கவிதை மாமருந்து – 12

 

பனையாய் நிற்கும் காளியம்மை!

அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். நிலத்திற்கும் காலத்திற்குமேற்ப வாழும் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள்கள் ஆகியவையே கருப்பொருள்கள். உரிப்பொருளின் இயல்புக்கேற்ப அமையும் பின்னணிக் களத்தில் இடம்பெறுபவை இவை. நாடகத் திரைச்சீலைகளை இங்கே மனத்தில் கொள்ளலாம். வீட்டின் வரவேற்பறை திரைச்சீலையில் காட்சியாகிறது என்றால் எவ்விதம்? அங்கே இடம்பெறும் இருக்கைகள், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்களே அவ்விடத்தை வரவேற்பறை என அர்த்தப்படுத்தும். கவிதையில் இவற்றைக் கருப்பொருள் என்பர். உணவு, விலங்கு, மரம், பறவை, நீர் உள்ளிட்டவை கருப்பொருளில் அடங்குவன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய கருப்பொருள்களை அகப்பொருள் இலக்கண நூல்களும் உரையாசிரியர்களும் விரிவாகவே கூறியுள்ளனர். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மரங்களின் பெயர்களைச் சொல்லும்போது அகில், வேங்கை, கொன்றை, காயா, காஞ்சி, மருதம், புன்னை, பாலை, இருப்பை முதலியவை காணப்படுகின்றன. இப்பட்டியலில் பனை இல்லை. பனை தமிழ்நாட்டின் மரமாயிற்றே, அது ஏன் பட்டியலில் இடம்பெறவில்லை என்னும் கேள்வி எனக்குண்டு.

கவிதை வெளிப்படுத்த முனையும் உணர்வு நிலைக்கேற்பப் பருவமும் அப்பருவத்தின் இயற்கை நிலையும் காட்சிப்படுத்தப்படும். தூரத்தில் இருந்து பார்த்தாலே போதும், ஒரு மரம் தன் நிலையைப் பூக்களாலோ, இலையுதிர்வாலோ, பழங்களாலோ காட்டிவிடும். பனையைப் பொறுத்தவரை அது சாத்தியமில்லை. நெருங்கிப் பழகுவோருக்கே பனை தன்னை வெளிப்படுத்திக் காட்டும். மற்றவருக்கு அது எப்போதும் ஒரே மாதிரி இருப்பது போலவே தோன்றும். அது பூக்கும்; அப்பூக்கள் கண்ணுக்கு விருந்து படைப்பதில்லை. அது காய்க்கும்; அவற்றை ஓலைகளுக்கிடையே பொத்தி வைத்துக்கொள்ளும். அது வாரி வழங்கும்; அவை முயற்சி உடையவருக்கே கிடைக்கும். இத்தகைய பண்புகளால் பனை கவிஞர்களுக்கு ஈர்ப்புடையதாக அமையவில்லை போலும்.

பனை எனும் கற்பக மரம்

பனை தமிழ்நாட்டில் எங்கும் நிறைந்து நின்றிருக்கும் மரம். அது கருப்பொருளில் மையமான இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். எப்படியோ தவறிவிட்டது. ஆனால், மக்கள் மனதில் அது கற்பகத் தருவாக வீற்றிருக்கிறது. ஆண்டு முழுதும் நமக்கு எதையோ ஒன்றைத் தந்து கொண்டேயிருக்கும் இயல்புடையது பனை. ஒரு பருவத்தில் கள்ளும் பதநீரும் ஈயும். இன்னொரு பருவத்தில் நுங்கு தரும். அடுத்த பருவத்தில் பழம் கொடுக்கும். அதைக் கடந்தால் பனங்கிழங்கு வழங்கும். பனையில் பயனில்லாத பொருள் ஏதேனும் உண்டா? எத்தனையோ நூற்றாண்டுகளாகப் பனையோலைக் கூரைக்கடியில்தான் வாழ்ந்தோம். பனையோலையில்தான் எழுதியும் படித்தும் வந்தோம். பனையோலைப் பொருள்களைக் கொண்டே அன்றாடத்தைப் புழங்கினோம். பத்திருபது பனையிருந்தால் பெருங்குடும்பமே பசியாறிப் பிழைத்துவிடலாம்.

