சமீபத்தில் ‘பிரம்மா’ (1991) என்னும் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் கதாநாயகன். பானுப்ரியா, குஷ்பு ஆகியோர் நாயகிகள். ‘இவளொரு இளங்குருவி, எழுந்து ஆடும் மலர்க்கொடி’ என்னும் எஸ்.ஜானகி பாடிய பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதற்கு இளையராஜா மட்டும் காரணமல்ல. குட்டைப் பாவாடையோடு குதித்தாடி வந்து அறிமுகம் ஆகும் குஷ்புவுக்கு அப்போது அத்தனை ரசிகர்கள்.
சத்யராஜ் படங்களில் எல்லாம் இணையான பாத்திரம் கவுண்டமணிக்கும் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். சத்யராஜும் கவுண்டமணியும் குடிப்பதற்காக ஒரு கிளப்புக்குச் செல்கிறார்கள். அந்த நகைச்சுவைக் காட்சியில் என் கவனம் சென்றது. அதற்குக் காரணம் கவுண்டமணி. அக்காட்சிக்குத் ‘தீப்பெட்டி நகைச்சுவை’ என்று பெயர் சூட்டலாம்.
இரண்டு குடிகாரர்களின் உரையாடல் இது:
‘அண்ணா கொஞ்சம் தீப்பெட்டி குடுங்க.’
‘டேய் சிகரெட்டு வேணுன்னாக் கேளு தர்றன். ஆனா தீப்பெட்டி கேக்காத. தீப்பெட்டியால எங்குடும்பமே எரிஞ்சு நாசமாப் போச்சு.’
தொடர்ந்து குடும்பம் எரிந்து நாசமாய்ப் போன கதையை அவர் சொல்வார். தன் வீட்டில் குடியிருந்த ஒருவனுக்குப் பீடி பற்ற வைக்கக் கொடுத்த தீக்குச்சியை அவன் கூரையில் தூக்கி எறிந்துவிட்டதாகவும் அதனால் வீடு தீப் பிடித்து எரிந்து போனதாகவும் அதனால் மனைவி கோபித்துக் கொண்டு போய்விட்டதாகவும் கதை செல்லும். கூரையில் தீக்குச்சியை எறிந்த ‘பழையபாளையம் சின்னுச்சாமி’ கவுண்டமணிதான்.
இன்னொரு பக்கம் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் சத்யராஜுக்கும் கவுண்டமணிக்குமான உரையாடல் இப்படி வரும். சத்யராஜ் கேட்பார் ‘வத்திப்பெட்டி இருக்கா?’ உடனே கவுண்டமனி சொல்வார், ‘அட நெருப்பொட்டி எங்கிட்ட இல்லப்பா.’ முதலில் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கவுண்டமணி கேட்பார் ‘கொஞ்சம் நெருப்பொட்டி குடுங்க சார்.’ மேலும் தொடர்ந்து கவுண்டமணிக்கு உதை விழுவதில் காட்சி முடியும்.
இந்தக் காட்சிக்கான உரையாடலில் தீப்பெட்டி, வத்திப்பெட்டி, நெருப்பெட்டி ஆகிய மூன்று சொற்கள் வருகின்றன. முதலில் உரையாடுவோர் ‘தீப்பெட்டி’ என்கிறார்கள். சத்யராஜ் ‘வத்திப்பெட்டி’ என்கிறார். கவுண்டமணி ‘நெருப்பெட்டி’ என்று சொல்கிறார். காட்சியில் இரண்டு முறையும் கவுண்டமணி ‘நெருப்பொட்டி’ என்றே சொல்கிறார். ‘நெருப்பெட்டி’ என்பது கொங்குப் பகுதி வட்டார வழக்கு. அப்படத்திற்கு எழுதிய வசனத்தில் ‘நெருப்பெட்டி’ இருந்திருக்க வாய்ப்பில்லை. கவுண்டமணி இயல்பாகப் பேசுகையில் வந்து விழுந்த சொல். எழுதிக் கொடுத்ததை சத்யராஜ் உள்ளிட்டோர் பேசியுள்ளனர். கவுண்டமணி பேசியது சொந்தச் சரக்கு.
