அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள் – 1
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் ஹட்சன் என்னும் பகுதியில் உள்ள எழுத்தாளர் உறைவிட முகாமில் தங்கியிருந்து எழுதுவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் (2018) சென்றிருந்தேன். இத்தகைய முகாமில் தங்கியிருக்கும்போது எழுத்தாளர்கள் வெவ்வேறு வேலைகளை வைத்துக்கொண்டு அடிக்கடி வெளியில் செல்வதையோ, வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ ஏற்பாட்டாளர்கள் விரும்புவதில்லை. முகாமில் முழுமையாகத் தங்கி அங்கே கிடைக்கும் வசதிகளைத் துய்த்துக்கொண்டு எழுத்து, எழுத்து சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பார்கள். யாரும் திட்டமிட்டுக் கண்காணிப்பதில்லை என்றாலும் ஒருவர் எவ்விதம் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்னும் கவனம் இருக்கும். வரும் எழுத்தாளர்கள் சிலர் உறைவிடத்தை விடுதியறை போலப் பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலும் வெளி வேலைகளிலேயே கவனமாக இருப்பார்கள். அப்படியானவர்களை மறுபடியும் அழைக்க மாட்டார்கள்; வேறு எதற்கும் பரிந்துரையும் செய்ய மாட்டார்கள்.
அதேபோல அவ்விடத்துக்கு நண்பர்களை அடிக்கடி வர வைப்பதும் சரியானதல்ல. மனிதக் குரல்களின் ஓசையே அற்று அமைதி நிரம்பியிருக்கும் அவ்விடத்தில் சலசலப்புகளுக்கு அனுமதியில்லை. சம்பந்தப்பட்டவர் வேலை கெடுவதோடு பிறருக்கும் இடைஞ்சல் ஏற்படும். அவர்களாக ஏற்பாடு செய்யும் வாசிப்பு அரங்குகள், வெளி நிகழ்ச்சிகள், சிறு சுற்றுலாக்கள் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்வார்கள். அவற்றிலும்கூட நமக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பங்கேற்கலாம். இல்லை, வேண்டாம் எனச் சொல்லி மறுத்துவிடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தனிமனித விருப்பங்களுக்கும் வசதிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தங்கியிருக்கும் எழுத்தாளர்கள் எவரும் பெரும்பாலும் மறுப்பதில்லை. அவற்றைத் தமக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவே கருதுவார்கள். அவை பெருநேரத்தை விழுங்காத வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கும். ஆகவே இத்தகைய முகாமில் தங்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு எழுத்து, வாசிப்பு உள்ளிட்ட வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்வது என் வழக்கம்.
நான் போய்ச் சேர்ந்த ஓரிரு நாளில் ஹட்சனுக்குச் சிறு சுற்றுலாவுக்கு எழுத்தாளர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது ஜெட்லாக்கில் அவதிப்பட்டுப் பெருந்தூக்கத்தில் இருந்ததால் நான் போக முடியவில்லை. எல்லோரும் அறியும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைவிட இத்தகைய உள்ளூர் உலாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழும் மக்களை உள்ளூர்களில் காண முடியும், அப்பகுதியின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள இயலும் என்பது முக்கியமான காரணம். அப்படி ஒரு வாய்ப்பை விட்டுவிட்டேனே என்று அது எனக்கு ஒரு குறையாகவே இருந்தது. ஆனால், அங்கேயே நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். முகாம் எழுத்தாளர்கள் பங்கேற்ற வாசிப்பு நிகழ்ச்சி முதலாவது. எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை வாசிக்கும் நிகழ்ச்சிக்கு அங்கு பரவலான வரவேற்பு இருக்கிறது. இந்தியாவிலும் ஆங்கில எழுத்துலகில் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் அறிமுக நிகழ்ச்சிகளும் எழுத்தாளரின் வாசிப்பு இல்லாமல் நடைபெறாது. எங்கள் வாசிப்பு உறைவிட முகாமின் இன்னொரு பகுதியில் உணவகமும் ஓவியப் புலமும் சேர்ந்திருந்த அரங்கில் நடந்தது. அப்போது முகாமில் தங்கியிருந்த ஒன்பது எழுத்தாளர்களுக்கும் பத்துப் பத்து நிமிடம் என ஒதுக்கப்பட்டிருந்தது. சுருக்கமான அறிமுகம் மட்டுமே பேச்சு.
