பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

செல்பேசியில் நண்பர் கேட்டார், “குறிப்பா ஏதாவது எடத்தப் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையிருந்தாச் சொல்லுங்க.”

“அப்படி எதுமில்ல…” என்று இழுத்தேன். அமெரிக்கா மிகப் பெரும் நாடு. அதன் நிலவியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏதோ சொல்லப் போய் அது நண்பருக்குக் கஷ்டத்தைக் கொடுத்துவிடக் கூடாதே எனத் தயங்கினேன். எங்கு போனாலும் பார்க்கும் இடங்கள் பற்றிய முடிவை நண்பர்களிடம் விட்டுவிடுவதே என் வழக்கம். எனினும், அங்கே ஒரு தேர்வு இருந்தது. அவருக்குச் சிரமம் நேரக் கூடாதே என அதை வெளிப்படுத்தத் தயக்கம். என் தயக்கத்தை உணர்ந்துகொண்ட நண்பர் சொல்லும்படி தூண்டினார். தனக்குக் கஷ்டம் ஒன்றுமில்லை என்றும் விருப்பத்தைச் சொன்னால் முயன்று பார்க்கலாம் என்றும் சொன்னார். சரி, மனதில் நினைத்திருப்பதைச் சொல்லத் தயங்கினால் ஒன்றும் நடக்காது; சொல்லிவிட்ட பிறகு நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்; சொல்லிவிடுவதே சரி என எண்ணி அவரிடம் சொன்னேன். “நயாகரா பாக்கணும்னு ஆச. முடியுமா?” அவர் யோசிக்கவே இல்லை, “பாத்திருவம்” என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

நீர் மேல் எனக்கு எப்போதும் தீராத் தாகம். கிணறு எனக்கு வாய்த்த நீர்நிலை. ஏரி, குளம், குட்டை, ஆறு, அருவி, கடல், நீச்சல் குளம், தொட்டி என நீரைக் காணும் இடமெல்லாம் புனலாட விரும்பும் உள்ளம் எனது. அருவியும் ஆறும் புனலாடலின் இன்பங்களை எல்லாம் ஒருசேரக் கொடுக்கும் அற்புதங்கள். அவற்றைக் காணவும் நீராடவும் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை. இளம் வயதில் பள்ளிப் பாடநூல் மூலமாக விளைந்த கனவு நயாகரா. அது நனவாகும் சாத்தியம் அமைவது என் வாழ்வின் பேறு. பரவசமும் உற்சாகமும் தொற்றிக்கொண்டன. அப்போது எழுத்தாளர் உறைவிட முகாமில் தங்கியிருந்தேன். அங்கே என் இறுதி இரவுக்கான (30-09-2018) கொண்டாட்டம் நடைபெற்றது. எல்லாப் பிரிவும் சிறு வருத்தத்தையேனும் தருபவைதான். ஆனால், எனக்கு அன்றைக்குச் சிறுவருத்தமும் ஏற்படவில்லை. உற்சாகமாக அனைவரிடமும் பேசிச் சிரித்து விடைபெற்றேன். கிட்டத்தட்ட ஒருமாத காலம் தங்கியிருந்த இடத்தையும் நண்பர்களையும் பிரியும் கஷ்டத்தை உணர இயலாமல் செய்தது நண்பர் போட்ட நயாகரா மந்திரம்தான்.

பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

அந்த நண்பர் பெயர் கோவர்த்தனன். சேலத்தைச் சேர்ந்தவர். கவிஞர் மோகனரங்கனின் வகுப்புத் தோழர். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுக் குடும்பத்தோடு அங்கே வசிப்பவர். அவரை அதற்குமுன் எனக்கு அறிமுகம் கிடையாது. நண்பரின் நண்பர், எழுத்தாளர் என்னும் மதிப்பில் எனக்கு உதவத் தானாகவே முன்வந்தவர். அவருடன் சில நாட்கள் தங்க வேண்டும் என்றும் அன்புடன் கட்டளையும் போட்டிருந்தார். சொன்னது சொன்னபடி மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் உறைவிட முகாமுக்கு வந்துவிட்டார். அவருடன் காரில் செல்லும்போதுதான் விவரம் சொன்னார். கனெக்டிகட் மாநிலத்தில் ஓக்டேல் என்னும் கிராமத்தில் அவர் வீடு. நான் இருந்ததோ நியூயார்க் மாநிலத்தின் ஒருகோடியில். அவருடைய வீட்டுக்கும் என் உறைவிடத்திற்கும் மூன்று மணி நேரக் கார்ப் பயணம். அங்கிருந்து கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் காரில் பயணம் செய்தால் நயாகராவை அடையலாம். எனக்கு அது மிக நீண்ட பயணமாகத் தோன்றியது. அமெரிக்காவில் இதுவெல்லாம் சாதாரணப் பயணம் என்றார் நண்பர்.

