1.
கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா?
ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள் வினாவை வியக்கிறேன். வலிந்து எழுதப்படும் கவிதை பற்றிக் கேட்கிறீர்கள் என எளிமையாகப் புரிந்துகொள்கிறேன். தொழிற்படும் பொருளும் கவிஞன் மனமும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும். அது மட்டும் போதாது. ஒருபுள்ளியில் இணைந்து வெளிப்படத் தயாராக இருக்கும் பாடுபொருளைக் கவிதையாக்க இன்னும் பல அம்சங்கள் தேவைப்படும். கவிதை வடிவம், மொழி ஆற்றல், பண்பாட்டுப் புரிதல் ஆகியவற்றைக் கவிஞன் மனம் எந்த அளவு உள்வாங்கிப் படைப்பாற்றலில் செழுமையாகி இருக்கிறது என்பதும் முக்கியம். அவற்றில் குறைபாடு இருப்பின் எத்தனை அற்புதமான பாடுபொருளாக இருப்பினும் வெளிப்பாடு பிதுக்கலாக அமைந்துவிடும். அவற்றில் எல்லாம் தேர்ந்து அனுபவம் கொண்டிருக்கும் கவிமனம் ‘ஒருபுள்ளி இணைவு’ இல்லாமல்கூடக் கவிதையாக்கிவிடும்; பிதுக்கல் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாக இருக்கும்.
வாழ்வோடு ஒட்டுதல் உள்ள பண்புகள் மனதிலிருந்து எந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படும் என்பதை அத்தனை சூட்சுமமாக அறிவது சிரமம். சாதாரணமான ஒரு நேரத்தில் அற்புதமான வரி வந்து சேரும். அற்புதமான ஒரு நேரத்தில் சாதாரண வரிகூட வந்து சேராது. ஒன்றை மனம் உணர்ந்தாலும் அதைச் சமைத்துக்கொள்ள அவகாசம் எடுத்துக்கொள்ளும். அப்படி எடுத்து அது உருவாக்கி வைத்திருக்கும் வரி சாதாரண சமயத்தில் எழுந்து முன்வரும். மன அடுக்கைக் குழந்தையின் கலைந்து கிடக்கும் அலமாரிக்கு ஒப்பிடுவேன். அதற்குள் இருந்து என்ன கிடைக்கும் என்பதை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. படைப்பு முறைப்பாடு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. அதை வரையறைப்படுத்தியோ அட்டவணை போட்டோ காட்ட இயலாது. ஆனால் மனதின் ஆனைத்தீக்கு இடைவிடாமல் இட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் இரக்கப்பட்டு அதுவும் கொஞ்சம் நமக்குக் கொடுக்கும்.
2.
கையறுநிலையை எழுதுவதில் பண்டைத் தமிழ்க் கவிதைகள் உச்சத்தைத் தொட்டவை. வாசக மனதில் ஆழ்ந்த மௌனத்தை இறக்கி வைப்பவை. தற்காலக் கவிதைகளிலும் அந்த வலு இருக்கிறது. துன்பியலைக் கையாளும்போது மட்டும் கவிதையின் செறிவு கூடிவிடுவதுபோல் தோன்றுகிறதே ஏன்?
மனிதனுக்கான பகுத்தறிவு பிற உயிர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது. நம் மனம் மகிழ்ச்சியான நினைவுகளைத் தன் சேகரத்தில் அவ்வளவாக வைத்துக்கொள்வதில்லை. மகிழ்ச்சியைப் பரந்த அளவில் நாம் உணர்வதும் இல்லை. வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி ஒருவரைக் கேட்டுப் பாருங்கள். தடுமாறிப் போவார். யோசித்து ஒரு தருணத்தைச் சொன்னாலும் அது வெகுசுருக்கமாகவே அமையும். ஆம், மகிழ்ச்சியை நாம் சுருக்கமாகவே உணர்கிறோம். அதேசமயம் வாழ்வின் துன்பமான தருணத்தை நினைவுகூரச் சொன்னால் மன அடுக்கிலிருந்து பல சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொண்டு ‘இம்சை அரசன்’ படத்தில் அந்தப்புரத்திற்கு அழைத்ததும் ஓடி வந்து விழும் வீரர்களைப் போல ஏராளமாக வந்துவிழும். எதை எடுத்துச் சொல்வது என்பதில்தான் தடுமாற்றம் இருக்கும். ஒன்றைச் சொல்ல ஆரம்பித்துவிட்டால் முடிக்கவே தோன்றாது. அத்தனை துயரம் மிக்கவர்களாக நாம் இருக்கிறோம். ‘சோகக்கதை’ என்று ஒரு வழக்காறு நம்மிடம் இருக்கிறது. அதற்கு எதிராகச் ‘சந்தோசக் கதை’ உண்டா?
