சட்ட நடவடிக்கை சரியாகுமா?

சட்ட நடவடிக்கை சரியாகுமா?

சட்ட நடவடிக்கை சரியாகுமா?

கடந்த சில ஆண்டுகளாக விவாத மனநிலை அற்றவனாக இருக்கிறேன். அதையும் கடந்து தூண்டல்கள் உருவாகும் போது கடப்பதற்குத் தள்ளிப் போடுவதையோ நண்பர்கள் யாரிடமாவது ஆலோசனை கேட்பதையோ செய்வேன். அவ்வழிமுறைகள் விவாதத்திற்குள் நுழையாமல் இருப்பதையே உறுதி செய்வனவாக அமையும். இலக்கிய விவாதமோ கருத்து விவாதமோ எதுவாயினும் சரி, தனிநபர் தாக்குதலில் முடிவதும் அகந்தை மேலெழுந்து நிற்பதும் ஆயுள் முழுவதும் தீராப் பகையை ஏற்படுத்தி விடுவதுமே வழக்கம். ஆகவே ஒதுங்குதலும் ஒதுக்குதலுமே நமக்கு ஏற்றது எனக் கருதியிருக்கிறேன். ஐம்பதைக் கடந்த வயதும் இதற்குக் காரணமாகலாம்.

ஜெயமோகன் வெளியிட்ட ‘இடதுசாரியின் கடிதத்தில்’ பா.செயப்பிரகாசம் பற்றிய குறிப்பு தொடர்பான விவாதத்தில் என் வருத்தத்தைத் தெரிவிக்கும் குறிப்பொன்றை மட்டும் முகநூலில் வெளியிட்டுவிட்டு அமைதி காக்கவே விரும்பினேன். அடுத்துக் கண்டன அறிக்கை வந்தது. தொடர்ந்து பா.செயப்பிரகாசத்தின் சட்ட நடவடிக்கை, அதற்கான ஜெயமோகனின் எதிர்வினை, ஜெயமோகனின் சட்ட நடவடிக்கை எனச் சென்று இப்போது கருத்துரிமை சார்ந்த விவாதமாக இது பரிணமித்திருக்கிறது. கருத்துரிமை தொடர்பாகச் சமீப ஆண்டுகளில் கவனம் செலுத்தி வருவதோடு நூலாகும் அளவு நிறையக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் இது பற்றிக் கொஞ்சம் பேசலாம் எனத் தோன்றிய எண்ணம் வலுப்பட்டதால் இதை எழுதுகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். பா.செயப்பிரகாசம் தொடர்பான இந்த விவாதத்தில் எனக்கு ஈடுபாடு உண்டானமைக்குக் காரணம் அவரோடு சில ஆண்டுகள் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் என்பதுதான். வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ அவரைச் சந்திக்கும்படி இருந்த காலம் அது. அதன் காரணமாக அவரது சிந்தனைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை அணுக்கமாக அறிந்திருக்கிறேன். ஜெயமோகன் வெளியிட்ட கடிதத்தில் (அக்கடிதத்தை ஜெயமோகனே எழுதியிருக்கக் கூடும் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர்; நான் அப்படி நம்பவில்லை) பா.செயப்பிரகாசம் பற்றி எழுதப்பட்டிருந்த இரண்டு விஷயங்கள் எனக்கு வருத்தம் தந்தன. அவற்றோடு ஜெயமோகனுக்கும் உடன்பாடு என்பது இன்னும் கூடுதல் வருத்தம் தருகிறது.

முதலாவது, ஒரு தகவல் பிழை. தீவிர இடதுசாரி இயக்கம் ஒன்றுக்கு அவர் தலைவராக இருந்தார் என்பது. ஓர் எழுத்தாளர் அப்படி ஒரு இயக்கம் வைத்து நடத்தும் அளவு திறன் பெற்றவராக இருந்தால் அது மகிழ்ச்சி தருவதுதான். ஆனால் பா.செயப்பிரகாசம் அத்தனை திறன் பெற்றவரல்ல. இடதுசாரி இயக்கம் ஒன்றின் கலை இலக்கிய மக்கள் திரள் அமைப்பில் செயல்பட்டார். அதிலும் ‘பொறுப்பற்றவராக’த்தான் இருந்தார். அவ்வமைப்பு வெளியிட்ட கலை இலக்கிய இதழான ‘மனஓசை’ இதழை அவரே பொறுப்பெடுத்துச் சிலகாலம் நடத்தினார் என்பதைத் தவிர. அவரை அரசியல் பேச்சாளராக்க அவ்வமைப்பு முயன்றது; ஆனால் அது படுதோல்வியில் முடிந்தது என்பது என் அனுமானம். ஓர் எழுத்தாளருக்குரிய மன அமைப்பும் செயல்பாட்டு எல்லையும் கொண்டவரே அவர்.

