வெள்ளச் சிலேடை

You are currently viewing வெள்ளச் சிலேடை

 

கம்பராமாயணம் பாலகாண்டத்தின் முதலில் அமைந்திருப்பது ‘ஆற்றுப் படலம்.’ காப்பியத்திற்கே இதுதான் முதல் படலம். காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் ‘மலைகடல் நாடுவளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து’ என்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் காப்பியம் வருணிக்க வேண்டுமாம். மலை, கடல், நாடு, நகர், பருவம், இருசுடர் (கதிரவன், நிலவு) என்பவற்றில் ‘ஆறு’ வரவில்லை என்றாலும் ‘இனையன’ (முதலியன) என்பதற்குள் ஆற்றையும் அடக்கிக் கொள்ளலாம்.

கோசலம் பெருவளம் பெற்றிருக்கும் நாடு. அதற்கு அடிப்படை சரயு நதி. ஆகவே முதலில் ஆற்று வளத்தைச் சொல்ல விழைந்திருக்கிறார். நூலை  ‘நாற்சீராய் அளவொத்து’ வரும் கலிவிருத்தம் என்னும் பாவினத்தில் தொடங்கி ஆற்றுப்படலத்திலும் அதையே தொடர்கிறார். இக்காப்பியத்தில் அதிகம் அவர் பயன்படுத்தியிருப்பது கலிவிருத்தம் தான். எந்த நடையில் இக்காப்பியம் செல்லப் போகிறது என்பதன் அடையாளமாகவும் தொடக்கத்தைப் பார்க்கலாம். ஆனால் விரிவான வருணனைக்கு ஏற்ற வடிவமல்ல அது.

வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆற்றை வருணிக்கக் கலிவிருத்தம் போதாது. அப்படிப் பார்த்தால் கட்டுக்குள் நின்றுதான் காப்பியத்தின் முதல் பகுதியை எழுதத் தொடங்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. கவிச்சக்கரவர்த்தி எனினும் ஆரம்பச்சிக்கல் இருந்திருக்கும்தானே! கடவுள் வாழ்த்து, அவையடக்கம் முடித்து ஆற்றுப் படலத்தில்  பன்னிரண்டு பாடல்கள் எழுதிய பிறகு அந்தக் கட்டிலிருந்து விடுபட்டுக் கை நெகிழ்ந்து ஓட்டம் பெறுகிறது. அறுசீர் ஆசிரிய விருத்தத்தைக் கையிலெடுக்கிறார். மொத்தம் இருபது பாடல்கள் கொண்ட இப்படத்தில் பன்னிரண்டு கலிவிருத்தம்; எட்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

இந்தப் படலம் வெண்மேகம் கடலில் நீரை முகந்து கருமேகம் ஆகி மழை பொழிதல், வெள்ளம் பெருகி ஆற்றில் ஓடுதல், வெள்ளத்தின் இயல்பு, வெள்ளம் நால்வகை நிலத்திலும் பரவியோடும் காட்சி ஆகியவற்றை வருணிப்பது. அரிய சொல்லாட்சிகளையும் வியக்கச் செய்யும் உவமைகளையும் அழகிய வருணனைகளையும் கொண்டு இப்படலப் பாடல்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் மனதை ஈர்ப்பன. ‘நீள்நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம் தாய்முலை அன்னது’ எனச் சரயுவைச் சொல்வார். எல்லா ஆற்றுக்கும் பொருந்தும் கூற்று.

நீர்ப்பெருக்கை அழிவிற்குரியதாகக் காணும் பார்வை தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் எங்கும் இல்லை. அது வளத்தையும் வாழ்வையும் தருவது என்னும் ஆக்கப் பார்வையே நிலவியிருக்கிறது. வெள்ளப் பெருக்கை விவரிக்க ஆற்றுப் படலத்தில் ஆறு பாடல்கள்; ஆறு உவமைகள். வணிகர், வானவில், வானரம், போர் ஆகிய உவமைகள் மீது எனக்கு அவ்வளவாக ஈர்ப்பில்லை.

பிற இரண்டு உவமைகளும் அவற்றைக் கூறும் பாடல்களும் சிறந்தவை. பெண்களைப் பற்றிப் பேசாமல் கம்பரால் எதையும் சொல்ல முடியாது. முதல் பாடலிலேயே ‘காசலம்பு முலையவர் கண்ணெனும் பூசல் அம்பு’ என்று தொடங்குகிறார். ‘அகில் சேறணிந்த முலைத் திருமங்கை’ என்று லட்சுமியை இரண்டாம் பாடலில் வருணிக்கிறார். தொடர்ந்து வெள்ளப் பெருக்கை விவரிக்கையில்  ‘விலைமாதர் போன்றது அவ்வெள்ளம்’ என்று முழுப்பாடலையே எழுதுகிறார்.

