பிரபஞ்சனின் ‘சித்தன் போக்கு’ : முன்னுரைகள்

 

Image result for பிரபஞ்சன்

 

என்னுரை

பிரபஞ்சன்       

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்குக் குறிப்பெழுதும் இத்தருணம் என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான கணம் என்பதை உணர்கிறேன்.

எழுதுகிற வேளையிலேயே, கதை உரிய வாகான இருக்கையில் தன்னைப் பொருத்திக் கொள்வதை உணர முடியும். நல்ல அல்லது சரியான கதை எழுதும்போதே, எழுதுபவரை மேலே இழுத்துச் செல்லும். வார்த்தைகள் சரியான இடத்தில் தாமாகவே வந்து உட் கார்ந்துகொள்ளும். சப்தம் நிற்கிற தருணமும் குழந்தைகள் நாற்காலிகளில் பொருத்திக் கொள்கிற தருணமும் ஒன்றாகும் ஸ்திதியான இசை நாற்காலி விளையாட்டுப் போல இது. கதையின் தொனி மேலும் மேலும் நுண்மை யும் ஆழமும் கூடுவதால், ஒரு வகை அதிர்வு உடம்பில் தோன்றும். கையும் பேனாவும் விக்கித்தும் படபடத்தும் வழுக்கிக்கொண்டு தாளில் பரவும். அதுபோது ஏற்படும் பரவசம் அற்புதம். எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் என்பது இதுதான் என்பது புரிபடும்.

சில துர்பாக்கியமான விபத்துக்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. மிக அதிகமாகவே நேர்ந்திருக்கின்றன. குறித்த தேதி, நேரத்தில் முடித்துக் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டு, அந்த உத்தரவுகள் தரும் தகிப்பில் தயங்கி இருந்து விட்டுக் கடைசி நேரத்தில், மனசில் முழுமையாக எதுவும் திரளாத ஒரு புதிர் வேளையில் எழுதுவது போன்ற கொடுமையான சூழல் எதுவும் இருக்க முடியாது. கதை அந்த நேரத்தில் படுத்தும் பாடு, மிகவும் ஆக்ரோஷமான யுத்தம் போன்றது. வராத என்னை எதற்கடா கட்டி இழுக்கிறாய் என்கிற கோபம் கதைக்கு. நியாயம் தானே? இந்த விஷ வேளையில் கதைகள் உருவாவதில்லை. மாறாக ஒப்பேற்றப்படும். எழுத்தை ஜீவனோபாய மாகவும் ஏற்றுக்கொண்ட மூடத்தனமும், வெகுஜனப் பத்திரிகை அதர்மங்களுக்குள் சிக்கிக்கொண்ட கையாலாகாத்தனமும் கொண்ட வனான எனக்கு இம்மாதிரி அனுபவங்கள் பல நூறு.

ஆனாலும் நான் சந்தோஷப்படக் காரணங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலுக்குள்ளும் நினைத்து மகிழ்ச்சியடைய, சில கதைகள்  நான் எழுதியிருக்கிறேன்.

