கவிதை

குரல்கள்

கவிதை

மனிதர்கள் குரல்களாயினர்
துர்வாடையற்ற குரல்கள்
அழுக்கு பொசுக்கிய குரல்கள்
அமுது தோய்ந்து இசைக்கும்
அபூர்வக் குரல்கள்

ஒரு குரல் பூ மணத்தைக் குழைத்தெடுத்துக் கொண்டு
வந்து சேர்கிறது
ஒரு குரல் பூரண அன்பில் மூழ்கித் திளைத்து
எழுந்து வருகிறது
ஒரு குரல் கசப்புதிர்த்த நிறைவில் மண்ணில் புரண்டு
திமிறி நடக்கிறது
ஒரு குரல் நிலவொளி வாங்கிக் குளிர்ந்து மயங்கி
மெல்லப் பரவுகிறது
ஒரு குரல் புடம் போட்டு வண்ணம் தீட்டிப்
படர்ந்து செழிக்கிறது

மனிதர்கள் மகத்துவக் குரல்களாயினர்
இன்னும்
மனிதர்கள் பறவைகளாக வேண்டும்.
—–