2018 நவம்பர் 17இல் டெல்லியில் விமான நிலையங்கள் ஆணையமும் (AAI) ஸ்பிக் மெக்கே (SPIC – MACAY) நிறுவனமும் இணைந்து நடத்தவிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டது குறித்து ‘The Indian Express’ இணையதளத்தில் தொடர்செய்திகள் வெளியாகின. கச்சேரி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தது. (காண்க: https://indianexpress.com/article/india/airports-authority-scraps-t-m-krishna-concert-after-trolls-call-him-anti-india-5447020/lite/?fbclid=IwAR28Bu-9E1TSWwLid1gMABTTrQSbLeRLWs22DWSxc9eTJAO02v8Zws3GU6I) காரணங்களில் ஒன்றாகக் ‘கச்சேரிகளில் பெருமாள்முருகன் எழுதிய கீர்த்தனைகளைப் பாடுதல்’ (His attempts to increase the Carnatic music concert repertoire by including hymns in praise of Christ and Allah and poems by writers including Perumal Murugan have been attacked by Hindu right-wing activists.) என்பதையும் ஒரு செய்தி சுட்டிக்காட்டியுள்ளது. அது எனக்குப் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்தது.
கடந்த சில ஆண்டுகளாக எனக்கு டி.எம்.கிருஷ்ணாவுடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அவரை நான் இப்படிப் புரிந்துகொண்டிருக்கிறேன்: ‘தன் கலையின் எல்லைகளை விரிவாக்கும் கலைஞன் டி.எம்.கிருஷ்ணா.’ அத்தகைய அவரது முயற்சிக்குச் சிறு ஆதாரமாக எனது கீர்த்தனைகள் அமைகின்றன. இதைச் சமீபத்திய அவரது கச்சேரி ஒன்றைச் சான்றாக வைத்து விவரிக்க விரும்புகிறேன்.
2018 செப்டம்பர், அக்டோபர் ஆகிய இருமாதங்கள் கச்சேரி, உரை, பயிலரங்கு எனப் பலவித நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக டி.எம்.கிருஷ்ணா அமெரிக்காவில் இருந்தார். அதேசமயம் நல்லூழாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கும் அமைந்தது. அங்கே நடைபெறும் கிருஷ்ணாவின் கச்சேரி ஒன்றிற்காவது சென்று கேட்க வேண்டும் என எண்ணினேன். அக்டோபர் 9 சனிக்கிழமை அன்று நியுஜெர்சி மாநிலம், எடிசனில் அவரது கச்சேரி. அது ஒன்றுதான் எனக்குப் போக வாய்ப்பானதாக இருந்தது. ஆனால் ஒரு பிரச்சினை. அதேநாளில் வாஷிங்டனில் நான் பேசவிருந்த நிகழ்வு ஒன்றை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அது முன்கூட்டியே முடிவானது. என் பத்துநாள் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த நண்பர் சௌந்தர் ஜெயபாலிடம் ‘கிருஷ்ணாவின் கச்சேரி கேட்க வேண்டும்’ என்னும் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
நண்பர்களிடம் பேசிவிட்டு அவர் சொன்னார், ‘அப்படியானால் நீங்கள் இரண்டு கூட்டம் பேச வேண்டும். சரியா?’ நியுஜெர்சியில் கச்சேரி நேரம் பிற்பகல் 3.30 மணி. எப்படியும் கிருஷ்ணா 6 மணி வரை பாடுவார். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம். அவருக்கு உற்சாகம் வந்துவிட்டால் மூன்று, மூன்றரை மணி நேரம்கூடப் பாடுவார். கச்சேரி முடிந்தாலும் முடியாவிட்டாலும் ஆறு மணிக்குக் கிளம்பிவிட வேண்டும். அருகில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் ஹாரிஸ்பர்க் நகரில் நண்பர் ஒருவர் வீட்டில் இரவு சிறுகூட்டம். அதில் பேச வேண்டும். அங்கேயே இரவு தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் சென்று அங்கே ஒரு கூட்டத்தில் பேச வேண்டும். அது ஏற்கனவே சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டம். அதை ஞாயிறுக்குத் தள்ளும்போது கிடைக்கும் இடைவெளியாகிய இரவில் இன்னொரு கூட்டம். எனக்கு அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்து இன்னொரு நாள் நடத்துவதில் உள்ள சிரமங்கள் பெரிது. யாராவது ஒரு நண்பரின் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் பிரச்சினை இல்லை. வாஷிங்டன் நிகழ்ச்சி வெளியே ஓர் அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அதை மாற்றுவதுதான் பிரச்சினை. சனி, ஞாயிறு ஆகிய இரண்டும் விடுமுறை நாட்கள் என்பது சாதகம். எப்படியோ தம் நிகழ்விடத்தை மாற்றி வைத்து என்னைக் கச்சேரி கேட்கச் செய்தனர் வாஷிங்டன் இலக்கிய நண்பர்கள். இரண்டு நிகழ்வுகளில் பேசுவது மட்டுமல்ல, இன்னொரு கோரிக்கையையும் சௌந்தர் வைத்தார். எனது இணையதளத்தைப் (https://perumalmurugan.in) புதிதாக வடிவமைத்திருந்தார் அவர். ‘கச்சேரியின் போது இரண்டு நிமிடம் ஒதுக்கி இணையதளத்தைத் தொடங்கி வைக்க ஒத்துக்கொள்வாரா கிருஷ்ணா?’ என்று சௌந்தர் கேட்டார்.