காலம், மிகக் கறாரான தராசைக் கையில் வைத்துக்கொண்டு கண்குத்திப் பாம்பாகச் சதா பரிசீலனை செய்துகொண்டேயிருக் கிறது. ‘சார் . . . அந்தக் கதையை எழுதும்போது டிபன் ரெடியாக வில்லை. பசியில்தான் எழுதினேன், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்’ என்றோ, ‘என்ன நடந்துச்சின்னா, நான் அந்தக் கதையை எழுதினபோது எனக்கு சரியான கேஸ் டிரபிள், கொஞ்சம் அப்படியும் இப்படியுமாத்தான் இருக்கும், பார்த்துகிடுங்கோ’ என்றோ நானோ, அல்லது வேறு எந்த எழுத்தாளருமோ எந்தச் சலுகையை யும் காலத்திடம் எதிர்பார்க்க முடியாது. கால வெள்ளம், அரைகுறைப் பிண்டங்களுக்கு இரக்கம் காட்டுவது இல்லை. ஒரு முறை, ந. பிச்சமூர்த்தியைச் சாலியமங்கலத்தில் சந்தித்தபோது, நானும் பிரகாஷும் செல்லப்பாவைக் குறித்து, அவர் எழுதுவது கவிதைகள் தானா என்று தீவிரமாகக் கேட்டோம். வெண்மையும் மஞ்சளும் கலந்த தாடியை நீவிவிட்டுக் கொண்டு, சற்று நேரம் கழித்து, ‘செல்லப்பா கவிதையும் எழுத முயற்சிக்கிறான். எழுதட்டுமே, முயற்சி தப்பில்லையே, எல்லா முயற்சியும் முழுசாகணும்கிற கட்டாயம் இல்லையே’ என்று அவருக்கே உரிய ஞானத்துடன் ந. பி. சொன்னது நினைவுக்கு வருகிறது. ந. பி. சொன்ன அந்த முயற்சிக் கதைகள் அல்லது படைப்புகள், இலக்கியத்தைக் குறிவைத்து தோற்றவை களுக்குத்தான் பொருந்துமே தவிர, அவசரத்துக்கு எழுதியவை களுக்குப் பொருந்தாது. காலம், கண்டிப்பு மட்டும் அல்ல, கருணை யும் கொண்ட ஜீவி. அது நோக்கத்தையும் பரிசீலிக்கும்.

சில நல்ல விஷயங்கள் எனக்குள் இருந்து, தம்மை எழுதிக் கொண்டிருக்கின்றன. அவை நல்ல கதைகளாக உருவாகியிருக்கின்றன. என் மகிழ்ச்சி அதன் பொருட்டுத்தான். அவைகளில்  சில தீவிர வாசகர்கள் புறங்கையால் ஒதுக்கும் மோசமான பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கவனிப்புக்குள்ளாகாமல் போகும்போது நான் வருந்தி யிருக்கிறேன். என் கதைகள் பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கும் வாசகர் முன், எனக்கு விதிர்விதிர்ப்பு ஏற்படுகிறது. நான் விரும்பி நேசிக்கும் அந்தக் கதைகளை அவர் வாசித்திருக்க வேண்டுமே எனும் தவிப்புக்கு நான் ஆளாகிறேன். என் நேசிப்புக் கதைகளைப் பட்டியல் போட்டு அவருக்குத் தரவும் இயலாதே, மற்றும் அதை நீங்கள் வாசித்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் ஜனநாயகம் அல்லவே!

நண்பர் பெருமாள்முருகன், கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுக்கிறார் என்று கண்ணன் சொன்னபோதும் எனக்குள் படபடப்பு ஏற்பட்டது. என் மனசுக்குள் இருக்கும் கதைகள் அவர் பட்டியலில் இருக்க வேண்டும் எனும் கவலையும் ஏற்பட்டது. பெருமாள்முருக னின் பட்டியலைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. என் தேர்வும் அவர் தேர்வும் முழுமையாக ஒத்துப்போயிருந்தன. யாராலும் வாசிக்கப்படாத, எனக்கு மிகவும் அந்தரங்கமான குமாரசாமியின் பகல்பொழுது கதையை அவர் தேர்ந்தெடுத்திருந் தார். எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு என¢மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த பிரயாசையையும் நேரத்தையும் செலவிட்டிருக்கும் பெருமாள்முருகன் செய்த உதவியை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது.

என் வாழ்க்கையை அர்த்தம் பொருந்தியதாக, உபயோகம் கொண்டதாக நான் வாழ்ந்திருக்கிறேன் என்று எனக்குச் சொல்வதாக இந்தச் சித்தன் போக்கு தொகுப்பு அமைந்திருக்கிறது. நண்பர் கண்ணனுக்கு என் நன்றி.

