சாதிதான் பெரிய விஷயம்

You are currently viewing சாதிதான் பெரிய விஷயம்

 

 

சாதி தொடர்பாக நிறையப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம் என்னும் சலிப்புணர்வு அடிக்கடி தோன்றும். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்று எண்ணி வேறு பக்கம் தலையைத் திருப்பினாலும் ஏதோ ஒருவகையில் சாதி விஷயம் அன்றாடம் வந்து சேர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு நாளும் சாதி பற்றி எழுதச் சொல்லித் தூண்டும் ஏதேனும் நிகழ்ச்சி நடக்கத்தான் செய்கிறது. சாதியை யோசிக்காமல் ஒருநாளும் இருக்க முடிவதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் வந்த ஒருசெய்தி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தொகுதியைச் சேர்ந்த வீரசோழபுரம்  கிராமத்தில் நடந்த நிகழ்வு. அங்குள்ள இராஜவாய்க்காலைக் கடந்துதான் வயலுக்குச் செல்ல வேண்டும். ஆடுமாடுகளை ஓட்டிப் போவதென்றாலும் வாய்க்காலைத் தாண்டியாக வேண்டும். வாய்க்காலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் சுடுகாட்டுக்குப் பிணத்தைக் கொண்டு செல்லவும் கடந்துதான் போக வேண்டும். வாய்க்காலைக் கடக்க இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவை உடைந்து போய்ப் பத்தாண்டுகள் ஆகிவிட்டனவாம். அவற்றை அரசு மீண்டும் கட்டித் தரவில்லையாம். பலமுறை கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்கவில்லையாம்.

அவ்வூரைச் சேர்ந்த எண்பது வயது கடந்த முதியவர் ஒருவர் 07-11-24 அன்று இறந்துபோனார். அவரது உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப் பூந்தேருடன் வாய்க்காலில் இறங்கிக் கழுத்தளவு நீரில் நீந்துகிறார்களா நடக்கிறார்களா என்று தெரியாத வகையில் மக்கள் செல்லும் காட்சியை நாள் முழுக்கத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அந்தக் காட்சியைப் பார்த்தபோது நெஞ்சம் பதைத்தது. உடல் வைக்கப்பட்டிருக்கும் பூந்தேர் நீருக்குள் பாதி முழுகிப் போகிறது. சுமந்து செல்வோர் தடுமாறிக்கொண்டு அதைத் தூக்கிக்கொண்டு நீருக்குள் செல்கிறார்கள். பின்னால் கொஞ்சம் பேர் நீருக்குள் முழுகுவதைப் போல நடக்கிறார்கள்.

பிணத்திற்கு என்னவானாலும் பிரச்சினை இல்லை. சுமந்து செல்வோர் நிலை ‘என்னவாகுமோ’ என்று அச்சம் தந்தது. நாகரிகத்தில் உச்சத்தைத் தொட்டுவிட்டோம் என்று பீற்றிக்கொள்ளும் இந்தக் காலத்திலும் இப்படி ஒருநிலைமையா என்று மனம் கொந்தளித்தது. ‘கழுத்தளவு நீரில் உடலைச் சுமந்துகொண்டு ஆபத்தான நிலையில் இடுகாட்டுக்குச் செல்லும் மக்கள். அரசிடம் கோரிக்கை வைத்தும் பாலம் கட்டித் தராத பரிதாபம்’ என்று செய்தி அறிவிப்பாளர் குரல் ஓலமிடுவதைப் போல வந்து கொண்டேயிருந்தது.