தொடங்கி வைப்பதில் கிருஷ்ணாவுக்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது என்பதை நான்றிவேன். எனினும் கச்சேரி ஏற்பாட்டாளர்கள் விருப்பம் எப்படி இருக்குமோ தெரியாது. ஏற்கனவே அவர் அமெரிக்காவில் உள்ள கோயில் ஒன்றில் பாட ஏற்பாடாகியிருந்த கச்சேரி சிலரது எதிர்ப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டதும் அதற்குப் பதிலாக அதே ஊரில் வேறு நண்பர்கள் வேறிடத்தில் ஏற்பாடு செய்த கச்சேரியில் அவர் பாடியதுமான பிரச்சினை ஒன்று நடந்திருந்தது. ஆகவே ஏற்பாட்டாளர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. இப்படி ஒரு நிர்ப்பந்தத்தைக் கிருஷ்ணாவுக்குக் கொடுக்க வேண்டுமா எனத் தயங்கினேன். எனினும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்காமல் நாமே குழம்ப வேண்டாம் எனத் தோன்றியது. கிருஷ்ணாவிடம் இந்த எண்ணத்தைச் சொன்ன போது ஏற்பாட்டாளர்களிடம் பேசிப் பார்த்துவிட்டு அவர்கள் ஒத்துக்கொண்டால் செய்யலாம் என்றே பதில் சொன்னார். பின் ஓரிரு நாளில் கச்சேரி ஏற்பாட்டாளர்களிடம் (CMANA : Carnatic Music Association of North America, NJ) பேசி ஒப்புதலும் பெற்றார். ஆகவே கச்சேரியில் எனது இணையதளத் தொடக்க நிகழ்வும் இருந்தது.
தீவிர இசை ரசிகரும் டி.எம்.கிருஷ்ணாவின் ஆராதகருமான ராஜேஷ் கார்கா தம் வேலை நிமித்தமாக ஆஸ்டின் (டெக்சாஸ் மாநிலம்) நகரிலிருந்து எடிசனுக்கு வந்திருந்தார். வெள்ளி இரவு பாஸ்டன் நகரிலிருந்து நியுஜெர்சிக்கு ரயிலில் வந்து சேர்ந்து ராஜேஷுடன் தங்கினேன். மறுநாள் இருவருமாகக் கச்சேரிக்குச் சென்றோம். எடிசனின் புறநகர்ப் பகுதியில் பள்ளி ஒன்றின் பிரமாதமான அரங்கில் கச்சேரி. அதற்குச் சிலநாள் முன்னதாக வேறொரு மாநிலத்தில் நடந்த கச்சேரிக்கு லுங்கி அணிந்து வந்து பாடினார் டி.எம்.கிருஷ்ணா எனச் சர்ச்சை ஒன்று தொடங்கியிருந்தது. நியுஜெர்சி கச்சேரியின் மேடைப் பின்னறையில் அவரை நாங்கள் சந்தித்த போதும் லுங்கி ஒன்றைத்தான் அணிந்திருந்தார். அது கட்டமும் கோடுகளும் போட்ட தமிழ்நாட்டு லுங்கியல்ல. விசாரித்த போது இலங்கையில் வாங்கிய லுங்கி என்று தெரிந்தது. நவீன வண்ணத்தில் கண்ணைக் கவரும் விதமாக இருந்த அந்த லுங்கி யாருக்கும் பிடிக்கும்தான். நீல நிற லுங்கி. மஞ்சள் நிறத்தில் பூப் போட்ட சட்டை. எல்லைகளை விரிவாக்க முயலும் கலைஞனுக்கு அவை பிடித்ததில் ஆச்சர்யமில்லை. வழக்கமாகவே இவ்விதம் புதுப்புது உடைகளை அணிவது அவர் இயல்பு. அந்த லுங்கியோடு மேடை ஏறுவதும்கூட ஒருவகையில் எல்லை கடத்தல் என்றே எனக்குத் தோன்றியது.
