக் காகிதப் பை ஆவது போல.
‘வாயிறுக்கி முடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பை மீனெனக் காவிரியில் நீந்திக் கொண்டிருந்தது’ என்பது முதல் காட்சி. இன்றைக்கு நம் நீர்நிலைகளில் எல்லாம் பாலித்தீன் பைகள் மிதந்து திரிவதை பார்த்து அருவருக்கிறோம். கவிஞரின் பார்வையில் அப்பை மீனென நீந்திக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது. அதே போல மின்சாரக் கம்பியில் சிக்கிப் பறக்கும் பை இரட்டை வால் குருவியாய்த் தெரிகிறது. தரையோடு வண்டிச் சக்கரம் இழுத்துப் போன பையோ பாம்புச் சட்டையெனப் படுகிறது. எங்கெங்கும் பாலித்தீன் பைகள் என்பதை இக்காட்சிகள் உணர்த்துகின்றன. பாலித்தீன் தீது என்பதை அறிவு உணர்ந்தாலும் கவிமனம் அக்காட்சிகளில் ஓர் அழகைக் காண்கிறது. மீனாகவும் இரட்டை வால் குருவியாகவும் பாம்புச் சட்டையாகவும் அவை வடிவம் கொள்கின்றன.
இத்தகைய பாலித்தீன் பைகளின் இயல்பு எல்லா வடிவமாகவும் உருமாறிக்கொள்வதுதான். அதையே ‘எல்லா உருவம் கொள்ளும்’ என்கிறது கவிதை. எந்த உருவமாகவும் மாறிக்கொள்ளும் பையல்லவா அது? ஆகவே மனித உருவுக்கும் பதிலியாகிறது. வயற்காட்டில் பறவைகளையும் பூச்சிகளையும் விரட்டும் சோளக்கொல்லை பொம்மை மனித வடிவம் கொண்டது. இன்றைக்கு அப்படி ஒரு பொம்மை தேவைப்படுவதில்லை. ஒற்றைக் கோலில் கட்டிக் கொடி போலப் பறக்க விட்டு அதைப் பசும் பயிரிடை நாட்டிவிட்டால் போதும். காற்றில் சரசரத்து ஒலியெழுப்பும் அதைக் கண்டு அஞ்சி எல்லா உயிர்களும் ஓடிவிடுகின்றன. ஆம், தானியத்தைக் காவல் காக்கும் வீரனும் ஆகின்றன அவை.
நீர், நிலம், வானம் எங்கும் பாலித்தீன் பைகள். அவை இயற்கையின் பதிலியாகின்றனவா? இயற்கையாகவே ஆகிவிட்டனவா? இனி மீன்களைக் காண முடியாது; மீனெனப் பாலித்தீன் பை. இரட்டை வால் குருவியைக் காண முடியாது; குருவியாய்ப் பாலித்தீன் பை. பாம்புச் சட்டைகளை எங்கே பார்க்கப் போகிறோம்? பாம்புச் சட்டையெனப் பாலித்தீன் பை. சோளக்கொல்லை பொம்மை ஏது இனி? கொம்பில் கட்டிய பாலித்தீன் பை. இவ்விதம் எல்லா உருவமாகவும் சட்டென மாறிக்கொள்ளும் பாலித்தீன் பை நம் வாழ்வையும் அவ்விதம் மாற்றிவிட்டதா?
சோளக்கொல்லை பொம்மையை உருவாக்குவது ஒரு கலைச்செயல். அதை நாட்டுவதும் கலைச் செயல்பாடுதான். ஆனால், இன்றைக்கு அதற்குப் பதிலியாக நிமிடத்தில் அமைகிறது பாலித்தீன் பை. கலைத்தன்மை அகற்றப்பட்டுப் பயன்பாட்டுப் பண்பு மட்டுமே போற்றப்படும் உலகத்தில் வாழ்கிறோமா? கலைக்குத் தீது; பயன்பாட்டில் நன்று எனலாமா? பயன்படுத்தி எறியும் காலத்திற்கு இதுதான் உகந்ததா?
இந்தக் கவிதை என்னதான் சொல்கிறது? நீரென்றால் மீன் நீந்த வேண்டும்; கம்பம் என்றால் பறவை அமர வேண்டும்; தரையென்றால் பாம்பு ஓட வேண்டும்; வயலென்றால் பொம்மை நிற்க வேண்டும். அப்படிச் சொல்கிறதா? அவையெல்லாம் இல்லை என்றாலும் அவற்றைக் காணும் பார்வையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறதோ? எப்படி எப்படியெல்லாமோ பாலித்தீன் பை பற்றி – இல்லையில்லை, கவிதை பற்றிப் பேசலாம் போலும். எல்லா உருவும் கொள்ளும் பாலித்தீன் பை கவிதை உருவும் கொண்டுவிட்டதோ?
கவிதையின் பதிலி பாலித்தீன் என்றாகிவிட்ட காலம்.
—–
நன்றி:
https://minnambalam.com/k/2019/02/01/15