6.11.2004                                                                                                      தோழமையுடன்

சென்னை – 14                                                                                                    பிரபஞ்சன்

 

 

 

உயர்வுகளை முன்னிறுத்தும் கதைகள்

பெருமாள்முருகன்

 

பிரபஞ்சனின் தொடக்கக்காலக் கதைகள்   நான் மிகவும் விரும்பிப் படித்தவை. ‘ஆண்களும் பெண்களும்’, ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ ஆகிய நூல்களைத் தேடிப் பெற்றுப் படித்திருக்கிறேன். ‘பிரும்மம்’ கதையை இலக் கியச் சிந்தனைத் தொகுப்பில் படித்ததாக நினைவு. அக்கதையின் சொல்முறையும் அதில் இயங்கிய மனத்தின் கனிவும் எனக்குள் படிந்து போயின. அதன்பின் சில ஆண்டுகள் பிரபஞ் சனின் கதைகளைப் படிப்பதில்லை என்று தீவிர முடிவெடுத்துத் தவிர்த்திருக்கிறேன். அதற்குக் காரணம், வெகுஜன இதழ்களில் எழுதுபவர்களைப் பற்றிய மிக ஏளனமான எண்ணம்தான். அவர்களை மக்களின் எதிரி களாகக் கற்பனைச் செய்து கொண்டது முண்டு. நான் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் கறாரான பல முடிவுகளை என்னுள் உருவாக்கியிருந்தன. அவற்றுள் இதுவும் ஒன்று.

வெகுஜன இதழ்கள் நல்ல எழுத்தாளர்களை உள்வாங்கிக் கொண்டு, அவர்களின் எழுத்து ஜீவனை உறிஞ்சி எடுத்துக் கொள் பவை.  எவ்வளவுதான் சமரசமற்ற எழுத்தாளராக இருப்பினும் அவரைப் படிப்படியாகத் தனக்கேற்ப உருமாற்றித் தன் தேவையை நிறைவேற்றும் ஏவலாளாக மாற்றிவிடும். எழுத்தாளனின் சிந்தனை அப்பத்திரிகைகளின் போக்கிற்கேற்பத் திரிந்து சரக்கு உற்பத்தி செய்பவனின் எந்திரத்தனத்தை அடைந்துவிடும். சுவை, ரசனை, மேம்போக்கு ஆகியவையே எழுத்தின் நோக்கமாகக் கொள்ளப்படும்.  வாசகனுக்கு எந்தத் தொந்தரவையும் கொடுக்காத வகையில், அதாவது பொதுப்புத்தியில் சலனத்தை உண்டாக்காத முறையில் எழுதும்படி பேனாவுக்குப் பயிற்சி கிடைத்துவிடும். இவற்றையெல் லாம் அறிந்திருக்கும் எழுத்தாளன் அத்தகைய இதழ்களில் எழுதுவ தென்றால் . . . என்னும் கோபம் என்னுள் நிறைந்திருந்தது. இக்கருத்து களில் ஓரளவு உண்மை உள்ளது. ஆனால், இவை முழுமைபெற்ற கருத்தல்ல.

எழுதுவது என்பதே ஒரு சமூகச் செயல்பாடு; எழுத்தே சமூகம் பற்றிய எதிர்வினைதான் என்பது சரியெனில், எழுத்தாளன் சுய சிந்தனை கொண்டவன் அல்லவா? எழுத்தாளனுக்குச் சுயசிந்தனை இல்லை என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தும் அவலத்தைக் கொண்டதாக நம் இலக்கியச் சூழல் உள்ளது. எழுத்தாளன் எதை யாவது, யாரையாவது சார்ந்திருந்தே ஆக வேண்டும் என்று கருது வதும் அப்படியில்லாவிடின் எதற்குள்ளாவது கொண்டு நிறுத்துவதும் ‘எடுப்பார் கைப்பிள்ளைதான் எழுத்தாளன்’ என்று நிறுவுவதும் இங்கு இயல்பாக நடந்துவரும் ஒரு வேலை. வெகுஜன இதழ்களில் எழுதுவது பற்றிய என் எண்ணமும் அப்படித்தான் இருந்தது. எழுத்தாளன் மீதும் அவனது சுயசிந்தனை மீதும் சிறிதும் நம்பிக்கை கொள்ளாத ஒரு நிலைப்பாடு எப்படிச் சரியாகும்? எந்தத் தளத்தி லும் தன் கூர்மையை விட்டுக் கொடுக்காத எழுத்தாளன் இருக்க முடியாதா? வெகுஜன இதழ்களைத் தவிர்த்தல் தன் பலவீனத்தால் ஏற்படும் அச்சமே தவிர, வேறில்லை.