மேடையில் தமக்குரிய இடத்தில் அமர்ந்து வழக்கம் போல மடிமீது பெரிய சால்வை ஒன்றை விரித்துக்கொண்டார் கிருஷ்ணா. மரபான சிறுபேச்சுக்குப் பிறகு கிருஷ்ணாவுக்கு வழிவிட்டனர் ஏற்பாட்டாளர்கள். என்னைக் குறித்தும் எனது இணையதளம் பற்றியும் சிறு அறிமுகம் கொடுத்த பிறகு மடிக்கணினியில் பொத்தானைத் தட்டி இணையதளத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுக்காகக் கிருஷ்ணா எழுந்து நின்றபோது பாதம் மூடி நிறைந்திருந்த அவரது லுங்கியின் வண்ணம் எல்லோர் கண்களையும் ஈர்த்தது. நானும் ராஜேஷும் மேடைக்குச் சென்றோம். பொத்தானைத் தட்டினார் கிருஷ்ணா. இரண்டே நிமிடம்தான். கச்சேரிக்கு எந்த இடையூறும் இல்லை. பின்னர் பழையபடி அவர் அமர்ந்து மடிமேல் சால்வை போர்த்திக்கொண்டு கச்சேரியைத் தொடங்கிவிட்டார். இந்தக் கச்சேரிக்குப் பிறகும் கிருஷ்ணாவின் லுங்கிப் பிரச்சினை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாயிற்று. லுங்கி விவாதம் பற்றிப் பின்னர் என்னிடம் பேசிய போது ‘அதுக்கு நீங்கதான் காரணம். என்பாட்டுக்கு உட்கார்ந்து சால்வையப் போட்டுக்கிட்டுப் பாடியிருப்பன். வெப்சைட் தொடங்க எழ வெச்சது நீங்கதான். எழுந்து நின்ன போதுதான் லுங்கி எல்லோருக்கும் தெரிந்தது’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கிருஷ்ணா. லுங்கி விவாதம் செய்தவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கச்சேரியைக் கேட்காதவர்கள். கேட்டவர்கள் எவருக்கும் கிருஷ்ணாவின் லுங்கியைத் தவிர்த்துப் பேசுவதற்குப் பல்வேறு விஷயங்கள் இருந்தன. அதில் மிக முக்கியமானது அவர் பாடிய ‘ஆந்தைப் பாட்டு.’
முதல் கீர்த்தனையையே விஸ்தாரமாக அரை மணி நேரத்திற்கு மேல் பாடினார். என்னருகில் அமர்ந்திருந்த கணவன் மனைவி இருவரும் ஆனந்தமாக ரசித்ததைக் கண்டேன். கர்நாடக சங்கீத ரசனையில் பல்லாண்டு அனுபவம் பெற்ற முதிய தம்பதியினர் அவர்கள். இரண்டாவது கீர்த்தனையின் ராகம் பாடத் தொடங்கியதும் அருகிலிருந்த ராஜேஷ் கார்கா சொன்னார், ‘இது ரீதிகௌளை.’ அந்த ராகம் என்றால் நான் எழுதிய ‘ஆந்தைப் பாட்டு’ கீர்த்தனையைத்தான் பாடுவார் என்று எதிர்பார்த்தேன். அதைத்தான் பாடினார். கச்சேரியின் நடுவிலோ பின்பாதியிலோ என் விருத்தம் அல்லது கீர்த்தனை ஒன்றைப் பாடுவார் என்னும் எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. இரண்டாவதாகவே ஆந்தைப் பாட்டைப் பாடுவார் என எதிர்பார்க்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் ஐந்து பறவைகளைப் பற்றி ஐந்து கீர்த்தனைகள் எழுதி அவருக்குக் கொடுத்திருந்தேன். காக்கை, குயில், ஆந்தை, சிட்டு, பனங்காடை ஆகிய பறவைகள். இந்த பறவைகளில் குயில் அல்லது சிட்டுக்குருவி பற்றிய பாடலைத்தான் ஒருவர் முதலில் தேர்ந்தெடுப்பார். ஆனால் கிருஷ்ணா வேறுபட்ட ரசனை கொண்டவர். ஆகவே அவர் எந்தப் பாட்டை முதலில் தேர்வு