தமிழ் இலக்கணத்தில் ‘இடக்கரடக்கல்’ என்றொரு வழக்கு உண்டு. சிறுவயதில் எங்கள் ஊரில் ‘பீப் பேண்டுட்டு வந்து சோறு தின்னு’ என்று பிள்ளைகளின் பெற்றோர் சொல்வது இயல்பு. ‘பீப் பேளப் போறண்டா. வர்றயா?’ என்று நண்பர்களை அழைப்பதும் உண்டு. ‘வேல சொன்னாத்தான் பேள வருமாம்’, ‘வாயறியாத திங்கறது, வயிறறியாத பேள்றது’ என்றெல்லாம் பழமொழிகள் உள்ளன. ‘வேலு கூலு வீட்டச் சுத்திப் பேளு’ என்பது சிறுவர் பாடல். பேல், பேள், பேழ் – இதில் எந்த எழுத்து வரும் வினைச்சொல் இது என்று தெரியவில்லை. இவ்வினைச்சொல்லுக்கு அகராதிகளில் இடம் கிடைக்கவில்லை. அதனால் ‘ள்’ என்பது சில இடங்களில் ‘ண்’ணாக மாறும் என்று விதி இருப்பதால் நானாகப் ‘பேள்’ என்று எழுதுகிறேன். அடிக்கடி மலம் கழிப்பவனை ‘பீப்பொச்சன்’ என்போம்.
‘பீ’ என்பது ஓரெழுத்து ஒருமொழி. ஒரே ஒரு எழுத்து மட்டும் இருந்து ஒரு சொல்லாகப் பொருள் தருமானால் அது ஓரெழுத்து ஒருமொழி. ஆனால் ஓரெழுத்து ஒருமொழியைத் தொகுத்து சொல்லும் இடத்தில் உரையாசிரியர்கள் ‘பீ’யைச் சொல்ல மாட்டார்கள். பகரத்தில் ஐந்து எழுத்துக்கள் ஓரெழுத்து ஒருமொழியாக வரும் என்று நன்னூல் நூற்பா கூறுகிறது. அவை ‘பா, பூ, பே, பை, போ’ எனச் சான்று காட்டுகின்றனர். பே என்பது அச்சத்தைக் குறிக்கும் சொல். எங்கோ சில இடங்களில்தான் வரும். அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டோர் பீயை விட்டுவிட்டனர். ஒருவேளை, நன்னூல் ஆசிரியரே கருத்தில் கொள்ளவில்லையோ என்னவோ.
பீ என்னும் சொல் மிகப் பழமையானது. அதை எப்படித் தவிர்க்க முடியும்? புணர்ச்சி விதி கூறும்போது நன்னூல் ஆசிரியரே இச்சொல் சார்ந்து இரண்டு விதி எழுத வேண்டியானது.
ஆமுன் பகரஈ அனைத்தும்வரக் குறுகும்;
மேலன அல்வழி இயல்பு ஆகும்மே. (177)
பவ்வீ நீமீ முன்னர் அல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமாம் ஈக்கே. (178)
இந்த விதிகளில் ‘பீ’ என்று அவர் சொல்லவில்லை. பகரஈ, பவ்வீ என்கிறார். ‘ப் + ஈ’ என்பதைத்தான் அவ்வாறு சொல்கிறார். இலக்கண ஆசிரியர் இலக்கண மொழியில் பேசுவது இயல்புதான். ஆனால் உரையாசிரியர்கள் அச்சொல்லை எடுத்துக்காட்டி எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆப்பி, பீ குறிது எனச் சான்று காட்டுகின்றனர். பீ என்று சொல்லாமல் ‘பகரஈ’ என்றும் ‘பவ்வீ’ என்றும் சொல்கிறார்களே, அதுதான் இடக்கரடக்கல். ‘பீக்கதைகள்’ நூலுக்கு ‘ஆய்க்கதைகள்’ என்று நான் தலைப்பிட்டிருந்தால் அது இடக்கரடக்கல் ஆகியிருக்கும். பீயை ஏற்காத மனம் மலத்தை ஏற்றுக்கொள்கிறது. பிறமொழிச் சொல் இடக்கரடக்கல் ஆகும் என்பதற்குச் சான்று மலம்.
ஒரு பொருளைக் குறிக்க ஒருசொல் இருக்கும்போது ஏதோ காரணத்தால் அச்சொல்லைத் தவிர்த்துவிட்டு வேறொரு சொல்லால் குறிப்பதுதான் இடக்கரடக்கல். ‘ஏதோ காரணம்’ என்று பொதுவாகச் சொல்கிறேன். ‘நன்மக்களிடத்தே சொல்லத்தகாத சொல்லை, அவ்வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டாற் சொல்வது’ என்று காரணத்தை விளக்குகின்றனர். அதாவது ‘நல்லவர்களிடம் கெட்ட வார்த்தை பேசக் கூடாது’ என்று அர்த்தம். கெட்ட வார்த்தை பேசாதவன் நல்லவன் என்று இன்றும் கருதுகிறோமே.