எழுத்தாளன் மீதும் அவனது சுயசிந்தனை மீதும் மதிப்பும் நம்பிக்கையும் பின்னர் எனக்கு உருவானது. அதற்கு ஒரு காரணம்,  பிரபஞ்சன்தான். 1994 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். என் குடும்பச் சூழலின் நிர்ப்பந்தத்தால் ஏதாவது ஒரு வேலைக்கு உடனடியாகப் போயாக வேண்டியிருந்தது. அப்போது ‘சுதேச மித்திரன்’ என்னும் நாளிதழ் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தது. அத்தகைய பத்திரிகைகளில் எழுதக்கூடாது என்னும் கொள்கை யால், என்னை எழுத்தாளன் என்று காட்டிக் கொள்ளாமல் ‘மெய்ப்புத் திருத்துநர்’ வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அப்பத்திரிகை அலுவலகத்துக்குப் பிரபஞ்சன் ஒருநாள் வந்திருந்தார். அதன் ஞாயிறு மலரில் எழுதுவது தொடர்பாகப் பேசவோ எழுதியதற்கான பணம்பெறவோ வந்தார் என்று நினைக்கிறேன்.

புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், வதந்திகளை விற்று ஏற்கனவே பிரபலமாகியிருந்த நாளிதழ் ஒன்றைப் பின்பற்றும் போக்குடையது. அதற்கும் இலக்கியத்திற்கும் எந்தப் பிராப்தமும் கிடையாது. அங்கே பிரபஞ்சனைக் கண்டது அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ‘பெருமாள் முருகன் ப்ரூப் ரீடரா?’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார். என் நிலைக்கு அவரும் அவர் நிலைக்கு நானும் மனத்துள் வருந்தியதால்  மௌனமானோம். அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் பிரபஞ்சனின் கதைகளை மீண்டும் பொருட்படுத்தி வாசிக்கத் தொடங்கினேன். பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர், வெகுஜனப் பத்திரிகைகளில் பெருவிருப்பத்தோடு எழுத எந்த முகாந்திரமும் இல்லை என்று தோன்றியது. அவருக்குரிய தளங்களை உருவாக்கிக் கொடுக்காத சூழலின் அவலம் பற்றிக் கவலை கொண்டேன்.

அதன்பின் பிரபஞ்சன் எழுத்தாகக் கிடைக்கும் அனைத்தையும் விடாமல் படிக்கும் வழக்கத்தைக் கொண்டேன். அவர் எழுதிய அரசியல் கட்டுரைகளையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அவரது அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பொருட்படுத்தத் தக்கவையல்ல. வாழும் நிர்ப்பந்தம் கொண்ட எழுத்தாளன் அப்படித் தான் இருக்க முடியும் என்று தோன்றியது. அடிப்படைத் தேவைகளுக்குத் துன்பப்படாத எவரும் பிரபஞ்சன் பற்றிய விமர்சனங்களைப் பேச உரிமையற்றவர்கள் என்று கருதுகிறேன்.