செய்து பாடுவார் என்னும் எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. சென்னை, குரோம்பேட்டை கல்சுரல் அகாடமி சார்பில் ஸ்ரீகாமாட்சி கல்யாண மண்டபத்தில் 24-06-18 அன்று நடைபெற்ற கச்சேரி ஒன்றுக்கு நானும் சென்றிருந்தேன். கச்சேரிக்கு வருவதாக அவரிடம் பேசியில் தெரிவித்தேன். அப்போது ‘உங்கள் காக்கைப் பாட்டை முதலில் பாடலாம் எனத் தயாரித்திருந்தேன். ஆனால் ஆந்தைப் பாட்டைப் படித்தபோது அது மிகவும் பிடித்திருந்ததால் அதைத்தான் பாடப் போகிறேன்’ என்று சொன்னார். அதே போலச் சென்னைக் கச்சேரியில் ஆந்தைப் பாட்டைப் பாடினார். ரீதிகௌளை ராகத்தில் கிருஷ்ணாவே மெட்டமைத்திருந்தார். அதன் முதல் அரங்கேற்றமே அருமையாய் அமைந்தது. அக்கச்சேரியைக் கேட்ட ரசிகர் ஒருவர் (அரவிந்தன் முதலியார்) ஆந்தைப் பாட்டை விதந்தோதி முகநூலில் எழுதினார். அவர் எழுதிய பகுதி வருமாறு:
‘கிருஷ்ணா இசை என்றாலே மயிலறகு வருடல். அதிலும் இந்த ரீதிகௌளை தேனில் தோய்த்த மயிலிறகு வருடல். சொல்லி மாளாது என்கிற சொற்றொடருக்குச் சரியான விளக்கம் கிருஷ்ணா ஆலாபனை… பாடல் என்னவோ என்று அனைவரும் எதிர்நோக்க… எதிர்பார்த்தாற்போல் கிருஷ்ணா ‘இருட்டுக்கும் குரல் உண்டு ஆந்தையின் அலறல் அது’ என்று ரீதிகௌளையில் பெருமாள்முருகன் இயற்றிய பாடலைப் பாட , அவையில் மாமா மாமிகள் புருவங்கள் நெற்றியை விஞ்சியது. ஆனால் கிருஷ்ணா பாடப் பாட வரிகளின் தாக்கம், இசையின் ஆதிக்கம் அனைவரையும் மெய்மறந்து கேட்கச் செய்தது. இருளின் கனத்தை உடைத்து, வெறுத்தால் அமைதி கலைத்து, இருள் பயம் தரும், பயம் போக்கி பேசும், உருட்டி விழிக்கும் கண்கள், உருளும் பந்தாய் மிளிரும், விருட்டென வாய் திறந்து விரட்டி, மனதை திறந்தால், சிரிக்கும் மழை போல, இருளை உருக்கி, நெஞ்சில் வளர்ப்போம் என வரிகள் நம்மை மிரள வைக்க, இதற்கு எப்படித்தான் மெட்டமைத்துப் பாடுகிறாரோ என மலைத்தோம். கிருஷ்ணா கச்சேரியில் மலைப்பிற்குப் பஞ்சமில்லை. ஆம், ஆந்தையின் அலறல் அது – வரிகளில் ஸ்வரமும் பாடி அசத்தினார் மனிதர். இங்குதான் இவரது மேதைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். பாடல் வெகுஜனங்களுக்கானது. சமூகத்தால் பெரிதும் போற்றப்படாத இருட்டையும் ஆந்தையின் அலறலையும் மையப்படுத்தி எழுதப்பட்ட பாடலைக் கர்நாடக ரஸிகர்களிடம் கொண்டு சேர்ப்பது சாதாரணக் காரியமல்ல. அவர்களின் ஈடுபாட்டைப் பெறக் கிருஷ்ணா கையாண்ட யுக்தியே ஆந்தையின் அலறல் அது ஸ்வரம். மொத்தத்தில் ரீதிகௌளையில் எத்தனையோ பாடல் கேட்ட நமக்கு ‘இருட்டுக்கும் குரல் உண்டு’ சிலிர்ப்பைத் தந்தது. பாடல் முடிந்ததும் பெருமாள்முருகன் அவர்களை அரங்கிற்கு அறிமுகம் செய்தார் கிருஷ்ணா. அனைவரும் மனமுவந்து கைதட்டியது தமிழிசைக்கும் பக்தியையும் விஞ்சிப் சமூகப்பார்வையும் இந்த சங்கீதவடிவில் ஏற்கப்படும் என்பதற்குச் சான்றாய் விளங்கியது.’