நான் கவிதை வாசித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பும் கைவசம் இருந்தது. ஆங்கிலத்தில் பார்த்து வாசிப்பதில் பிரச்சினையில்லை என்றாலும் யோசனையாகவே இருந்தது. தமிழில் வாசிப்பதே நல்லது எனக் கடைசியாக முடிவெடுத்தேன். தமிழில் நான் வாசிப்பது என்றும் ஆங்கில மொழிபெயர்ப்பை இன்னொருவர் வாசிப்பது என்றும் முடிவாயிற்று. இந்தியாவைச் சேர்ந்தவரும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரும் ஆங்கிலத்தில் எழுதுபவருமான மணி ராவ் எனக்கு உதவினார்.
பறவையின் குரல்!
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களான ஐம்பது பேருக்கு மேல் கூடியிருந்த ஒரு நீளச் சிற்றரங்கில் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. என்னைப் போலவே ஒருவர் தம் தாய்மொழியான கிரேக்க மொழியில் கவிதை வாசித்தார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை இன்னொருவர் வாசித்தார். பிறர் ஆங்கிலத்தில் வாசித்தனர். வாசிக்கும்போது பார்வையாளர்களின் ரசனை வெளிப்பாடுகள் மகிழ்வளித்தன. முடிந்ததும் பலர் வந்து கவிதையைப் பாராட்டிச் சொன்னதோடு தமிழ் மொழியின் ஓசை மிகவும் இனிமையாக இருந்ததாகச் சொன்னார்கள். தமிழ் என்னும் சொல்லுக்கே இனிமை என்றுதான் பொருள் என்று சற்றே பெருமையுடன் பதில் சொன்னேன். ‘உங்கள் மொழி புதிய பறவை ஒன்றின் குரலைக் கேட்பது போலிருந்தது’ என்று ஒருவர் சொன்னதும் மகிழ்வளித்தது.
இரண்டாம் நிகழ்ச்சி நாங்கள் பங்கேற்றதல்ல. ஹட்சன் என்பது சிறு நகரம். அங்கே இருந்த உணவகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாகச் சென்றோம். அந்த உணவகத்தினர் அவ்வூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், இசைஞர்கள், நடனக்காரர்கள் ஆகியோருக்கு மேடை அமைத்துக் கொடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேர நிகழ்ச்சி. உள்ளூரைச் சேர்ந்த கலைஞர்கள் வயது வேறுபாடின்றித் தத்தம் படைப்புகளை மேடைக்கு வந்து அரங்கேற்றினர். எழுபது எண்பது வயது தாத்தா பாட்டிகள் மேலே வந்து தம் கவிதைகளை வாசித்தது அற்புதமாக இருந்தது. இளைஞர்களும் பலர். கிடார் முக்கிய இசைக்கருவியாக இருந்தது. பலரும் அதை மீட்டியபடியே பாடினர். பாட்டும் நடனமும் இசையும் என அன்றைய இரவு உற்சாகமானது.
உள்ளூர்க்காரர்களுக்கு இலவச மேடை. அதைக் காண வரும் பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி. அவர்கள் உண்பதற்கு மட்டும் கட்டணம். நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டுச் சென்றிருந்தோம். சிலர் மட்டும் பீர் வாங்கிக்கொண்டனர். எங்கள் வருகை முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்ததால் மேடைக்குப் பக்கவாட்டில் சற்றே உயர்ந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் எழுத்தாளர்கள் தங்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்ததை அவர்கள் பெரிய கௌரவமாகக் கருதினார்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் நிகழ்ச்சி எனினும் உள்ளூர்க் கலைஞர்களுக்கு முக்கிய இடம் அளித்தது பெரிய விஷயமாக எனக்குப் பட்டது.
புரூக்ளினில் புத்தகக் காட்சி
உறைவிட முகாமில் தங்கியிருந்தபோதே வெளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேர்ந்தது. அவ்வாய்ப்பை ஏற்கும்படி பரிந்துரைத்ததும் முகாம் ஏற்பாட்டாளர்கள்தான். அது நியூயார்க் நகரில் புரூக்ளின் என்னுமிடத்தில் நடைபெற்ற புத்தகக் காட்சி. ஒரு கலந்துரையாடல். அழைப்பு தொடர்பான விஷயங்கள் எல்லாம் நான் அங்கு செல்வதற்கு நான்கைந்து மாதங்கள் முன்பே மின்னஞ்சல் வழியாக நடந்தன. எனக்கு முதலில் அது கலந்துரையாடல் நிகழ்ச்சி எனத் தெரியாது. ஓர் அமர்வில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார்கள். ஆகவே ஒருவேளை பேச வேண்டியிருக்கலாம் என நினைத்தேன். அதற்காகத் தயாரிப்பும் செய்துகொண்டேன். நான் தமிழில்தான் பேச முடியும் என்பதால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அங்கிருக்கும் நண்பர்கள் வழியாகப் பொருத்தமான ஒருவரை ஏற்பாடு செய்யும்படி என்னையே கேட்டிருந்தார்கள்.