அப்பேர்ப்பட்ட பனை இன்று அழிந்துவருகிறது; எண்ணிக்கை குறைகிறது. ஆகவே, நம் சூழலுக்குப் பொருத்தமான பனையை வளர்க்கும் இயக்கம் இன்று பலராலும் முன்னெடுக்கப்படுகிறது. பனையைப் பற்றிய தனி நூல்கள் வெளியாகின்றன. கவிதையிலும் புனைவிலக்கியத்திலும் பனை பரவலாக இடம்பெறுகிறது. இது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். பனையை மக்கள் எவ்விதம் காண்கிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக என்.டி.ராஜ்குமார் தம் கவிதை ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். மனதுக்கு இசைவான கவிதை அது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒலித்த தனிக் கவிக்குரல் என்.டி.ராஜ்குமார். தெறி, ஒடக்கு, ரத்த சந்தனப் பாவை, காட்டாளன், கல் விளக்குகள், பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம் முதலியவை அவர் கவிதைத் தொகுப்புகள். மலையாளத்திலிருந்து ஏ.ஐயப்பன் கவிதைகள், பவித்ரன் தீக்குனி கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். கலை இலக்கியப் பெருமன்றம் சார்ந்து இயங்குபவர். பாடகர். நவீனக் கவிதைகளை நிகழ்த்திக் காட்டுபவர். ‘மதுபானக் கடை’ திரைப்படத்தில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பொலிந்தவர்.

மக்கள் மொழியில் எழுத்தில் பதிவாகாத உக்கிரமான பகுதிகளைத் தேர்வு செய்து அவற்றைக் கவிதையாக்கியவர் என்.டி.ராஜ்குமார். ‘என் எழுத்துகளில் நான் வாதைகளை ஏவி விட்டிருக்கிறேன்’ என்று பிரகடனம் செய்தவர். ‘உயிரை விழுங்கி நின்ற பேயாண்டி நான்’ என்றும் ‘பூமியில் பிறப்பெடுத்த நான் பிறை சூடிய பல்லொடு நின்ற கூத்தன்’ என்றும் ஆவேசம் காட்டியவர். காமம் தீர்த்த மனைவியை நோக்கிச் ‘சூசகமாய் ஒரு வார்த்தை சொல், சோற்றில் என் அம்மாவைக் கொன்றுவிடுகிறேன்’ என்று கூறும் மகன் குரலைக் கவிதையாக்கிப் பொதுமனத்தில் அதிர்ச்சி கொடுத்தவர். மாந்திரீக மொழியும் ஆவேசமும் அதிர்ச்சியும் கொண்டு துலங்கும் அவர் கவிதையுலகம் இதுவரை பதிவாகாத தமிழ் வாழ்வின் நுட்பமான பகுதியைக் கண்டறிந்து பொதுமனத்தைக் கிழிக்கும் வல்லமை கொண்டு துலங்குவதாகும். பொதுவாக அவர் தம் கவிதைகளுக்குத் தலைப்பு வைப்பதில்லை. கவிதையின் தொடக்க அடியைக் கொண்டுதான் அடையாளப்படுத்த முடிகிறது. ‘நுரை பொங்கும் கள் மயக்கம்’ எனத் தொடங்கிப் பனையைப் பற்றி அவர் எழுதிய கவிதை (கல் விளக்குகள், ப.28) இது:

கவிதை மாமருந்து - 12

நுரை பொங்கும் கள் மயக்கம்

பழங்கொத்த வரும் பட்சிகளின் கிறுகிறுப்பு

கூடு கட்டிக் களிக்கும்

அண்ணிப் பிள்ளைகளும்

குருவிகளும்

பசி தீர்க்கப் பனையாய் மாறிய காளியம்மையென

மஞ்சணையிட்டுத் தொழும் பக்தி

இப்பொழுதும் சொல்வதுண்டு

இடி விழுந்த பனைமரத்தைப் பார்த்து.

பனையின் அடையாளம் கள். தமிழரின் வாழ்வியல் அடையாள பானமாகிய கள்ளுக்கு இன்று தடையிருக்கிறது. ஆனால், காலகாலமாக உணவாகவே கள்ளைப் பருகி வந்தோர் நம் முன்னோர். கள் பருவத்தில் மனிதர்களும் பறவைகளும் கள்ளைப் பருகிவிட்டுக் களித்துத் திரியும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன. இன்று பெருமகிழ்ச்சியைக் குறிப்பதாக இருக்கும் ‘களிப்பு’ என்னும் சொல்லே கள் உண்பதால் விளையும் மனநிலையை விளக்க உருவான சொல்தான். கள் விளைக்கும் நுட்பம் மகத்தானது. பாளைகளைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் மனித வாழ்வின் சாதனைகளில் ஒன்று என்றே சொல்ல வேண்டும். ஆனால், இப்படியே காலம் போகுமானால் இத்தகைய அருந்தொழில்நுட்பத்தை அடுத்தடுத்த தலைமுறைகள் மறந்துவிடக் கூடும்.

