பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

செப்டம்பர் 11 பாரதியார் நினைவுநாள். வாசிக்க எண்ணி வாங்கி வைத்திருக்கும் நூல்களுள் ஒன்றை இன்று வாசிக்கலாம் என்று அலமாரியில் துழாவினேன்.  ‘பாரதியும் காந்தியும்’ சட்டெனக் கைக்கு வந்தது. ஒரே மூச்சில் வாசித்துவிடத் தக்க நூல். தொகுப்பும் பதிப்பும் : ய.மணிகண்டன். இது ஆய்வு நோக்கிலான தொகுப்பு. பதிப்பு நுட்பங்களையும் கொண்டிருக்கும் நூல். அதனால்தான் ‘தொகுப்பும் பதிப்பும்’ ஆகிறது.

திலகரின் விசுவாசியாகப் பாரதியாரைக் காட்டும் சித்திரம் பொதுப்பார்வையில் ஏற்கனவே நிலவி வருகிறது. அதை உடைப்பதோடு பாரதி – காந்தி பற்றி ஆய்வுலகில் குழப்பமாக உள்ள வேறு பல செய்திகளையும் கருத்தில் கொண்டு இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நூலின் முதல் பகுதி ‘பாரதி பார்வையில் காந்தி.’ அதில் பாரதி கவிதைகளில் காந்தி, பாரதி கட்டுரைகளில் காந்தி என இருபிரிவுகள்.  ‘காந்தி பார்வையில் பாரதி’  இரண்டாம் பகுதி. ‘காந்தி – பாரதி சந்திப்பு’ மூன்றாம் பகுதி. பரந்த வாசிப்பும் ஆய்வுப் பார்வையும் ய.மணிகண்டனுக்கு இருப்பதால் தான் இவ்வளவையும் தொகுத்துத் தர முடிந்திருக்கிறது. பெரும்பாலானவை மூலத்தைத் தேடித் தெளிவான பாடத்தோடு கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் தேவையான அடிக்குறிப்புகள் உள்ளன.

நூலின் தொடக்கத்தில் ய.மணிகண்டன் எழுதிய விரிவான முன்னுரை உள்ளது. அதைத் தனித்த ஆய்வுக்கட்டுரை என்றுதான் சொல்ல வேண்டும். அக்கட்டுரை எழுதுவதற்காக அவர் தொகுத்த தரவுகளே இந்நூலாக உருக்கொண்டிருக்க வேண்டும். இத்தலைப்பில் இன்னும் விரிவாகக் காண்பதற்குப் பல கோணங்கள் இருக்கின்றன என்பதால் தரவுகள் நூலாகியுள்ளன. 1908 முதல் பாரதியாரின் எழுத்துக்களில் காந்தி இடம்பெற்றிருக்கிறார். காந்தியை ‘மகாத்மா’ என்று குறிப்பிட்டு ஏற்றுக்கொள்ளும் அளவு கருத்து வளர்ச்சி பாரதியாரிடம் ஏற்பட்ட படிநிலையை இக்கட்டுரைகளை வைத்துக் காணலாம். அவர் மகாத்மா என்றாலும் கைம்பெண் மறுமணம் பற்றிய அவர் பார்வையோடு உடன்படாமல் கடுமையாக விமர்சித்துப் பாரதியார் எழுதியுள்ளார்.

பாரதியார் கவிதைகள் சிலவற்றை (18 கவிதைகள்) ஆங்கிலத்தில் ராஜாஜி மொழிபெயர்த்துள்ளார். அவை காந்தியின் ‘யங் இந்தியா’ இதழில் தொடர்ந்து வெளியாகியுள்ளன. அவை இத்தொகுப்பில் உள்ளன. அம்மொழிபெயர்ப்புகளைப் பற்றி மட்டும் பார்த்து ராஜாஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், அதற்கான பின்னணி, அவரது மொழிபெயர்ப்பின் தன்மை, அவர் எழுதியுள்ள குறிப்புகள் எனச் சுவை மிக்க கட்டுரை ஒன்றை எழுதலாம். தமிழ் மரபில் ‘திருப்பள்ளியெழுச்சி’ புகழ்பெற்ற இலக்கிய வகை. அதன் தொடர்ச்சியாகப் ‘பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி’யைப் பாரதியார் எழுதினார். அப்பாடலின் தலைப்பு ‘Morning Song To Bharatha Devi’ என மொழிபெயர்ப்பாகியுள்ளது. ஒருமொழி மரபு இன்னொரு மொழிக்குச் செல்லும்போது சாதாரணமாகிவிடுகிறது.

பாரதியின் ‘சுதேச கீதங்கள்’ தொகுப்புக்குப் பர்மா அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசும் 1928இல் தடை போட்டது. அதைக் கண்டித்துக் காந்தி எழுதிய குறிப்பு இந்நூலில் உள்ளது. கருத்துரிமை தொடர்பாகக் காந்தியின் பார்வை எப்படி இருந்தது என்பதை இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர் எழுதியவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அறிய முடியும். ஆங்கிலத்தில் அப்படி ஏதேனும் நூலோ கட்டுரையோ வந்திருக்கிறதா எனப் பார்க்கலாம்.

பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

இவ்வாறு பாரதி பற்றிய ஆய்வில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் தொகுப்பு நூலாக இது விளங்குகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான இந்நூல் இப்போது ஐந்தாம் பதிப்பைக் கண்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் புதியவற்றை நூலாசிரியர் சேர்த்துக் கொண்டே உள்ளார். பாரதி எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று, 1921இல் தம் ஈரோட்டில் நிகழ்த்திய கடைசிச் சொற்பொழிவுக்கு முன் திருவண்ணாமலையில் அவர் ஆற்றிய உரை ஆகியவை அடுத்தடுத்த பதிப்புகளில் சேர்ந்துள்ளன. இன்று ‘தினமணி’யில் ‘மகாத்மாவின் இயக்கத்தில் மகாகவி’ என்னும் கட்டுரையை ய.மணிகண்டன் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடும் புதிய செய்திகளுக்கான தரவுகள் இந்நூலின் அடுத்த பதிப்பில் சேரக் கூடும். இவ்வாறு ஒவ்வொரு பதிப்பையும் புதியதாக்கிக் கொண்டிருக்கிறார் பாரதியியல் அறிஞர் ய.மணிகண்டன்.

நூல் விவரம்: ய.மணிகண்டன் (தொகுப்பும் பதிப்பும்),  பாரதியும் காந்தியும், 2023, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், ஐந்தாம் பதிப்பு.

—–   11-09-24

Add your first comment to this post

Comments are closed.