மொழிபெயர்ப்புக்கு நோக்கங்கள் பல. அவற்றுள் முக்கியமானது விருப்பம். விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றை மொழிபெயர்க்கத் தேர்வு செய்வதும் தேர்வு செய்ததை மனம் கலந்து சுவை உணர்ந்து மொழிபெயர்ப்பதும் அரிதான சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. அப்படி ஓர் அரிய நிகழ்வு ‘தாகங் கொண்ட மீனொன்று’ என்னும் ‘ரூமி’ கவிதைகளின் மொழிபெயர்ப்பு. பத்தாண்டுகளுக்கும் மேலாக ரூமி கவிதைகளை வாசிப்பதில் ஈடுபட்டு அவற்றில் தன் மனத்திற்கு உகந்தவற்றைத் தேர்வு செய்து அக்கவிதை அனுபவத்தைத் தன் சொந்த மொழியில் பெற வேண்டும் என்னும் ஆவலால் சொல் சொல்லாகச் செதுக்கி இத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் என்.சத்தியமூர்த்தி. இது தம் அகத்தேவையை நிறைவு செய்துகொள்ள உருவாக்கப்பட்ட தொகுப்பு. அதன் காரணமாகவே வாசிப்பவரின் அகத்தேவைக்கும் ஈடு கொடுப்பதாக உருமாறிவிடுகிறது. ஒவ்வொரு கவிதையும் அந்தரங்கமாக நம்மோடு உறவாடிப் பேசுவனவாகவும் நம்முள் கலந்து நம்மையே உணர வைப்பனவாகவும் இருக்கின்றன.
ரூமியின் கவிதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. இன்றைய நவீன மனிதனுக்கு அவற்றின் தேவை என்ன? செவ்வியல் இலக்கியத்தின் இயல்பே மனிதனின் மன ஆழத்தைக் குறி வைத்துக் காலகாலத்திற்குமான பொதுமைகளைத் தமக்குள் பிடித்து வைத்துக்கொள்வதுதான். ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ எனத் தொல்காப்பியம் சுட்டும் அகப்பொருள் இலக்கணக் கூறு இந்தப் பொதுமையைத்தான் குறிப்பிடுகிறது. இதைப் பெயரோடு மட்டும் நிறுத்தாமல் இன்னும் பல கூறுகளுக்கும் விரிவாக்கிக்கொண்டால் போதும். கவிதையின் காலங்கடந்த செயல்திறனைக் கண்டுணரலாம். இவ்வகை இலக்கியம் செயல்படும் விதத்திற்கு ரூமியிடம் இருந்து ஒரு சான்று. ‘விருந்தினர் இல்லம்’ என்றொரு கவிதை. இதில் குறிப்பிட்ட வரலாற்றுக் காலம் இல்லை. இது தனிப்பட்ட ஓரிடத்தைச் சுட்டவில்லை. நிலமும் பொழுதும் இல்லாமல் எதுவுமில்லை. ஆனால் அவை பொதுச்சொற்களால் இக்கவிதையில் வழங்கப்படுகின்றன. கவிதை இவ்விதம் தொடங்குகிறது,
இந்த மனித இருப்பு
ஒரு விருந்தினர் இல்லம்
ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு
இல்லம், காலை ஆகியவை நிலமும் பொழுதும்தான். ஆனால் இவற்றை எங்கும் பொருத்தலாம். எப்போதிலும் பொருத்தலாம். வசிக்கும் வீட்டை, இல்லத்தை இக்கவிதை குறிப்பிடவில்லை. இது ஒரு அரூபக் குறியீடு. மனித இருப்பையே விருந்தினர் இல்லம் என்கிறது. விருந்தினர் இல்லத்தின் செயல்பாடு எதிர்பார்ப்பைக் கடந்தது. யாரும் வரலாம், எந்நேரத்திலும் வரலாம், வராமலும் இருக்கலாம். ஒருசமயம் நிறைந்து வழியலாம், இன்னொரு சமயம் காலியாகக் கிடக்கலாம். எத்தனையோ சாத்தியங்களைக் கொண்டது விருந்தினர் இல்லம். பழைய முகங்கள், அனுபவங்கள் கழிந்து ஆனந்தமோ அற்பத்தனமோ எப்படிப்பட்டதாக இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுவரவை எதிர்கொள்ளச் சாத்தியம் இருப்பது இங்கேதான்.