முகாம் நாட்கள் முடிந்து அமெரிக்காவில் பத்து நாட்கள் தங்கவிருந்தேன். அந்த நாட்களுக்கான என் நிகழ்ச்சிகளை நண்பர்கள் சௌந்தர் ஜெயபாலும் பழமைபேசியும் இணைந்து திட்டமிட்டிருந்தனர். அவர்களிடம் இத்தகவலைத் தெரிவித்து மொழிபெயர்ப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யும்படி கேட்டேன். பல பேர் இருப்பினும் புரூக்ளினுக்கு வந்து செல்லும் தூரத்தில் இருக்கும் ஒருவராக இருப்பின் வசதி என யோசித்துப் ‘பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட’த்தைச் சேர்ந்த தோழர் ம.வீ. கனிமொழி பொருத்தமாக இருப்பார் எனத் தெரிவித்திருந்தார் சௌந்தர். எனக்குக் கனிமொழியை அறிமுகம் இல்லை. பெரியார் கொள்கைகளில் மிகுந்த பிடிப்புள்ளவர் என்றும் சிறந்த பேச்சாளர் என்றும் சௌந்தர் சொன்னார்.
புரூக்ளின் புத்தகக் காட்சியின் பதின்மூன்றாம் ஆண்டு இது. செப்டம்பர் 10 முதல் 17 வரை காட்சி நடைபெற்றது. ‘திருவிழா நாள்’ என்று செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமையை அறிவித்திருந்தார்கள். அந்த நாள்தான் எனது அமர்வுக்கான நாள். எனது கல்லூரிக் கால நண்பர் பி.கே.சிவகுமார் நியூஜெர்சியில் வசிக்கிறார். அவர் வெள்ளியன்றே வந்து என்னைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவர் வீட்டில் இரு இரவுகள் தங்கினேன். ஞாயிறன்று அவரே தம் காரில் புரூக்ளினுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் புத்தகக் கடைகளைக் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்தோம். கடைகள் எல்லாம் திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்தன.
புத்தகச் சந்தையில் பெரும் பதிப்பகங்களின் ஆதிக்கம் இருந்தாலும் மாற்று வெளியீடுகளுக்கான வெளி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி கொடுத்தது. அப்போது இலையுதிர்காலம் என்பதால் புரூக்ளினில் மழையில்லை. திறந்தவெளி அரங்குகளும் பார்வையாளர் நடமாட்டமும் வெகுசுதந்திரமாக இருந்தன. வார இறுதி நாட்களைத் தம் அலுவல் சாராத விஷயங்களுக்கு ஒதுக்குவது அமெரிக்க மக்களின் வழக்கமாக இருக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் கூட்டம் நிறையவே இருந்தது. பார்வையாளர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. பல்வேறு சிறுசிறு அரங்குகளில் நிகழ்ச்சி ஏற்பாடுகள். வெட்டவெளியில் சிறுமேடை. அதில் இசைக்கலைஞர் ஒருவருடனான உரையாடல் நடந்துகொண்டிருந்ததைக் கண்டோம். அருகில் கேலரி போல அமைந்திருந்த இன்னொரு கட்டடத்தின் படிக்கட்டுகளில் பார்வையாளர்கள் அமர்ந்து அந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
குறைவான செலவில் நடத்தப்படும் புத்தகக் காட்சி என்றே அதைக் குறிப்பிடுகிறார்கள். அதேசமயம் நியூயார்க்கில் நடத்தப்படும் மிகப் பெரிய புத்தகக் காட்சி அதுதான். புனைவு, கவிதை, கிராபிக் நாவல், சிறுவர் இலக்கியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இக்காட்சிக்குக் கிட்டத்தட்ட முந்நூறு எழுத்தாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள். உள்ளூர், அமெரிக்காவின் பிற பகுதிகள், வெளிநாடுகள் எனப் பல்வேறு இடங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். சிறுவர் இலக்கியத்துக்கென ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டாடுகின்றனர். மின்னூல் உள்ளிட்டவை வந்துவிட்ட பிறகும் அச்சு நூல்களுக்குச் செல்வாக்குக் குறையவில்லை என்பதற்கு இக்காட்சி நல்ல சான்றாக இருந்தது.
(பயணம் தொடரும்…)
நன்றி: மின்னம்பலம், 10 ஜனவரி 2019