‘இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லால் சொல்வது தகுதியன்று; வேறொரு சொல்லில் சொல்வது தகுதி’ என்பர். அதாவது பேசுபவன் தன் தகுதியைக் கருதியோ, கேட்பவர் தகுதியைக் கருதியோ வேறொரு சொல்லை மாற்றாகப் பயன்படுத்திச் சொல்வது என்று அர்த்தம். நாம் பேசப் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு தகுதியை அளவிடுதல் நடைமுறை வழக்கம்தான். ‘இடர்ப்பாடான பொருள் பயக்கும் சொல்லை அடக்கி வேறு சொல்லால் சொல்வதை இடக்கரடக்கல் என்பர்’ என்பது இன்னொரு விளக்கம். பீ வருவதில் வேண்டுமானால் இடர்ப்பாடு இருக்கலாம். பீ என்று சொல்வதில் என்ன இடர்ப்பாடு இருக்கிறது? அப்புறம் வருவதை அடக்க வேண்டுமாம். ஒரு சொல்லை உச்சரிப்பதில் எத்தனை எத்தனை பிரச்சினைகள்!
சமீப காலத்தில் சமூக ஊடகங்களில் வரும் ரீல்ஸ்களில் கெட்ட வார்த்தைகளை இயல்பாகப் பேசுகின்றனர். நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களில் வரும் தொடர்களில் கெட்ட வார்த்தைகள் இயல்பாகப் புழங்குகின்றன. திரைப்படங்களிலும்கூடப் பழைய கெடுபிடிகள் இருப்பதாகத் தெரியவில்லை. தணிக்கைத் துறை ஓரளவு அனுமதிப்பது போலத்தான் தெரிகிறது. இவற்றைப் பார்த்து இனிமேல் புதிய இடக்கரடக்கல் சொற்கள் மொழியில் உருவாக வாய்ப்பிருக்காதோ என்று ஒருசந்தேகம் எனக்குள் எழுந்தது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இடக்கரடக்கல் சொற்களைத்தான் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறோம். அவையும்கூட கொஞ்ச நாளில் வழக்கொழிந்து போய்விடலாம் என்று தோன்றியது.
அப்படியல்ல, இடக்கரடக்கல் புதிதாகவும் உருவாகும் என்பதற்கு இப்போது ஒருசான்று கிடைத்திருக்கிறது. ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ மிகவும் பிரபலமானது. ராகுல் காந்திக்குச் சமைத்துக் கொடுத்தவர்கள் அல்லவா? அதில் சமீபத்தில் ஒருசமையல் கணொலி வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி எழுத்தாளர் விநாயகமுருகன் முகநூலில் ஒருபதிவு போட்டிருந்தார். அதைப் படித்துவிட்டுத்தான் காணொலியைப் பார்த்தேன். ஆட்டுக்கிடாய்களின் விதைக்கொட்டைகளையும் முட்டைகளையும் கலந்து செய்யும் ஒருவகை உணவு. இதுவரை அறியாத புதியவகை உணவுதான். காணொலியின் தொடக்கத்தில் ஆட்டின் விதைக்கொட்டையை அண்மையில் காட்டிய பிறகு ‘கோழி முட்டையும் ஆட்டுப்பந்தும் செம்மையா சமைக்கிறம், பயங்கரமாத் திங்கறம்’ என்று ஒருவர் சொல்(கத்து)கிறார்.
‘ஆட்டுப்பந்து’ என்று சொல்வது ஆட்டுக் கிடாயின் விதைக்கொட்டைதான். இதைப் ‘பந்து’ என்று சொல்வது என்ன வழக்கு? எங்கள் ஊரில் ஆடு உயிரோடு இருக்கும்போது ‘கொட்டை’ அல்லது விதைக்கொட்டை என்போம். தோல் உரித்துக் கறிக்குத் தொங்க விட்ட பிறகு ‘குண்டிக்காய்’ என்போம். குண்டிக்காயே இடக்கரடக்கல் என்றுதான் நினைக்கிறேன். ‘வெதுரு’ என்றும் சொல்வோம். பந்து என்பது அனேகமாக இந்தச் சமையல் குழு உருவாக்கிய இடக்கரடக்கல் சொல்தான். ஆங்கிலத்தில் balls என்று சொல்வதன் நேரடி மொழிபெயர்ப்புப் போல. ஒரு பொருளுக்கு நம் மொழியிலேயே சொல் இருக்க இன்னொரு மொழிச் சொல்லைப் பயன்படுத்தினாலும் அதைப் புதிய சொல்லில் மொழிபெயர்த்துப் பயன்படுத்தினாலும் இடக்கரடக்கல்தான்.
