கழிமுகம் முன்னுரை

 

 

எழுதி மேற்சென்ற விதியின் கை

 

நான் எழுதியவை,  எழுதுபவை அனைத்தும் புனைவுதான். அவற்றில் சிறிதும் உண்மை கிடையாது. அது மட்டுமல்ல, உண்மை என்றே ஒன்று கிடையாது. உண்மை போலத் தோற்றம் காட்டுபவை உண்டு. இந்தக் கணத்தில் உண்மை போலத் தோன்றுவது அடுத்த கணத்தில் புனைவின் தன்மை கொண்டு விடுகிறது. ஆக எல்லாமே புனைவுதான். புனைவை உண்மை போலத் தோன்றச் செய்வதற்குத்தான் பெரிதும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அப்படிப் பலகாலம் மெனக்கெட்டிருக்கிறேன். அந்த மெனக்கெடல் வீண் போகவில்லை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துவிட்டேன். ஆனால் மேலும் மேலும் அப்படி மெனக்கெட என்னால் ஆகாது. ஆகவே புனைவைப் புனைவாகவே தோன்றச் செய்துவிடலாம் என முடிவெடுத்து எழுதிய நாவல் இது.

பிறப்பு, வளர்ப்பு, உணவு, இனப்பெருக்கம், மகிழ்ச்சி, இறப்பு உள்ளிட்ட அனைத்தும் பரிபூரணமாகப் பெற்று உலகம் முழுவதும் நிறைவான மனநிலையுடன் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அகத்திலும் புறத்திலும் எந்தச் சிக்கலும் இல்லை. தேவலோகத்தில் ஆனந்தமாக வசிப்பவர்களுக்குக்கூடச் சில மன நெருக்கடிகள் நேரலாம்.   பூலோகவாசிகளுக்கு ஏதுமில்லை.  எல்லாம் நேர்கோட்டில் செல்லும் உலகத்தில் எழுத்துக்கு என்ன வேலை? ஒழுக்கக் கேடுகள், விதி மீறல்கள், விழுமிய உளைச்சல்கள், ஆதிக்கப் பேராசைகள், அன்றாடப் பதற்றங்கள் எல்லாம் கூடிச் சீர் கெட்டுக் கிடக்கும் அசுரலோகமே புனைவுக்கு ஏற்றது. ஆகவே இந்த நாவலில் அசுரலோகத்தைக் களமாகவும் அசுரர்களைப் பாத்திரங்களாகவும் கொண்டிருக்கிறேன். அசுரப் பெயர்களும் அதன் நடைமுறைகளும் கொஞ்சம் அந்நியமாகத் தோன்றலாம். ஆனால் அவை போகப் போகப் பழகிவிடும். சில பக்கங்களைக் கடந்த பிறகு பெயர்கள் மட்டுமல்ல, எல்லாமே  நெருக்கமாகிவிடும். இல்லையென்றால்தான் என்ன, புதியவற்றை அறிந்துகொள்ளும் வேட்கைக்கு நற்பயணம் சித்திக்கக் கூடும்.

கதாபாத்திரங்களை வருணிக்கவே இல்லை. பாத்திரங்கள் அனைவரும் அசுரர்கள். அசுரரைப் பற்றிய மனப்பிம்பம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பொருத்திப் பார்த்துப் பாத்திரங்களின் உயரம், அகலம், உருவச் சித்திரம் ஆகியவற்றை வடிவமைத்துக் கொள்வது சிரமமானதல்ல. அதே போலக் களம் பற்றிய விவரணையும் மிகக் குறைவு. களத்தைத் தங்கள் மனத்தில் உருவாக்கிக் கொள்ள வாசகர் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும். அசுர உருவங்கள் நடமாடும் வகையில் அகலச் சாலைகளையும் இருபது முப்பதடி உயரமுள்ள கட்டிடங்களையும் கற்பனை செய்துகொள்வதும் அப்படி ஒன்றும் கஷ்டமல்ல. மனித ரூபத்தின் பெரிதுபடுத்தப்பட்ட விசித்திரம்தானே அசுரர்கள்?

கச்சிதம், செறிவு என்றெல்லாம் பிரயாசைப்படும் என் வழக்கத்தை இந்நாவலில் விட்டொழித்துக் கைக்கு வெகுவான சுதந்திரம் கொடுத்துவிட்டேன். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என் கை விதியின் கையாகி எழுதி எழுதி மேற்சென்றது. சில இடங்களில் அல்ல, பல இடங்களில் கை அதிகமாகவும் மிகையாகவும் பேசிவிட்டதாகவும் இன்னும் செறிவாக்கிச் சுருக்கி இருக்கலாம் எனவும் எனக்குள்ளான கச்சிதப் பேர்வழி தன் ஆட்காட்டி விரலால்  மூளையில் குத்திக்கொண்டே இருக்கிறான். அவன் விரலைப் பற்றி முறித்து ஓடச் செய்யும் பெரும் பிரயத்தனத்தில் வெற்றி பெற்றிருப்பதாகக் கருதுகிறேன்.

