கவிதை மாமருந்து 1

 உனக்கு நீயேதான்!

கவிதை மாமருந்து: உனக்கு நீயேதான்!

பெருமாள்முருகன்

நவீன கவிதையினூடே ரசனை சார்ந்த ஒரு பயணம்

கவிஞர் இசையின் ஆறாம் கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ சமீபத்தில் வெளிவந்துள்ளது. பொதுவாக அவர் கவிதைகளைச் ‘சமகாலம் பற்றிய பகடி’ எனக் கவிதை ஆர்வலர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். (கவிதை ஆர்வலர் என்றால் சமூக ஆர்வலர் என்பது போல அல்ல. கவிஞர்கள், கவிதை விமர்சகர்கள் (அப்படி இருந்தால்!), கவிதை வாசகர்கள் முதலிய அனைவரையும் குறிப்பிடும் ஒரே சொல்லாட்சியாக இதைப் பயன்படுத்துகிறேன்.) அதன் முன்னுரையில் அவர் ‘பகடி, பகடி என்று எளிமையாக முத்திரையிடப்படும் வசதியைக் கொண்ட என் தொகுப்புகளில் நிறைய ஒப்பாரிப் பாடல்களும் உண்டு’ (ப.15) என்று சொல்கிறார். அது சரிதான் என்று எனக்கும் தோன்றுகின்றது. அவரது பகடிகளைவிடத் துயர்கவிதைகளே என்னைப் பெரிதும் ஈர்த்திருக்கின்றன. சில பகடிகளை வாசிக்கும்போது என்னுள் பெரும்துயரே கவிந்திருக்கிறது. துயரின் உச்ச வெளிப்பாடுகளில் ஒன்றாகப் பகடியையும் கொள்ளலாம். அல்லது பகடியின் தோற்றுவாய்களில் ஒன்று துயர் என்றும் சொல்லலாம்.

கவிதை மாமருந்து 1

கவிதை வாசிப்பு என் மனநிலை சார்ந்தது. அது கொஞ்சம் மூட நம்பிக்கைகளையும் கொண்டது. கவிதைத் தொகுப்புகள் அடுக்கப்பட்ட அலமாரித் தட்டில் கண்களை மூடிக்கொண்டு கையால் தடவி ஏதேனும் ஒரு நூலை உருவி வாசிப்பதுண்டு. அதில் சட்டெனப் பிரியும் ஏதாவது பக்கத்தை வாசிப்பதும் பலன் தரும். மனம் முழுக்க இருள் சூழ்ந்த பொழுதொன்றில் அவ்விதம் கைக்குச் சிக்கிப் பிரித்து வாசித்த கவிதை இசை எழுதியதாக இருந்தது.

கவிதை தரும் ஆறுதல்

அன்றைய மனநிலைக்குப் பெரிதும் பொருந்திப்போன அக்கவிதையைப் பலமுறை வாசித்தேன். வாசிக்க வாசிக்க அளவற்ற ஆறுதலை வழங்கியது அக்கவிதை. அம்மாதிரியான மனநிலை உருவாகும் போதெல்லாம் நினைவில் அசைந்து வேறு எதை நோக்கியும் போகத் தேவையில்லாமல் செய்ததும் அக்கவிதைதான். அக்கவிதையை விட்டொழித்து நகர்ந்துவிட வேண்டும் என்பதற்காக இசையின் பாணியில் ‘துயரர்களே வாருங்கள், ஆறுதல் தருகிறேன் என்று சுவிசேஷ அழைப்பு விடும் கவிதை அது’ என்று பகடி செய்து பார்த்தும் அந்தக் கறுப்பு விடுவதாயில்லை. வேறு வழியில்லாமல் ‘நின்னையே கதியென்று சரணமெய்தினேன்’ என ஒப்புதல் வழங்கிவிட்டேன்.