ஓர் ஆனந்தம்
சற்று மனச்சோர்வு
சிறிது அற்பத்தனம்
நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு
எதிர்பாராத விருந்தாளிகளாக
அவ்வப்போது வந்து செல்லும்
வந்து நிரந்தரமாக இங்கே தங்கிவிடுபவர் எவருமில்லை. எல்லாம் ‘வந்து செல்லும்’ தன்மை கொண்டவையே. வந்து செல்பவரை விருந்தினர் இல்லம் எப்படி உபசரிக்கும்? அல்லது எப்படி உபசரிக்க வேண்டும்? இரண்டையும் கலந்து கவிதை இப்படிச் செல்கிறது:
எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு
துக்கங்களின் கூட்டமாக அவை இருந்து
உனது வீட்டைத் துப்புரவாக
வெறுமைப்படுத்தும் போதும்
ஒவ்வொரு விருந்தினரையும்
கௌரவமாக நடத்து
புதியதோர் உவகைக்காக
அவை உன்னை
தூசி தட்டித் தயார்படுத்தக்கூடும்
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவற்றை வாயிலுக்கே சென்று
இன்முகத்துடன்
வரவேற்பாயாக.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து
ஏனெனில் ஒவ்வொருவரும்
ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள்
தொலைதூரத்திற்கு
அப்பாலிருந்து.
ஆனந்தம், அற்பத்தனம், வக்கிரம், அவமானம், வஞ்சனை என அனைத்தும் எக்காலத்திற்கும் உரிய உணர்வுகள். அவற்றின் பிரத்யேகத்தன்மையைக் கவிதை சொல்லவில்லை. அவற்றை விருந்தினர் இல்லத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளாகப் பொதுமையாக்கிவிடுகிறது. விருந்தினரை எவ்விதம் உபசரிப்பது என்பதில் சிறுதிசையைக் காட்டுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகாட்டி என்னும் புரிதலை வரித்துக்கொள்ளச் செய்கிறது. கவிதையின் இத்தகைய செவ்வியல் தன்மைதான் நூற்றாண்டுகளைக் கடந்து வந்து நம்மைப் பரவசம் கொள்ளச் செய்கிறது.
தத்துவத்திற்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு விரிவான உரையாடலுக்குரியது. ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது மாதிரிதான் இந்தத் தொடர்பு. ஒரு புரிதல், ஒரு முடிவு, ஒரு கண்டடைவு, ஒரு தரிசனம் ஆகியவை சாரமாக சொற்களில் வெளிப்படும்போது தத்துவம் கவிதைச் சாயலைப் பெறுவது இயல்பு. அதே போலக் கவிதையின் சில வரிகளோ மொத்தத் தொனியோ தத்துவத் தோற்றத்தைக் கொடுத்துவிடுவதும் உண்டு. ஆனால் தத்துவத்திற்கும் கவிதைக்குமான நுண்ணிய இடைவெளி என நான் கருதுவது அனுபவ வெளியைத்தான். தத்துவத்தில் அனுபவ வெளி என்பது புதைபொருள் போன்றது. அதைப் பெறுவதற்குப் பெருமுயற்சிகள் தேவை. எதேச்சையாகச் சிலசமயம் தட்டுப்படுவதுண்டு. ஆனால் கவிதையில் அனுபவ வெளிக்கான சாத்தியம் பெரும்பாலும் வெளிப்படையானது. மறைவாக இருக்கும்போதும் சட்டென ஒரு புள்ளியில் துலக்கமாகி விரியக்கூடியது அவ்வெளி.
சூபிக்கவிஞர் என்று ரூமி அடையாளப்படுகிறார். ஆகவே அந்தத் தத்துவம் கவிதைக்குள் பொதிந்திருக்கக்கூடும். கவிதை வாசகருக்கு இது ஒரு கூடுதல் தகவல். அவ்வளவே. தத்துவம் முன்னிற்கிறதா கவிதை முன்னிற்கிறதா என்னும் கேள்வி இக்கவிதைகளை வாசிக்கும்போது எழுவதில்லை. காரணம் கவிதை வழங்கும் அனுபவ வெளி துலக்கமாக இருப்பதுதான். ஒரு கவிதையின் கடைசி வரியை மட்டும் எடுத்து எழுதினால் அது ஒரு தத்துவ தரிசனம் போலத் தோற்றம் தந்துவிடும். ‘வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்’ என்பது அப்படியானதுதான். ஆனால் கவிதையின் தொடக்கம் ‘காதலின் வழி நுட்பமான விவாதமல்ல பிரளயமே அங்கு செல்வதற்கான வாயில்’ எனத் தொடங்குகிறது.