கவுண்டமணி பேச்சைக் கேட்ட பிறகே இது கொங்கு வட்டார வழக்கு என்னும் உணர்வைப் பெற்றேன். ‘நெருப்பு’ பொதுவழக்கு என்பதால் நெருப்பொட்டியை வட்டார வழக்காக நான் கருதவில்லை. ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’யில் நெருப்பொட்டி, நெருப்புக்குச்சி ஆகிய சொற்களைச் சேர்க்கத் தவறிவிட்டேன். அடுத்த பதிப்பு வரும்போது (!) கவுண்டமணிக்கு நன்றி சொல்லி இச்சொற்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
‘நெருப்புப்பெட்டி’ என்பதன் மரூஉ ‘நெருப்பொட்டி.’ கொங்குப் பகுதியில் ‘தீக்குச்சி’ கிடையாது. ‘நெருப்புக்குச்சி’தான். தீ என்னும் சொல்லின் பயன்பாடும் இருந்தாலும் பல இடங்களில் ‘நெருப்பு’ என்பதையே இப்பகுதியில் பயன்படுத்துவர். ‘கொஞ்சம் நெருப்புப் போடு, குளிர் காயலாம்’, ‘நெருப்புப் புடுச்சு மொழங்குது பாரு’, ‘நெருப்புப் பத்த வெச்சுட்டுப் போயிட்டான்’, ‘அடுப்பு நெருப்ப அணைச்சுரு’, ‘கொழந்தக்கி நெருப்பு சுடும்னு தெரியுமா?’ என்பது போலப் பெரும்பாலான உரையாடல்களில் ‘நெருப்பு’ இடம்பெறும். ‘நெருப்புன்னு சொன்னா வாய் வெந்து போயிருமா?’ என்பதுதான் இங்கே பழமொழி வடிவம்.
கொங்கு வட்டார நாவல்களில் நெருப்பு, தீ இரண்டும் வருகின்றன. மிக இயல்பாக எழுதும் இடங்களில் ‘நெருப்புத்’ தான். ‘கல் அடுப்புக் கூட்டி அப்போதுதான் நெருப்பு மூட்டுவாள்’ (ப.23) என்று ‘நாகம்மாள்’ நாவலில் ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதுகிறார். ‘தீ மூட்டுதல்’ என்பது பொதுவழக்கு. கொங்கு வழக்கில் ‘நெருப்பு மூட்டுதல்.’ ‘பூவோட்டில் நெருப்பு தகதகவென்று எரிந்து கொண்டிருந்தது’ (ப.18), ‘எரிகிற நெருப்பிற்கு எண்ணெய் விட்ட மாதிரி’ (ப.102) என்றெல்லாம் அவர் எழுதுகிறார். பிற நாவல்களிலும் ‘நெருப்பு’ வருமிடங்களைத் தொகுத்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு இப்பகுதி வழக்கில் நெருப்பின் பயன்பாடு மிகுதியாக இருந்ததால் அதிலிருந்து நெருப்புப்பெட்டி, நெருப்புக்குச்சி ஆகிய சொற்கள் உருவாகியுள்ளன.
நெருப்பு, தீ ஆகிய இருசொற்களும் சங்க இலக்கிய காலம் முதல் வழங்கி வரும் பொதுவழக்குச் சொற்கள்தான். ஆனால் குறிப்பிட்ட பகுதியில் ஒருசொல் பெருவழக்காக இருக்கிறது. இன்னொரு சொல் அருகிய வழக்கு. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? நெருப்பு என்பது பெயர்ச்சொல். இதற்கு வினைவடிவம் கிடையாது. ‘தீ’ என்பது வினையடி. தீய்ந்து, தீய்கின்ற, தீயும், தீய்தல் என்றெல்லாம் இது வடிவம் கொள்ளும். கொங்குப் பகுதி வழக்கில் இத்தகைய வினை வடிவங்கள் வழக்கில் உள்ளன. சமையலில் ‘தீஞ்சு போச்சு’ என்று சொல்வது மிகுதி. ‘தீச்சுப்புட்டயா’ என்று கேட்பதுண்டு. தீய்ந்த அடிச்சோற்றைத் ‘தீவல்’ என்று சொல்வதும் உண்டு. ‘தீஞ்ச நாத்தம்’ என்றும் சொல்வர்.
தீ என்பது அடிப்படையில் வினைச்சொல்லாக இருந்து பின்னர் முதனிலை திரியாமல் தொழிற்பெயராக மாறியிருக்கக் கூடும். அந்த மாற்றம் கொங்குப் பகுதியில் நடக்கவில்லை போலும். ஆகவே ‘நெருப்பு’ என்பதே பெயர் வடிவமாகப் பயன்பட்டு வந்திருக்கலாம். அது கொங்குப் பகுதியில் சமீபகாலம் வரைக்கும் நிலைபெற்றிருக்கிறது. இன்றைய தலைமுறையினர் தீப்பெட்டி, தீக்குச்சி என்றே வழங்குகின்றனர். பொதுவழக்கிலும் நெருப்பைத் தீ விழுங்கிவிட்டது.
—– 31-10-22