காடு காணல், மலையேற்றம், புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம்கொண்ட அவர், தம் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். பலவிதப் பயண அனுபவங்கள் கொண்டவர். ஆகவே முன்னேற்பாடு, நேர ஒழுங்கு, உணவு எல்லாவற்றிலும் முறைகளை வகுத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் அப்பயணத்தை ஒளியுடையதாக்கியது. வழுக்கிச் செல்லும் அகண்ட சாலை, சாலையின் இருபுறமும் ஆப்பிள் தோட்டங்களும் எனக்குப் பெயர் தெரியாத வகை வகையான மரங்களுமென விரிந்திருக்கும் இயற்கை, சாலை விதிகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் ஓட்டிகள், வழியெங்கும் அழகும் சுகாதாரமும் கொண்ட உணவகங்கள் என நயாகராவுக்குச் செல்லும் சாலையே அற்புதமானதாக அமைந்திருந்தது.

மூன்று மணிவாக்கில் நயாகராவை அடைந்தோம். வெகுதூரத்திலிருந்தே நயாகரா கொட்டும் காட்சியை நண்பர் காட்டினார். வெண்மை வழியும் புகைப்படம் ஒன்றைக் கண்டேன். வேறு ஒன்றுமே எனக்குத் தெரியவில்லை. நயாகரா பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் இருந்தன. இரவு தங்கி அருவியைப் பார்க்கும் அனுபவம் மிகவும் முக்கியமானது; நாமும் இரவு தங்குகிறோம் என்றார் நண்பர். மாலை முழுதும் நயாகரா அருவியைப் பார்த்தேன். பார்ப்பதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு நண்பர் எனக்காகக் காத்திருந்தார். அவருக்கு நயாகரா புதிதல்ல. பலரையும் அழைத்து வந்து வந்து காட்டியிருக்கிறார். ஐம்பது முறைகளுக்கு மேல் அருவியைக் கண்டிருக்கிறார். ஆகவே, அவர் தூரத்தில் இருந்தே அருவியைக் கண்டுகொண்டு அருகில் சென்று காணும் பேற்றை எனக்கு மட்டும் வழங்கினார்.

பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

அமெரிக்கப் பகுதியில் இருக்கும் இரண்டு அருவிகளில் ஒன்றை ஏறிச் சென்று பார்க்கலாம். அதன் சாரல் முகத்தை உரசும் தூரம் வரைக்கும்தான். குதித்துக் கும்மாளமிட்டு இறங்கும் அதற்கு முகத்தைத் தூக்கிக்கொடுத்து நின்றேன். நனைத்து மூச்சு முட்டச் செய்து அதுவே “போதும் போ” என்று அனுப்பிவிடுகிறது. சற்றே தூரத்தில் நின்றுகொண்டு இன்னும் கொஞ்ச நேரம் ஏக்கத்துடன் பார்த்திருந்தேன். எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காத ஆர்ப்பாட்டம். இன்னோர் அருவியைச் சுரங்கம், குகை என்று புகுந்து புகுந்து இறங்கிச் சென்று காணலாம். இதைக் காணக் கட்டணம் உண்டு. செருப்பு, உடலை மூடிக்கொள்ள பாலித்தீன் கொங்காடை ஆகியவற்றையும் கொடுக்கிறார்கள். மின்தூக்கி வழியாக இறங்கிச் சுரங்கத்துள் நடந்து வெளியே வந்து படிகளில் ஏறியிறங்கி இந்த அருவியை அடைய வேண்டும். ஒவ்வோர் அடி வைக்கும்போதும் அருவி ஒவ்வொரு தோற்றம் காட்டி ஈர்க்கும். தூரத்தில் இருக்கும்போதே சில்லெனச் சாரல் வந்து வருடும். ஒவ்வொரு படியேற்றத்தின் போதும் சாரலின் வேகம் கூடும். அருகே செல்லச் செல்லச் சாரலே சாட்டை விளாசலாகி “வராதே வராதே” என விரட்டும். நீரைக் கண்டால் துள்ளும் இம்மனம் அக்குரலைக் கேட்குமா?