காதலை அடைவது தொடர்பான ஓர் அனுபவத்தை விவரிப்பதாக இத்தொடக்கம் அமைகிறது. அதன்பின் அதை நியாயப்படுத்தும் வகையில் வேறொரு படிமம் வந்து சேர்கிறது. ‘தங்களது சுதந்திரத்தைப் பெருவானில் வட்டமிட்டுக் களிப்பெய்துகின்றன பறவைகள்’ என்னும் படிமம் காதல் தரும் சுதந்திர உணர்வை, களிப்பை அனுபவமாக்கும் முயற்சி. அதன்பின் ஒரு கேள்வி. ‘அவை எப்படிப் பயில்கின்றன பறத்தலை?’ அதற்கான பதில்தான் கடைசி: ‘அவை விழுகின்றன. அவ்வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்.’ இங்கே கவிதை வந்தடையும் முடிவைவிடவும் முடிவுக்கு வரும் வழியில் அனுபவமாகும் உரையாடல், காட்சி, கேள்வி ஆகியவை முக்கியமாக இருக்கின்றன. அவற்றின் வழியே வரும்போதுதான் முடிவு தரும் ஆழ்ந்த பொருளை உணர்கிறோம். இதுதான் கவிதை செய்யும் மாயம். இத்தகு கவிதைகளால் நிரம்பியிருக்கிறது ரூமியின் உலகம்.
கவிஞனின் மனநிலையில் லயித்திருந்தவர் ரூமி என்பதற்கு அவர் சொற்களிலேயே சான்றுகள் உள்ளன. கவிஞனின் கருவிக் கிடங்காகிய மொழியிலிருந்து பொருத்தமான சொற்களை உருவியெடுக்கும் கைவித்தையில் தேர்ந்தவர் அவர். எனினும் ஒருநிலையில் எந்தக் கருவியும் கைகொடுக்காத கையறுநிலை உருவாவதும் உண்டு. ரூமிக்கும் அது நேர்கிறது. ஒரு கவிதையில் இப்படி எழுதுகிறார்: ‘கவிதையை முடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான் ஆகிறது. மாபெரும் மௌனம் என்மீது கவிகிறது. வார்த்தைகளைப் பயன்படுத்த ஏன் எண்ணினேன் என்ற தவிப்பே எஞ்சுகிறது.’ வார்த்தைகளைப் பயன்படுத்த எண்ணியமைக்காகத் தன்னையே நொந்துகொள்வது கவிஞனுக்கு அடிக்கடி நேர்வதுதான். ஆனால் அவனுக்கு வேறு கருவி ஏது? தன் கருவிகளைக் கூர் தீட்டுவதிலேயே காலத்தைக் கழித்து அதிருப்தியுடன் ஒழிய வேண்டியது விதிதான் போலும்.
கவிதையின் பயன் என வரையறுத்துச் சொல்ல இயலுமா எனத் தெரியவில்லை. அடைப்புகளை மென்மையாகத் தட்டிச் சில திறப்புகளை உருவாக்கும் திறன் கவிதைக்கு உண்டு எனச் சொல்லலாம். ரூமியின் கவிதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது. இதன் ஒவ்வொரு கவிதையும் ஒற்றைத் திறப்பை அல்ல, பல திறப்புகளை உருவாக்கும் வலிமை கொண்டிருக்கின்றன. ஆகவே ஒரு கவிதையைப் பலமுறை வாசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கவிதையிலேயே பெரும்பாலும் நின்றுவிட நேர்கிறது. இன்னொரு கவிதைக்குச் செல்ல அவகாசம் தேவைப்படுகிறது. ‘நீயொரு உண்மையான மனிதனெனில் எல்லாவற்றையும் பணயம் வை காதலுக்காக’ என ஒரு கவிதை தொடங்குகிறது. இந்த உசுப்பலைச் செய்யும் அந்த ‘நான்’ யார்? ஜலூலுதீன் ரூமியா? அவர் தன் மனத்திற்குச் சொல்கிறாரா? வேறு யாரை நோக்கிச் சொல்கிறார்? ‘இயலவில்லை எனில் சென்றுவிடு இங்கிருந்து’ எனக் கடுமையாக எச்சரிப்பது யார்?
