மடநாராய்!
தூது என்னும் போது பிற்கால இலக்கியங்களைப் பற்றி மட்டும் பேசுவதைவிட பழைய இலக்கியங்களில் எங்கெல்லாம் தூதுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்றும் அவை எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கின்றன என்றும் தொகுத்துப் பார்த்தாலே தெரியும். முத்தொள்ளாயிரம் என்று ஒரு நூல். அதை எழுதியவர் யார் என்பது இன்று வரைக்கும் தெரியவில்லை. முத்தொள்ளாயிரத்திலும் நாரையைத் தூது விடக் கூடிய ஒரு பாட்டு உள்ளது.
செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல்
நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால்
கரையுறிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்கு
உரையாயோ யானுற்ற நோய்.
இது வெண்பாவில் அமைந்த தூது. ஒரு தலைவி சொல்வதாகப் பாடப்பட்டுள்ளது. இதுவும் நாரையைத் தூதாக விடக்கூடியது தான். ஆனால் இந்த நாலடிப் பாட்டு அவ்வளவு அருமையான சுவையைக் கொண்டிருக்கிறது. ஒரு காரியம் ஒருவரிடம் ஆக வேண்டும் என்றால் நாம் என்ன செய்வோம்? அவர்களை முதலில் புகழ்வோம். சின்னக் குழந்தைகளை வேலை வாங்கவும் புகழ்ச்சி உதவும். சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மா கடைக்குச் சென்று தேங்காய் வாங்குவதற்கு “தேங்காய் வாங்கிக்கொண்டு வா!” என்று கட்டளையாகச் சொன்னால் குழந்தைகள் செல்ல மாட்டார்கள். “கண்ணே! நீ அருமையாக வேலை செய்வாயே, உன்னைப்போல் சொல் பேச்சு கேட்கும் குழந்தை யார் இருக்கிறார்? இப்போது ஒரு தேங்காய் வாங்கிக்கொண்டு வா!” என்று புகழ்ந்து சொன்னால் குழந்தைகள் மகிழ்ச்சியோடு செய்வார்கள். அது மனித இயல்பு. ஒருவரைப் புகழும்போது இரண்டு வகைகளில் புகழலாம். ஒன்று ஒருவருடைய தோற்றத்தைப் புகழ்வது; அடுத்து செயலைப் புகழ்வது.
செங்கால் நாராய் என்ற இந்தப் பாடலில் தோற்றம், செயல் என்ற இரண்டையும் புகழ்வதாக அமைந்திருக்கிறது. நாரையை அழைக்கும்போது ‘செங்கால்’ என்று சிவப்பு நிறமுடைய கால்களைப் புகழ்வதன் மூலம் அதன் தோற்றத்தைப் புகழ்கிறார். அடுத்தது ‘மடநாராய்’ மடம் என்றால் அறியாமை என்பார்கள். அது சரியல்ல. ‘அறிந்தும் அறியாதது போலிருத்தல்’தான் மடம். அந்த அறிவைத் தேவை இருக்கும்போது மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். ஆகவே மடநாராய் என்று சொல்கிறார். ‘மடம்’ என்பதற்கு இளமை என்றொரு பொருளும் உண்டு. இளமைப் பருவத்தை உடைய நாரையே என்றும் சொல்லலாம். இவ்வாறு தோற்றம், செயல் என்ற இரண்டையும் புகழ்வதாக இந்தப் பாடல் தொடங்கப்பட்டுள்ளது.
தென்னுறந்தை என்பதில் உறந்தை என்பது சோழ நாட்டின் தலைநகரம். தலைவி சோழ மன்னன் மீது காதல் கொண்டு இருக்கிறாள். அவருக்குத் தூது அனுப்புகிறாள். அதனால் நாரையைத் தென்னுறைந்தைக்கு போ என்று கட்டளையிடவில்லை. அவ்வாறு கட்டளையிட்டால் அதை எதிர்ப்பதற்கு மனம் தயாராக இருக்கும். அதனால் தலைவி “நாரையே, நீ தென்னுறந்தைக்குச் சென்றாய் என்றால் நின் கால் மேல் வைப்பன் என் கையிரண்டும்” என்கிறாள். அதாவது நாரையை வணங்குவேன் என்கிறாள். ‘காரியம் ஆக வேண்டும் என்றால் காலைப் பிடிப்பார்கள்’ என்பார்கள். தென்னுறைந்தைக்குச் சென்றால் உன் காலைப் பிடித்துத் தொழுகின்றேன் எனப் “போ” என்பதைக் கட்டளையிடாமல் சொல்கிறாள். அந்த ஊருக்குச் சென்றாய் என்றால் உனக்கு ஒரு கஷ்டமும் இருக்காது என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார்.
‘நன்பால் கரையுறிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடன்’ என்பது வளத்தைக் கூறுவது. காவிரி நீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும். அங்கு உள்ள மீன்கள் எல்லாம் கரை மேல் துள்ளிக் குதித்து விளையாடும். நீ அங்கு சென்றால் அங்கு இருக்கும் மீன்களைக் கஷ்டப்பட்டுத் தேட வேண்டியதில்லை. உனக்கு உணவுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. கரைக்குச் சென்றால் கரையில் உள்ள மீனை எடுத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம். அப்படிப்பட்ட இடம்தான் என் தலைவன் இருக்கக்கூடிய இடம். ‘உரையாயோ யானுற்ற நோய்’ என்றால் நான் கொண்ட வருத்தமாகிய காதல் நோயை அவரிடம் சென்று சொல்வாயாக, நீ சென்று சொன்னால் அவர் என்னை அழைத்துப்போக வருவார் என்று பொருள். இப்படி நாலடிப் பாடலில் நடைமுறை சார்ந்த விஷயங்கள் பல இருக்கின்றன. அருமையான சொல்லாட்சியைப் பயன்படுத்தியிருக்கிறார் புலவர். ஒருவரிடம் ஒரு விஷயத்தை எப்படிப் பேசுவது என்ற பேசக்கூடிய முறைக்கு ஆதாரமாக இந்தப்பாடல் இருக்கிறது. இப்படித் தூது இலக்கியம் உருவாவதற்கு முன்னால் எழுதப்பட்ட பாடல்களும் அதன் பின்பு எழுதப்பட்ட தனிப்பாடல்களும் நிறைய இருக்கின்றன. ஆகவே தூது இலக்கியம் பிரபலமாக இருப்பதற்கு இவையெல்லாம் காரணம் ஆகும்.
தலைவியும் பேசலாம், தலைவனும் பேசலாம், நீண்ட இலக்கியமாகவும் படைக்கலாம். ஒரு சிறிய பாடலாகவும் பாடலாம். இவ்வளவு வசதிகள் இருப்பதாகத் தூது இலக்கியம் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் பலவிதப் பாடல்களையும் அதன் வகைமைகளையும் நாம் பார்க்க முடிகிறது. இன்று வரை தொடர்ந்து வருவதற்கும் அது தான் காரணமாகும்.
—– 17-03-25
(இத்தளத்தில் உள்ள ‘கரையுறிஞ்சி மீன்பிறழும்’ கட்டுரையையும் வாசித்துப் பார்க்கலாம்.)
காமம் மிக்க கழிபடர் கிளவி எல்லா சூழலுக்கும் பொருத்தம் தான் ஐயா. அருமை
💜