நீரருகே ஓடி ஓடி நின்றுவிட்டுப் பின் தன் பெற்றோரை நோக்கிச் சிரித்தபடி திரும்பும் குழந்தை ஒன்று எனக்கும் தைரியம் கொடுத்தது. கொங்காடையால் உடல் முழுக்க மூடிக்கொண்டு அருவிக்கு அருகே சென்றேன். பனியைக் கரைத்துக் கொட்டிய நீர் முகத்தில்பட்டு ஒத்தடம் கொடுத்தது. கொங்காடையின் மேல் மோதும் நீரின் வேகத்தை உணர முடிந்தது. அது அடித்து விரட்டும் வேகம். அருகே போய்ச் சில நொடிகள் நிற்பதும் சில்லிடலும் விளாசலும் பொறுக்க முடியாதபோது பின்வாங்கி ஓடி வருவதும் என அந்தக் குழந்தையைப் போலவே அருவியோடு சற்றே விளையாடி ஆனந்தம் அடைந்தேன். சில நிமிடம் நயாகராவுடன் ஒரு விளையாட்டு. திரும்பியதும் “அனுபவம் எப்படி?” என நண்பர் கேட்டார். சிரித்தேன். அவ்வனுபவத்தைச் சொல்லப் போதுமான சொற்கள் என்வசம் இல்லை.

பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

இவை பக்க அருவிகள். இவை பெரிதல்ல. அரைவட்ட வடிவில் கணந்தோறும் பிரவகித்துப் பொங்கும் பேரருவிதான் நயாகரா. இரவிலே அதைக் காணக் கனடா நாட்டுப் பக்கமிருந்து வண்ண விளக்குகள் அமைத்திருக்கிறார்கள். ஏராளமானோர் இரவு தங்கி விளக்கொளியில் அருவியைக் காண்கிறார்கள். அத்தனை பேர் வந்து போனாலும் ஆற்றுக்கும் அருவிக்கும் சிறு களங்கமில்லை. மனிதக் கூட்டம் வந்துபோகும் இடத்திலெல்லாம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இருக்கும். அதை வெகுநேர்த்தியாகக் கையாள்கிறார்கள். விதிகளும் அவற்றுக்கு மக்களின் ஒத்துழைப்பும் முக்கியம். பேரருவியை அருகில் சென்று காண இரு நாடுகளும் தத்தம் பக்கமிருந்து பெரும்படகுகளில் மக்களைக் கூட்டிச் செல்கிறார்கள். கட்டணப் படகுப் பயணம். அப்பேர்ப்பட்ட அருவியை நெருங்கிச் சென்று காண வழியமைத்திருப்பது மனிதச் சாதனைதான்.

அருவியை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு கணமும் எனக்கு முக்கியமாக இருந்தது. படகின் மேல்தட்டில் நின்ற கூட்டத்தோடு நானும் ஓரிடம் பிடித்து நின்றுகொண்டேன். சாரலின் சில்லிடலிருந்து தப்பிக்க அங்கும் கொங்காடை ஒன்றைக் கொடுக்கிறார்கள். அவ்வப்போது அதைத் திறந்து சாரலுக்கு முகம் காட்டியும் முடியாதபோது மூடிக்கொண்டும் போனேன். படகு ஒரு மீனைப் போல உடலை வளைத்தும் நெளித்தும் முடிந்தவரை அருவிக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று காட்டியது. விசிறியடிக்கும் பெருஞ்சாரலில் எல்லோரும் நனைந்தோம். இயற்கையின் பிரம்மாண்டத்தை உணர்ந்து எல்லாவற்றையும் கரைத்துக்கொள்ளத் தூண்டும் காட்சி. மாயக்கை நீட்டி அருவியைத் தொட்டேன். அது என்னை ஆசையோடு வாரிச் சுருட்டி இழுத்துக்கொண்டது.

அற்புதத்தின் முன்னால் நிற்கும்போது செயலற்றுப் போகிறோம். எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் பிரமை தட்டி நின்றார்கள். அப்போது எனக்கருகே நின்றுகொண்டிருந்த காதலர்கள் அருவியைப் பார்த்த கண்களை ஒருகணம் திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்தக் கணத்தை நிலையானதாக்க முடிவு செய்தவர்களாய்ச் சட்டெனக் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டார்கள். அருமை அருமை. நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம். நயாகராவை மேலும் மேன்மைப்படுத்திய முத்தம் அது.

—–

நன்றி: மின்னம்பலம், 30 ஜூன் 2019