ஜெயமோகன் தளத்தில் 21-06-20 அன்று ‘வம்புகளும் படைப்பியக்கமும்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள ( https://www.jeyamohan.in/133219/#.Xu9xeZoza00 ) ‘கேள்வி – பதில்’ வாசித்தேன். பா.செயப்பிரகாசம் தொடர்பாக ‘ஒரு இடதுசாரியின் கடிதம்’ ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தின் தொடர்ச்சியில் எழுத்தாளர்கள் கையொப்பமிட்ட கண்டன அறிக்கை ஒன்று வெளியாயிற்று. அதில் என் பெயரும் இருந்தது. அது தொடர்பான கேள்வி ஒன்று. மாதொருபாகன் பிரச்சினையின் போது எனக்கு ஆதரவு தெரிவித்து ஜெயமோகன் பல கட்டுரைகள் எழுதினார், என்றாலும் அவருக்கு எதிரான அறிக்கை ஒன்றில் நான் கையொப்பம் இட்டிருக்கிறேன் என்பதைக் குற்றமாகக் காட்டுகிறது அக்கடிதம். இந்த வகையான பார்வையைக் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சந்தித்து வருகிறேன்.
மாதொருபாகன் பிரச்சினையின் போது விரல் விட்டு எண்ணத்தக்க ஓரிருவர் தவிர எழுத்தாளர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்தும் ஆதரவுகள் வந்தன. கருத்துரிமையின் பக்கம் நிற்க வேண்டும் என்னும் உணர்வு எந்தச் சந்தர்ப்பத்தையும்விட அப்போது மோலோங்கியது. எனக்கு எதிரான கும்பல் வன்முறையை எதிர்த்து ஜெயமோகனும் எழுதினார்; பேசினார். கும்பல் வன்முறைக்கு எதிரான செயல்பாடுகளில் அதுவும் ஒன்று என்று அவர் பொதுமைப்படுத்தி இப்போது சொல்கிறார். அப்படித்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். இருப்பினும் அச்சமயத்திலும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இப்போதும் நன்றி மறக்கவில்லை.
மாதொருபாகன் பிரச்சினை முடிந்து நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு மீண்டும் எழுதத் தொடங்கிய இந்த மூன்றாண்டுகளில் என் முன் இது பெரும்பிரச்சினையாக நிற்கிறது. சமகால இலக்கியம் தொடர்பாக ஏதேனும் கருத்துத் தெரிவித்தால், எழுதினால் அது ‘நன்றி மறந்ததாகிவிடுமோ’ என்னும் பிரச்சினை. ‘அப்போது நான் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தேன்’ என்று சொல்லி ‘என் படைப்புகள் பற்றி நீங்கள் எழுத வேண்டும்’ என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்ப்பந்திக்கும் சிலரும் இருக்கிறார்கள். ஏதேனும் விமர்சனமாக ஒரு கருத்தைத் தெரிவித்தால் அது நன்றி மறந்த செயலாகப் பார்க்கப்படுகிறது. ‘நன்றி மறந்ததாகிவிடுமோ’ என்னும் எண்ணத்தில் நானும் என்னைச் சுருக்கிக் கொள்கிறேன். லட்சக்கணக்கானவர்களுக்கு நன்றி விசுவாசம் உள்ளவனாக இருந்தே கழிய வேண்டியது என் மிச்ச ஆயுளின் விதி போலும்.
அக்கேள்விக்கான பதிலில் ஜெயமோகன் இப்படி எழுதுகிறார் : ‘பெருமாள்முருகன், சமயவேல், சுகுமாரன் போன்றவர்கள் எப்போதுமே என் மேல் நட்போ நல்லெண்ணமோ கொண்டவர்கள் அல்ல. சென்ற முப்பதாண்டுகளில் அவர்கள் என்னைப் பற்றி எதுவுமே உயர்வாகவோ ஏற்பாகவோ சொன்னதில்லை. கசப்புடன் நிறையப் பேசியுமிருக்கிறார்கள். நேரில் பார்த்தால் புன்னகையுடன் பேசிக்கொள்வோம் — காலச்சுவடு ஆசிரியர் முன்னிலையில் என்றால் அதுவும் பேசமாட்டார்கள். அவர்களின் மனநிலைகள், சங்கடங்கள் எனக்குத் தெரியும். அது அவர்களின் பிரச்சினை.’
ஜெயமோகனோடு எனக்கு நட்பு இல்லை என்பது சரிதான். கொஞ்ச காலமாவது பழகி உருவாவதே நட்பு. அது அவரவர் வாழ்முறையோடு தொடர்புடையது. அவர் மீது எனக்கு எந்தக் கெட்ட எண்ணமும் இல்லை; அப்படி எண்ணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் வரவில்லை. மற்றபடி சக எழுத்தாளர் பலரோடு எனக்கு இருக்கும் கருத்தியல் வேறுபாடுகளுடன் கூடிய பொதுவான நட்புணர்வும் நல்லெண்ணமும் ஜெயமோகன் சார்ந்தும் உண்டு.
