எண்பது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் அம்பை அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச் சொல்கிறேன்.
அம்பை எழுதிய கதைகள் குறித்து நாள் முழுக்கப் பலர் பேசியுள்ளனர். அவற்றை எல்லாம் கடந்து புதிதாக என்ன பேசுவது என்று தெரியவில்லை. அம்பையின் கதைகள் எதையும் வெளிப்படப் பேசுபவை. தோண்டித் துருவி நுட்பங்களை எல்லாம் கண்டெடுத்துக் கதைப் புதிர்களை விடுவிக்கும் கருவிகள் வேண்டியதில்லை. உருவகம், குறியீடு முதலிய உத்திகளை எல்லாம் நாமாக வலிந்து தேடியெடுத்தால் தான் உண்டு. விடுகதை வேறு; சிறுகதை வேறுதானே? கதையை வாசித்த பின் அதைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். இத்தனை வெளிப்படையாகக் கதை பேசிய பிறகும் அதைப் பற்றி உரையாடும் சாத்தியத்தை எப்படிச் சாதிக்கிறார் அம்பை? அதுதான் எனக்கு விடை தெரியாத கேள்வி.
அவர் கதைகளைப் போலவே அம்பையும் வெளிப்படையானவர். அல்லது அம்பையைப் போலவே அவர் கதைகளும் வெளிப்படையானவை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் வருகையை நினைவு கொள்வதற்கு ஏதாவது சம்பவமோ அவர் சொற்களோ எஞ்சி நிற்கும். அவருக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோது கூடு அமைப்பு சார்பாக நாமக்கல்லில் பாராட்டுக் கூட்டம் நடத்தினோம். அதில் பேசிய நண்பர் ஒருவர் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அம்பை ஒருகொலை செய்தாள்’ என்று வாய் தவறிச் சொல்லிவிட்டார். உடனே ‘இன்னும் கொல ஒன்னுதான் செய்யல. அதயும் செஞ்சிருவன் பாத்துக்க’ என்று அம்பை சொன்னார். இன்றைக்கு வரைக்கும் அந்த நண்பர் அம்பையைப் பார்ப்பதற்கு அஞ்சிக் கொண்டுதான் இருக்கிறார்.
இன்னொரு முறை நாமக்கல் கோயில்களுக்குச் சென்றுவிட்டு அப்படியே வீதிகளில் நடந்து வந்தோம். அம்பையோடு இப்படி வெளியே போய்ச் சுற்றுவது என் மனைவிக்கு ரொம்பவும் பிடிக்கும். நகரத்தின் நடுவில் ஒரு மாரியம்மன் கோயில் இருக்கிறது. அதற்குப் பெயர் ‘பலபட்டரை மாரியம்மன்.’ பலபட்டரைக்கு அர்த்தம் என்ன என்று அம்பை கேட்டார். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் எனக்கு உற்சாகம் வந்து விரிவுரையாற்றத் தொடங்கிவிடுவேன். பலபட்டரை என்னும் சொல் எந்த அகராதியிலும் இல்லை. அது வட்டார வழக்குச் சொல்லா பொதுச்சொல்லா என்பதில் ஐயம் இருந்ததால் கொங்கு வட்டாரச் சொல்லகராதியில் அதைச் சேர்க்கவில்லை. ஆனால் கொங்கு வட்டாரச் சொல் போலத்தான் தெரிகிறது. அடுத்த பதிப்பில் இந்தச் சொல்லையும் சேர்க்க வேண்டும்.
