பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?

தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்? - பெருமாள்முருகன்

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி – 3

பல்வேறு இடங்களிலும் நான் தமிழில் பேசுகிறேன். எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலத்தை ஏதோ ஒருமாதிரி வாசிப்பேனே தவிரப் பேச வராது. உலகியல் தேவை சார்ந்த விஷயங்களைப் பேசிச் சமாளித்துவிடுவதில் பிரச்சினையில்லை. மேடைகளில் ஆங்கிலத்தில் பேசுவதை நினைத்தே பார்க்க இயலவில்லை. அப்படியும் பெர்லின் இலக்கியத் திருவிழாவில் நமீதா கோகலே கொடுத்த தைரியத்தால் சில தொடர்கள் ஆங்கிலத்தில் பேசினேன். அவரும் என்னை ‘இந்தியாவின் வட்டார மொழியாகிய தமிழில் எழுதுபவர் இவர்’ என்றுதான் அறிமுகப்படுத்தினார். அது எனக்குக் கடுப்பை ஏற்படுத்தியதால் என் பதில் ஆங்கிலத்திலேயே வேகமெடுத்தது.

ஐம்பது வயதுக்கு மேல் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது சிரமமானது. அதற்கென நேரத்தை ஒதுக்குவது கடினம். பல்வேறு வேலைத் திட்டங்களினூடே இயங்கிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு மொழிக்காக நேரத்தை ஒதுக்குவது எளிதல்ல. மேலும் ஒருகட்டத்தில் அது தேவையுமில்லை என்று முடிவு செய்துவிட்டேன். தமிழில் பேச வாய்ப்புள்ள நிகழ்வுகளில் கலந்துகொண்டால் போதும் என்பது ஒன்று. வெவ்வேறு மாநிலங்களிலும் நாடுகளிலும் தமிழ் ஒலிக்கும் மகிழ்ச்சியும் அதில் கிடைக்கிறது. மேலும் எங்கு நடக்கும் நிகழ்வு என்றாலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு இப்போது வாய்ப்புகள் உள்ளன. தமிழர்கள் பரவி இருப்பதால் எப்படியாவது மொழிபெயர்ப்பாளர் கிடைத்துவிடும் வசதியும் இருக்கிறது.

தமிழிலிருந்து நூல்களை ஆங்கிலத்திலும் சரி, பிற மொழிகளிலும் சரி பெயர்ப்பதற்கு மொழிபெயர்ப்பாளர்கள்தான் மிகவும் குறைவாக உள்ளனரே தவிரப் பேச்சு மொழியைப் பெயர்ப்பதற்குப் பலர் உள்ளனர். பெர்லின் விழாவில் பிரசாந்தி சேகரத்தின் மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக இருந்தது. ஈழத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினை தொடர்பாக வரும் வழக்குகளில் தமிழில் மட்டுமே பேசுபவர்களின் கூற்றுக்களை ஜெர்மன் மொழியில் பெயர்க்கும் பணியையும் அவர் செய்துவருகிறார். எனினும் ஓர் எழுத்தாளரின் பேச்சை மொழிபெயர்ப்பது முதல் முறை என்பதால் சற்றே பரபரப்புடன் காணப்பட்டார். அதையும் மீறி நன்றாகவே மொழிபெயர்த்தார். நல்ல மொழிபெயர்ப்பாளர் அமைந்துவிட்டால் தமிழில் பேசுவதில் தடையே நேராது. ஆற்றொழுக்காகப் பேசிச் செல்லலாம்.

அதே போலத்தான் புரூக்ளினில் தமிழில் பேசுவது எனக்கு உற்சாகமாக இருந்தது. அத்தகைய அரங்குகளில் தமிழ் ஒலிக்கும் வாய்ப்பினால் ஏற்பட்ட உற்சாகம் அது. மேலும் மொழிபெயர்ப்புக்கு நன்கு தமிழ் தெரிந்த தோழர் கனிமொழி இருக்கும் தைரியம். எனினும் ‘இந்தியாவின் வட்டார மொழி தமிழ்’ என்னும் அறிமுகத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆகவே அத்தகைய அறிமுகத்தை எதிர்கொள்ளும் வழக்கப்படி என் மொழியைப் பற்றித்தான் பேச்சைத் தொடங்கினேன். ‘இந்தியாவில் இரண்டு மொழிக் குடும்பங்கள் இருக்கின்றன. அவை திராவிட மொழிக் குடும்பம், இந்தோ ஆரிய மொழிக் குடும்பம் என்பன. இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தின் பழமையான மொழி சமஸ்கிருதம். திராவிட மொழிக் குடும்பத்தின் பழமையான மொழி தமிழ். உலகச் செம்மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்திய மொழிகளில் ஒன்று தமிழ். அது என் தாய்மொழி. அதில்தான் நான் எழுதுகிறேன்’ என்பதாகவே என் தொடக்கம் அமைந்தது.

பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?

தமிழ் மொழியைப் பற்றி நாம் எவ்வளவோ உணர்ச்சிகரமாகப் பேசுகிறோம். உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் என்கிறோம். தமிழில் எல்லாம் இருக்கின்றன என்கிறோம். ஆனால் உலகத்தவர்க்குத் தமிழைப் பற்றிப் பெரிதாகத் தெரியவில்லை. வெவ்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும்கூடத் திராவிட மொழிக் குடும்பம் பற்றிய அறிதல் இல்லாமையைக் காண்கிறேன். சமஸ்கிருதம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வெளியுலகிற்குச் சென்று சேர்ந்துவிட்டது. அதில் எழுதப்பட்ட வேதங்கள், தத்துவ நூல்களின் மொழிபெயர்ப்புகள் வழியாக அம்மொழியை உலகத்தவர் அறிந்தனர். இந்தியாவின் ஆட்சி மொழி எனப் பெயர் ஒற்றுமை காரணமாகவும் அவ்விதமே பரப்பப்பட்டு வருவதாலும் இந்தி அறியப்பட்டிருக்கிறது.

பிற மொழிகளுக்கு எல்லாம் ‘இந்தியாவின் வட்டார மொழி’ என்னும் அந்தஸ்துதான். Dialect போலத்தான் regional language என்பதும். region என்னும் சொல்லுக்குப் ‘பிராந்தியம்’, ‘சிறுவட்டாரம்’, ‘நிலப்பகுதி’, ‘சிறுபகுதி’ என்றெல்லாம் அகராதிப் பொருள் உள்ளது. அந்த அடிப்படையிலேயே வழக்கிலும் உள்ளது. ‘இந்திய மொழிகள்’ என்னும் பன்மைக்குள்தானே இந்தி, தமிழ் உள்பட அனைத்தும் அடங்க வேண்டும்? வட்டார மொழி என்பது என்ன? ஏதோ ஒரு மூலையில் சிறுபிரிவு மக்கள் பேசும் மொழி என்றல்லவா ஆகும்? மொழியின் பெயரால் அமைந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டைவிடக் குறைந்த பரப்பளவு கொண்ட பல நாடுகள் தம் மொழியால் அடையாளம் காணப்படுகின்றன. இந்தியாவில் கிட்டத்தட்டப் பத்து விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழ் ஒரு வட்டார மொழியாகச் சுருங்கி அறிமுகமாவது வேதனை தருகிறது. தமிழை ஒரு வட்டார மொழியாக அறிமுகப்படுத்தும் மனோபாவம் ஏற்படக் காரணம் என்ன என்பதைப் பற்றியே பெரிதும் யோசிக்கிறேன்.

என் மொழியைப் பற்றிய அறிமுகத்தோடு தொடங்கிய என் பேச்சு முழுமையாகத் தமிழில் அமைந்தது. புரூக்ளின் புத்தகக் காட்சி அரங்கில் தமிழ் ஒலித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். என் நூல்களில் வீட்டிற்கு இருக்கும் இடத்தை விடவும் வெளி பெறும் இடம் மிகுதி என்பதையும் வேளாண் குடும்பப் பண்பாடு பற்றியும் பேசினேன். தோழர் கனிமொழி மிக நன்றாக மொழிபெயர்த்தார். அரங்கிலிருந்து சற்றே தொலைவில் இருந்த ஒரு கடையில் என் நூல் விற்பனைக்கு இருந்தது. அதைப் பற்றிய அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. எனினும் நான்கைந்து பேர் நூலை வாங்கி வந்து கையொப்பம் பெற்றார்கள்.

எல்லாம் சந்தோஷமாகவே அமைந்த போதும் தமிழை உலக மொழி, செம்மொழி என்றெல்லாம் கொண்டு செல்வதைவிடவும் முதன்மையான கடமை ‘இந்திய மொழிகளில் ஒன்று தமிழ்’ என்பதை வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை மேலும் உணரச் செய்தது புரூக்ளின் புத்தகக் காட்சி நிகழ்வு.

(முற்றும்)

நன்றி: மின்னம்பலம், 11 ஜனவரி, 2019