கவிதை மாமருந்து 5

 கைவிடப்படுதல் என்னும் வரம்!

கவிதை மாமருந்து 5: கைவிடப்படுதல் என்னும் வரம்!

பெருமாள்முருகன்

நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை

கலாச்சாரம் பற்றிய பெருமைகளும் பீற்றல்களும் மேலோங்கி வரும் காலம் இது. மதம், சாதி, கடவுள், பெண், அரசியல், இலக்கியம், கல்வி என எதைப் பற்றிப் பேசினாலும் அங்கே ஒரு கலாச்சாரக் குரல் முன்னால் வந்து நின்றுகொள்கிறது. அது முன்னோர் வழியைப் பொன்னே போலப் போற்ற வேண்டும் என்கிறது. காலகாலம் குறித்து விதந்து பேசுகிறது. தொடர்ந்து வரும் ஒன்றை விமர்சிக்கலாமா, கேள்வி கேட்கலாமா, மறுக்கலாமா என்றெல்லாம் ஒற்றை வாதத்தை விதவிதமாக அந்தக் கலாச்சாரக் குரல் முன்வைக்கிறது. அது வாயைத் திறந்தால் அடிக்கும் நாற்றம் சகலத்தையும் ஒடுக்கிவிடுகிறது. கலாச்சாரத்தை முன்னிறுத்தி ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சுயநலக் குரலாகிய அதற்குத் தெரிந்தும் தெரியாமலும் புறத்தில் ஏராளமான கலாச்சார மாறுதல்கள் அனுதினமும் நடந்துகொண்டே இருக்கின்றன.

ஒரே ஒரு கருவி நம் வாழ்விற்குள் நுழைந்து நம் இயல்புகளை எல்லாம் நொடிக்குள் மாற்றிவிடும் அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் செல்பேசி ஒவ்வொருவரின் கைக்குள்ளும் புகுந்த பிறகு பயணங்களில்கூடத் தேவையற்ற சத்தங்களை, கத்தல்களைக் கேட்க முடிவதில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் பொதுவிடங்களில் அமைதியைக் கடைப்பிடிக்கும் சமூகமாக நம்முடையதும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது என்று தோன்றுகிறது. இரும்புக் காதுத் தமிழர்களுக்குத் தோல் காது உருவாகிவிடும் என்று நம்பிக்கை வருகிறது. என்ன, மஞ்சள் பூசிக் குளிக்கும் பழைய நினைவு வயதான காலத்திலும் வந்தது போலப் பொதுவிடத்தில் செல்பேசியில் கத்திப் பேசுவதும் பிறரைப் பற்றிய அக்கறையின்றி கண்ட பாடல்களை ஒலிக்கவிடுவதும் எனச் சத்தம் வேறு வடிவம் எடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இவை இளைய தலைமுறையிடம் இல்லை என்பதுதான் ஆறுதல். அது காது கேளாத தலைமுறையாகிவிடுமோ என்னும் அச்சமும் தோன்றுகிறது.

கவிதை மாமருந்து 5

தொழில்நுட்பமும் கால மாற்றமும்

இரண்டாயிரத்திற்குப் பிறகு உள்ள காலத்தைச் ‘செல்பேசிக்கு முன், செல்பேசிக்குப் பின்’ எனப் பிரித்துக் காண வேண்டும். அதேபோல 1990ஐக் கணக்கில் கொண்டால் ‘தொலைக்காட்சிக்கு முன், தொலைக்காட்சிக்குப் பின்’ என்றுதான் பிரிக்க முடியும். 1980களில் தொலைக்காட்சி ஓரளவுக்கு அறிமுகமாகித் தூர்தர்ஷன் ஒளிபரப்பு வந்தது. 1990களில் படிப்படியாக ஏராளமான தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பது அவசியமாயிற்று. அது கௌரவத்திற்கு உரியதாகக் கருதப்பட்டது. திருமணச் சீர்களில் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இடம் கிடைத்தது. இன்று அது சாதாரணப் பொருளாகி எங்கும் நிறைந்திருக்கிறது. நுகர்வுப் பொருள்களின் இயல்புக்கேற்ப ஒவ்வொருவரின் வாங்கும் வசதிக்குத் தக்க விலையில் கிடைக்கிறது. அரசும் இலவசமாய் எல்லா வீடுகள், கடைகளுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.