கிராமத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மாரியம்மன் கோயில் இருக்கும். ஒருசாதிக்கு உரிய கோயிலுக்கு இன்னொரு சாதியினர் போக முடியாது. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனித் திருவிழா; கொண்டாட்டம். நாமக்கல் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில்தான் நகரமாக உருமாறிற்று. அதற்கு முன் கொஞ்சம் பெரிய கிராமம், அவ்வளவுதான். நகரமாக உருவான போது வெவ்வேறு சாதியினர் வந்து குடியேறினர். எல்லாச் சாதியினருக்கும் பொதுவான மாரியம்மன் கோயில் ஒன்று கட்டினர். அதை அடையாளப்படுத்த மக்கள் வழக்கில் ‘பலபட்டரை மாரியம்மன்’ என்று பெயராயிற்று. பெருந்தேவியின் ஆய்வுக் களங்களில் இக்கோயில் முக்கியமானது. இதை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
பலபட்டரை என்றால் ‘பலசாதி’ என்று பொருள். தம் சாதியல்லாத பிற சாதிகள் என்பதைக் குறிக்கும். அதை வசைச்சொல்லாகவும் பயன்படுத்துவது உண்டு. குழந்தைகளைத் திட்டும்போது ‘பலபட்டரைக்குப் பொறந்தது’ என்பார்கள். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ‘அது ஒரு பலபட்டர’ என்று கீழ்மைப்படுத்திப் பேசுவார்கள். எங்கள் ஊரில் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வந்தபோது ‘அதெல்லாம் பலபட்டரைங்க குடியிருக்கற எடம்’ என்று சொல்லி வீடு வாங்க மறுத்தவர்கள் உண்டு. அக்குடியிருப்பு வீடுகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து ‘வாங்காமல் விட்டுவிட்டோமே’ என்று பிற்காலத்தில் புலம்பியோர் பலர். பலபட்டரை என்பதைப் பற்றி இதையெல்லாம் நானும் என் மனைவியும் (அவரும் ஆசிரியர் ஆயிற்றே) சொல்லிக் கொண்டு வந்தோம்.
வழியில் ஐஸ்கிரீம் கடை ஒன்றைப் பார்த்தோம். ‘ஐஸ்கிரீம் சாப்பிடலாம்’ என்றார் அம்பை. எதையும் குறைவாகவும் அளவாகவும் சாப்பிடுபவர் அவர். விருந்தோம்பல் செய்கிறோம் என்னும் பெயரில் அவரை வற்புறுத்த முடியாது. ‘போதும்’ என்றால் போதும்தான். அவரே ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்படுகிறார் என்றால் எங்களுக்கு என்ன? ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு அம்பையும் நானும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். என் மனைவி பணம் கொடுத்துவிட்டு வந்தார்.
அப்போது கடைக்காரர் ஏதோ கேட்க என் மனைவி பதில் சொல்வது தெரிந்தது. வந்ததும் ‘என்ன?’ என்று அம்பை கேட்டார். ‘கடக்காரரு உங்களக் காட்டி அவுங்க பிராமினான்னு கேக்கறாரு. எப்பிடிக் கண்டுபிடிச்சாருன்னே தெரியல’ என்றார் என் மனைவி. ‘ஆமா. பெருசாக் கண்டுபிடிச்சிட்டாரு. அவுங்க ஒரு பலபட்டர பிராமின்னு சொல்லிட்டு வந்திருக்கலாமுல்ல’ என்றார் அம்பை. எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தோம். அம்பை சொன்னதற்குள் நகைச்சுவையைக் கடந்து பேச நிறைய இருக்கின்றன.
சென்னைக்கு இடமாறுதலில் சென்று கிட்டத்தட்ட ஓராண்டு காலம் திருவல்லிக்கேணியில் வசித்தோம். அது பொந்துகளைக் கொண்ட சிறுவீடு. பெருங்குடியில் பெரிய அடுக்குமாடி வீடு ஒன்றில் குடியிருந்துவிட்டுப் பயணம் செய்வதில் உள்ள சிரமத்தால் அப்போதுதான் திருவல்லிக்கேணிக்கு மாறினோம். பொருள்கள் எல்லாம் பரவிக் கிடந்தன. சென்னைக்கு வந்திருந்த அம்பை எங்களைப் பார்க்க வீட்டுக்கு வருகிறேன் என்றார். எங்களுக்குத் தயக்கமாக இருந்தது. வீட்டுக்கு வேண்டாம், கடற்கரையில் சந்திப்போம் என்றேன். அதெல்லாம் முடியாது, நான் வீட்டுக்குத் தான் வருவேன் என்றார். நிலைமையை எடுத்துச் சொன்னேன். உடனே ‘உங்களத் தவிர ஒராளு உக்கார எடம் இருக்குமில்ல? எனக்குக் கொஞ்சம் இடம் போதும் நான் வந்து பாத்துட்டு ஒரு டீ சாப்புட்டுட்டு அப்படியே கடற்கரைக்குப் போயிரலாம்’ என்றார். அவர் சொன்னது எங்களை நெகிழ்த்தியது. அப்படி உரிமை பாராட்டுவதுதான் அம்பையின் இயல்பு.
