பேராற்றல் கண்ட வியப்பு
முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு மீறல் இயல்புதானே? ‘பெருமாள்முருகனை இளைஞராகச் சந்தித்த போது இவர் உயர்வார் என்று நினைத்தேன். இவ்வளவு உயர்வார் என்று நினைக்கவில்லை’ என்று சொல்லிக் கைத்தட்டல் பெற்றார். அவ்வமர்வில் தமிழ் காமராசன் ‘பெருமாள்முருகன் பார்வையில் கல்வியும் சாதியும்’ என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினார். அவர் பேசுவார், கட்டுரை எழுதித் தர மாட்டார் என்று பொதுவில் நிலவும் எண்ணத்தை மாற்றி, என் மீது கொண்ட அன்பினாலோ என்னவோ கட்டுரையோடு வந்திருந்தார். கல்வி தொடர்பான என் நூல்களை மையமிட்டு அவர் உரை அமைந்தது.
தொடர்ந்து ‘பெருமாள்முருகன் சிறுகதைகள்: புனைவில் இசைக்கப்படும் விடுதலை’ தலைப்பில் ஜார்ஜ் ஜோசப் கட்டுரை வாசித்தார். சென்னைவாசிகளே பங்கேற்ற கருத்தரங்கில் வெளியூரிலிருந்து (திருச்சி) வந்து பங்கேற்றவர் அவர் ஒருவரே. அவர் வேண்டும் என்று அடம்பிடித்துப் பரிந்துரைத்தவர் அதியமான். அன்று அதிகாலை வந்த ஜார்ஜ் என்னுடன் அறையில் தங்கிக் கொண்டார். என் சிறுகதைகள் அனைத்தையும் ஒருசேர வாசித்து விரிவாக அவர் எழுதிய கட்டுரையை முன்கூட்டி அனுப்பியிருந்தார். ‘இளைஞர்களை அழையுங்கள். அவர்கள் உழைத்து எழுதுவார்கள். நம்மால் இப்போது உழைக்க முடியவில்லை’ என்று சலபதி சொன்னது எத்தனை சரியானது என்பதற்கு ஜார்ஜ் ஜோசப்பின் கட்டுரை சான்றானது. ‘சில தவறான வழிகாட்டுதல்களால் உங்கள் கதைகளைப் படிக்காமல் இருந்துவிட்டேன்’ என்று என்னிடம் பேசும்போது சொன்ன அவர் தம் கட்டுரையில் அந்த ஆதங்கத்தைத் தீர்த்துவிட்டார். கிட்டத்தட்ட நூற்றிருபது கதைகளை ஒரே மாதத்தில் வாசித்து எழுதியிருந்தார். சில அவதானிப்புகள் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. பெரும் நிறைவளித்த கட்டுரை அது.
இரண்டாம் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபு, பாரசீகம், உருது ஆகிய மொழிகளுக்கான துறைத்தலைவர் பேராசிரியர் அ.ஜாகீர் ஹுசேன். அரபு மொழியிலிருந்து தமிழுக்கு நவீன இலக்கியங்களை மொழிபெயர்த்து வரும் அவர் நல்ல திறனாய்வாளர். தனிக்கட்டுரை வாசிக்க ஆவலாக இருந்தார். தலைமையுரையையும் அவ்வாறே வழங்கினார். அவ்வமர்வில் கட்டுரை வாசிக்க வேண்டிய கவிஞர் வெய்யில் வர இயலவில்லை. ‘பெருமாள்முருகன் கவிதைகளில் தருணங்கள்’ என்பது அவர் தலைப்பு. அவர் வராத குறையைத் தீர்க்கும் விதமாகக் கவிதைகளைப் பற்றியே விரிவாகப் பேசினார் ஜாகீர் ஹுசேன்.
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, ஆங்கிலத்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் ஆழி அரசி கட்டுரை வாசித்தார். ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை. தமிழில் பேச முடிந்தால் நல்லது என்று சொல்லியிருந்தேன். எனினும் தயங்கினார். தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுகிறேன் என்றார். அப்படியே செய்தார். ‘Punitive regularisation of caste performances in Pyre’ (பூக்குழியில் சாதியத் தண்டனைச் செயல்பாடுகளின் இயல்பாக்கம்) என்பது அவர் தலைப்பு. பூக்குழி நாவலைப் பற்றிய கட்டுரை. நாவலை முதன்மைச் சான்றாகக் கொண்டு ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதலாம் என்பதற்குச் சான்று அது. அவர் பேசப் பேசத் தயக்கம் தீர்ந்து பெரும்பாலும் தமிழிலேயே உரையாற்றினார். தம் ஆய்வை எடுத்துச் சொன்ன விதமும் நன்றாக இருந்தது.