இரண்டாவது, அவரைச் ‘சாதி வெறியர்’ என்று அக்கடிதம் குறிப்பிடுவதை அவதூறு என்றுதான் சொல்ல வேண்டும். சாதித் தாக்குதலிலிருந்து புதுமைப்பித்தன் உட்பட எந்த எழுத்தாளரும் தப்பிக்க முடிந்ததில்லை. ஆனால் அவர்களது படைப்பை விமர்சிக்கும் போது ஒருவகை வாசிப்பாக அவர்கள் சார்ந்த சாதிக் கருத்தியல் எவ்வாறு படைப்பில் உள்ளடங்கி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவ்வகை விமர்சனங்கள் வந்தன என்றே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். எப்போதும் போல அந்த எல்லையைக் கடந்து சாதி முத்திரை குத்துவதும் சிலருக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் அவர்களின் படைப்பு தொடர்பானவை என்பதே என் அனுமானம். அப்படியும் யார் ஒருவர் மீதும் ‘சாதி வெறியர்’ என்று முத்திரை விழுந்ததாக எனக்கு நினைவில்லை.

பா.செயப்பிரகாசத்தின் படைப்புகளை எடுத்து அதில் சாதிக் கண்ணோட்டம் இருக்கிறது என்று ஒரு விமர்சனம் வருமானால் அதைப் பொருட்படுத்தலாம். ஏற்கலாம்; மறுக்கலாம்; பதில் சொல்லலாம். நானே அவர் எழுத்துக்களைப் பற்றிப் பல விமர்சனங்களைச் செய்திருக்கிறேன்; எழுதியுமிருக்கிறேன். ஜெயமோகன் அவரைப் ‘போலி இலக்கியவாதி’ என்கிறார். அப்படிச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. என்னென்ன காரணங்களின் அடிப்படையில் அப்படிப்பட்ட முடிவுக்கு வருகிறார் என்று சொல்லவில்லை என்றாலும் கூடப் பிரச்சினை இல்லை. ஆனால் ஜெயமோகன் வெளியிட்ட கடிதத்தில் பொத்தாம் பொதுவாகச் ‘சாதி வெறியர்’ என்று குறிப்பிடுவதை அவதூறு என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு வேறென்ன அடையாளம் தருவது என்று எனக்குத் தெரியவில்லை. கருத்துரிமையின் பரந்துபட்ட எல்லைக்குள்கூட அவதூறு என்பது அடங்காது என்றே கருதுகிறேன். ஆகவேதான் என் வருத்தத்தை வெளிப்படுத்திப் பதிவிட்டேன்.

பா.செயப்பிரகாசம் திராவிட இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். பிறகு அதன் போதாமை உணர்ந்து இடதுசாரி இயக்கக் கருத்தியலை மேற்கொண்டவர். இப்போது தமிழ்த் தேசியக் கண்ணோட்டம் கொண்டவராக வெளிப்படுகிறார் என்று நினைக்கிறேன். எப்படியும் தம் வாழ்நாள் முழுக்க எழுத்தும் தாம் நம்பும் கருத்து சார்ந்த செயல்பாடுமாகவே இருந்து வருபவர். சாதி மதம், ஏற்றதாழ்வு, சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான கருத்தியலை மேற்கொண்டு இயங்கி வருபவர். அவர் நம்பும் கருத்தியலை இயன்றவரை தம் வாழ்விலும் கடைபிடித்தவர்; கடைபிடிக்கிறவர். பல உதாரணங்களையும் சம்பவங்களையும் என்னால் பட்டியலிட்டுக் காட்ட முடியும். தேவையானால் அவற்றை எழுதுவேன்.

தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்புக் கொடுத்து ஒரு மனிதர் எந்தக் கருத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறாரோ அந்தக் கருத்தை ஆதரிப்பவராகவும் அதன் வெறியராகவும் அவரைச் சித்திரித்தால் எந்த மனிதராக இருப்பினும் கோபமும் வேகமும் ஏற்படுவது இயல்பு. பா.செவுக்கும் அப்படித்தான் உணர்வு ஏற்பட்டிருக்கும். அவர் வாழ்க்கையே வீண் என்று சொல்வதல்லவா இந்தச் ‘சாதி வெறியர்’ என்னும் முத்திரை? அதன் அடிப்படையில் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் முன்னெடுத்து மறுப்பு, எழுத்தாளர்களை இணைத்துக் கண்டன அறிக்கை, சட்ட நடவடிக்கை என்று அடுத்தடுத்துச் செயல்பட்டார்கள் என்று தோன்றுகிறது.