அதே போல வந்தார். வீட்டில் சற்று நேரம் இருந்துவிட்டு மூவரும் நடந்து கடற்கரைக்குச் சென்றோம். கண்ணகி சிலைக்கு அருகில் இருக்கும் சுரங்கப்பாதையைக் கடந்து கடற்கரைக்கு இறங்கும்போது காரை போட்ட சரிவான பகுதி ஒன்று இருந்தது. பொதுமக்கள் பலர் கடக்கும் அவ்விடத்தில் அப்படி ஒரு சறுக்கல். பளபளவென்ற கற்கள் பதித்திருந்தனர். அம்பைக்கு அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை. கடந்து சென்றுவிட்டார். என் மனைவிக்கு இத்தகைய இடங்களைப் பார்த்தால் கொஞ்சம் பயம். ஏற்கனவே அடிபட்ட கால் வேறு. பயந்த மாதிரியே லேசாக வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார். நான் கை கொடுத்துத் தூக்கினேன்.
அப்போது எதிரில் இருந்த திட்டு மேல் உட்கார்ந்திருந்த இருவர் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘கெழவி பாரு என்ன வேகமாப் போவுது. இந்தம்மா இப்படிச் சறுக்கி உழுவுதே’ என்றனர். அம்பைக்குக் கோபம். ‘கெழவியாம் கெழவி. கெழவி வேகமாப் போகக் கூடாதா?’ என்று சொன்னார். நல்லவேளை அவர்களிடம் சண்டைக்குப் போகவில்லை. ஆனால் கடற்கரை விஜயம் முழுவதுமே இந்தக் கிழவிப் பிரச்சினைதான் அம்பையின் பேசுபொருளாக இருந்தது. அறுபது வயது ஆகிவிட்டாலே நாம் முதுமை என்று உணர்கிறோம். அதன் பிறகு செய்வதற்கு ஏதுமில்லை என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறோம். அம்பையை நானறிந்த வரையில் அந்த மனநிலை அறவே இல்லை. உடலைப் பேணுவதிலும் உற்சாகமாகச் செயலாற்றுவதிலும் அவருக்கு நிகர் அவரேதான்.
நாகர்கோவிலில் இருந்து நாமக்கல்லுக்கு ஒருமுறை ரயிலில் வந்தார். அந்த ரயில் விடிகாலை இரண்டரை மணிக்கு நாமக்கல் வந்து சேரும். இப்போது இரவுப் பயணத்தைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறார். அவர் வந்தது 2018ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ‘அந்நேரத்திற்கு விழித்து விடுவீர்களா? தவறாமல் வந்து கூட்டிப் போய்விடுவீர்களா?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டுதான் வந்தார். நாமக்கல் வர அந்த ரயில் மட்டும்தான் இருந்தது. ரயிலில் இருந்து இறங்கினார். என் இடுப்புக்கு மேல் உயரமாக இருந்த பெரிய பெட்டி ஒன்று. கைப்பை ஒன்று.
‘என்னங்க அம்பை, இவ்வளவு பெரிய பெட்டி?’ என்று உடனே கேட்டுவிட்டேன். அம்பை தமிழ்நாட்டுக்கு வரும்போது யாரையெல்லாம் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் ஏதேனும் பரிசுப்பொருள் கொண்டு வருவது வழக்கம். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். தம் பயணத்தை எப்படி இவ்வாறெல்லாம் திட்டமிட முடிகிறது? நடைமேடையில் அந்தப் பெட்டியை இழுத்து வருவதே பெரும்பாடாக இருந்தது. சுரங்கப் பாதையில் இறங்கும்போது தூக்கிக்கொள்ள வேண்டும். மீண்டும் ஏறி வெளியே வரவும் தூக்கிக் கொள்ள வேண்டும். என் இருசக்கர வாகனத்தில் அதை எப்படி வைத்துக்கொள்வது? இவற்றை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
என்னை அறியாமலே மேலும் இரண்டு மூன்று முறை ‘இவ்ளோ பெரிய பெட்டி’ என்று குறிப்பிட்டுப் பேசிவிட்டேன் போல. சுரங்கப் பாதைக்குள் இறங்கியதும் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். உடனே கோபமாக ‘நீ எங்கிட்டக் குடு. நானே கொண்டு வந்திருவேன்’ என்று பிடுங்கினார். பிறகுதான் உணர்வு வந்து ‘நானே கொண்டு வர்றன்’ என்று சொன்னேன். வண்டியில் எப்படியோ வைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். பயணத்தின் போது மிகக் குறைவான பொருள்களையே எடுத்துச் செல்லும் வழக்கம் உடையவன் நான். பொதிகள் இருந்தால் பயணம் எளிதாக இருக்காது என்பது என் எண்ணம். சில சமயம் அவசியமான பொருள்களைக்கூட எடுக்க மறந்துவிடுவேன். அம்பை ஒருபயணத்திற்குத் தயாராவதை உடனிருந்து பார்க்க வேண்டும் என்னும் ஆவல் எனக்குண்டு.