சாதிதான் பெரிய விஷயம்

தமிழ்நாட்டிலா இப்படி ஒருநிலைமை? இவ்வளவு மக்கள் வசிக்கும் ஊரில் சிறிய பாலம் ஒன்றைக் கட்டிக்கொடுக்க அரசு ஏன் இப்படித் தாமதம் செய்கிறது? சுடுகாட்டுப் பிரச்சினை இன்னும் எத்தனை காலம்தான் நீடிக்கும்? இந்தச் சிறிய பாலத்திற்கா நிதி இல்லாமல் போய்விட்டது? என்றெல்லாம் எனக்குத் தோன்றியது. அதன்பின்  ‘மின்னம்பலம்’ இணைய இதழில் (08-11-24, பாதையிருந்தும் கால்வாயில் நீந்திச் சென்று உடல் அடக்கம்: என்ன நடந்தது?) அதே செய்தியைப் படித்தேன். தொலைக்காட்சியில் சொல்லாத முக்கியமான விஷயம் இந்தச் செய்தியில் இருந்தது.

அவ்வூரில் தலித் சாதியைச் சேர்ந்த மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். இரண்டு சாதியினரும் வாய்க்காலைக் கடக்க இரண்டு தனித்தனி நடைப்பாலங்கள் இருந்தன. இரண்டுமே உடைந்து போய்விட்டன. இரண்டு குடியிருப்புகளுக்கும் தூரம் அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே தனித்தனிப் பாலங்கள் கட்டிக் கொடுக்கப்படிருக்கலாம் என்று எண்ணம் ஓடியது. ஏதாவது ஒருபாலத்தையாவது கட்டிக் கொடுத்திருந்தால் இப்படி நீருக்குள் ஆபத்தான நிலையில் இறங்க வேண்டிய நிலை வந்திருக்காதே.

இப்படி யோசித்தபடி செய்தியை மேலும் வாசித்தேன். காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். அவரிடம் இந்தப் பிரச்சினை பற்றிக் கேட்டதற்கு அவர் விவரம் சொல்லியிருக்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக ஆனதும் இந்தப் பாலப் பிரச்சினை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசினாராம். உடனே இருபாலங்களையும் கட்ட முடியாது, முதலில் ஒன்றைக் கட்டித் தருகிறோம், அது முடிந்ததும் இன்னொன்றைக் கட்டிவிடலாம் என்று ஆட்சியர் சொல்லியிருக்கிறார்.

அதன்படி முதலில் பட்டியலின மக்களுக்கான நடைப்பாலம் கட்டி முடிந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அம்மக்கள் இப்போது அதன் வழியாக வாய்க்காலைக் கடக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பாலம் கட்ட நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மழைக்காலம் என்பதால் தொடங்கத் தாமதமாகிறது. வேலை விரைவில் ஆரம்பம் ஆகிவிடுமாம். இத்தகவலோடு சட்டமன்ற உறுப்பினர் மேலும் ஒன்றை வருத்தத்தோடு சொல்கிறார்: ‘மனம் இருந்திருந்தால் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் இன்னொரு பாலத்தை பயன்படுத்தியிருக்கலாம். அவர்களை ஏதோ தடுக்கிறது.’

சாதிதான் பெரிய விஷயம்

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கும் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. சரி, அதிகபட்சம் ஒருகிலோமீட்டர் தூரம் இருக்கும் என்றே வைத்துக்கொள்வோம். கழுத்தளவு நீருக்குள் இறங்கி ஆபத்தான இறுதிப் பயணம் செய்வதைவிட ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தும் பாலத்தில் இறந்தவர் உடலை எடுத்துச் சென்றிருக்கலாமே. இரண்டு குடியிருப்புக்கும் தூரம் குறைவாக இருக்குமானால் இரண்டு பாலங்களை அரசு கட்டிக் கொடுக்கக் கூடாது. இருபிரிவினரும் ஒரே பாலத்தைப் பயன்படுத்துங்கள், விருப்பம் இல்லாதவர்கள் நீந்தியே செல்லுங்கள் என்று விட்டுவிட வேண்டும். இரட்டை டம்ளர் முறை ஒழிய வேண்டும் என்பதுபோலவே இரட்டைப் பாலமும் ஒழிய வேண்டும்.  ‘அவர்களை ஏதோ தடுக்கிறது’ என்று சட்டமன்ற உறுப்பினர் சொல்கிறார். எது தடுக்கிறது? வேறென்ன, சாதிதான் தடுக்கிறது.