கவிதை மாமருந்து 1

நகுலன் எழுதிய சிறுகவிதை ஒன்று மிகவும் பிரபலமானது. அது:

எனக்கு யாருமில்லை

நான்கூட.

இக்கவிதை காட்டும் மனநிலையை உணரும் பக்குவம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நான்கூட இல்லாத நிலையை எட்டுவது அசாதாரணம். நானை வைத்துக்கொண்டு படும் பாடுதான் பெரும்சிரமம். அந்தச் சிரமத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு ‘எனக்கு யாருமில்லை’ என்னும் தொடர் துயரத்தைக் குறிக்காமல் பேரானந்தத்தைக் குறிப்பதாகிறது. எனக்கு யாருமில்லாமல் நானே எல்லாவற்றையும் செய்துகொள்ள வேண்டும் என்னும் நிலைதான் மிகவும் துயரமானது. அத்தகைய நிலையை எழுதிக் காட்டுகிறது ‘உனக்கு நீயேதான்’ என்னும் இசையின் கவிதை.

உனக்கு நீயேதான்

உனக்கு நீயேதான்

சொக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்

உனக்கு நீயேதான்

மிஸ்டுகாலில் விளையாடிக்கொள்ள வேண்டும்

உனக்கு நீயேதான்

வாழ்த்து தெரிவித்துக்கொள்ள வேண்டும்

உனக்கு நீயேதான்

மறந்த பொருட்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்

உனக்கு நீயேதான்

பின்னால் வந்து கட்டிக்கொள்ள வேண்டும்

உனக்கு நீயேதான் நிலா காட்டிக்கொள்ள வேண்டும்

நீயேதான் உன் காதில் கிசுகிசுத்துக்கொள்ள வேண்டும்

நாலாவது ரௌண்டில்

உனக்கு நீயேதான் கண்டித்துக்கொள்ள வேண்டும்

உன் கண்ணில் நீர் வழிந்து

உன் நெஞ்சிலேயேதான் உதிரமும் கொட்ட வேண்டும்

உன் தலையை அரிந்து

உன் மடியில் போட்டுக்கொண்டு

நீயேதான் கோதிவிட வேண்டும்.

நாம் துணையை எதிர்பார்க்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை இக்கவிதை பட்டியலிடுகிறது. அப்போதெல்லாம் அந்தத் துணையின் வாய் உதிர்க்கும் ஒரே ஒரு வார்த்தை நமக்கு வேண்டியிருக்கிறது. ஒன்றுமே செய்யாதபோதும் துணையின் அருகிருப்பு தேவையாயிருக்கிறது. சிறு புன்னகை, ஒரு கையசைப்பு, முகச்சுழிப்பு, அதட்டல், தடவல் எனத் துணை தரும் ஆசுவாசமே வாழ்க்கையை மேலெடுத்துச் செல்லும் உந்துதலைக் கொடுக்கிறது. துணை இல்லை என்றான பிறகு எல்லாவற்றையும் நமக்கு நாமே செய்துகொள்ள வேண்டிய தனிமையைக் கடப்பது எளிதல்ல. அதுவும் தலையைச் சாய்த்துக்கொள்ள மடியும் தலை கோதக் கையும் தேவைப்படும் சமயத்தில் ‘தன் தலையை அரிந்து தன் மடியிலேயே போட்டுக்கொண்டு தானேதான் கோதிவிட வேண்டும்’ என்பது கடக்க இயலாத் துயர்.

