காணொலி, காணொளி ஆகியவற்றில் எது சரி என்னும் விவாதத்திற்கு முடிவில்லை போல. சமீபத்தில் தமிழ் காமராசன் இதைப் பற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார். தமிழ் இலக்கியம் பயின்றோர், தமிழ் இலக்கணப் பயிற்சி உடையோர் ‘காணொளி’ என்பதுதான் சரி என்கின்றனர். காமராசனுக்கும் அதுவே சரி எனத் தோன்றுகிறது. அது வினைத்தொகையாக அமைவதால் ஒருவித இலக்கண நிறைவு வந்துவிடுகிறது. நானும் அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சமீப காலமாகக் ‘காணொலி’க்கு மாறிவிட்டேன்.
என் இலக்கண அறிவுக்குள் பொருந்துவதைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பொதுப்போக்கிலிருந்து விலகல் ஏற்படும். ஆராய்ந்து பார்த்ததில் காணொலிப் பயன்பாடு மிகுந்திருப்பதால் அதையே கையாள்வோம் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டேன். எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் உருவாக்கவில்லை. பேருந்து என்று சொல் உருவாக்கிவிட்டோம். அதில் இருக்கும் நூற்றுக்கணக்கான பாகங்களைக் குறிக்கும் சொற்கள் தமிழில் இல்லை. உயர்கல்வியும் தமிழ் வழியில் வந்தால்தான் அவற்றுக்கெல்லாம் சொற்கள் உருவாகும். அது எப்போது சாத்தியமோ தெரியவில்லை.
இந்நிலையில் பொதுப்பயன்பாட்டில் சில சொற்கள் உருவாகி வழக்கிற்கு வரும்போது அவை பொருளுக்குப் பொருந்துகின்றனவா, வடிவம் சரியா என்றெல்லாம் சிக்கல்களை மேற்போட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஒருசொல்லுக்குப் பொருளை ஏற்றுவது நாம்தான். ஏற்கனவே உள்ள சொற்களை இணைத்துப் புதிய சொல் ஒன்றைக் கட்டி அதற்குப் புதுப்பொருள் ஏற்றுகிறோம். கொஞ்சம் முன்பின் இருந்தாலும் தட்டிச் சரியாக்கிப் புழங்கினால் புதுப்பொருள் பொருந்திவிடும்.
காணொலி பெருவழக்காவதற்கு என்ன காரணம்? சொல் ஒப்புமைதான். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சொல்லைப் போலவே இன்னொரு சொல் உருவானால் அது வழக்கிற்கு வருவது எளிதாக இருக்கும். கிட்டத்தட்ட நூறாண்டு வரலாறு கொண்ட சொல் ‘வானொலி.’ அதைப் போன்ற ஒலி ஒப்புமை காணொலிக்கு இருக்கிறது. காணொலி என்றே பலரும் எழுத வானொலி அவர்களுக்கு நன்கு அறிமுகமான சொல் என்பதே காரணம். இதை ஒப்புமையாக்கம் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
சரி, இலக்கணம் பார்க்க வேண்டாமா? பார்க்கலாம். இலக்கண அடிப்படைக் கூறுகளில் மாற்றம் செய்வது எளிதல்ல. ஆனால் சிலவற்றில் விதிவிலக்கை அனுமதிக்கும். அப்படி ஒரு விதிவிலக்கு என்று இதைக் கொள்ளலாம். ஏற்றுக்கொள்ள முடியாது என்போருக்கு இலக்கணச் சமாதானம் சொல்வது ஒன்றும் கடினமல்ல. காணொலிக்கு இலக்கணம் இல்லையா? இருக்கிறது.