இலக்கண நூல் எழுதும் போது ‘சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்’ உள்ளிடக் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து அழகுகள் பற்றியும் ‘குன்றக் கூறல் மிகைபடக் கூறல்’ எனத் தவிர்க்க வேண்டிய பத்துக் குற்றங்கள் குறித்தும் வாசித்திருக்கிறேன். பத்து அழகுகளையும் கையாண்டு நூல் எழுத முடிகிறதோ இல்லையோ பத்துக் குற்றங்களைக் கைக்கொள்ள வேண்டும் என நினைத்ததுண்டு. இந்நாவலில் ‘மிகைபடக் கூறல், மற்றொன்று விரித்தல்’ ஆகிய குற்றங்களைச் செய்திருக்கிறேன். இவை அறிந்தே செய்த குற்றங்கள்.

என்னவோ இந்நாவலின் பொருளமைதிக்கு மிகைபடக் கூறலும் மற்றொன்று விரித்தலும் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது. மேலும் அப்படி மிகைபடக் கூறும் போதும் மற்றொன்றை விரித்துச் செல்லும் போதும் கிடைக்கும் உற்சாகம் பெரிது. குற்றத்தை உற்சாகமாகச் செய்யும் மனநிலை நோய்க்கூறு என்று சொல்லலாம்; நோய்க்கூறுதான் பல கலைகளுக்கு மூலாதாரமாகவும் இருக்கிறது.  இதில் நோய்க்கூறாக நின்றிருக்கிறதா, கலையாகி இருக்கிறதா எனத் தீர்மானிக்க முடியவில்லை. அப்பொறுப்பை வாசகருக்கு விடுகிறேன்.

000

இந்நாவலை எழுதும் காலத்தில் என்னைப் புரந்தவர்கள் கர்நாடக மாநிலம், மணிப்பால் கலையியல் மற்றும் தத்துவ மையப்  பேராசிரியர்களாகப் பணியாற்றும் எழுத்தாளர்கள் காயத்ரி பிரபு, நிகில் கோவிந்த் ஆகியோர்.

அம்மையத்தின் மாணவர்களும் என் நாட்களை இனிமையாக மாற்றிய நண்பர்களுமான ஜாக்ஸன், விவேக் ஆகியோர்.

நாவலின் முதல் வரைவை வாசித்தோர் மூவர். வாசித்து நற்சொல் கூறிய என் துணைவி பி.எழிலரசி முதலாமவர்; குமராசுரருக்கும் மங்காசுரிக்கும் பெண் குழந்தையும் இருந்திருக்கலாம் எனத் தன் ஏக்கத்தை வெளிப்படுத்திய என் மகள் மு.இளம்பிறை இரண்டாமவர்; நாவலுக்குப் பல கச்சாப்பொருட்களை வழங்கியதோடு வாசித்து ஒப்புதல் வழங்கிய என் மகன் எ.மு.இளம்பரிதி மூன்றாமவர்.

நாவலின் இரண்டாம் வரைவை வாசித்து மேலும் செம்மைப்படுத்த ஆலோசனை வழங்கிய அன்பு  நண்பர்கள் சிலர்.  ‘சபாஷ்’ போட்டுக் கருத்துத் தெரிவித்தவர்  சுகுமாரன்; என் எழுத்துக்களை எப்போதும் போல உவப்போடு வாசித்துத் தம் அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொண்டவர் இரா.ராமன் (கல்யாணராமன்); தயக்கத்துடனும் அன்புடனும் வாசித்துத் தம் எண்ணங்களைப் பகிர்ந்தவர் இசை; என் எதிர்பார்ப்பை உரசிப் பார்க்கும் கல்லாக விளங்கிய த.ராஜன்; இருமுறை வாசித்துச் செம்மையாக்கம் தொடர்பான தம் கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டவர் நண்பர் க.காசிமாரியப்பன்;

நாவலின் இறுதி வடிவம் உருவாக வாசித்து அபிப்ராயங்களும் ஆலோசனைகளும் கொடுத்த நண்பர்கள் காலச்சுவடு கண்ணன், க.மோகனரங்கன் ஆகியோர்.

நூலின் அட்டையை வடிவமைக்கக் கழிமுக வரலாற்றை நோக்கிச் சென்றதோடு மனம் கொள்ளும் வகையில் உருவாக்கிக் கொடுத்தவர் நண்பர் சீனிவாசன் நடராஜன்.

விருப்பம் அறிந்து நுட்பங்களுடன் நூலாக்கம் செய்தவர் கலா முருகன்.

நாவலை ஒவ்வொரு கட்டமாக நகர்த்தி வெளியீட்டைப் பெறுமதி கொண்டதாக மாற்றியவர் காலச்சுவடு கண்ணன்.

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 

05-06-18                                                                    பெருமாள்முருகன்

நாமக்கல்.