துணை என்று யாரும் இல்லாத துயர்

இதைப் பிரிவுக் கவிதையாக வாசிக்கலாம். தன் துயரைத் துளியும் உணராமல் உறங்கும் ஊர் மீது வெறி கொண்டு பிதற்றும் காதல் பித்து நிலை உட்படச் சங்கக் கவிதைகளில் பிரிவுத் தனிமைத் துயரைப் பற்றிய கவிதைகள் ஏராளம். துணை இல்லாத ஏக்கம் ததும்புபவை அவை. இசையின் இக்கவிதையைக் காதல் பிரிவு தொடர்பாகக் கொண்டாலும் பொருந்துகிறது; காதல் மனைவியைப் பிரிதல் தொடர்பாகவும் பொருந்துகிறது. பார்த்துச் சொக்குதல், மிஸ்டுகாலில் விளையாடுதல், பின்னால் வந்து கட்டிக்கொள்ளுதல் உள்ளிடப் பலவும் காதல் பிரிவுக்கான குறிப்புகளே. இது ஓர் ஆண்குரல் என்னும் குறிப்பும் (நான்காவது ரௌண்டு) மெலிதாக உண்டு. ஆனால், காதலைக் கடந்து வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் நேரும் தனக்கு யாருமில்லை என்றுணரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் இது பொருந்துகிறது. தன்னையே துணையாகக் கொள்ள வேண்டிய துயர் மனநிலை ஒவ்வொன்றுக்கும் இக்கவிதை பொருந்துகிறது.

நவீன கவிதையின் சொல்முறைகளுள் ஒன்றான அடுக்கு அல்லது பட்டியல் முறையைப் பின்பற்றி இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. மளிகைக் கடைப் பட்டியல்போல நின்றுவிடும் கவிதைகளுக்கு நடுவில் இதன் ஒவ்வோர் அடுக்கும் ஒவ்வொரு சூழலை முன்னிறுத்துகிறது. அச்சூழல் சமகாலத் தன்மை கொண்டு துணையின் அவசியத்தைக் கோருவதாக அமைகிறது. ஏற்கனவே பரிச்சயமான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்னும் பாரதியாரின் கவிதை வரிகளைச் சற்றே மாற்றி ‘உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயேதான் உதிரமும் கொட்ட வேண்டும்’ என்றாக்குவதன் வழியாக மனதில் படிந்துள்ள மரபான காட்சி ஒன்றை உடைத்துப் போடுகிறது. இறுதியாகக் கவிதை முடிவு தரும் அதிர்ச்சி துயரின் வலிமைக்குள் இழுக்கிறது.

உன் தலையை அரிந்து

உன் மடியில் போட்டுக்கொண்டு

நீயேதான் கோதிவிட வேண்டும்.

என்னும் இவ்வரிகள் மட்டுமே தனித்துக் கவிதையாகும் திறனைப் பெற்றுள்ளன. வாசிப்போர் தம் மனநிலையை இதில் பொருத்திக் காண முடிவது மட்டுமல்ல. தம்மைப் போன்ற ஏராளமானோர் மனநிலைகளையும் உணர்ந்துகொள்ள வாய்க்கிறது. இவ்வுலகத்தில் நாம் மட்டும் இத்தகைய துயரில் இல்லை, நம்மைப் போன்றோர் பலர் உள்ளனர் என்னும் ஆசுவாசத்தையும் இக்கவிதை வழங்குகிறது.

*

கவிதை மாமருந்து 1

கட்டுரையாளர் குறிப்பு:

பெருமாள்முருகன், எழுத்தாளர், கவிஞர், விமர்சகர். பத்து நாவல்களை எழுதியிருக்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் ஐந்து கவிதைத் தொகுப்புகளும் வந்துள்ளன. மொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த கட்டுரைத் தொகுப்புகள் / தொகை நூல்கள் பத்துக்கும் மேல் வெளியாகியுள்ளன. கொங்கு வழக்குச் சொல்லகராதியைத் தொகுத்தளித்திருக்கிறார். இவருடைய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. ஆத்தூர் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரியும் இவர் இலக்கிய ஆய்வுகளிலும் ஈடுபட்டுவருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் இவர் படைப்பாக்கம், விமர்சனம், ஆய்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருகிறார்.

இவரைத் தொடர்புகொள்ள: murugutcd@gmail.com

Add your first comment to this post