மூன்றாவது முறை இக்கவிதையை வாசித்தபோது அது என் குரலாகிவிட்டது. முன்னிலையாக என் மனத்தை ஆக்கிக் குரல் குவிவதை அறிந்தேன். ‘அரைகுறை மனதிற்கு அகண்டவெளி அகப்படாது’ எனத் தெளிவுபடுத்தி என் மனத்தை நோக்கிக் கேள்வியை அமைத்தேன். ‘பேரருளை நோக்கிப் பயணிக்கத் தீர்மானித்த நீ, சிறுமை படர்ந்த விடுதிகளில் நெடுங்காலம் இளைப்பாறிவிடுவது ஏன்?’ சிறுமை படர்ந்த விடுதிகள் ஒவ்வொன்றாக எனக்குக் காட்சியாகின. ஏன் ஒவ்வொன்றையும் என்னால் விட முடியவில்லை? இப்படி ஒவ்வொரு கவிதையும் கொண்டிருக்கும் திறப்புகளைக் கண்டடைய தொடர் வாசிப்பைக் கோருகின்றது இந்நூல்.
செவ்வியல் கவிதைகளை மொழிபெயர்க்கும் உணர்வுடன் மொழிபெயர்ப்பாளர் இயங்கியிருப்பதால் சொற்களும் தொடர்களும் கவனத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘தாகம் கொண்ட மீன் ஒன்று’ எனத் தலைப்பு இல்லை. ‘தாகங்கொண்ட மீனொன்று’ என வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப் புணர்ச்சி இலக்கணம் பெரிதும் தகர்ந்த உரைநடைக் காலம் இது. புணர்ச்சி இலக்கணப்படி அமைந்த தொடர்களை அமைத்தல் என்பது செவ்வியல் சாயலைக் கொடுக்கும் சிறுமுயற்சிதான். இம்முயற்சி தொகுப்பு முழுவதுமே தொடர்ந்திருக்கிறது. புலரி, சாளரம், துயில் உள்ளிட்ட அருகிய வழக்குச் சொற்களை பயன்படுத்தியிருப்பதும் அத்தகைய ஒரு முயற்சிதான். எங்கும் நெருடல் இல்லாமல் நவீன மொழியோடு (பொதுச்சொற்களோடு ‘நாதாங்கி’ என்னும் வட்டார வழக்குச் சொல் ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார்) இவை பின்னிப் பிணையும் போது கவிதைகளோடு நெருக்கம் கூடுகிறது.
இத்தொகுப்பின் நூலாக்கம் தமிழ்ப் பதிப்புலகில் சாத்தியமாகாத விஷயம். செவ்வியல் இலக்கியத்திற்குரிய முக்கியவத்தை உணர்த்தும் தாள், அச்சு, கட்டமைப்பு, அளவு, அறிமுக உரைகள், பின்னிணைப்புகள் எல்லாம் பொருத்தமுற அமைந்த நூல் இது. எனினும் பதிப்பாசிரியராக எனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பு. கவிதைத் தலைப்புகள் வழக்கமாக அச்செழுத்தில் அமையும். இத்தொகுப்பில் அவை சன்னமான எழுத்தில் அமைந்திருக்கின்றன. ஒரு கவிதையின் முடிவில் எந்தக் குறியீடும் இல்லை. ஆகவே கவிதை முடிந்துவிட்டதா தொடர்கிறதா என்னும் குழப்பம் கணநேரம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. இத்தகைய கட்டமைப்பு கொண்ட நூலுக்கு அடையாளக் கயிறு ஒன்றையும் இணைத்திருக்கலாம்.
நூலின் இறுதியில் பொருளடக்கம் இருக்கிறது. அதை முதலில் அமைத்துவிட்டுப் பின்பகுதியில் ‘கவிதைத் தலைப்பகராதி’ அல்லது ‘கவிதை முதற்குறிப்பகராதி’ ஒன்றைச் சேர்த்திருக்கலாம். இவை வாசகருக்குப் பெரிதும் உதவுபவை என்பது மட்டுமல்ல, செவ்வியல் நூலின் தன்மைக்கு இவையும் வலுச் சேர்ப்பவனவாக இருந்திருக்கும். சி.மணி மொழிபெயர்த்த லாவோட்சுவின் ‘தா வோ தே ஜிங்’, பயணி மொழிபெயர்த்த ‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ ஆகியவற்றின் வரிசையில் ‘புதியதோர் உவகை’யுடன் வைத்து வாசிக்க வேண்டிய நோக்கு நூலாகக் கவிதை நூல் ஒன்று அமைவது பெரிய விஷயம். அதைச் சாதித்திருக்கும் நண்பர் என்.சத்தியமூர்த்தி என்கிற ந.சத்தியமூர்த்திக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.