கர்நாடக சங்கீத ரசிகர்கள் அதில் புதுமையையும் விரும்பி ஏற்கிறார்கள் என்பதற்கு இந்தப் பதிவே சாட்சி. அக்கச்சேரியில் நான் அறிமுகப்படுத்தப்பட்ட போது ரசிகர்கள் அளித்த கைத்தட்டலில் அவர்களின் ஏற்பும் பாராட்டும் பிரதிபலித்தன. அப்பாட்டைத்தான் அமெரிக்காவின் நியுஜெர்சியில் இரண்டாம் முறை பாடினார். ராகம், கீர்த்தனை, ஸ்வரம், நிரவல் என விரிவுபடுத்திக் கற்பனையின் பேராற்றல் புலப்படும்படி அவர் பாடியதைக் கேட்டுப் பிரமித்துப் போனேன். கீர்த்தனையின் உயிரான சொற்களைக் கண்டுகொள்ளும் நுட்பமும் அச்சொற்களுக்குத் தம் கற்பனையால் உயிரூட்டி விடும் வல்லமையும் கொண்டவர் கிருஷ்ணா. ‘பொருட்டாக்கிக் கேட்டால் பலபொருள் உணர்த்தும் மொழியாகும்’ என்னும் தொடரையும் ‘விரித்து மனதைத் திறந்தால் சிரிக்கும் குழந்தைக் குரல்போல்’ என்னும் தொடரையும் அவர் பாடிய போதுதான் அவையே கீர்த்தனையின் உயிர்நாடியான இடங்கள் என எனக்கே புரிந்தது. இப்பாடலில் எதுகைக்குப் பயன்படுத்திய எழுத்து ‘ரு.’ ஆந்தை கண்களை உருட்டுவதற்கு வாகாக இந்த எதுகை எதேச்சையாக அமைந்தது. ஸ்வரத்தைப் பின்னல் போல அமைத்துக் கீழ்ஸ்தாயியில் கிருஷ்ணா பாடிய போது இருட்டும் ஆந்தையும் அத்தனை அழகாய் மனதிற்குள் பதிந்தன. இது கீர்த்தனையின் தன்மைக்கேற்ற ஸ்வரம். இந்தப் பாடலைப் பாடிய விதம் பற்றி ராஜேஷ் கார்கா எழுதிய குறிப்பையும் இங்கே தருவது பொருந்தும். வருமாறு:
‘பொதுவாகக் கர்நாடக இசையில் பெரும்பாலும் பக்தி சார்ந்த பாடல்களே பாடப்பெறும். மிகக் குறைவான அளவில் ஜாவளி போன்ற வடிவங்களில் காதற் பாட்டுகள் இடம் பெறும். அல்லது கச்சேரியின் இறுதிப் பகுதியில் பாரதியார் பாடல்கள் போன்ற நாட்டுப்பற்றுப் பாடல்கள் இடம் பெறும். இவ்வகையில் இல்லாத பாடல்கள் மிகவும் அரிதே. இந்தக் கச்சேரியில் பாடிய பாடல் ஒரு பறவையைப் பற்றிய பாடல். அதுவும் பொதுவாக அதிகம் பேசப்படாத ஆந்தையைப் பற்றிய பாடல். ஆந்தையின் கண்கள் பற்றியும் அதன் அலறல் பற்றியும் அழகாக எழுதப்பட்ட இந்தப் பாடலைப் பாடிக் கேட்கும் பொழுது அத்தனை அற்புதமாக இருக்கிறது. உடன் வாசிக்கும் கலைஞர்கள் ஸ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் இப்பாடலின் தன்மையை உணர்ந்து வெகு அழகாக வாசித்தனர். குறிப்பாக இருளின் தன்மையைக் கொண்டு வர மிருதங்கத்தில் ஒரு பக்கம் மட்டும் கொண்டு அருண்பிரகாஷ் வாசித்த இடங்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.’ (இலவசக் கொத்தனார்).