வெற்றிபெற்ற வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர் அல்ல பிரபஞ்சன். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தத் தளத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள அவரால் இயலாது. ஏனெனில் அவரது மனவார்ப்பு அப்படி. பொதுப்புத்தி சார்ந்த விஷயங்களை கேள்விக்கு உள்ளாக்குவதும் அவற்றை எடுத்தெறிவதும் அவரது படைப்புகளின் இயல்பு. அனுபவங்களுக்கு உட்படுத்தாமல் மேலோட்டமாக எழுதியுள்ளார் என்று வேண்டுமானால் சொல்ல லாம். ஆனால் பொதுப்புத்திக்கு உட்பட்டு எழுதியவர் என்று கூற முடியாது. வெகுஜன இதழ்களில் பிரபஞ்சன் எழுதிய தொடர்கதை கள் நூல்களாக வந்துள்ளன. இலக்கியத்தரம் பற்றிய அக்கறை உள்ளவர்கள் அவற்றைத் தாராளமாகப் புறக்கணித்துவிடலாம். பிரபஞ்சனே அவற்றை முன்னிறுத்த மாட்டார் என்று நினைக் கிறேன். அவ்விதழ்களில் அவர் எழுதிய சிறுகதைகள் அப்படிப்பட்ட வையல்ல. அவரது எழுத்தின் இயல்புகளை முழுமையாகக் கொண்ட கதைகள் அவை. சில கதைகள் எழுதப்படும் கால அவகாசத்தைப் பொறுத்து நேர்த்தி குறைவுகள் ஏற்பட்டுள்ளன. சோடை போன கதை என்று எதுவுமில்லை.

வெகுஜன இதழ்களில் எழுதியமையால் பிரபஞ்சனின் கதைக் களன்கள் விரிந்துள்ளன. விதவிதமான கதைகளை எழுதுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. தமக்குள் மனத்தடை உருவாக்கிக் கொண்டு குறிப்பிட்ட வகையான கதைகளை மட்டுமே எப்போதா வது ஒன்றிரண்டு எழுதிக் கொண்டு ஒளிவட்டம் சுழன்றபடி நடமாடும் தீவிர எழுத்தாளனிடம் வகைவகையாக விரியும் எழுத்தின் சாத்தியங்களைக் காண  முடிவதில்லை. கடும்சோம்பல் இலக்கியத் தவமாக அங்கீகரிக்கப்படுகிறது. பிரபஞ்சனிடம்  பல விதக் கதைகள் உருவாகக் காரணம் வெகுஜனத் தளத்தை அவர் பயன்படுத்திக் கொண்டதுதான். படைப்பாளனின் மனவிரிவுகொள்ளும் சாத்தியங்களைப் பிரபஞ்சன் கதைகளில் காணமுடிகிறது.

அவர் கதைகளை வகைப்படுத்துவது கடினம். கிராம தெய்வங் கள் தொடங்கி பெரும்தெய்வங்கள் வரையிலான நம் தொன்மங் களைப் பயன்படுத்தி எழுதியுள்ள கதைகள், பீடங்களாகப் போற்றப் படும் மடங்களுக்குள் நுழையும் கதைகள், பிரெஞ்சு ஆதிக்கம் புதுச்சேரியில் இருந்தபோது நிகழ்ந்த சம்பவக் கதைகள், நடுத்தரக் குடும்பத்து மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகள் எனப் பிரபஞ்சனின் கதைகளை மனத்துள் பிரித்துக் கொண்டே போக லாம். ஆனால் இவற்றுள் அடங்கிவிடுபவை அல்ல அவை. நாம் எதிர்பாராத வகையில் சட்டெனப் புரட்சிகர அரசியல் இயக்கங் களைப் பற்றி எழுதுவார். சாஸ்திரிய இசை தொடர்பாக எழுதுவார். பெண்களைக் குறித்த கதைகள் வரும். தொழிலாளர்கள் சம்பந்த மான கதைகள் உருவாகும். கல்வி நிறுவனங்கள், கல்லூரி அனுபவங் கள் என்று வேறொரு பகுதிக்குள் அவர் எழுத்து செல்லும். மெஸ்கள் பற்றிப் பிரபஞ்சன் அளவுக்கு எழுதியவர் உண்டா? இந்தத் தன்மைகள் வாய்க்கும் படைப்பாளர் மிகச் சிலரே. பிரபஞ்சனிடம் நான் வியந்து போகும் அம்சம் இது.