ஒரு ஆட்டுக்கிடாய்க்கு இரண்டு கொட்டைகள்தான் இருக்கும். இங்கே சமையலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கொட்டைகளை வேக வைக்கிறார்கள். எங்கிருந்துதான் இத்தனை வாங்கினார்களோ! நகரத்துக் கறிக்கடைகள் அனைத்திலும் சொல்லி வைத்து வாங்கியிருப்பார்களோ? இட்லிப்பானையில் வேக வைத்து எடுத்துத் துண்டு போடுகிறார்கள். ‘அவிச்சு எடுத்த ஆட்டுப்பந்து’ என்கிறார் ஒருவர். ‘நல்லா பந்தாப் பாத்து பொறுக்குங்கய்யா’, ‘ஆட்டோட பந்து’, ‘கிடாக்குட்டியோட பந்து. ரொம்பப் பேரு இதச் சாப்பிட மாட்டாங்க. சாப்பிட்டவங்களுக்குத் தெரியும் இதோட டேஸ்ட்டு’ என்று கிட்டத்தட்டப் பத்து நிமிடக் காணொலியில் ஐந்தாறு முறை ‘பந்து’ என்றே சொல்கிறார்கள்.
புதிதாக உருவான இடக்கரடக்கல் சொல் ‘பந்து.’ இந்தச் சேனலுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர். ‘கொட்டை’ என்று சொன்னால் பலரும் முகம் சுழிக்கக் கூடும் என்று கருதிப் பந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பின்னூட்டத்தில் அதைப் பற்றி விவாதமும் நடக்கிறது. கும்பகோணம் அருகில் உள்ள ‘கொட்டையூர்’ பற்றி விநாயகமுருகன் சொல்கிறார். கீழ்க்கொட்டையூர், மேல்கொட்டையூர், கொட்டைக்காட்டுப் பாளையம் முதலிய ஊர்ப்பெயர்களையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
விதைகளில் கடினமாக இருப்பவற்றைக் கொட்டை என்று சொல்வது பொதுவழக்கு. ஆமணக்கை எங்கள் பகுதியில் ‘கொட்டைமுத்து’ (கொட்டமுத்து) என்றே சொல்வோம். கொட்டைச்செடி, கொட்டையிலை, கொட்டைக்காய், கொட்டைமுத்து, கொட்டைக்காடு என்பவை இயல்பாக வழங்குபவை. புளியங்கொட்டை எல்லோரும் அறிந்ததே. தாயம் விளையாடப் புளியங்கொட்டையை உறைத்துப் பயன்படுத்துவர். பலாக்கொட்டை, மொச்சைக்கொட்டை, மாங்கொட்டை போல இன்னும் பல கொட்டைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் பந்து போட முடியாது.
ஆனாலும் கொட்டையை நீக்கச் சமூகம் முயன்று கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பனைமரம் பற்றிய பேச்சு பரவலாக இருக்கிறது. நாங்கள் எல்லாம் பனங்கொட்டையைத்தான் முளைக்கப் போடுவோம். நிறையப் பேர் ‘பனைவிதை’யை முளைக்கப் போடுகிறார்கள். எழுத்து வழக்கில் ‘பனைவிதை’ என்று எழுதுவது பரவலாக வந்திருக்கிறது.
விதைக்கொட்டையைக் குறிப்பிட்டுச் சொல்லும்போதும் தயக்கம் வந்துவிடுகிறது. ‘விரை’ என்னும் இலக்கிய வழக்கை ‘விரைவீக்கம்’ போன்ற விளம்பரங்களில் பார்க்கிறோம். பொதுவழக்குக்கு மாற்றாக இலக்கிய வழக்கைப் பயன்படுத்துவதால் இதையும் இடக்கரடக்கலில் சேர்க்கலாம். எப்படியோ இந்தப் ‘பந்து’ இனியும் இடக்கரடக்கல் உருவாகும் என்பதற்கான சான்று.
—– 14-11-24
ஐயா , வணக்கம்
எங்கள் பகுதியில் ஆட்டு விதை கொட்டைக்கு ஆட்டு புடுக்கு என்று சொல்கிறார்கள் ஐயா ,
நான் அறிந்த வரை தமிழ்ச் சிறுகதை மற்றும் புதினங்களில் பீ என்கிற ஒற்றைச் சொல்லை எந்த எழுத்தாளரும் கையாண்டதில்லை. ஆனால் நீங்கள் மிகவும் அருமையாக, கூச்சம் என்று சொல்வதற்கே இடம் இல்லாமல் பயன்படுத்தி உள்ளீர்கள்.