திரைப்படம், நாடகத் தொடர்கள் ஈர்த்த காலம் மாறிச் செய்தி அலைவரிசைகள் ஒவ்வொரு கணமும் திகிலையும் பரபரப்பையும் கொடுப்பனவாகி உள்ளன. நடிகர் சங்கத் தேர்தலை ஒவ்வொரு செய்தி அலைவரிசையும் போட்டி போட்டுக்கொண்டு நாள் முழுதும் நேரலையில் ஒளிபரப்பிய அன்று எனக்குப் பெரும் பதற்றம் ஏற்பட்டது. என்னவாகுமோ, ஏதாகுமோ என மனம் அடித்துக்கொண்டது. வாக்குச் செலுத்த வந்த நடிகர் நடிகைகள் சில வார்த்தைகள் பேசிப் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டிருந்தார்கள். இப்படித்தான் செய்தி அலைவரிசைகள் ஒவ்வொரு கணமும் முறிவுச் செய்திகளை (Breaking news) பளிச்பளிச்செனக் காட்டிப் பதற வைக்கின்றன. என்னதான் செய்வது நாம்? நமக்குத் தெரியாமல் உலகத்தில் ஏதாவது நடந்துவிடப் போகிறது என்னும் பரபரப்பில் அவ்வப்போது செய்திகளைப் பார்த்துக் கொள்வதைத் தவிர.

கடந்துபோன யுகம்

தொலைக்காட்சி இப்படி வருவதற்கு முன் கிராமங்களின் பொதுவெளிகளும் நகரத்து வீதிகளும் இருந்த நிலை கண்ணில் ஆடுகிறது. கிராமத்துத் தெருக்கள் பெண்களின் பொதுவெளியாக இருந்தன. பல வீடுகளில் வாசலிலேயே சமைப்பார்கள். எந்த வேலையாக இருப்பினும் வெளியே வந்து உட்கார்ந்துகொண்டு போகும் வரும் யாரிடமாவது நான்கு வார்த்தை பேசியபடி செய்வார்கள். ஊர்ப் பொதுச் சாவடிகள், திடல்கள் இருக்கும். அங்கே முன்னிரவில் ஆண்களின் அரட்டைகளும் இளைஞர்கள், சிறுவர் சிறுமியரின் விளையாட்டுகளும் நடக்கும். யாராவது யாரையாவது வந்து அழைத்தபடி இருப்பார்கள். நகரத்துத் தெருக்களிலும் அண்டை வீட்டாருடன் உரையாடல் நடக்கும். ஒரே தெருவில் வசிப்போர் சேர்ந்து செயல்படும் தருணங்கள், இணைந்து சென்றுவரும் விசேஷங்கள் உண்டு. பொதுவாக மக்கள் நடமாட்டமும் பேச்சுச் சத்தங்களும் இருக்கும்.

