(THE HINDU நாளிதழில் நேற்று (01-12-2024) வெளியான Music and Dance சிறப்புப் பகுதியில் வெளியான சிறுகட்டுரையின் தமிழ் வடிவமும் ஆங்கில மொழிபெயர்ப்பும்)
டி.எம்.கிருஷ்ணாவுடன் 2016ஆம் ஆண்டு நடந்த முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டுவிட்டது. விலக்குவதையும் சுருக்குவதையும் இயல்பாகக் கொண்ட சாதியச் சமூக அமைப்பில் தனிமனித இயல்புகளும் அப்படித்தான் இருக்கின்றன. நமக்கு அந்நியர் என்று கருதி ஒருவரை விலக்குவதற்குச் சாதி ஒன்றே போதுமான அளவுகோலாக இருக்கிறது. நம் அன்றாடப் புழங்குவெளியைச் சுருக்கிக் கொள்வதன் மூலம் தனித்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும் முயல்கிறோம். நெருக்கமும் விரிவும் அபூர்வமானவை.
டி.எம்.கிருஷ்ணா இவற்றிலிருந்து வேறுபட்டவர். எவரையும் ஈர்த்து நெருங்க வைக்கும் பேச்சும் பண்பும் கொண்டவர். தம் எல்லையை விரிவாக்கும் செயலாற்றல் மிக்கவர். கருநாடக சங்கீத உலகிற்குள் புதுக்காற்றுப் புகுவது அத்தனை எளிதல்ல. மன நெருக்கடி மிகுந்திருந்த காலத்தில் நான் எழுதியிருந்த விருத்தங்களைத் தயக்கமின்றிக் கச்சேரிகளில் பாடினார். என் பெயரையும் மேடையிலேயே அறிவித்தார்.
என் எழுத்தாற்றலை எளிதில் இனம் கண்டு புதுப்பொருளில் கீர்த்தனைகள் எழுதுங்கள். பாடலாம். வட்டார வழக்குச் சொற்களையும் தாராளமாகப் பயன்படுத்தலாம்’ என்றார். அப்படி ஒருதிறப்பை அவர் தரும்போது அதற்குள் தாராளமாக நுழைய வேண்டும் என்று தோன்றியது. என் இளம்வயதில் இருந்து எம்.எஸ்., மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உள்ளிட்ட ஆளுமைகள் பாடும் தமிழ்க் கீர்த்தனைகளை வானொலியில் கேட்டு அதன் அமைப்பு முறையை உள்வாங்கியிருந்தேன். தமிழில் கீர்த்தனை இலக்கியம் என்று தனி ஒரு இலக்கிய வகையே உண்டு. தமிழ் மாணவனாக அவற்றைப் பயின்றிருக்கிறேன். கவிதையே என் ஆரம்ப கால இலக்கிய வடிவமாக இருந்தது.
இந்தப் பின்னணியில் கீர்த்தனை எழுத முடியும் என நம்பிக்கை வந்தது. பஞ்ச பூதங்களைத் தெய்வாம்சமாகக் காணாமல் அவற்றை உள்ளபடியே கண்டுணர்ந்து ஐந்து கீர்த்தனைகள் எழுதினேன். நெஞ்சை விளித்துப் பேசும் மரபும் உண்டு. அவ்வகையில் இரண்டு கீர்த்தனைகள் எழுதினேன். எனக்குப் பிடித்த பனைமரம் பற்றி ஒரு கீர்த்தனை. காதல் கீர்த்தனை ஒன்று. இப்படிச் சிலவற்றை எழுதி அவரிடம் கொடுத்தேன். அவருக்குப் பெருமகிழ்ச்சி.
அவரும் அவர் நண்பர்களும் வாசித்துப் பார்த்துவிட்டு மெட்டமைத்தனர். அப்போது சிறுசிறு திருத்தங்கள் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்டனர். அவற்றைச் செய்து கொடுத்தேன். ‘ரொம்ப ரொம்ப அழகான கீர்த்தனைகள்’ என்று அவர் சொன்னது எனக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அவற்றை மட்டும் கொண்டு தனிக்கச்சேரிகள் பாடினார். தாம் பாடும் கச்சேரிகளில் சிலவற்றைப் பாடினார். சில ரசிகர்களின் மனதுக்குப் பிடித்தமானதாக அமைந்தன. பனைமரம், காதல் ஆகிய கீர்த்தனைகளைக் கச்சேரிகளில் சீட்டுக் கொடுத்துப் பாடும்படி ரசிகர்கள் கேட்டனர்.
அவற்றைத் தொடர்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கேட்டும் நானாக விரும்பியும் கீர்த்தனைகள் எழுதினேன். அவற்றைக் கச்சேரிகளில் பாடும்போது ரசிகர்கள் வரவேற்றனர். எந்தக் கலையிலும் புதியன புகுதலை ரசிகர்கள் வரவேற்கவே செய்வர். அதைக் கண்கூடாக உணர்ந்தோம். கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் கோணத்திலிருந்து ஒருகீர்த்தனை. கண்ணீர் விட்டுக் கேட்டதாகச் சொன்னவர்கள் உண்டு.
அம்பேத்கரைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் கீர்த்தனைகள் எழுதினேன். அவர் பாடி இணையத்திலும் வெளியிட்டார். பெரியார் பற்றிக் கீர்த்தனைக்காகப் பல எதிர்ப்புகளையும் அவர் சந்தித்தார். இன்றுவரை அதற்காக அவரை ஏசுபவர்கள் உள்ளனர். தமக்குச் சரியெனப் படுவதைத் தயங்காமல் செய்யும் சுயாதீனக் கலைஞராக அவர் இருப்பதால் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் துணிவு இருக்கிறது. இந்தக் கீர்த்தனைகள் தமிழ் அறிவுலகில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு நல்லதொரு ஏற்பைப் பெற்றுத் தந்தன. அவரைத் தம்மவராக ஏற்றுக் கொண்டாட வைத்தன.
இப்போது சங்க இலக்கியப் பாடல்களைக் கீர்த்தனை வடிவில் எழுதிப் பாடிக்கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியத்தைக் கருநாடக சங்கீதத்தில் அவர் ஏற்றிச் செல்கிறார். மனத் திறப்பு இருந்தால் இப்படி எத்தனையோ செய்யலாம் என்பதற்கு டி.எம்.கிருஷ்ணா உதாரணம்.
—– 02-12-24
சிறப்புங்க ஐயா!