மனிதனின் கீழ்மைகளை மையப்படுத்தி எழுதப்படுபவையே வெற்றிகரமான கதைகள் என்றொரு அபிப்ராயம் எனக்குண்டு. கீழ்மைகள் நேரடியான வெளிப்பாடு கொள்ளும் போது அருவறுக் கும் சமூகம், அவை சமத்காரமாகத் தம்மை மறைத்துக் கொண்டிருக் கும்போது பெரிதாகக் கவலைப்படுவதில்லை. படைப்பு, அந்த சமத்காரத்தை உடைத்து கீழ்மைகளை வெளியே கொண்டு வரும் வேலையைச் செய்கிறது. மேலும் கீழ்மைகளுக்கு உள்ள ஈர்ப்பு வலிமை மிக்கது. கீழ்மைகளைக் கடுமையாக வெறுப்பதும்கூட அவற்றின்மீது ஏற்படும் அதீத ஈர்ப்பினால்தான் என்று சொல்ல லாம். அவற்றை மையப்படுத்தும் படைப்பின் நோக்கம் உயர்வுகளை பற்றிய ஏக்கமே ஆகும். ஆனால் பெரும்பாலும் படைப்புகள் உயர்வுகளைக் குறித்துப் பேசுவதில்லை. உயர்வுகள் தம்மை வெளிப் படுத்திக் கொள்ளக் கூச்சப்படுகின்றன. உயர்வுகளுக்கு ஈர்ப்புத் தன்மை குறைவு. ஆகவே  கீழ்மைகளைப் பேசுவதன் மூலமாகவே உயர்வுகளை உணர்த்தும் வேலையைச் செய்கின்றன படைப்புகள்.

பிரபஞ்சனின் படைப்புகள் இத்தன்மைக்கு எதிரானவை. பெரும்பாலும் உயர்வுகளைப் பேசுவனவாகவே தம் படைப்புகளைப் பிரபஞ்சன் உருவாக்கியுள்ளார். இவருடைய கதைகளில் கீழ்மைகள் பனிப்படலத்தின் உள்ளே மறைந்துகிடக்கும் தெளிவற்ற காட்சிகள் போல மங்கிப் போகின்றன. உயர்வுகளோ அவற்றின் சகல முகங் களும் துலங்கும் வகையில் அற்புத வெளிப்பாடு கொள்கின்றன. மனிதனின் அடிப்படைப் பண்புகள் இந்த உயர்வுகளாகத்தான் இருக்க முடியும். ஆதிகால மனிதன் உயர்வுகளை மட்டும் கொண்டவனாகவே இருந்திருப்பான். காலப்போக்கில், மனிதன் வளர்ச்சி என்று கருதும் சூழலில், அவை கொஞ்சம் கொஞ்சமாகத் தம் திறனை இழந்து பின்னுக்குப் போய்விட்டன. மனிதனின் அடிப்படைப் பண்புகளை மலர்ச்சிபெறச் செய்யும் வேலை படைப்பினுடையது. உயர்வுகள் ஒருவேளை, இலட்சியங்களாகக் கட்டமைக்கப்பட்டவையோ? மனிதனின் உண்மையான இயல்புகள் கீழ்மைகள்தானோ? எனினும் இலட்சியங்களாகிய உயர்வுகளை அடைவதுதான் மனிதனின் உச்ச இலக்காக இருக்க வேண்டும். எவ்வாறாக இருப்பினும் படைப்பு உயர்வுகளை நோக்கிய உந்துதல் என்றே சொல்லலாம்.