அவர் சட்ட நடவடிக்கை என்று போனதும் ஜெயமோகனும் சட்ட நடவடிக்கை என்று இறங்கியிருக்கிறார். அதில் ஒரு கூடுதல் விஷயமாகக் கண்டன அறிக்கையில் பெயர் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கியவர்கள் பேரிலும் சட்ட நடவடிக்கை என்கிறார். இது இப்போது புதுமையாக இருக்கிறது. இருக்கட்டும். இச்சூழலில், ஒரு விவாதத்தில் சட்ட நடவடிக்கைக்குப் போவது கருத்துரிமையைப் பறித்துவிடாதா என்னும் கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. ஜெயமோகனே தம் பதிவில் அதை எழுப்பியும் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் இதை மேலெடுத்துச் சென்றால் நமக்கு எழும் கேள்வி இப்படி இருக்கும்: ‘எழுத்தாளர்கள் மீது வெளியில் இருப்போர் தாக்குதல் நடத்தும்போது சட்ட நடவடிக்கைக்குப் போகலாம்; எழுத்தாளர்களுக்கு இடையே ஏற்படும் விவாதத்திற்கும் சட்ட நடவடிக்கை என்று போனால் எந்த விவாதத்தையாவது நடத்த முடியுமா?’ இதுதான் இன்று நாம் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்.

அவதூறு, இழிவு போன்றவற்றுக்கு மறுத்து எழுதலாம்; விவாதம் புரியலாம். அப்படியும் ஓர் முடிவு வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஒருவர் மீது உடல்ரீதியான தாக்குதல் நடத்துதல், அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறித்தல், வாழ்வுரிமையை முடக்குதல் முதலியவற்றைச் செய்பவர்கள் உண்டு. அவை எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல. சட்ட நடவடிக்கை என்பது ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமை. அவ்வுரிமையைப் பயன்படுத்துவதை நாம் வரவேற்கலாம். விவாதித்துத் தீராத பட்சத்தில் சட்ட நடவடிக்கை என்பது ஏற்புடையதே. அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

எழுத்தாளர்களுடன் பிரச்சினை ஏற்படுகையில் வெளியே உள்ளவர்கள் அவ்வாறு சட்ட நடவடிக்கைக்குப் போவது நல்லது. ஆனால் எழுத்தாளர்களுக்குள் பிரச்சினை என்னும்போது சட்ட நடவடிக்கை சரியாகுமா? ஜனநாயக உரிமை என்றாலும் சட்ட நடவடிக்கைக்குப் போகாமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து. அது விவாதத்தை முடக்கும். விமர்சனப் பண்பைச் சுருக்கும். எழுத்தாளர்கள் தமக்குள்ளான பிரச்சினைக்கே சட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றால் வெளியே இருப்பவர்களுக்கு அது மேலும் ஊக்கம் தரும். சாதாரணப் பிரச்சினைக்கே சட்டத்தை நாட முயல்வார்கள்.

நம் நீதி அமைப்பு பல சிக்கலான வழிமுறைகளைக் கொண்டது. அதில் சிக்கிக்கொண்டால் ஏற்படும் அலைச்சல் யாருக்கும் மன நெருக்கடியைக் கொடுக்கும். விவாதத்தில் ஈடுபடுவோர் சுதந்திரமாக எதையும் பேச முடியாது. கண்டன அறிக்கையில் பெயர் உள்ளவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை என்று ஜெயமோகன் சொல்வது போல நடந்தால் கண்டன அறிக்கைகளில் பெயர் சேர்க்கவே பலரும் அஞ்சும் நிலை வரும். நாளை ஜெயமோகனுக்கே ஒரு பிரச்சினை என்றாலும் கண்டனம் தெரிவிக்கத் தயங்குவார்கள். அனேகமாக ஜெயமோகனின் இந்த அறிவிப்பேகூட அத்தகைய ஒரு சூழலைக் குறைந்தபட்சமேனும் உருவாக்கும் என்றே அஞ்சுகிறேன்.

ஆகவே சட்ட நடவடிக்கை என்பது ஜனநாயக வழிமுறை என்றாலும் அது கருத்துரிமையைப் பாதிக்கும் என்னும் அடிப்படையில் எழுத்தாளர்கள் தமக்குள்ளான பிரச்சினைகளுக்கு அதைக் கையாளாமல் இருப்பதே நல்லது என்பது என் எண்ணம். பா.செயப்பிரகாசம் ஆனாலும் ஜெயமோகன் ஆனாலும் அதுதான் என் நிலைப்பாடு. ஏற்கனவே அப்படி நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள் யார் சம்பந்தப்பட்டதாக இருப்பினும் என் கருத்து இதுதான்.

பா.செயப்பிரகாசம் எழுபது வயதைக் கடந்தவர். அவருக்கு நான் ஆலோசனை கூற முடியாது. ஜெயமோகனும் என்னைவிட மூத்தவர்; பலவற்றையும் அறிந்தவர். அவருக்கும் ஆலோசனை சொல்லத் தேவையில்லை. எனினும் இப்பிரச்சினையில் என் எண்ணம் இதுதான். இது குறித்து இன்னும் விவாதிக்கலாம்.

—– 10-06-20