தொலைக்காட்சி வீடுகளுக்குள் நுழைந்த பிறகு இந்தக் காட்சி அப்படியே மாறிவிட்டது. கிராமங்களும் வீட்டுக்குள் அடைந்துவிட்டன. வீட்டுக்குள் ஒருவர் நுழைந்ததும் முதலில் தேடுவது ரிமோட்டைத்தான். தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு அமர்வது அல்லது ஓடிக்கொண்டிருக்கும் அலைவரிசையை மாற்றுவது என்பதுதான் முதல் காரியம். வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவதும்கூட தொலைக்காட்சியின் பின்னணியில்தான். எந்நேரமும் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில் வீட்டில் தொலைக்காட்சி ஓடாத நேரமில்லை. பின்னணியில் அதன் சத்தம் இல்லை என்றால் எதையோ இழந்துவிட்ட மாதிரி தோன்றுகிறது. விருந்தினர்கள் வந்தால் மனிதர்களைப் பார்க்கும் மகிழ்ச்சி இல்லை. ‘ஐயோ, இந்த நேரத்தில் எதற்கு வந்தார்கள்’ என்று நினவோடி வேண்டா வெறுப்பாக வரவேற்கிறோம். வீட்டுக் காரியங்களை எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்கிறோம்.

தொலைக்காட்சியால் வீட்டுக்குள் புதுப்புது வகையான மனத்தாங்கல்களும் சண்டைகளும் ஏற்படுகின்றன. எந்த அலைவரிசை ஓட வேண்டும் என்பதில் வாதம் தொடங்கி வீட்டில் உறவுகளுக்கிடையே பெரும் மனத்தாங்கலும் சண்டையும் நிகழ்கின்றன. நிகழ்ச்சிகள் பற்றிய விவாதங்களால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஏதோ ஒருநாள் இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லை. காலையில் என் பிள்ளைகளிடம் அதைச் சொன்னபோது கேட்டார்கள், ‘கனவுல அந்த நாலு பேரு வந்து கத்திப் பயமுறுத்துனாங்களாப்பா?’ எனக்குப் புரியவில்லை. ‘யாரு அந்த நாலு பேரு?’ என்றேன். ‘அதான் தெனமும் விவாதம்னு பாப்பயே. அதுல வந்து கத்துவாங்களே, அந்த நாலு பேருதான்’ என்றார்கள். அது உண்மையாக இருக்கலாம் என்றும் எனக்குத் தோன்றியது.

பொதுவெளியில் சகஜமாக இயங்கும் மக்களின் இயக்கப் போக்கையே மாற்றிவிட்டது இந்தப் பெட்டி. அத்துடன் உறவுகளுக்கிடையேயான பிரச்சினைகளின் முகத்தையும் இது வேறாக்கியிருக்கிறது. நம் அன்றாட நடவடிக்கைகளை வடிவமைப்பதும் செயல்முறைகளைத் தீர்மானிப்பதும் மனோபாவங்களை உருவாக்குவதும் என விரியும் தொலைக்காட்சியின் பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. உலக அளவில் சமூகவியல் ஆய்வுகளில் தொலைக்காட்சி இன்று முக்கிய இடம்பெறுகிறது. நாம் இன்னும் அத்தகைய ஆய்வுகளில் முன்னேறவில்லை. ஆனால், இன்று நிலவும் தனிநபர் பிரச்சினைகளுக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கும் தொலைக்காட்சியின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெற வேண்டியிருக்கிறது.

கவிதை மாமருந்து 5

கவித்துவப் பிரதிபலிப்பு

ஆய்வுகள் காத்திருந்து உருவாகும். கவிதை அப்படியல்ல. அன்றாடத்திற்கு முகம் கொடுக்கும். எனினும் தொலைக்காட்சி பற்றியோ அதனால் ஏற்பட்டக் கலாச்சாரப் பாதிப்புகள் குறித்தோ கவிதைகள் பெரிதாக எழுதப்படவில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் தொலைக்காட்சி பற்றிப் போகன் சங்கர் எழுதிய கவிதை (சிறிய எண்கள் உறங்கும் அறை, 2018, காலச்சுவடு பதிப்பகம், ப.69) எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. அக்கவிதையை வாசித்தபோது எனக்கு மேற்கண்ட எண்ணங்கள் தோன்றின.