உயர்வுகளை முன்னிறுத்தி வெற்றிகரமான கதைகளை எழுதிய வர் பிரபஞ்சன். இது மிகவும் கடினமான காரியம். உயர்வுகளைப் பேசும்போது கீழ்மைகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட முடியாது. கீழ்மை ஜ் உயர்வு என்னும் முரணைக் கதையில் கட்ட மைப்பதுதான் நிகழக்கூடியது. பிரபஞ்சனும் இந்த முரண் முறையையே கையாள்கிறார். ஆனால் உயர்வின் சிறப்புக்கு ஒரு பின்புலமாகக் கீழ்மைகள் அமைகின்றன. மனிதனிடம் இத்தனை உயர்வுகள் புதைந்து கிடக்கின்றனவா என்று வியப்புறும் வகையில் பிரபஞ்சன் கதைகள் இருக்கின்றன. ஈர்ப்பற்ற விஷயத்தை ஈர்ப் போடு உருவாக்கும் திறன் பிரபஞ்சனுடையது. மனிதனின் மீது நம்பிக்கை குலைந்து, மனிதன் எல்லாவற்றையும் அழித்துவிடும் சுயநலப் பிறவி என்னும் கருத்தோட்டம் மேலோங்கி வரும் சூழலில், மனிதனின் அடிப்படை நல்லியல்புகளைப் பிரமாதப்படுத்தி நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன பிரபஞ்சனின் கதைகள்.

‘ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ கதை மையம் என்ன? கடன் கொடுத்தவனாகிய கிருஷ்ணமூர்த்தியும் வாங்கியவனாகிய ரங்கசாமி யும் சில சந்தர்ப்பங்களல் மிகவும் இழிவாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் கதை அதன்மீது மையம் கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் உணர்ந்துகொண்டு தம்முள் இருக்கும் மனிதனை வெளியே கொண்டுவரும் இறுதிப் பகுதிதான் கதையின் மையம். ‘நான் ஏதாவது தப்பாச் சொல்லியிருந்தா கோவிச்சுக்காதே கோபாலு’ என்று கிருஷ்ணமூர்த்தியும் ‘மனசுல ஒன்னும் வெச்சுக்காதே கிருஷ்ணமூர்த்தி’ என்று கோபாலுவும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் அந்த இயல்புதான் பிரபஞ்சன் காட்ட விரும்பும் மையம். மடங்களைப் பற்றிய கதை எனினும் அங்கு நிலவும் கொடூரங்களைப் பிரபஞ்சன் பிரதானப்படுத்துவதில்லை. அக்கொடூரங் களுக்குள் உயிர்த்திருக்கும் மனத்தையே பிரதானப்படுத்துகிறார். ‘வெளியேற்றம்’ கதையில் ஆத்மானந்தர் என்னும் மடாதிபதியின் மன உயர்வுகள் பேசப்படுகின்றன. உயர்வுகள் மதிக்கப்படாத பொழுது, கீழ்மைகளோடு சமரசம் செய்து கொண்டு அடங்கிப் போகும் வழியைப் பிரபஞ்சன் பரிந்துரைப்பதில்லை. அதிலிருந்து விலகிக்கொள்வதன் வழியாகக் குறைந்தபட்சம் தன்னுள்ளிருக்கும் அந்த நல்லியல்புகளையாவது காத்துக் கொள்ள  முடியும் என்று கருதுகிறார்.

‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ கதையைப் பார்த்தால், எதிர்மறை  போலத் தோன்றும். சூழல் வாய்க்கும்போது மனிதனுக்குள் முடங்கி யிருக்கும் உயர்வுகள் முகிழ்ந்து வருவதை ஆச்சர்யத்தோடு விவரிக் கும் கதை இது. ‘எனக்கும் தெரியும்’ கதைக்குள் அம்மா என்னும் எதிர்மறை காட்சிக்குள்ளே வராமல் அம்மாவை மையமிட்டு மூர்த்தி, சுகுணா, சுகுணாவின் அப்பா ஆகியோரின் குணங்கள் வெளிப்பாடு கொள்ளும் தருணங்கள் மிகவும் கவித்துவமானவை. பிரபஞ்சன் கதைகளுள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ‘குமாரசாமியின் பகல் பொழுது.’ குமாரசாமி என்னும் மனிதருக்குள் புதைந்திருக்கும் பரிமாணங்களை ஒரே ஒரு பகல் பொழுதைக் கொண்டு காட்டும் கதை இது. குமாரசாமியின் அலுவலகம் சார்ந்த உலகம் அவருடை யது மட்டுமல்ல. குமாரசாமியைப் போலிருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களுடையது. எல்லோருக்கும் குமாரசாமிக்குக் கிடைத்ததைப் போல வெளிப்படச் சந்தர்ப்பம் கிடைக்குமா? கிடைத்ததும் குமாரசாமி அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகிவிடுகிறார். எத்தனை பேருக்கு இந்தத் தைரியம் வரும்? உள்ளதை உதறி வேறொன்றைப் பற்றிக் கொள்ளுத் துணிவு இவர்களுக்கு ஏது? அச்சமே கீழ்களது ஆசாரம். ஆனால் பிரபஞ்சன், குமாரசாமியைத் துணிவுகொள்ளச் செய்கிறார்.

