கீழடி என்னும் பெயர் அகழாய்வுத் தரவுகளால் தமிழின வரலாற்றில் முன்னிடம் பெற்றுவிட்டது. நேரான பொருள் கொண்ட இவ்வூர்ப் பெயரே அதன் இயல்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் கண்டடையத்தான் வெகுகாலம் ஆகியிருக்கிறது. கீழ் என்பது மண்ணுக்குக் கீழ். அடி என்னும் பெயர்ச்சொல்லுக்குப் பல பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி கூறுகின்றது. அவற்றில் இவ்வூருக்குப் பொருந்தும் பொருள்களாக மூலம் (source), பழைமை (antiquity), இடம் (place), ஐசுவரியம் (wealth), மண்டி (படிவு) (sediment) ஆகியவை இருக்கின்றன. மனித வாழ்க்கை போலவே ஊர்களுக்கும் வரலாற்று ஏற்றதாழ்வுகள் உண்டு. ஆனால் தன் வாழ்வின் சுவடுகளை ஊர்கள் ஏதேனும் ஒருவிதத்தில் காட்டி சமிக்ஞை செய்து கொண்டேதான் இருக்கின்றன. கீழடியும் அப்படித்தான்.
பழமையைத் தன்னுள் செல்வப் படிவாகக் கொண்டிருக்கும் கீழடியின் தொன்மையை இப்போது உணர்கிறோம். சரி, அதன் பின்னர் அவ்வூர் எப்படியெல்லாம் மாறியது, என்னவெல்லாம் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்னும் தேடுதலும் முக்கியமானது. கொங்கு நாட்டு நொய்யல் ஆற்றங்கரை ஊரான கொடுமணல் 1980களில் அகழ்வாய்வுக்கு உட்பட்டது. கீழடிக்குக் கிடைத்த சமூக வெளிச்சம் கொடுமணலுக்குக் கிடைக்கவில்லை. அப்போதைய அரசியல் சூழல், ஊடக அமைப்பு ஆகியவை காரணம். பதிற்றுப்பத்தில் ‘கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கல்’ (பாடல் 67) என்றும் ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ (74) என்றும் குறிப்பிடப்படும் ‘கொடுமணம்’தான் ‘கொடுமணல்’ என மருவி வழங்கியது. மணிக்கற்கள் நிறைந்த அவ்வூருக்குத் தொல்லியல் முக்கியத்துவம் கிடைத்ததும் அதன் பிற்கால வரலாறுகள் பற்றிய கவனமும் உருவாயிற்று. புலவர் செ.இராசு அவர்கள் ‘கொடுமணல் இலக்கியங்கள்’ என்னும் நூலை வெளியிட்டார். ஓலைச்சுவடியில் இருந்த ‘காதல்’ இலக்கியங்கள் இரண்டையும் பல பின்னிணைப்புகளையும் கொண்ட அந்நூல் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிற்றிலக்கியங்கள் ஒரே வடிவத்தில் எழுதப்பட்டவை என்றாலும் பெயர்கள், இடங்கள், வருணனைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றால் தனித்தும் தெரிபவை. கொடுமணல் இலக்கியங்களிலும் அப்படிப் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. அதே போல இப்போது கீழடிக்கும் இருநூல்கள் கிடைத்திருக்கின்றன. கீழடி மகிமைச் சிந்து, கீழடி பார்த்தலிங்கேஸ்வரன் வழிநடைச் சிந்து ஆகியவை. இவை 1906இல் அச்சில் வெளியானவை. இவற்றைத் தேடிக் கண்டடைந்து இப்போது உரையுடன் ராஜா பதிப்பத்திருக்கிறார். வழிபாடு தொடர்பான எச்சங்கள் ஏதும் இல்லாத பழமையான தொல்லியல் சான்றுகள் கொண்ட கீழடியின் பிற்கால வரலாறு புராணக் கதைகளுக்குள்ளும் கோவில்களுக்குள்ளும் புதைந்து போயிருப்பதை இவற்றின் மூலம் அறிய முடிகிறது. கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகான வரலாறுகளில் இவை தவிர்க்க இயலாதவை. ஊர் வரலாறு என்பது பெரும்பாலும் தல வரலாறுகளே. ஆனால் கீழடியின் முக்கியத்துவம் குறையவில்லை என்பதை உணர்த்த இவை சான்றாகின்றன.