போகன் சங்கர் (1972) இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிக் கவனம் பெற்றவர். இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். எரிவதும் அணைவதும் ஒன்றே, தடித்த கண்ணாடி போட்ட பூனை, நெடுஞ்சாலையை மேயும் புள், சிறிய எண்கள் உறங்கும் அறை – ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகள். போக புத்தகம், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் – மற்ற இரண்டு நூல்கள். போகன் சங்கர் கவிதை எழுதுமுறையில் தனித்தன்மை கொண்டவர். அன்றாடப் பேச்சு மொழியையும் அதன் தொனிகளையும் கவிதைக்கு இயல்பாக இடம் மாற்றுபவர். அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மொழியைக் கையாண்ட போதும் அவரது கவிதைக்குள் நுழைவது சற்றே சிரமம். காரணம் முழுக் கவிதையையும் பெரும்பாலும் அவர் எழுதுவதில்லை. கவிதைச் சாரத்தை மட்டும் எழுதிவிடுவார். அதிலிருந்து கவிதையின் மீதப் பகுதிகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

அதாவது நவீன கவிதை ஒன்றின் இறுதி வரிகள் எப்போதும் அழுத்தமாக அமைவதுண்டு. சில சமயம் அவ்வரிகள் மட்டும் தனித்திருந்தாலே போதும் என்று தோன்றும். அதற்கு முந்தைய வரிகள் எல்லாம் இறுதி வரிகளை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளாக அமையும். படிக்கட்டுகளை விட்டு ஒரே தாவலில் இறுதியை நோக்கிச் சென்றுவிடுவது போகன் சங்கர் கவிதைகளின் இயல்பு. நவீன வாழ்வின் ஒன்றுக்கொன்று இயைபற்ற தன்மை போலவே கவிதை வரிகளும் இயைபின்றி இருப்பதும் உண்டு. தத்துவம் போலத் தோன்றும் சில வரிகளை வேண்டுமென்றே வைத்துப் பகடியா உண்மையா எனத் திகைக்க வைக்கவும் செய்வார். சில பகடிகளை வெளிப்படையாகவும் செய்வார். கவிதைகளுக்கு அவர் தலைப்பு வைப்பதில்லை. ஆகவே ஒரு கவிதையைக் குறிப்பிட்டுச் சொல்வது சிரமம். இத்தகைய சிரமங்களை எல்லாம் பட வேண்டும் என்பதே அவர் நோக்கமாகவும் இருக்கலாம். அப்படியெல்லாம் செய்யக்கூடியவர்தான் அவர். ஆகவே தலைப்பற்ற இக்கவிதையைத் ‘தொலைக்காட்சிக் கவிதை’ என்று அடையாளப்படுத்துகிறேன். அக்கவிதை:

கவிதை மாமருந்து 5

தொலைக்காட்சிக் கவிதை

நான் வெறிச்சோடிய சாலைகளில் தனியே நடந்து வருகிறேன்

மக்கள் தொலைக்காட்சிச் சதுரங்களில் ஆழ்ந்திருக்கிறார்கள்

யாரும் காணாது நகருக்கு மழை வந்து போய்விட்டது

அவர்கள் தங்களது அடுத்த முறிவுச் செய்திகளுக்காகக்

காத்திருக்கிறார்கள்

இடைவெளிகளில் இரவுணவு அவசரமாகத் தயாரிக்கப்பட்டு

விழுங்கப்படுகிறது

எனக்கு டீன் யங்கின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது

நான் தொலைக்காட்சிகளை அஞ்சுகிறேன்

அது எப்படி உங்கள் நண்பரைப் போல நடிக்கிறது!

இதனிடையில் மழையை நானும் கைவிடப்பட்ட ஒரு நாயும் மட்டும்

பார்த்தோம்.