‘சென்ற முப்பதாண்டுகளில்… என்னைப் பற்றி எதுவுமே உயர்வாகவோ ஏற்பாகவோ சொன்னதில்லை’ என்கிறார். நான் முழுநேர எழுத்தாளன் அல்ல. எழுத்தைப் போலவே எழுத்து சார்ந்தும் விவசாயம் உள்ளிட்ட சில துறைகளிலும் எனக்கு ஈடுபாடுகள் உண்டு. ஆகவே முறை வைத்துக்கொண்டு நான் அன்றாடம் எழுதுவதில்லை. மனதுக்குள் கனியக் காலம் எடுத்துக்கொண்டு நேரம் அமையும் போது எழுதுவதே என் இயல்பு. அதனால் ஒப்பீட்டளவில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். அப்படி எழுதுவதே போதும் என்னும் மனநிலை உடையவன் நான். முன்னோடி எழுத்தாளர்களிலும் சரி, சமகால எழுத்தாளர்களிலும் சரி, பலரைப் பற்றி ஒருவரிகூட நான் எழுதியதில்லை. அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்பது தவிர அவர்களின் எழுத்துக்கள் மீது எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை என்றாகாது. ஆனால் என் உரைகளில், பேச்சுக்களில், வகுப்புக்களில் அவரவர்க்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறேன். அதில் ஜெயமோகனுக்கான இடமும் உண்டு.
மனிதர் எவர் மீதும் எனக்குக் கசப்பு இல்லை. என் மனதில் துளியளவு கசப்பு உருவானால்கூட அதைக் கெல்லி எறிய முனைவதையே வாழ்முறையாகக் கொண்டிருக்கிறேன். எழுத்துக்களிலும் விவாதங்களிலும் கருத்து சார்ந்த பங்கேற்பையே முன்னிறுத்தி வந்திருக்கிறேன். ஜெயமோகனோடு விவாதிக்க நேர்ந்த சில சந்தர்ப்பங்களிலும் அப்படித்தான். மேலும் அவரைப் பற்றி நான் ‘உயர்வாகவோ ஏற்பாகவோ’ எழுத வேண்டிய தேவை என்ன? அவரது எழுத்தைக் குறித்து அவரே ‘எழுதி எழுதி மேற்செல்லும்’ கை கொண்டவர்; திறன் வாய்ந்தவர். என் ஏற்பு அவருக்கு எந்தவிதத்தில் உதவக்கூடும்?
சக எழுத்தாளர்களை இலக்கியக் கூட்டங்களில் கண்டால் ‘புன்னகையோடு பேசிக்கொள்ளும்’ நாகரிகத்தில் நான் குறை வைத்ததில்லை. ஜெயமோகனோடும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். அச்சமயங்களில் மூத்த எழுத்தாளராக எனக்குச் சில ஆலோசனைகளும் வழங்கியிருக்கிறார். ‘காலச்சுவடு ஆசிரியர் முன்னிலையில் என்றால் அதுவும் பேசமாட்டார்கள்’ என்று என்னையும் சுகுமாரனையும் சேர்த்துக் கூறுகிறார். கண்ணன், சுகுமாரன், நான் மூவரும் இணைந்து பங்கேற்று அதற்கு ஜெயமோகனும் வந்திருந்த நிகழ்வு என்றால் அது கன்னியாகுமரியில் நடைபெற்ற ‘சுரா 80’ (2011) மட்டும்தான். அப்போது ஜெயமோகனுடன் ‘புன்னகையோடு’தான் பேசிக் கொண்டிருந்தேன். சுகுமாரன் பேசினாரா என்று தெரியவில்லை. சுகுமாரனின் ‘கலகலப்’ பேச்சு பிரசித்தம் ஆயிற்றே. வேறு எந்த நிகழ்விலும் அப்படிச் சேர்ந்து கலந்துகொண்டதில்லை. அந்த ஒரு நிகழ்ச்சியை வைத்து இவ்விதம் கற்பனை செய்துகொள்ள முடிவது வியப்புத்தான்.
காலச்சுவடு கண்ணனை எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். இதழ் ஆசிரியருக்கும் எழுத்தாளருக்குமானதாகத் தொடங்கி எழுத்தாளர் – பதிப்பாளர் என வளர்ந்து நெருங்கிய நட்பாகப் பரிணமித்த உறவு அது. எழுத்துலகில் எனக்கிருக்கும் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான ஆத்மார்த்தமான நட்புகளில் கண்ணனும் ஒருவர். சமவயதும் தனிநபர் சுதந்திரத்தில் ஒருபோதும் குறுக்கீடு செய்யாத பரஸ்பரப் புரிதலுமே இந்த நட்பைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அதில் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சினை?
ஜெயமோகன் திரும்பத் திரும்பத் தன் மீது வசை பாடப்படுவதாகச் சொல்கிறாரே, அவர் பாடும் வசைகள் குறித்த சுயஉணர்வு கொண்டிருக்கிறாரா எனச் சந்தேகமாக இருக்கிறது. ‘கண்ணன் அருகில் இருந்தால் பெருமாள்முருகன் என்னோடு பேச மாட்டார்’ என்று ஜெயமோகன் சொல்வது என்னை இழிவுபடுத்தும் வசை. எனக்குச் சுயசிந்தனை கிடையாது என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? முன்னர் சுகுமாரனைக் ‘கஞ்சிக்கூலி’ என்று இழிவுபடுத்தி எழுதினார். இப்படி ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை இழிவுபடுத்திப் பொழியும் வசைகளின் மூலமாகப் பொதுவெளியில் அவர் கட்டமைக்க விரும்பும் பிம்பம் ‘எழுத்தாளர்கள் (தன்னைத் தவிர) சுயசிந்தனை அற்றவர்கள்’ என்பதுதான்.
இத்தகைய வசைகளை அவர் போகிறபோக்கில் ‘இடதுகைச் சுட்டுவிரலால்’ எழுதிச் செல்லக்கூடிய ஆற்றல் உடையவராக இருக்கிறார். அதற்குத் தொடர்ந்து பதில் எழுதிக் கொண்டிருக்கக்கூடிய ஆற்றலும் மனநிலையும் எனக்கில்லை.
—– 22-06-20
Comments are closed.