நம் பகுத்தறிவு பல விழுமியங்களை உருவாக்கி அவற்றில் பிடிமானம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அவற்றை அடிப்படையாகக் கொண்டே வாழ்வைக் கட்டமைத்திருக்கிறோம். விழுமியங்களாலேயே வாழ்வை மதிப்பிடுகிறோம். ஒருவர் இறந்துவிட்டால் அவரோடு பல விழுமியங்களும் போய்விட்டதாகப் புலம்புகிறோம். மனிதரை விழுமியத் திரளாகவே காண்கிறோம். அது மட்டுமல்ல. மரணம் மனிதருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. பிற உயிர்களுக்கு மரணம் இயல்பறிவாக மட்டுமே இருக்கிறது. மனிதர்தான் மரணம் பற்றிப் பலவிதமான கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ‘மரணமிலாப் பெருவாழ்வு’ வேண்டி அலைகிறார்கள். மரணத்திற்குப் பிறகு என்ன என்று யோசித்துக் குழம்புகிறார்கள். வாழ்வே துயரத்தால் ஆனது எனப் புலம்புகிறார்கள். அரிஸ்டாட்டில் ‘அவலமே சிறந்த சுவை’ என்கிறார். அவல அம்சங்கள் நம் சமூகத்தில் மிகுதி. ஆகவேதான் கையறுநிலைப் பாடல்களும் அதிகம். துன்பமான கட்டத்தைக் காப்பிய ஆசிரியர்கள் ஆர்வத்தோடு விவரித்துச் செல்வார்கள். நம் ரசனையில் துயரப் பாடல்களுக்கு அதீத இடம் இருக்கிறது. செறிந்த சொற்களால் நிறைந்த துயரத்தை வழங்குவது நம் மரபு. நவீன கவிதையில் மட்டும் இந்த மரபை இழக்கச் சம்மதிப்போமா?
3.
கவிதையில் இடம்பெறும் ஒரேயொரு சொல்கூட ஒரு முழு வாழ்க்கையின் அர்த்தத்தைத் தந்துவிடும் பண்பைக் கொண்டதாக இருக்கிறது. கவிதையின் இந்த பிரத்யேகப் பண்புக்கு என்ன காரணம்?
ஒவ்வொரு கவிதையிலும் கவிச்சொல் என்று ஒன்றோ சிலவோ அமைந்திருக்கும். கவிதை என்னும் ஒட்டுமொத்தச் சொற்கூட்டத்திற்கும் கவிப்பொருளைத் தருவது அத்தகைய கவிச்சொல்தான். கவிச்சொல் பரந்த வெளியை அவாவி நிற்கும் பண்புடையது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர முடியும்; விளக்க முடியாது. சமீபத்தில் ‘உழவு’ அதிகாரத்தில் முதற்குறளை வாசித்து அதன் பொருளை விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்பது அக்குறளின் முதல் தொடர். உணவுதான் உயிருக்கு அடிப்படை என்பதால் ஏருக்குப் பின்னால் போவதைத் தவிர வேறு வழியற்றது உலகம் என்று சொல்ல வருகிறார். இதில் ‘சுழன்றும்’ என்னும் சொல் அகராதிப் பொருளைக் கடந்து கவிச்சொல்லாக மாறி நிற்கிறது. ‘பல தொழில்களில் மனிதர்கள் சுழன்று கிடந்தாலும்’ என்று சொல்லப் பார்க்கிறேன். ‘உலகம் சுழன்றும் ஏர்ப் பின்னது’ என்கிறேன். ஆனால் ‘சுழன்று’ என்னும் சொல்லை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இன்னொரு சொல்லைப் பெய்து பொருள் சொல்ல முடியவே இல்லை. வெறுமனே ‘சுற்றுதல்’ என்று அதற்குப் பொருளல்ல. எத்தனையோ தொழில்களைச் செய்து பார்த்தாலும், செய்து திரிந்தாலும், அலைந்து பார்த்தாலும் என்று என்னவிதமாகச் சொன்னாலும் நிறைவில்லை. ஆனால் வள்ளுவர் சொல்ல வருவதை என்னால் உணர முடிகிறது. அதுதான் கவிச்சொல்லின் இயல்பு.
எல்லாக் கவிதைகளிலும் இத்தகைய கவிச்சொல் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. இன்றைய கவிதைகள் கவிச்சொல்லை அத்தனை முக்கியமாகக் கருதுவதில்லை; கவிதையின் மொத்தச் சொற்களுக்கும் முக்கியத்துவத்தைக் கொடுக்க முயல்கின்றன. எனினும் ஒற்றைச் சொல்கூட வாழ்வின் முழு அர்த்தத்தையும் தந்துவிடுவதாகத் தோன்றுவதன் காரணம் அச்சொல் செறித்து வைத்திருக்கும் காலப் பழமை என்று கருதுகிறேன். நவீனமாக உருவான சொல்லுக்கு அத்தகைய வலு இருக்க வாய்ப்பில்லை. காலத்தின் பிசுக்கு ஏறிய சொல் கவிதைக்குள் பொருத்தமாக அமைந்துவிட்டால் நமக்குள் கிளர்த்தும் எண்ண அலைகளுக்கு அளவிருக்காது.
—–