தமிழ் அறிக:

 

போர்த்தொழில் – போர்தொழில்

 

தமிழ் அறிக:

‘போர்த்தொழில் பழகு’ என்பது பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் வரும் தொடர். இருநாட்டுப் படை வீரர்கள் எதிரெதிர் நின்று போரிடும் தொழிலைப் பாரதியார் கருதியிருக்கலாம். அவர் காலத்தில் முதலாம் உலகப் போர் நடைபெற்றது. படைகள் மோதிக்கொண்ட காட்சிகளைப் பற்றி அறிந்திருப்பார். படையில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கப் போர்த்தொழில் பழகும்படி அவர் அறிவுறுத்தியிருக்கக் கூடும். போர்த்தொழிலைப் பழகச் சொன்னாரே தவிரப் போர் புரியும்படி கூறவில்லை என்றும் விளக்கம் சொல்லலாம். ‘அறம்செய விரும்பு’ என்றுதானே ஔவையார் சொன்னார், செய்யும்படி சொல்லவில்லையே என ஔவையாரின் ஆத்திசூடிக்குக் கேலியான விளக்கம் சொல்லவதில்லையா? சரி,  வேறெதற்குப் போரைப் பழக வேண்டும்? நாட்டுக்குப் படை தேவை என்னும் அடிப்படையில் அதைச் சொல்லியிருக்கலாம். மற்றபடி போருக்கு எதிரானவரே அவர்.

பாரதியாரின் காலத்தில் பலவிதமான ஜனநாயகப் போராட்ட வடிவங்கள் வந்துவிட்டன. அவர் திலகரைப் பின்பற்றியவர். மகாத்மா காந்தியின் அகிம்சையையும் அறிந்தவர்.  ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மேடைப் பிரச்சாரம் ஆகியவற்றைக் கண்டிருக்கிறார்; பங்கேற்றிருக்கிறார். ‘மகாத்மா காந்தி பஞ்சகம்’ என்னும் அவரது புகழ்பெற்ற பாடலில் ‘இழிபடு போர்’ என்கிறார்.  ‘பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய் அதனிலுந் திறன்பெரி துடைத்தாம் அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழி யென்று நீ அறிந்தாய் நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!’ என்று மகாத்மாவைப் போற்றுகின்றார். போரைப் ‘பெருங்கொலை வழி’ என்கிறார். ஒத்துழையாமைப் போராட்டத்தை அறவழி என்கிறார். ஆக அநீதிக்கு எதிரான போராட்ட குணம் தேவை என்பதையே ‘போர்த்தொழில் பழகு’ எனச் சொல்லியிருப்பார் என எடுத்துக் கொள்வது இன்றைய காலத்திற்குப் பெரிதும் பொருந்தும்.

தமிழ் அறிக:

இந்தத் தொடரைத் தலைப்பாகக் கொண்டு வந்திருக்கும் திரைப்படத்தைப் பார்த்தேன். பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும் ‘திரில்லர்’ படம். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே, பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்னும் பாடலின் கருத்தை வலியுறுத்தும் படம். ‘அன்னை’ என்பதற்கு மாற்றாகத் ‘தந்தை’ என்றோ ‘பெற்றோர்’ என்றோ போட்டுக் கொள்ளலாம். இறுதியில் ‘உங்க வேலைய சரியாச் செஞ்சீங்கன்னா, எங்க வேல கொறஞ்சிரும்’ என்று பெற்றோரைப் பார்த்துக் ‘கருத்து’ சொல்லி முடிகிறது படம். முதல் கொலையாளிக்கு அது பொருந்துகிறது. இரண்டாம் கொலையாளி தம் மனைவியால் பாதிக்கப்பட்டவர். அதைக் காரணமாகக் கொண்டு பெண்களுக்கு ஏதும் பிரத்யேகமாகக் கருத்துச் சொல்லவில்லை. அந்த வகையில் தப்பித்தோம். இதுதான் சரத்பாபு கடைசியாக நடித்த படம். அவர் தோற்றத்தைக் காண மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. சரத்குமார், அசோக்செல்வன் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். சிறுசிறு பாத்திரங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி நேர்த்தியான திரைக்கதையோடு சிறப்பான ஆக்கம். சலிப்பில்லாமல் பார்க்க முடிந்தது. எனக்கு ஏற்பட்ட சலிப்பு படத்தின் தலைப்புதான்.

‘போர்த்தொழில்’ பொருத்தமான தலைப்பே. ஆனால் ‘போர் தொழில்’ என்றே வைத்திருக்கிறார்கள். சொற்களைப் பிரித்திருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். இடையில் ‘த்’ விடுபட என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதும்போது ‘த்’தை எழுத ‘th’  சேர்க்க வேண்டும். எண் கணித முறைப்படி அவை கூடாது என்று சொல்லியிருப்பார்களோ? திரைப்படத் துறையில் இத்தகைய மூட நம்பிக்கைகளுக்குப் பஞ்சமே இருக்காது. எண் கணிதத்தைக் காப்பாற்றத் தமிழை அழிக்கலாமா? ‘போர் தொழில்’ என்றால் ‘போரும் தொழிலும்’ என விரியும். அது உம்மைத்தொகை. படத்திற்கு அது பொருந்தாது.

காவல்துறை அதிகாரிகள் செய்வது ‘போராகிய தொழில்.’ தொழில் என்பதற்குச் செயல் எனவும் பொருளுண்டு. எப்படியாகினும் இதுவே சரி. இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக வரும்போது ஒற்று மிகுத்தே பயன்படுத்த வேண்டும். ஒலித்துப் பார்த்தாலும் ‘த்’ இருந்தால்தான் சரியாகத் தோன்றும். நல்ல தொடரை எடுத்துப் படத்திற்குப் பயன்படுத்துவது மகிழ்ச்சிக்குரியது; தமிழ்த்தன்மையும் அதில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டாமா? பிழையாகப் பயன்படுத்துவது தமிழுக்கும் இழிவு; பாரதியாருக்கும் இழிவு.

000   12-06-23