‘சிக்கன் பிரியாணியும் சீதேவி படமும்’ கதை வித்தியாசமான ஒன்று. இதைப் போன்ற ஒரு கதையை, கந்தர்வனும் எழுதியிருக் கிறார். ‘தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்’ என்னும் சிறுகதை அது. எளியவர்களிடம் பணம் பிடுங்கித் தம் அன்றாட வாழ்வை நடத்தும் அரசியல் தரகரைப் பற்றிய கதைகள்தாம் இரண்டும். ஆனால் பிரபஞ்சனின் கதை கொள்ளும் முடிவு அருமையானது. அரசியல் தரகனின் மனத்திலும் நல்லியல்புகள் பொதிந்திருக் கின்றன, அவற்றை வெளிப்படுத்தச் சூழல் முக்கியம் என்று காட்டு கிறது முடிவு. ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட நாகராஜன் என்னும் அவன், ‘எப்படியாவது மண்ணாங்கட்டியின் தங்கைக்கு வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று முதல்முறையாக நினைத்தான்’ எனப் பிரபஞ்சன் முடிக்கிறார். அவன் மனத்தில் இருக்கும் ஈரத்தைக் காட்டப் பிரபஞ்சனால்தான் முடியும். இப்படி அவரது கதைகள் பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசமுடியும். வடிவச் சிக்கல்கள் எதிலும் பட்டுக்கொள்ளாமல் நேரடியாகக் கதை சொல்லும்முறை அவருடையது. அவை ஆழ்ந்த அனுபவங்களைக் கொண்டிருப்பவை. அனுபவங்களைத் தாண்டுவதும் பரிசீலிப்பதும் புதிய அனுபவ வெளிக்குள் வீசுவதும் என அவை வாசகருக்குப் பலவிதமாகப் பயன்படுபவை.

பிரபஞ்சனைப் பொறுத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்பு களைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படு வதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும். சாதாரணத் துன்பம் ஒன்றில் பட்டுக்கொள்ளும் ஒருவன், உலகத் துன்பங்களே தன் தலைமேல் வந்து விடிந்துவிட்டதாக அல்லல்படும் காலத்தில், பிரபஞ்சனின் உயரிய மன வெளிப்பாடு களாக அவர் கதைகள் அமைந்திருப்பதை விதந்தோதிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன். அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்களுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததைப் போலிருந்தது. ஈரம் என் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவிற்று. ஈரம் என்பது அன்பு, கருணை, நம்பிக்கை, தியாகம், உதவி, பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்துக்கும் பொருந்தும். செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப் பார்க்கும் வேட்கையினா லும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றைத் தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாகச் செயல்பட்டிருக்கிறேன். இத்தேர்வைப் பார்வை யிட்டு ‘இவை அனைத்தும் எனக்கும் பிடித்த கதைகள்’ என்றார் பிரபஞ்சன். அங்கீகரிப்பு தரும் சந்தோசம் அளவற்றது.

இவ்வனுபவத்தை வழங்கிய பிரபஞ்சன் அவர்களுக்கும் கண்ண னுக்கும் இனிய நன்றிகள்.

2004                                                                                                                     பெருமாள்முருகன்