எவ்விடத்திலும் எளிதாகத் தம்மைப் பொருத்திக் கொள்ளும் இயல்பும் அம்பைக்கு உண்டு. பயண அலுப்புக்கூட இல்லாமல் தம் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுவார். சரோஜா ராமமூர்த்தி சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையை எங்கள் வீட்டுக் கணினியில் தான் எழுதி முடித்துக் காலச்சுவடுக்கு அனுப்பினார். அந்த வேலை செய்துகொண்டிருக்கும் போது உணவுக்காகவோ வேறு எதற்காகவோ அழைத்தால் ‘அரைமணி நேரம் கழித்து வருகிறேன்’ என்பது போல நேரம் சொல்லிவிடுவார். எல்லா வேலைகளையும் இப்படி முறை வைத்துச் செய்யும் இயல்பு அவருக்குண்டு.
‘சாதியும் நானும்’ நூலை அவர்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நூலை வாசித்துவிட்டுத் தாமே மொழிபெயர்ப்பதாகச் சொல்லி விரும்பிச் செய்தார். ‘தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிகள் இருப்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொன்றுக்குள்ளும் எத்தனை எத்தனை பிரிவுகள்’ என்று ஆச்சரியப்பட்டார். தமிழ்நாட்டுச் சாதியமைப்பு பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம்கூட அவரை இப்பணியில் ஈடுபடத் தூண்டியிருக்கலாம். அந்நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போது ஒருமுறை நாமக்கல்லுக்கு வந்து ஒருவாரம் தங்கினார். கட்டுரைகளில் தமக்கு இருந்த சந்தேகங்களைக் குறித்து வைத்துக்கொண்டு கட்டுரையாளர் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்பது அவர் நோக்கம்.
பெரும்பாலான பேர் வந்து சந்தித்தனர். அம்பையைச் சந்தித்ததும் பேசியதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனந்தன் என்னும் மாணவர் எழுதிய கட்டுரையில் தம் கிராமத்தில் உள்ள சலூனுக்குச் சென்று சக்கர நாற்காலியில் உட்கார்ந்து முடிவெட்டிக் கொள்ள இயலாத சாதிக் கட்டுப்பாட்டு நிலை குறித்து எழுதியிருந்தார். அவருக்கு ‘நான் ஒரு சக்கர நாற்காலி வாங்கித் தருகிறேன்’ என்று அம்பை சொன்னார். அம்மாணவருக்கு அது பெரிய மகிழ்ச்சி. ‘இப்போது என் நிலை கொஞ்சம் பரவாயில்லை அம்மா. சக்கர நாற்காலி வாங்கிக் கொள்ளும் அளவு நல்ல நிலைமையில் இருக்கிறேன்’ என்று சொன்னார்.
‘சாதியும் நானும்’ மொழிபெயர்ப்புக்காக அவர் தங்கியிருந்து வேலை செய்தது, எங்கள் வீட்டுக்கு வரும்போது முறை வைத்து எழுத்து வேலைகளைப் பார்ப்பது, நேர ஒழுங்கு ஆகியவை எல்லாம் எனக்கும் நல்லது செய்தன. அவ்வளவு திட்டமிடல் எல்லாம் இல்லாதவன்; உடல்நலத்தில் அக்கறையின்மை, நினைத்த போது எழுதுவது, எழுதாமல் இருப்பது, சோம்பல் எல்லாம் இணைந்த குழப்ப வடிவம் நான். அம்பையைப் பார்த்துச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முயல்கிறேன். என் குடும்பத்தாருக்கும் ‘எழுத்தாளர் என்றால் இப்படியெல்லாம் வேலை செய்ய வேண்டும் போலிருக்கிறது’ என்னும் எண்ணம் தோன்றியது.
(28-11-24 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற ‘அம்பை 80’ கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒருபகுதி எழுத்து வடிவம்.)
—– 09-12-2024
Add your first comment to this post