மக்கள் வாழ்க்கை நடைமுறையோடு கூடிய இலக்கியங்களில் கோவில்களைக் கடந்தும் பல விஷயங்கள் முதன்மை பெறுகின்றன. சிந்து இலக்கியம் என்பது வெறுமனே ஏட்டிலக்கியம் அல்ல; அது வாய்மொழியாகப் பாடுவதற்கு ஏற்றது; பாடவும் பட்டது. பழனிக்குக் காவடி எடுத்து ஆடிச் செல்வோர் இன்றும் காவடிச் சிந்துப் பாடல்களையும் வழிநடைச் சிந்துப் பாடல்களையும் பாடிச் செல்கின்றனர். வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகம் நடந்தபோது நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று ‘வழிநடைச் சிந்துப்’ பாடலைப் போராட்டக் குழுவினர் பாடிச் சென்றனர். நடை வருத்தம் தெரியாமல் இருக்க அப்படிப் பாடிச் செல்வதற்கு நம் மரபில் இலக்கியங்கள் இருக்கின்றன.
ஓர் ஊருக்குப் பெருமை அவ்வூர்க் கோவில்களால் கிடைக்கிறது என்பது பிற்காலத் தமிழ் மரபு. ‘கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்னும் பழமொழி அதன் வெளிப்பாடே. ஓர் ஊர் அல்லது நிகழ்வின் மகிமைகளை எடுத்துச் சொல்வது மகிமைச் சிந்து. காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, கொலைச் சிந்து எனப் பல வகைச் சிந்துகள் உள்ளன. அவற்றுள் ஒன்று மகிமைச் சிந்து. இவ்வகையில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. கன்னிமாரம்மன் திருவிழா மகிமைச் சிந்து, ஐயனார் மகிமைச் சிந்து, பக்கீர் மஸ்தான் மகிமைச் சிந்து உள்ளிட்ட நூல்கள் இணையக் கல்விக் கழகம் போன்ற தளங்களில் இப்போதும் கிடைக்கின்றன. அம்மரபில் உருவானது கீழடி மகிமைச் சிந்து. அது கீழடியின் பெருமைகளைக் கூறுகிறது.
வழிநடைச் சிந்து பயண வழியைத் தெளிவாக விவரிக்கும் இலக்கிய வகை.
வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய
ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்தி
பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும்
அடியும் நடையும் அமைவுறப் பெற்று
வழிநடைச் சிந்தென வகுக்கப் படுமே
என்று இலக்கணம் கூறுகிறது ‘சிந்துப் பாவியல்.’ இவ்வகையிலும் பல நூல்கள் உள்ளன. மதுரையிலிருந்து கீழடிக்கு நடைப்பயணமாகச் செல்வதை விவரிப்பது கீழடி வழிநடைச் சிந்து. மதுரையிலிருந்து கீழடிக்குச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது என்பதையும் எவ்வழி அது என்பதையும் இச்சிந்து நமக்குக் காட்டுகிறது.
இவ்விரு சிந்துகளையும் பதிப்பித்துள்ளவர் ராஜா. மதுரைப் பதிப்பு வரலாறு தொடர்பாகத் தேடுதல் கொண்டவர். பல வரலாற்றுத் தகவல்களையும் நூல்களையும் தம் தேடலில் அடைந்திருப்பவர். இவ்விரு சிந்துகளையும் மூலம் சிதையக் கூடாது என்பதற்காக ஏற்கனவே அச்சிட்ட அதே வடிவில் கொடுத்திருக்கிறார். சிறுநூல்கள் என்றாலும் உரையில்லாமல் உணர்ந்து கொள்வது இன்று கடினம். ஆகவே எளிமையான உரை தந்திருக்கிறார். பல பின்னிணைப்புகள் இருக்கின்றன. பயண வழியைக் காட்டும் வரைபடம் அதில் முக்கியமானது. மதுரையின் பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து ஏராளமான புதையல்களைக் கண்டடைந்துள்ள ராஜா முதலில் பதிப்பிக்கும் நூல் ‘கீழடி இலக்கியங்களாக’ இருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது. இன்னும் பல நூல்களைப் பதிப்பிக்கவும் எழுதவுமான திறன் கொண்ட அவருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
17-04-22 பெருமாள்முருகன்
நாமக்கல்.
முனைவர் பொ.ராஜா பதிப்பித்த ‘கீழடி – மகிமைச் சிந்து, வழிநடைச் சிந்து’ நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை.
Comments are closed.