இக்கவிதையைப் பொருள் கொள்வதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு தொடராக முடிகிறது. ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு தகவலைத் தருகிறது. தகவல்களுக்கு இடையே இருக்கும் இயைபு ஒருவகையான மன உணர்வைத் தோற்றுவிக்கிறது. தொலைக்காட்சியில் மூழ்குவதைப் போலவே தொலைக்காட்சி தொடர்பான சிந்தனைக்குள் நம்மை அறியாமல் அம்மன உணர்வு நம்மை கொண்டு சென்றுவிடுகிறது. கவிதை முதலில் வெறிச்சோடிய சாலையைக் காட்டுகிறது. வெறிச்சோடிய காரணத்தை அடுத்த வரி சொல்கிறது.

மூன்றாவது நம்மைச் சங்கடத்துள் ஆழ்த்துகிறது. ‘யாரும் காணாது நகருக்கு மழை வந்து போய்விட்டது.’ எப்போது மழை பெய்யும் என்னும் எதிர்பார்ப்புடனும் மழை பெய்யாதா என்னும் ஏக்கத்துடனும் காத்திருக்கும் நமக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் வரிதான். தொலைக்காட்சி நம்மை விடுவதில்லை. செய்தி அலைவரிசைகள் ஒவ்வொரு நிமிடமும் ‘முறிவுச் செய்தி’ போட்டு நம்மை ஈர்த்துக் கொண்டேயிருக்கின்றன. நாமும் ஒவ்வொரு கணமும் முறிவுச் செய்தியை எதிர்பார்த்திருக்கிறோம். விளம்பர இடைவேளைகளில் அவசர அவசரமாக உணவு தயாரிக்கிறோம். அதை ஆரஅமர இருந்து உண்பதில்லை. ‘விழுங்கப்படுகிறது’ என்கிறது கவிதை.

கவிதை சொல்லிக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ‘டீன் யங்’ என்பவரின் கவிதை ஒன்று நினைவு வருகிறது. அந்தக் கவிதை இப்படிச் சொல்கிறது: ‘நான் தொலைக்காட்சிகளை அஞ்சுகிறேன், அது எப்படி உங்கள் நண்பர்களைப் போல நடிக்கிறது!’ டீன் யங்கின் கவிதை நினைவு வருவதாகச் சொன்னதால் அக்கவிதை வரிகளாகவே இவை இருக்கும் என எடுத்துக்கொள்கிறேன். ஒருவேளை நினைவு வந்த டீன் யங்கின் கவிதை வேறாகவும் இருக்கலாம்; இவ்வரிகள் போகன் சங்கருடையதாகவும் இருக்கலாம். எங்கும் நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தாத கவிஞர் இதில் ‘நடிக்கிறது!’ என வியப்புக்குறியைப் பயன்படுத்தியுள்ளார். ஒருவேளை டீன் யங் பயன்படுத்தியிருக்கலாம். அதைப் போலவே ஒற்றை மேற்கோள் குறியைக் கவிஞர் பயன்படுத்தியிருக்கலாம். வாசகப் பங்கேற்பு வேண்டும் என்பதற்காக விட்டுவிட்டார் போலும்.

தொலைக்காட்சி உண்மையில் நம் நண்பரல்ல; நண்பரைப் போல நடிக்கிறது. ஏன் நடிக்கிறது? அந்த நடிப்புக்கான நோக்கம் என்ன? அதற்குப் பல பதில்களைச் சொல்லலாம்; தேடலாம். இதனிடையில் மழையைக் கவிதை சொல்லியும் கைவிடப்பட்ட ஒரு நாயும் மட்டும் பார்க்கிறார்கள். மழையை வளத்தின் குறியீடாகக் கொண்டால் வளமான எத்தனையோ விஷயங்களை அது குறிக்கிறது. ‘நானும் கைவிடப்பட்ட நாயும்’ மழையைக் காண்கிறார்கள். இவர்கள் இருவருமே பாக்கியவான்கள். கைவிடப்படுதல் என்பது எப்பேர்ப்பட்ட நன்மையைச் செய்திருக்கிறது பாருங்கள். நாம் அனைவரும் கைவிடப்படுவோமாக.

கவிதை மாமருந்து 5