காண் என்னும் சொல்லை வினையடியாக மட்டும் காண்கின்றனர். அது பெயர்ச்சொல்லாகவும் பயன்பட்டிருக்கிறது. காமராசனின் பதிவில் செந்தலை கவுதமன் இதைப் பற்றியும் கருத்திட்டுள்ளார். தமிழ்ப் பேரகராதி ‘காண்’ என்பதைப் பெயர்ச்சொல்லாகவும் கொண்டு ‘காட்சி, அழகு’ ஆகிய பொருள்களைத் தருகிறது. காட்சி என்னும் பொருளுக்குக் ‘காண்பிறந் தமையால்’ எனக் கம்பராமாயணத்தில் வரும் தொடரைச் சான்றாகக் காட்டுகிறது. அப்பாடல்:
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்
காண் பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே?
‘இராமன் மீது கொண்ட காதலைக் கண்களில் திரட்டி வைத்துக்கொண்டு உன் காட்சிக்காகக் காத்திருக்கிறாள் சீதை’ என இதற்குப் பொருள் காணலாம். காண் என்பது இங்கே ‘காட்சி’ எனப் பொருள் தருகிறது. இதை மிகைப்பாடலாகக் கருதுவதால் உரையாசிரியர் பலர் இதற்குப் பொருள் கூறவில்லை. எனினும் ‘பிறந்து’ என்பதற்குத் ‘தோன்றுதல்’ எனப் பொருள் கொண்டால் பாடலை உணர்வது எளிது.
‘காண் பிறந்தமை’ எனக் கொள்வதா? ‘காண்பு இறந்தமை’ எனக் கொள்வதா? ‘காண் பிறந்தமையால்’ என்றே பேரகராதியினர் சந்தி பிரித்துள்ளனர். மேலே கொடுத்துள்ள சந்தி பிரித்த வடிவம் மர்ரே எஸ்.ராஜம் பதிப்பில் உள்ளது. நான்கடியிலும் ‘பிறந்து’ என்னும் சொல் வருமாறு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. பதிப்பாசிரியர்களும் உரையாசிரியர்களும் இதில் வரும் ‘காண்’ பெயர்ச்சொல் என்றே கொண்டுள்ளனர்.
காண் பெயர்ச்சொல்லாக வருவதற்கு இலக்கியத்தில் இன்னும் தேடினால் வேறு சான்றுகளும் கிடைக்கக் கூடும். இதன்படி காண் என்பதைப் பெயராகக் கொண்டு பார்த்தால் ‘காணொலி’யைக் ‘காட்சியும் ஒலியும்’ என விரித்து உம்மைத்தொகையாக இலக்கணம் கூறலாம். காட்சி, ஒலி ஆகியவற்றின் இணைவைக் குறிக்கத்தானே இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்? ஒரு பொருளுக்குப் பெயர் சூட்டப் பல முறைகள் இருக்கின்றன. காணொளி என்பது முக்காலத்தையும் குறிக்கும் வினைச்சொல்லாகிக் காணத்தக்க ஒளியைச் சிறப்பித்து வரும் பெயர் என்றால் காட்சி, ஒலி இரண்டையும் இணைத்து வரும் பெயராகக் காணொலியைச் சொல்லலாம்.
காணொளி – வினைத்தொகை; காணொலி – உம்மைத்தொகை. இரண்டுக்கும் இலக்கணம் இருக்கிறது. எச்சொல் மிகுதியான வழக்கைப் பெறுகிறதோ அது நிலைக்கும். காணொலிதான் நிலைக்கும்; நிலைத்துள்ளது. காணொளி அருகிய வழக்காகிக் காணாமல் போகும். ஊரோடு ஒத்துப் போதல் மொழிக்கும் பொருந்தும் என்பதால் நான் காணொலியின் பக்கம் நிற்கிறேன்.
——
பயன்பட்டவை:
- ச.வையாபுரிப் பிள்ளை (ப.ஆ.), தமிழ்ப் பேரகராதி தொகுதி 2, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1982, மறுபதிப்பு.
- தமிழ் காமராசன் முகநூல் பதிவு, நாள்: 25-03-25, ‘காணொலி என்னும் விந்தையான சொல் பயன்பாடு.’
—— 01-04-25
Excellent explanation.