வெள்ளத்திற்கும் விலைமாதருக்கும் என்ன இயைபு? தன்னைத் தேடி வரும் ஆணின் தலையையும் நெஞ்சையும் காலையும் என உச்சி முதல் அடிவரை தடவித் தழுவி இன்புறச் செய்து மயக்கத்தில் திளைத்திருக்கும் போது கணப்பொழுதில் அவனிடம் உள்ள பொருளை எல்லாம் கவர்ந்து கொண்டு விரட்டிவிடுவது விலைமகளிர் இயல்பாம். விலைமகளிர் பற்றிய மரபுப்பார்வை இதுதான். பிற்காலத்து இலக்கியங்களும் இப்படித்தான் சொல்லும். இன்று சூழல் பெரிதும் மாறிவிட்டது. சரி, நீர் என்ன செய்யும்? மலையின் உச்சி முதல் அடிவரை உள்ள பொருள்களை எல்லாம் திரட்டிக்கொண்டு வெள்ளம் கணப்பொழுதில் தரைக்கு வந்து சேர்ந்துவிடும். ஆகவே விலைமகளிரைப் போன்றதாம் வெள்ளம்.  பாடல் இது:

தலையும் ஆகமும் தாளும் தழீஇஅதன்

நிலைநி லா(து)இறை நின்றது போலவே

மலையின் உள்ளஎலாம் கொண்டு மண்டலால்

விலையின் மாதரை ஒத்த(து)அவ் வெள்ளமே.

வெள்ளச் சிலேடை

இன்னொரு பாடல் குடிமகனைப் போன்றது வெள்ளம் என்கிறது. குடிமகன் என்றால் பிரஜை என்று அர்த்தமல்ல. குடிகாரன்தான். இவை எப்படி இயையும்? ஈக்களும் வண்டுகளும் மொய்க்கும் கள்ளைக் குடிப்பவர் குடிகாரர்.  போதை மிகும்போது குலம், கோத்திரம், சாதி, இனம், நாடு, மொழி என்னும் எல்லா எல்லைகளும் தகர்ந்து போகுமாம். குடிப்பதால் உற்சாகம் மிகுந்து துள்ளித் திரிவாராம். போதையால் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவில் மனம் தெளிவற்று இருக்குமாம். குடித்துக் குடித்து வயிறு நிரம்புதலால் அடிக்கடி ஏப்பம் விடுவாராம். இது குடிகாரர் நிலைமை.

வெள்ளம் எப்படி? காட்டுப் பகுதியிலிருந்து  வருவதால் வெள்ளத்தில் மிதக்கும் ஏராளமான மலர்கள் மீது ஈக்களும் வண்டுகளும் மொய்த்துக் கிடக்குமாம். வெள்ளத்திற்கு வரம்பேது? எல்லையேது? கரையை உடைத்துக்கொண்டு பெருக்கெடுத்து ஓடும். வலிமை மிகத் துள்ளலோடு வெள்ளம் ஓடும். புதுநீர் வருதலால் தெளிவின்றிக் கலங்கலாக இருக்கும். தேக்கு போன்ற பெரிய மரங்களையே வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டோடும். பாடல் இது:

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்(பு)இகந்(து)

ஊக்க மேமிகுந்(து) உள்தெளி(வு) இன்றியே

தேக்(கு)எ றிந்து வருதலில் தீம்புனல்

வாக்கும் தேன்நுகர் மாக்களை மானுமே.

‘தீம்புனல் வாக்கும் தேனுகர் மாக்களை மானுமே’ என்று வெள்ளம் கள்குடியரைப் போன்றது என உவமையாகச் சொன்னாலும் இது சிலேடைப் பாடல். குடிகாரரை இழிவாகச் சொல்வதற்காக ‘மக்கள்’ என்று சொல்லாமல் ‘மாக்கள்’ என்பதாக உரையாசிரியர்கள் சொல்வர். அப்படியல்ல. குடியின் மகத்துவத்தை, கொண்டாட்டத்தைப் பலபட விவரிக்கும் இயல்புடையவர் கம்பர். அவர் குடிகாரர்களை இழிவுபடுத்துபவர் அல்ல. ஓசை நயம் கருதி ‘மாக்கள்’ எனப் பயன்படுத்தியுள்ளார்.

விலைமாதர் பற்றியதும் சிலேடையே. உவமை சொன்னால் இரண்டின் இயல்புகளையும் பொருத்தி விவரிப்பது வழக்கம் அல்ல. சிலேடை என்றால்தான் இரண்டையும் பொருத்திக் காட்டி விவரிப்பர். பிற்காலத்தில் காளமேகம் உள்ளிட்டோர் எழுதிய புகழ்பெற்ற சிலேடைப் பாடல்களை வாசித்தால் இதை அறியலாம். அவற்றை ஒப்பிட்டுக் கண்டால் கம்பரின் செல்வாக்கையும் உணரலாம். இந்தப் பகுதியில் அவர் பாடியிருக்கும் ஆறு பாடல்களும் சிலேடையே. அவற்றில் விலைமாதர், குடிகாரர் இரண்டுக்குமான சிலேடை மிகப் பொருத்தம்.

—–   24-12-24

Add your first comment to this post