மதிய உணவுக்குப் பிறகு ‘கீர்த்தனை மரபும் பெருமாள்முருகனும்’ என்னும் தலைப்பில் டி.எம்.கிருஷ்ணா குழுவினர் பங்கேற்கும் அமர்வு. மருத்துவமனையில் இருந்து திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போதும் ஏற்றுக்கொண்ட பணியைத் தவிர்க்காமல் வீட்டிலிருந்து இணையம் வழியாகப் பேசினார். அவர் மாணவர் பாடகர் விக்னேஷ் ஈஸ்வர் நேரில் வந்து பங்கேற்றார். இன்னொரு மாணவர் ரவிகிரண் இணையத்தில் டி.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்துகொண்டார். தமிழிசை என்பது என்ன எனத் தொடங்கிக் கீர்த்தனைகள் பற்றிப் பொதுவாகவும் நான் எழுதிய சிலவற்றை எடுத்து அவை இசைக்குப் பொருந்தும் நுட்பங்களை விளக்கியும் மிகச் சிறப்பான உரையை டி.எம்.கிருஷ்ணா வழங்கினார். இடையிடையில் பாடினார். விக்னேஷ் ஈஸ்வரும் ரவிகிரணும் தம் அனுபவங்களைப் பாடிப் பகிர்ந்து கொண்டனர்.
மருத்துவமனையிலிருந்து திரும்பியவர் போலில்லாமல் அவர் இயல்புப்படி டி.எம்.கிருஷ்ணாவின் பேச்சு அமைந்தது. அவரை அழைத்துப் ‘பொறுமையாகப் பேசுங்கள். உடலை வருத்திக்கொள்ள வேண்டாம்’ என்று அழைத்துச் சொல்லலாம் என்று நினைத்தேன். விக்னேஷ் ஈஸ்வர் நான் நினைத்தபடியே ‘அண்ணா, மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துப் பேசுங்கள்’ என்று செய்தி அனுப்பியிருக்கிறார். ஆனால் அதைக் கிருஷ்ணா கண்டுகொள்ளவில்லை. முத்தமிழ் என்று பெருமைப்படப் பேசுகிறோம். இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் நாம் பெரிதாக இடம் தருவதில்லை. இக்கருத்தரங்கில் டி.எம்.கிருஷ்ணாவால் இசைத்தமிழ் நிறைந்தது.
கர்னாடக இசையை அறியாதவர்களுக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தார். டி.எம்.கிருஷ்ணாவின் பேராற்றலைக் கண்டு வியந்து போகிறவன் நான். அடிக்கடி சோர்ந்து போவதும் சோம்பித் திரிவதும் என் இயல்பு. அவர் ஆற்றலில் சிறிது கிடைத்தால் போதும், இன்னும் எத்தனையோ செயல்களைச் செய்யலாம் என்று தோன்றும். திரையில் அவர் உருவத்தைப் பார்க்கப் பார்க்க மனதில் ஒரு பல்லவி ஓடிற்று.
ஆற்றலில் எனக்கு அணுவளவை வழங்கு – கிருஷ்ணா
ஆற்றலில் எனக்கு அணுவளவை வழங்கு – நற்பணி
ஆற்றி ஆற்றி ஆயுளைநான் கழிக்கவும்
போற்றிப் போற்றிப் பாடியுனைத் தொழவும் – உனது
ஆற்றலில் எனக்கு அணுவளவை வழங்கு.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அவர் உரை. நேரம் போனதே தெரியவில்லை.
—– 04-04-25
தங்கள் பதிவைப் படிக்கும்போது, கருத்தரங்கில் நேராகக் கலந்து கொண்ட அனுபவம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த தமிழறிஞர் பெருமாள் முருகன் படைப்புகள் குறித்தான கருத்தரங்கம் மிகவும் சிறப்பானது. நமோ புத்தாயா நல் வாழ்த்துகள்.
சென்னைப் பல்கலைக்கழகம் பெருமாள் முருகன் படைப்புலகம் மூலம் ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.
கட்டுரை வாசித்தவர்களுக்கும் கருத்துகளை பகிர்தளித்தவர்களுக்கும் வாழ்த்துகள்.
சிறப்புங்கையா….