இந்தப் பாடலைக் கிருஷ்ணா பாடும்போது என்னருகில் இருந்த முதிய தம்பதியினரை உற்றுக் கவனித்தேன். அவர்கள் என்னைக் கவனிக்கவேயில்லை. ரீதிகௌளையின் நுட்பங்கள் அறிந்த அவர்கள் புதிய கீர்த்தனையைக் கேட்கும் பரவசத்துடன் ஆழ்ந்து ரசித்தார்கள். அரங்கின் பின்பகுதியையும் கவனித்திருந்தேன். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள். அனைவரும் பாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். பாடலின் நடுவில் கிருஷ்ணா என்னை அறிமுகப்படுத்திய போது எழுந்த ஆரவாரம் பெரும் உற்சாகம் கொடுத்தது. கர்நாடக சங்கீத அரங்கில் நெடுங்காலத்திற்குப் பிறகு புதுமையின் கீற்றுகள் தென்படுகையில் அதன் எல்லை விரிவாகிறது. மரபான ரசிகர்களுக்கு உற்சாகமும் புதிய ரசிகர்களுக்கு ஈர்ப்பும் உருவாகின்றன. இவற்றைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கச்சேரிக்குப் பிறகு வரும் எதிர்வினைகள் ரசிக வரவேற்பை உணர்த்துகின்றன. கிருஷ்ணா புதுமை செய்கிறோம் என்று காட்டிக்கொள்ள இதைச் செய்வதில்லை. அவர் தம்மோடு ரசிகரையும் அழைத்துச் செல்ல முயல்கிறார். மரபின் செழுமையில் நின்று நவீனத்தை அதற்குள் அவர் இழைக்கும் உத்திகளில் ரசிகர்கள் கட்டுண்டு அவருடன் இயல்பாகச் செல்கிறார்கள்.
இவ்விதம் கர்நாடக சங்கீதத்தின் எல்லைகளை விரிவாக்கும் கலைஞனின் பயணத்தில் சற்றே துணையாக நானும் செல்வதன் காரணமாக அவரது கச்சேரிகளுக்கு இடையூறு வரும் என்பது எனக்கு அயர்ச்சியைத் தருகிறது. இதைப் பற்றிப் பேசிய போது கிருஷ்ணா சொன்னார், ‘என்னைப் பற்றி வரும் சர்ச்சைகளில் உங்கள் பெயரும் பங்கும் தவிர்க்க முடியாதது.’ கிருஷ்ணாவைப் பொருத்தவரைக்கும் இத்தகைய சர்ச்சைகளை அரசியல் தெளிவோடும் துணிவோடும் எதிர்கொள்கிறார். டெல்லி கச்சேரி ரத்து என்னும் செய்தியைக் கேட்டவுடன் ‘அந்த நாள் டெல்லியில் எந்த இடத்தில் என்றாலும் பாடத் தயார்’ என்று அறிவிக்கும் மனவலு கொண்டவர் அவர். நான் கொஞ்சம், கொஞ்சமென்ன, ரொம்பவே பூஞ்சை. அதனால்தான் கச்சேரி ரத்துக்கு நானும் காரணமா என மனம் குமைந்தேன். ஆனால் கிருஷ்ணாவின் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து டெல்லி அரசு கச்சேரிக்கு ஏற்பாடு செய்து கலைஞனைக் கௌரவித்த விதமும் பெருந்திரள் ரசிர்கர்கள் கச்சேரி கேட்கக் குழுமி ரசித்த பாங்கும் கண்டு குமைச்சலிலிருந்து விடுபட்டேன். கிருஷ்ணாவை நினைத்துப் பெருமிதமும் கொண்டேன்.
—-
ஆந்தைப் பாட்டு (கேட்க: https://youtu.be/D6Q8_YECx08)
பல்லவி
இருட்டுக்கும் குரலுண்டு
ஆந்தையின் அலறலது
பொருட்டாக்கிக் கேட்டால் பல
பொருளுணர்த்தும் மொழியாகும் (இருட்டுக்கும்)
அனுபல்லவி
இருளின் கனத்தை உடைத்து
பெருத்த அமைதி கலைத்துத்
தரும்பயம் போக்கிப் பேசும் (இருட்டுக்கும்)
சரணம்
உருட்டி விழிக்கும் கண்கள்
உருளும் பந்தாய் மிளிரும்
விருட்டென்று வாய்திறந்து
மருட்டி அலறி ஒலிக்கும்
விரித்து மனதைத் திறந்தால்
சிரிக்கும் குழந்தைக் குரல்போல்
இருளை உருக்கி நெஞ்சில்
முருகு பெருக்கி வளர்க்கும் (இருட்டுக்கும்)
—– 19-11-18