இக்கவிதையில் கள்ளில்தான் தொடங்குகிறது பனையின் அறிமுகம். சற்றே புளித்து நுரை பொங்கும் கள்ளே பலருக்கும் விருப்பமானது. அக்கள்ளே மயக்கம் தரும். பழங்கொத்த வரும் பறவைகளுக்கு எதிர்பாராமல் கிட்டும் கள். சுனையோரத்தில் இருக்கும் மரங்களிலிருந்து விழும் பழங்களால் சுனை நீரே மதுக்குடமாக மாற அதைக் குரங்குகள் மாந்தித் துயில் கொள்ளும் காட்சியைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. இக்கவிதையில் பழம் நினைத்து வரும் பறவைகளுக்குக் கள் கிடைக்கிறது. கள் பருகிப் பறவைகள் கிறுகிறுத்துக் கிடக்கும்.

பனையில் கூடு கட்டி வாழ விரும்புபவை அணில்கள். எங்கள் ஊரில் ‘அணல்’ என்போம். ராஜ்குமாருக்கு ‘அண்ணிப் பிள்ளை.’ மெத்தெனக் கூடு கட்டப் பொருள் தேடி அணில் வேறெங்கும் போக வேண்டியதில்லை. பன்னாடையின் மென்மைப் பகுதிகளை உரித்தெடுத்து ஓலை இடுக்கில் எளிதாகக் கூடு கட்டிக்கொள்ளலாம். கரிக்குருவி உள்ளிட்ட பலவகைக் குருவிகளும் பனைமரத்தில் கூடு கட்டி வாழ்வதைப் பெரிதும் விரும்புபவை. அடர் ஓலைகளும் பனங்கருக்குகளும் நெருங்கிய பன்னாடைகளும் தரும் பாதுகாப்புத்தான் அதற்குக் காரணம்.

கள்ளும் பழமும் பறவைகளுக்குத் தரும் பனை மனிதருக்குத் தன்னையே தருகிறது. ஓலை, பாளை, நுங்கு, பழம், மரம் எனப் பனையின் எல்லாம் மக்களின் அன்றாட வாழ்வோடு கலந்துவிட்டவை. அதனால்தான் மக்கள் மஞ்சணை (மஞ்சள் பூசுதலோ?) இட்டுப் பக்தியோடு தொழுகிறார்கள். பசி தீர்க்கும் பனைதான் தெய்வம். காளியம்மையின் வடிவம் பனை.

‘இட்டேரி மேலே ஏகாந்தமாய் நின்றிருக்கும் பனையே, பட்ட மனத்திற்கு நீதான் துணையே’ என்று பனையைக் குறித்து நான் எழுதிய கீர்த்தனையை வாசித்த டி.எம்.கிருஷ்ணா ‘ஏகாந்தமாய் நின்றிருக்கும் பனை எனக்கு விஸ்வரூம் கொள்ளும் பெருமாளின் வடிவத்தை நினைவுறுத்துகிறது’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. கிருஷ்ணாவுக்குப் பெருமாள்; ராஜ்குமாருக்குக் காளியம்மை. எப்படியானாலும் கடவுளின் வடிவம்தான் பனை.

பனையாய் மாறி நமக்குக் காட்சி தருகிறாள் காளியம்மை. பனையின் கருமைக்கும் உயர்ந்து நிற்கும் வடிவுக்கும் உச்சியில் தலைவிரிக்கும் நிலைக்கும் காளியம்மை பொருத்தம். காளியாய் மக்கள் மனதில் இருக்கிறது பனை. சரி, இன்று எப்படியிருக்கிறது பனை? இடி விழுந்து மொட்டையாய் நிற்கிறது பனை. ஒரு மரத்தைக் கருக்கிய இடியையா கவிதை சொல்கிறது? சூழலின் மொத்த இடியும் கவிந்து விழுந்து பனைகளைக் கருக்கிக் கொண்டிருப்பதைக் கவிதை சொல்கிறது. எனினும் மக்கள் நினைவில் இப்போழுதும் பசி தீர்க்கும் காளியம்மைதான் பனையாய் மாறி நிற்கிறாள். காளியம்மையைக் காப்பாற்றுவோமா என்னும் கேள்வியை இக்கவிதை எழுப்புகிறது.

—–

நன்றி: மின்னம்பலம், 2018/02/14

Add your first comment to this post