ஏன் தொலைக்காட்சிகள் இந்தப் பின்னணியை மறைத்துவிட்டன? இதற்குச் செய்தி மதிப்பு ஏதும் இல்லையோ?  ‘கழுத்தளவு நீரில் பிணத்தைச் சுமந்து செல்லும் அவலம்’ என்று சொன்னால்தான் செய்தியாகுமா? இன்னொரு சாதியினர் பகுதியில் இருக்கும் பாலத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று புறக்கணிக்கும் தீண்டாமை மனோபாவத்தை அம்பலப்படுத்தினால் அது செய்தியாகாதா? ஊடகங்களில் வரும் செய்தியை எப்படி முழுமையாக நம்புவது? எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டக் கிராமம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. பல ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த ரேசன் கடைக்கு நிரந்தரக் கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. அதற்குரிய இடத்தைத் தேர்வு செய்து தரும் வேலை ஊராட்சியுடையது. அவ்வூரில் இரண்டு சாதியினர் வசிக்கின்றனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அரசுக்குரிய புறம்போக்கு நிலம் கூடுதலாக இருந்தது. சரி, அந்த இடத்தை ஒதுக்கிவிடலாம் என்று ஊராட்சி முடிவு செய்தது.

ஆனால் அவ்வூரில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நாங்கள் செல்ல மாட்டோம், அங்கு ரேசன் கடை கட்டினால் பொருட்கள் வாங்க மாட்டோம், ரேசனைப் புறக்கணிப்போம் என்றெல்லாம் சொல்லி ஆவேசமாக எதிர்த்தனர். சில மாதங்கள் பேச்சு வார்த்தை நடந்தது. பிற்படுத்தப்பட்ட சாதியினர் சமாதானம் ஆகவில்லை. மாறாகத் தமது குடியிருப்புப் பகுதியில் பல்லாண்டுகளாக இருக்கும் பெரிய ஆலமரம் ஒன்றை வெட்டிவிட்டு அந்த இடத்தில் ரேசன் கடை கட்டும்படி கூறினர். கடைசியில் அதுதான் நடந்தது. பெருமரம் வெட்டப்பட்டு இப்போது ரேசன் கடை கட்டப்பட்டிருக்கிறது.

தம் குடியிருப்புப் பகுதியில்தான் கடை கட்ட வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று தலித் மக்களும் போராட்டம் நடத்தியிருக்கலாம். நடத்தவில்லை. இன்னொரு பகுதிக்குள் போக மாட்டோம் என்று சொல்லும் தீண்டாமை உணர்வு அவர்களிடம் இல்லையல்லவா? பிற்படுத்தப்பட்ட சாதியினர் வசிக்கும் பகுதிக்குள் இப்போது எந்தக் கட்டுப்பாடும் இன்றித் தலித் மக்கள் செல்ல வழி பிறந்திருக்கிறது. ‘எதற்கு வந்தாய்?’ என்று யாரும் விசாரிக்க முடியாது. இப்படி ஒரு நன்மை நடந்திருக்கிறது என்று ஆறுதல் கொள்ளலாம்.

ஆலமரம் இருந்த இடமும் புறம்போக்கு நிலம்தான். கிளை விரித்து நின்றிருந்த மரத்தடி நிழலில் மாடுகளைக்  கட்டினர்; கூடி உட்கார்ந்து பேசினர்; கட்டிலைக் கொண்டு வந்து போட்டுப் படுத்தனர். அந்த வசதிகளை எல்லாம் இழப்பது அவர்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை. சாதிதான் பெரிய விஷயமாக இருக்கிறது.

—–    10-11-24

Add your first comment to this post